0,00 INR

No products in the cart.

   பார்த்திபன் கனவு!

 

வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ஆனால், படிப்பை முடித்து பணியில் சேர்ந்த ஒரு வருட காலத்திற்குள் இவ்வளவு இறக்கத்தை பார்த்திபன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. ஆர்வத்தோடு படித்த படிப்பை ஏணியாக பயன்படுத்தி,  ‘ஏழ்மை என்ற நிலையை கடந்து விடலாம்’ என்ற அவன் கனவை, நோய் தொற்று கலைத்து விட்டது.

வாழ்க்கையில், இறக்க தருணங்களில், மற்றவர்களிடம் இரக்கத்தை சம்பாதிக்க நினைப்பது தவறு என்று அவன் தன்மானம் கூக்குரலிட்டது.

ஒரு வருட சம்பாத்தியத்தில் சேமித்த பணம் சோப்பு நுரையாக கரைந்து, மூன்று இலக்கத்தை தொட்டு, அவனுடைய வைராக்கியத்தையும் கரைக்க  ஆரம்பித்தது.

“தன்மானமாவது…மண்ணாங்கட்டியாவது… அடுத்த மாத வீட்டு வாடகைக்கு வழி பண்ணிக்கோ…இல்லைன்னா, சிறிதும் இரக்கம் காட்டாமல், ஓனர் வீட்டை காலி பண்ண சொல்லிடுவார். அது மட்டுமில்லை… சாப்பாட்டு செலவில் மிச்சம் பிடித்து, வாங்கி குவித்திருக்கும், வள்ளுவனார், பாரதி, உ.வே.சா, திரு.வி.க.வின் படைப்புகளை அடக்கிய புத்தகங்களை, மூட்டையாக கட்டி, குப்பையில் எறிஞ்சுடுவாங்க…’ என்ற உள்ளுணர்வு, உரக்க கூவ ஆரம்பித்தது. மன பாரத்தை இறக்கி வைத்து, உதவி நாட  ‘இரக்கம்’ என்ற  பெயர் சொல்லை மனதின் ஓர் ஓரத்தில் தேக்கி வைத்திருக்கும் யாராவது ஒருவரை சந்திக்க மாட்டோமா.. என்று அவன் மனம் ஏங்கியது. தன்மானம், கௌரவம் போன்ற சொற்கள், அவனுக்கு தற்போது வெறும் குப்பையாக தெரிந்தன.

அந்த சமயத்தில், குப்பைகளை அள்ளிச் செல்லும் வாகனம் ஒன்று, நாற்றத்தை பரப்பி, அவனை கடந்து சென்று, இடது புறத்தில் திரும்பியது. திருப்ப இயக்கத்தில், வாகனத்திலிருந்து பிதுங்கி வழிந்த சில குப்பை கூளங்கள், ஒரு பொதியாக தெருவில் விழுந்து, அவனுக்குள் ஒளிந்து, தேவையான சமயங்களில் எட்டிப் பார்க்கும் சமூக விழிப்புணர்வை தூண்டியது. சுற்றும் முற்றும் பார்த்து, அந்த பொதியை, பாக்கெட்டில் வைத்திருந்த பழைய செய்திதாளை குவித்து அள்ளியவன், வாகனம் சென்ற திசையை நோக்கி வேகமாக நடந்தான்.  அடுத்த தெருவின் முனையில் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.

பக்கவாட்டு கண்ணாடி வழியாக அவனை பார்த்த ஓட்டுனர், உயரத்திலிருந்து கீழே குதித்து, வித்தியாசமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவனையும், கையிலிருந்த  பொட்டலத்தையும் நோட்டம் விட்டார்.

“எங்களுக்குத்தான் தலை எழுத்து… இந்த குப்பை கூளங்களை கட்டிக்கிட்டு அழுவறோம்.  படிச்சவன் மாதிரி தெரியறே.. உனக்கு எதுக்கு இந்த வெட்டி வேலை.  குப்பையை தெரு முனை குப்பை தொட்டியில் போட்டுட்டு போவியா. வேலையத்த வேலையா, வண்டியை துரத்திக்கிட்டு வந்துட்டே…”

“இந்த பொதி, வண்டியிலிருந்துதான் விழுந்துச்சு. ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும்னுவாங்க.  குப்பை, தெருவில் நாலா பக்கமும் பறந்துடக்கூடாதுங்கற நல்ல எண்ணத்தில்தான், திருப்பி வண்டியிலேயே போட்டுடலாம்னுதான் எடுத்துக்கிட்டு வந்தேன்…” விளக்கம் கொடுத்தான்.

