0,00 INR

No products in the cart.

தேவமனோகரி -14

தொடர்கதை                                                                 ஓவியம் : தமிழ்

கே.பாரதி

சிவநேசனை சந்தித்ததிலிருந்தே பழைய நினைவுகள் அவ்வப்போது வந்துபோயிற்று.

அன்று ஞாயிற்றுக்கிழமை. இனியா ஹாஸ்டலுக்குக் கிளம்பிவிட்டாள். தற்காலிகமாக அவள் முடிவை ஏற்றுக் கொள்வதுதான் சரி என்று மனோகரிக்கும் தோன்றியது.

ஒரு நீண்ட பகல் பொழுதை தனிமையில் கடத்திக் கொண்டிருந்தாள் மனோகரி.

ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தெருவில் எவரோ தள்ளுவண்டியில் ஐஸ்கிரீம் விற்றுக் கொண்டிருந்தார்கள்.  தவிர்க்க முடியாமல் தம்பி கோபாலின் நினைவு வந்தது.

நேற்று நடந்தது போல் இருக்கிறது. அன்று காய்கறி வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் மனோகரி.  கருவுற்று எட்டு மாதம் ஆகியிருந்ததால் கைச்சுமையுடன் நடப்பதே கஷ்டமாக இருந்தது.

வீட்டை நெருங்கிய போது ‘அக்கா’ என்று குரல் கேட்டது.

மூச்சிரைக்க  இவளைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தான் தம்பி கோபால். நன்றாக உயர்ந்திருக்கிறான்.

எப்போதாவது ஒரு முறை இந்தப் பக்கமாக வரும் தள்ளு வண்டிக்காரனிடம் குச்சி ஐஸ்கிரீம் வாங்கத்தான் ஓடுகிறான் என்பது புரிந்தது.  அவன் வாங்கிக் கொண்டு திரும்பும் வரையில் காத்திருந்தாள்.

“சீக்கிரமா சாப்பிடு கோபால், உருகிப்போயிடும்.”

“இது எனக்கில்லை அக்கா. நம்ம தரணிக் குட்டிக்கு” என்று சொல்லிக்கொண்டே திரும்பவும் ஓட்டமெடுத்தான்.

“நாலு தெரு தாண்டி அவன் வீட்டுக்குப் போய் சேருவதற்குள் குச்சி ஐஸ் உருகாமல் இருக்க வேண்டுமே” என்று கவலைப்பட்டாள் மனோகரி.

தரணி இப்படிப் பிறந்துவிட்டாளே என்ற ஆதங்கம் ஆரம்பத்தில் இருக்கத்தான் செய்தது.

“சாமி இந்த மாதிரிக் குழந்தைகளையெல்லாம் எல்லோருக்கும் கொடுக்க மாட்டாராம். யாரு அதை நல்லபடியா பாத்துப்பாங்கன்னு தெரிஞ்சுதான் கொடுப்பாராம்” என்று தனக்குத் தானே தேற்றிக்கொண்டாள் அண்ணி.

அண்ணனுக்கு கோபால் மூத்த பிள்ளை போல் ஆகிவிட்டிருந்தான். அண்ணிக்கும் கைக்கு கை உதவும் அவனைப் பிடித்துவிட்டது.

கோபாலுக்கு தரணி மீது பாசம் அதிகம். தெருப்பிள்ளைகள் அவளை ஏதாவது சொல்லிவிட்டால் பாய்ந்துவிடுவான்.

தரணிக்கு அப்போது ஐந்து வயது ஆகியிருந்தது. சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் ஒன்றில் சேர்த்திருந்தார்கள். அங்கே சில பயிற்சிகளை சொல்லிக் கொடுத்தார்கள்.

வீட்டில் அவள் கேட்பதையெல்லாம் செய்து கொடுப்பான் கோபால்.

ஏணி மீது ஏற வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால் கிட்டேயிருந்து ஏற்றிவிடுவான். அரைமணி நேரம் ஆனாலும் அந்த விளையாட்டு அவளுக்கு அலுக்காது.

