லாரியில் கட்டி தொங்க விடப்பட்ட இளைஞர்: வேகமாய் வண்டியோட்டிய ஓட்டுனர்!

லாரியில் கட்டி தொங்க விடப்பட்ட இளைஞர்: வேகமாய் வண்டியோட்டிய ஓட்டுனர்!

ஒடிசாவில் செல்போன் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நபரை லாரியின் முன்புறம் கட்டிப் போட்டுவிட்டு, லாரி ஓட்டுனர் வண்டியை வேகமாக ஓட்டிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தின் மார்ஷாகாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கஜேந்திரா ஸ்வைன். இவர் பகுதிநேர லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில், ஒரு லாரி ஓட்டுநரின் செல்போன் காணாமல் போக, மற்ற லாரி ஓட்டுநர்கள் கஜேந்திரா திருடியதாக சந்தேகித்தனர்.

பின்னர் அவரது இரு கைகளையும் லாரியின் முன் பக்கம் கட்டி தொங்கவிட்டு , அவரது கழுத்தில் செருப்புமாலை அணிவித்தனர். இதையடுத்து அந்த லாரியை வேகமாக சுமார் 20 நிமிடங்கள் ஓட்டிச் சென்றனர். திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் கஜேந்திராவை தண்டிப்பதற்க்காக செய்யப்பட்ட இச்செயல் விடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அப்பகுதி  ஜகத்சிங்பூர் போலீஸ் எஸ்பி கூறியதாவது:

இச்சபவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் புகார் எதுவும் அளிக்கவில்லை. அப்படி  அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தவுடன் லாரி டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற ஒடிசா மனித உரிமைகள் ஆணையம், ஜகத்சிங்பூர் எஸ்பிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் உடனடியாக இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com