“பழமொழியெல்லாம் பலமாத்தான் இருக்கு. ஏதோ, என் சொத்தை திருப்பி ஒப்படைக்கறா மாதிரி ஆக்ட் குடுக்கற.  பார்க்கிற இல்ல…வண்டியிலே ஃபுல் லோடு ஏத்தியாச்சு. இனிமேல, ஒரு துரும்பு ஏத்தினா கூட, சக்கரம் புட்டுக்கும். ஏதோ பெரிய தப்பு நடந்துட்டா மாதிரி பேசற…  கொரோனா டயத்துல, எங்கள தவிர, யாரால இதுபோல  வேல செய்ய முடியும்..?  ஏன் நீ ஒரு நாள் வந்து செஞ்சுதான் பாரேன்…” பெருத்த அவமரியாதைக்கு உள்ளானது போன்ற வார்த்தை குவியல்கள், அவரிடமிருந்து வெளிப்பட்டன. அதிகம் படிக்காதவர் போல தெரிந்தாலும், தமிழ் பழமொழியை புரிந்து கொண்டது போல் பேசியது, அவர் மீதிருந்த மரியாதைக்கு வித்திட்டது. தமிழ் மொழி மீது அவனுக்கு இருந்த அபரிமிதமான பற்றுதான் அதற்கு காரணம். ஆனால், அந்த பற்றுக்கு உரிய மரியாதை, எங்கும் கிடைக்காததுதான் அவனுடைய பிரதான வருத்தமாக வளர்ந்து வந்தது.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்த மயிலிறகை அதிகம் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்து விடும் என்ற பொருளுடைய

‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.’ 

என்ற குறளை, எவ்வளவு நயம்பட இவர், நொடிப்பொழுதில் விளக்கி விட்டார் என்று ஓட்டுனரை பார்த்து வியந்து நின்றான் பார்த்திபன்.  ‘இந்த தருணத்தில், உன் தமிழ் அறிவை நிச்சயம் வெளிப்படுத்தித்தான் ஆகணுமா..?’ என்றது மூளை.

“ஐய…ஏதோ சொல்லக் கூடாததை சொல்லிட்டா மாதிரி அப்படி என்ன லுக் விடற… உனக்கு வேறு எதுவும் வேல இல்ல போல தெரியுது. நாங்க இன்னும் நாலு டிரிப் அடிச்சாகணும்…”சக்கரத்தில் காலை ஊன்றி, வாகனத்தில் ஏற முயற்சித்தவரின் அருகில் சென்றான். அவர் வாயிலிருந்து வெளிப்பட்ட ‘வேலை’ என்ற வினைச்சொல், அவனை கவர்ந்து இழுத்தது.

“கரெக்டா சொன்னீங்க…வேலைல இருந்தேன்…ஆனா, இப்ப இல்ல…”

“ஓ…இருந்த வேலை புட்டுக்குச்சா… இந்த கொரோனா டயத்தில் நிறைய பேரு அதையேதான் சொல்றாங்க… ஏன் வேற ஏதாவது  வேலை தேடிக்க வேண்டியதுதானே..?” வார்த்தைகள் லோக்கலாக இருந்தாலும்,  குரலில் சற்று இரக்கம் கசிந்து வழிய ஆரம்பித்தது தெரிந்தது.

“ஒண்ணும் கிடைக்கல..”

“வேல என்ன குப்பை தொட்டியிலா கிடக்கும்… நாலு இடத்தில விசாரிக்கணும். நீ ஆசைப்பட்ட வேலைதான் கிடைக்கணும்னு எதிர்பார்க்காம, இந்த கொரோனா காலத்தில், கிடைச்ச வேலையை ஒத்துக்கிட்டு ஆசையா செய்யணும். என்னையே எடுத்துக்க… ஒரு நாள் இந்த குப்பை வண்டியில சவாரி செய்யலைன்னா, எனக்கு தூக்கமே வராது…”

ஓட்டுனரின், ‘கிடைச்ச வேலையை ஒத்துக்கிட்டு ஆசையா செய்யணும்’ என்ற தத்துவம் அவன் மனதில் ஒட்டிக் கொண்டது.

“குப்பை அள்ளுகிற வேலையா இருந்தாலும் செய்ய தயாரா இருக்கேன். ஆனா, ஒரு வேலையும் கிடைக்க மாட்டேங்குது.”