காலை சரியாகப் பதிய வைக்கமாட்டாள். கீழே விழுந்துவிடும் ஆபத்து இருப்பதால் அண்ணி கோபித்துக் கொள்வாள்.

“நான்தான் கிட்டேயிருந்து பாத்துக்கறேனே அண்ணி” என்று சமாதானம் சொல்வான் கோபால். அவனுக்கு தரணியின் சந்தோஷம்தான் முக்கியம்.

பொம்மைகளாக வாங்கி வீட்டை நிரப்பினார்கள் அண்ணனும் அண்ணியும். இதெல்லாம் போதாது என்று அந்த பொம்மைகளை வைத்து தாலாட்ட ஒரு தூளி கட்டிக் கொடுத்திருந்தார்கள். அதுதான் எமனாக வந்து வாய்த்தது.

அன்று அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஒரு கல்யாணத்துக்குப் போக வேண்டியிருந்தது. அண்ணியின் சொந்தக்காரர் வீட்டுக் கல்யாணம். திருவண்ணாமலை வரை போய்விட்டு இரவே திரும்பிவிட நினைத்தார்கள்.

கோபாலை நம்பி எப்படித் தரணியைத் தனியாக விட்டுவிட்டுப் போவது? அவன் அவ்வளவு நேரம் சமாளிப்பானா?

“நான் என்ன இன்னும் சின்னப் பையனா அண்ணி? காலேஜுல சேர்ந்து ஒரு மாசம் ஆகுது. ஞாபகம் வெச்சுக்குங்க. பகல் நேரத்துல தரணி பள்ளிக்கூடம் போயிடும். அதுக்கு அப்புறம் கொஞ்சநேரம் தானே? சமாளிச்சுக்குவேன்.”

அவன் வார்த்தைகளை நம்பி தைரியமாகப் புறப்பட்டார்கள்.

மாலையில் பள்ளிக்கூடம் போய் தரணியை அழைத்து வந்தான் கோபால்.

தோசை ஊற்றிக் கொடுத்து சாப்பிட வைத்தான். தன் பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாட ஆரம்பித்தாள் தரணி. தூளியில் கரடி பொம்மையை வைத்து சுழற்றி ஆட்டிக் கொண்டிருந்தாள்.

அந்த விளையாட்டு அலுத்துப் போனபோது தானே தூளியில் காலை ஊன்றி நின்று கொண்டு சுழல ஆரம்பித்தாள்.

ஹாலில் துணிகளை அயர்ன் செய்து கொண்டிருந்தான் கோபால்.  திடீரென்று ஒரு விக்கல் சப்தம் போல் கேட்டது. உள்ளேபோய் பார்த்தபோது தூளிக் கயிறு கழுத்தை சுற்றிக் கொண்டு தலை துவண்டுக் கிடந்தாள் தரணி.

பதறிப் போய் அக்கம்பக்கத்தாரை அழைத்து வந்தான். அவர்கள் உதவியுடன் தரணியை சுமந்து கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போனான்.

குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கெனவே இறந்து விட்டதாக சொன்னபோது எல்லோரையும் அதிர்ச்சி தாக்கியது. அதன் பிறகு நடந்ததெல்லாம் விபரீதம்தான்.

இறந்தது ஒரு சிறுமி. உடன் இருந்தது ஒரு வாலிப வயதுப் பையன் என்ற தகவலே போலீசுக்குப் போதுமானதாக இருந்தது.

சந்தேக மரணம் என்பதாக வழக்கு பதிவு செய்து கோபாலை கைது செய்தார்கள். விசாரணைக்கு கூட்டிக் கொண்டு போனவர்கள் அவனை விசாரித்த விதமும் கேட்ட கேள்விகளும் சம்மட்டியால் அடித்ததுபோல் ஆயிற்று.

அண்ணனை விட அதிகம் பதறியது அண்ணிதான். போலீசாரிடம் எவ்வளவோ சொல்லி கெஞ்சினாள்.

