மேட்டூர் அணைத் திறப்பு; காவிரியில் வெள்ளப் பெருக்கு! 

மேட்டூர் அணைத் திறப்பு; காவிரியில் வெள்ளப் பெருக்கு! 

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் திறக்கப் பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்ததாவது: 

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே அந்த அணைகள் நிரம்பி உள்ளதால் இவ்விரு அணையில் இருந்தும் கூடுதலாக நீர் திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மேட்டூர் அணைக்கு இன்று காலையில் விநாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, காவிரி கரையோர மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விட்டுள்ளனர். மேலும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் நீர் நிலைகள் அருகில் செல்லவும், செல்ஃபி புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர், பரிசல் துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பட்டி உள்பட காவிரி கரையோர பகுதிகளில் சிறுவர்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும், ஆடிப்பெருக்கு நாளில் காவிரி ஆற்றில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

துணி துவைக்க, புகைப்படம் எடுக்க தடை விதித்து கல்வடங்கம், கோனோரிப்பட்டி, பூலாம்பட்டி பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றின் கரையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. 

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் இயக்கப்பட்டு வரும் விசைப்படகு போக்குவரத்து 3-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் 10 கி.மீ. சுற்றி செல்கிறார்கள். மேலும் மேட்டூர் காவிரி கரையேர பகுதிகளில் வருவாய்துறையினர், உள்ளாட்சி துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் காவிரி கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் 

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. 

காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com