“இந்த குப்பை அள்ளற வேலை ரொம்ப சுலபம்னு மட்டும் நினைக்காதே.  அதுக்கும் இப்ப ஏகப்பட்ட போட்டி. படிச்சு பட்டம் வாங்கினவங்க கூட, அந்த வேலைக்கு கியூவில் நிக்கறாங்க.  ஆமா… நீ என்ன படிச்சிருக்கே..?

வேலை தேடி விஜயம் செய்த இடங்களில் இதே கேள்வியை பல பேர் கேட்டிருக்கின்றனர். அதற்கு அவன் சொன்ன பதில் திருப்திகரமாக இருந்திருந்தால், இந்நேரம் அவனுக்கு ஒரு வேலை கிடைத்திருக்கும்.

“ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு பிறகு, தமிழ் ஆசிரியர். தனியார் பள்ளியில் ஒரு வருட கற்பித்தல் அனுபவம். திருக்குறள், நாலடியார், திரிகடுகம்,நான்மணிக்கடுகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக் கோவை ஆகிய அனைத்து தமிழ் நூல்களும், ஓரளவு அத்துப்படி…” தமிழ் பற்றை வெளிப்படுத்திய அவனுடைய பதிலுக்கு பின்னான அவர்களுடைய உடல் மொழியும், வாய்மொழியும் அவனுக்கான வாய்ப்புகளை இருட்டடைப்பு செய்து காட்டின.

உதட்டை பிதுக்கி, முகத்தை திருப்பும் அவர்களுடைய உடல் மொழிகள், தான் ஏதோ தவறு செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்வை அவனுள் வளர்த்தது.

“மொழிப் பற்றுங்கறது உன் தனிப்பட்ட விஷயம். அது வேலைக்கு ஆகாதுங்கறதை புரிஞ்சுக்கோ…” என்றார் ஒருவர்.

“நீ பெருமையா பேசற நூல்கள், உன் நிர்வாக திறமையையோ அல்லது தொழில் திறமையையோ வளர்த்து இருக்காங்கறதை பற்றி யோசிச்சு சொல்லு..” தமிழ் வளர்ச்சி கழகத்தில் பிரத்தியேக விருந்தினராக அழைக்கப்பட்டு, தமிழ் மொழிக்காக உயிரையும் கொடுப்போம் என ஆவேசமாக பேசிய பிரலமான தொழிலதிபர், நேர் காணலின் போது உதிர்த்த வார்த்தைகள் அவன் நம்பிக்கையை சிதைக்கும்படியாக இருந்தன.

“வள்ளுவர் தொடாத கருப்பொருளே இல்லைன்னு சொல்லலாம்.

சுய வலிமையை போட்டியாளரின் வலிமையோடு ஒப்பிட்டு, அதற்கான ஆதாரங்களை மதிப்பிட்ட பிறகுதான் ஒரு திட்டத்திற்குள் நுழைய வேண்டும் என்ற பொருளுடைய

‘வினை வலியும் தன் வலியும்  மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கிச் செயல்’

என்ற வியாபார உலகத்துக்கு பொருத்தமான இந்த குறள் இதற்கு நல்ல உதாரணம்.”

“அது சரி… அதுக்கு தொழில் பற்றிய அடிப்படை அறிவு தேவை. நீ படிச்ச படிப்பு, அதை உனக்கு சொல்லிக் கொடுத்திருக்காங்கறதை யோசி. என்னிடம் சொன்னது போல், வேறு எங்கேயும் சொல்லிடாதே. சிரிக்கப் போறாங்க…” அவனுடைய உற்சாக றெக்கைகளை வெட்டிவிட்டார் அவர்.

ஆனால், அவன் முயற்சியை கைவிடவில்லை.

“தமிழ் நூல்களை படிச்சதனால, உருப்படியா நீ என்ன கத்துக்கிட்டே..உனக்கு என்ன தகுதி இருக்குன்னு இந்த வியாபார நிறுவனத்தில், மார்க்கெட்டிங் வேலைக்கு அப்ளை செய்தாய்..?” அடுத்த நேர்காணலில் அவனிடம் கேட்கப்பட்ட கேள்வி இது.

“வியாபாரத்தில் நேர்மையும், நாணயமும் தேவை.

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்

இந்த குறள்படி, மனசாட்சிக்கு விரோதமா, பொய் சொல்லக் கூடாது. அந்த குணத்தை நான் வளர்க்க முயற்சித்து வருகிறேன். அதனால், நேர்மையான ஒரு ஊழியன் உங்களுக்கு கிடைப்பான் சார்..”