“இது ரொம்ப அநியாயம் இன்ஸ்பெக்டர். ஒரு தாய்க்கு சமமாக அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொண்டவன் அவன்”

குழந்தையைப் பறிகொடுத்த துக்கத்துக்கு மேல் இந்த அதிர்ச்சி எல்லோரையும் நிலைகுலைய வைத்தது.

நாக்கில் நரம்பில்லாமல் பேசிக் கொண்டே போன இன்ஸ்பெக்டர், கோபாலின் கன்னத்தில் பளார் பளாரென்றும் அறைந்தார்.

கடைசியில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் சந்தேகப்பட ஒன்றுமில்லை என்பது ஊர்ஜிதமாயிற்று.

“நான் முன்னே வேலை பார்த்த ஸ்டேஷன்ல இதேபோல ஒரு கேஸ் நடந்தது. அதுதான் சந்தேகப்பட்டு விசாரிச்சேன். எங்க கடமையைதான் நாங்க செஞ்சோம்” என்று சாதாரணமாக சொல்லிவிட்டு மற்ற வேலையைப் பார்க்கப் போய்விட்டார் இன்ஸ்பெக்டர்.

அதற்குள் அன்றைய மாலை செய்தியாக கோபாலின் புகைப்படத்துடன் குடும்ப மானம் காற்றில் பறந்தது.

தரணியின் இறுதி சடங்குக்கு எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டிருந்தாள் மனோகரி.

குற்ற உணர்வு அவளை அரித்துக் கொண்டிருந்தது. இவர்களுக்குத் தன்னால் ஒரு உதவியும் இல்லையே? தரணியைப் பார்த்துக் கொள்ளச்சொல்லி தன்னைக் கேட்க வேண்டும் என்று இவர்களுக்குத் தோன்றக்கூட இல்லையே?

அண்ணனின் துயரம் இவள் மீது வெறுப்புணர்ச்சியாக நங்கூரம் போட்டு உட்கார்ந்து கொண்டது. அவர் ஒரு கொந்தளிக்கும் மனநிலையில் இருக்கிறார் என்பது சீக்கிரமே மனோகரிக்குப் புரிந்து போயிற்று.

நாலு தெரு தள்ளி இருந்தும் உரிமையோடு தன் தங்கையிடம் அவசரத்துக்குக் கூட உதவி கேட்க முடியவில்லையே? அப்படி கேட்க முடியாத அளவுக்கு விழுந்து விட்ட இடைவெளிக்கு யார் பொறுப்பு?

“தேவா எதற்கு இங்கே வந்தாள்? வெளியே போகச் சொல் அவளை.” அண்ணியைப் பார்த்து இரைந்தார் அண்ணன். அவர் குரலில் இருந்த கடுமை மனோகரியைத் தாக்கியது.

தன் தோளில் சாய்ந்து குமுறி அழுது கொண்டிருந்த கோபாலை தேற்றும் வகை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் மனோகரி.

அண்ணனின் கோபமும், அதிலிருந்த நியாயமும் அவளுக்குப் புரியாமல் இல்லை. ஆனால் அதற்கான நேரமா இது?

“இந்த சின்னப் பையனை நம்பி குழந்தையை விட்டுட்டுப் போனது என் தப்புதான். எனக்கு உறவும் முறையும் எல்லாம் சரியாக அமைஞ்சிருந்தா இந்த கஷ்டமெல்லாம் வந்திருக்குமா?” யாரிடமோ குமுறிக் கொண்டிருந்தார் அண்ணன்.

அந்த நேரம் பார்த்து செய்தித்தாளில் வந்ததைப் படித்துவிட்டு பரபரவென்று உள்ளே வந்தான் ராஜன்.

“போதும் உன் குடும்ப லட்சணம். நீ இங்கே இருப்பதை நான் விரும்பலை. உனக்கும் இவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இனி தேவையில்லை” என்று பல்லைக் கடித்தபடி இவள் அருகில் வந்து முணுமுணுத்தான்.

