பேரறிவாளன் விடுதலை; உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு!

பேரறிவாளன் விடுதலை; உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறைதண்டனை பெற்ற 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோர உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இன்று அந்த வழக்கு விசாரணையில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி காந்தி கொலை வழக்கில் கடந்த 1991-ம் ஆண்டு பேரறிவாளன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனுதாக்கல் செய்தார்.

தொடர்ந்து 9 மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கியது. அதனையடுத்து, பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 27-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. பேரறிவாளன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், தமிழ்நாடு அரசின் சார்பில் ராகேஷ் துவிவேதி ஆகியோரும் மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை வைத்தனர்.

அந்த விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது: 

ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு உள்ள அதிகாரம் குறித்த விஷயங்களுக்குப் போகாமல் பேரறிவாளனை விடுவிப்பதே இந்த வழக்கை முடித்து வைக்க ஒரே தீர்வு என கருதுகிறோம்என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டதாவது:

இது மத்திய புலனாய்வு கையாண்ட விவகாரம். இதில் கருணை காட்ட வேண்டும் என்றாலோ முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலோ அது மத்திய அரசின் வசம்தான் இருக்கிறது. தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றினாலும் இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது.

-இவ்வாறு மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து அனைத்துத் தரப்பு வாதங்களையும் எழுத்துப் பூர்வமாக அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்

இந்த நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் தீர்ப்பளித்து உத்தரவிட்டதாவது: 

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் சிறையில் இருக்கிறார். அவரது விடுதலை குறித்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி விட்டார். ஆகவே தற்சமயம் ஜாமீனில் உள்ள பேரறிவாளனை உச்ச நீதிமன்ற்த்துக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி முழுமையாக விடுதலை செய்கிரோம்.

-இவ்வாறு பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், போபண்ணா, மற்றும் கவாய் ஆகிய 3 பேர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com