“வியாபாரத்தில் மார்க்கெட்டிங்கறது ஒரு சாகச மேடை. அதில், ப்ராடக்டைப் பற்றி  பேசும்போது, ஆஹா…ஓஹோன்னு உயர்த்தி பேசணும். குப்பையையும் விற்கிற திறமை வேணும். இல்லைன்னா, பேங்கில வாங்கிய கடனுக்கான வட்டி எகிறிடும். இந்த சாகசங்களுக்கு மெய்யை விட, பொய்தான் அதிகம் தேவைப்படும். எங்க வியாபாரத்துக்கு நீ ஒத்து வரமாட்டே. வேற இடம் பார்த்துக்க..” வேலைக்கான வேட்டையில், ஒன்றன்பின் ஒன்றான நிராகரிப்புகள் தொடர்ந்தன. தன்னுடைய வலிமை என்று அவன் கற்பனை செய்திருந்த குணாதிசயங்கள், பலவீனங்களாக சித்தரிக்கப்பட்டதில், தான் என்ன தவறு செய்கிறோம் என்பது ஓரளவு புரிந்தது. அதன்படி, வேலை தேடுவதற்கான தன் அணுகுமுறையை மாற்றி அமைக்க முடிவு செய்தான்.

தன்னைப் பற்றிய சுய குறிப்பை, யாராவது ஒருவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் காலம் வரும் என்ற அவனுடைய கனவு மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது.

அதன் விளைவாகத்தான், தற்போது, குப்பை வண்டிக்கு முன் நிற்கிறான்.

“குப்பை அள்ளற வேலைக்கு யாரை பார்க்கணும்…?” தமிழ் ஆசிரியர் என்று பெருமை பேசி, மீண்டும் தமிழுக்கு சிறுமை சேர்க்க அவன் விரும்பவில்லை.

“இந்த ஏரியா சூப்பர்வைசர், இன்னைக்கு பத்து மணிக்கா, இதே இடத்தில் வந்து பத்து நிமிஷம் நிப்பார். ரொம்ப பிசி ஆளு.  வண்டி நம்பர் 9698. வேண்ணா, பேசிப் பாரு. என்ன..கொஞ்சம் செலவு ஆகும்..”அவன் மனதில் நம்பிக்கையை அள்ளிப் போட்ட  ஓட்டுனர், வண்டிக்குள் அள்ளிப் போட்ட குப்பையுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தார்.

குப்பை அள்ளுவது ஒன்றும் அவனுக்கு புதிதல்ல. ஆரம்ப பள்ளி முதற்கொண்டு, வகுப்பறையையும்,பள்ளி வளாகத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு, அவனுக்கு எப்படியாவது வந்து சேர்ந்துவிடும். ‘சுத்த குழுவில், தொடர்ந்து அவனுக்கு ஒரு இடம் கிடைத்து வந்தது.  அந்த பொறுப்பை, ஏனோ தானோ என்றில்லாமல், முழு மனதுடன் நிறைவேற்றி, ஆசிரியர்களிடம் சபாஷ் வாங்கியிருக்கும் மன நிறைவு இன்னும் மனதில் தேங்கி நின்றது.

அந்த சபாஷ்களை பற்றி, ஆசிரியர் பணிக்கு சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகத்திடம் பெருமையாக பகிர்ந்து கொண்டான்.

“இங்கே வேலை பார்க்கிற ஆசிரியர்களில், தமிழ் ஆசிரியரான நீங்கதான் ஜுனியர். மற்ற சப்ஜெக்ட் ஆசிரியர்களுக்கு நேரம் இருக்காது. ஆகவே, பள்ளியை சுத்தமா வைத்துக் கொள்ளும் பொறுப்பு உங்களுடையது.  ஏற்கெனவே, பள்ளி நாட்களில் இந்த வேலையை பொறுப்பா பார்த்து, சபாஷ் வாங்கியிருப்பதை பற்றி ஏற்கெனவே சொல்லி இருக்கீங்க. ஆகையினால், இது ஒண்ணும் உங்களுக்கு புதுசு இல்லை. உங்களுக்கு, பள்ளியில் வேலை செய்யும் ஆயா, உதவி செய்வார்.  பள்ளி நிர்வாகத்திடமும் சபாஷ் வாங்க முயற்சி பண்ணுங்க…”தாளாளர், அவனை அழைத்து சொன்னபோது, அதை பெருமையாக நினைத்தான்.