சற்றே தயங்கினாலும் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது மனோகரிக்குத் தெரியும்.

இரைந்து கத்தி அவளை இழுத்துக் கொண்டு போவான். விஷயம் இன்னும் ரசாபாசமாகும்.

மனதை கல்லாக்கிக் கொண்டு கோபாலை மெல்ல நகர்த்தினாள் மனோகரி. ராஜனைப் பின்தொடர்ந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினாள். வயிற்று சிசுவை விட அதிகமாக கனத்தது மனசு.

எந்த நேரத்தில் தன் குடும்பத்தாருக்கு ஆதரவு தேவையோ அந்த நேரத்தில் முற்றிலுமாக கைவிட்டுவிட்டு கிளம்ப நேர்ந்த கொடுமை இன்று வரைக்கும் மனோகரி மனதில் வடுவாக உருத்திக் கொண்டிருக்கிறது.

கோபால் முற்றிலுமாக சிதைந்து போனான். அவனால் கல்லூரிக்குப் போக முடியவில்லை. பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. ஒரு இருட்டு அறையில் பதுங்கிக் கொண்டான். அண்ணி அவ்வப்போது வற்புறுத்தி சாப்பிட வைத்தாள். மற்றபடி எதிலும் பிடிப்பே இல்லாமல் நடந்து கொண்டான்.

மத்திய அரசுப் பணியில் இருந்த அண்ணன் நாக்பூருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு கோபாலையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார். எல்லோருக்குமே ஒரு மாற்றம் தேவைப்பட்டது.

மனோகரியைப் பொருத்தவரையில் அன்று புறப்பட்டுப் போனவர்கள் போனவர்கள்தான்.  முற்றிலுமாக உறவுகள் விலகிக் கொண்டுவிட்டது.

நவீன் பிறந்து ஒரு தாயாக புதிய பொறுப்புகள் மனோகரியை சூழ்ந்து கொண்டன. கல்லூரியில் உதவிப் பேராசிரியராக அவளுக்கு வேலை கிடைத்தபோது நவீனுக்கு இரண்டு வயது ஆகியிருந்தது. காப்பகத்தில் குழந்தையை விட்டுவிட்டு வேலைக்குப் போனாள் மனோகரி. உதவிக்கோ ஆறுதலுக்கோ மனிதர்கள் இல்லாமல் நிற்கும் யதார்த்தத்தைப் பழகிக்கொண்டாள்.

ராஜன் இறந்தபோது செய்தி தெரிந்து அண்ணனும் அண்ணியும் வந்தார்கள். ஒப்புக்கு சற்று நேரம் இருந்துவிட்டுக் கிளம்பிவிட்டார்கள்.

ஐம்பது ஆண்டு கால அனுபவத்தை ஐந்தே வருடத்தில் பார்த்து முடித்துவிட்ட ஆயாசத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டெழுந்தாள் மனோகரி.

அவளும் நவீனுமாக ஒத்திசைந்து வாழ்க்கை ஒரு லயத்துக்கு வந்தது.

மீனாட்சி குடும்பத்தாருடன் மனோகரிக்கு ஏற்பட்ட பந்தம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது. ஒற்றையாக வளர்கிறோம் என்ற உணர்வே தெரியாமல் நவீனும் வளர்ந்தான்.

ஒரு மெல்லிய பெருமூச்சுடன் நிகழ்காலத்துக்கு மீண்டாள் மனோகரி. இனியா இல்லாத வீடு வெறிச்சோடி விட்டதுபோல் தோன்றியது. முன்பு எப்போதும் உணராத ஒரு தனிமை அவளை மெல்ல அழுத்தியது.

எல்லாம் சரியாகிவிடும். வெயில் தணிந்ததும் ஒரு வாக்கிங் போய்வரலாம். தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொண்டு தயாரானாள் மனோகரி.

(தொடரும்)

 

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...