உக்ரைனில் உயிரிழந்த நவீன் உடல் பெங்களூரு வருகை: முதல்வர் நேரில் அஞ்சலி!

உக்ரைனில் உயிரிழந்த நவீன் உடல் பெங்களூரு வருகை: முதல்வர் நேரில் அஞ்சலி!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் இன்று அதிகாலை இந்தியா கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் அவரது உடலுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் உயரதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

கர்நாடக மாநிலம் ஹாவேரியைச் சேர்ந்த 21 வயதான நவீன் சேகரப்பா என்ற மாணவர் உக்ரைனிலுள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மருத்துவம் பயின்று வந்தார். உக்ரைனில் ரஷ்ய போர் தீவிரம் அடைந்த நிலையில் கடந்த மார்ச் 1-ம் தேதி அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது ரஷ்ய குண்டு வீச்சில் சிக்கி உயிரிழந்தார்.

அவரது உடலைப் பெற்றுத்தருமாறு அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் அவரது உடல் இன்று  உக்ரைனிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில் இறந்த மாணவர் நவீன் குடும்பத்தினருடன் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் அதிகாரிகள், மலர்வளையம் வைத்து நவீன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதாவது:

இந்திய மாணவர் நவீன் சேகரப்பாவின் உடலை தாயகம் கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி. மாணவர் நவீன் மறைவையடுத்து அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படு. மேலும் அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

-இவ்வாறு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

இந்நிலையில் மாணவர் நவீனின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளை செய்து பின்னர் உடலை முறைப்படி மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கவிருப்பதாக நவீனின் தந்தை சங்கரப்பா தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com