குறைந்த சம்பளத்துக்கு அமர்த்தப்பட்ட ஆயாவால், அதிக உழைப்பை இட முடியாததால், குப்பை கூளங்களை அகற்றும் பணியின் பெரும்பகுதி அவன் மீதுதான் விழுந்தது. நிர்வாகத்திடம் எதிர் கேள்வி கேட்க முடியாது என்பதால், ஆசிரியர் பணியை தக்க வைத்துக்கொள்ள மௌனம் அவனுக்கு துணையாக நின்றது.

“தமிழ் வாத்தியாருகிட்டேதான் இது மாதிரி வேலையை கொடுப்பாங்க…”என்ற பள்ளி நிர்வாக வழிமுறை ரகசியத்தை ஆயா ஒரு முறை அவனிடம் ரகசியமாக பகிர்ந்திருக்கிறாள்.

“மற்ற சப்ஜெக்ட்டுகள் ரொம்ப முக்கியம்…” என்ற வாய்மொழி உத்தரவு மூலம், தமிழ் வகுப்புகள், அடிக்கடி கணிதம், விஞ்ஞானம் போன்ற வகுப்புகளாக மாற்றப்படும் நடைமுறையையும், பணிக்காலத்தில் பார்த்திபன் சந்தித்து இருக்கிறான்.

ஊரடங்கு காலத்தில், இணைய வழி வகுப்புகள் நடந்த போதும், தமிழ் பாட வகுப்புகளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதில்லை. வாரத்திற்கு ஓரிரு முறை நடத்தப்பட்ட வகுப்புகளுக்காக அவனுக்கு கிடைத்த வருமானம் சில நூறுகள் மட்டுமே என்பதால், பணியை விட்டு விலகுவது என்று முடிவு எடுத்து விட்டான்.

இப்பொழுது, 9698 என்ற எண்ணை தாங்கிய வாகனத்தில் வந்து இறங்கப் போகும் பிரமுகரை சந்திப்பது மட்டுமே அவனுடைய எண்ண ஓட்டங்களில் வியாபித்திருந்தது.

9698லிருந்து இறங்கியவர், கூலிங் கிளாஸை, முகத்தின் உச்சத்திற்கு உயர்த்தி, எதிரிலிருந்த டீக்கடைக்குள் நுழைந்தார். அவர் வரும் நேரம் அறிந்து, அந்த டீக்கடை வாசலில் பலர் அவர் வருகைக்காக காத்திருந்தனர்.  சுற்றுப் புறங்களில் பணிபுரிந்து கொண்டிருந்த சில துப்புரவுப் பணியாளர்கள் அங்கு படையெடுத்து, அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு போனார்கள். காத்திருந்தவர்கள், ஒவ்வொருவராக அவரிடம் பணிவாக பேசிவிட்டு நகர்ந்தனர். அவர் வெளியே வருவதை எதிர்பார்த்து, 9698க்கு அருகிலேயே காத்திருந்தான் பார்த்திபன். ‘கார்ப்பரேஷனில், எந்த வேலையா இருந்தாலும், முடிச்சுக் கொடுத்துடுவார்… அதான் அவருக்கு நிறையை விசிட்டர்கள்’ என்று அருகில் நின்றிருந்தவர் கருத்து பகிர்ந்தார்.

அப்பொழுதுதான், அரிய வகை ரத்த தேவைக்கான அவசர அழைப்பு  பார்த்திபனுக்கு மொபைலில்  வந்தது. அந்த தருணத்தில், அவனை ஆதிக்கம் செய்து கொண்டிருந்த தன்னலம் மறைந்து, சமூக நலம் தலை தூக்கியது.  9698ஐ மறந்து, குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருந்த ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் பறந்தான்.

“ரோடு ஆக்சிடெண்ட்டில், பேஷன்டுக்கு பெரும் ரத்தப் போக்கு. டோனர் பட்டியலில் இருக்கும் நீங்க, கொஞ்சம் லேட்டா வந்திருந்தீங்கன்னா, உயிரை காப்பாற்றுவது கஷ்டமாகியிருக்கும்” என்று சொன்ன நர்ஸ், ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ என்றாள். வெயிட்டிங் நேரம், இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீண்டது.

வழக்கமாக, ரத்த தானம் அளித்த பிறகு ஒரு கிளாஸ் ஜூஸ் குடித்துவிட்டு கிளம்பிவிடுவான். ‘யாருக்காக ரத்தம் அளித்தோம்’ என்ற விவரங்களை கூட அவன் அறிந்து கொள்ள முற்பட்டதில்லை. ‘ஊர், பேர் தெரியாத ஒருவருக்கு உதவி செய்திருக்கிறோம்’ என்ற மன திருப்தி மட்டும் அவனுக்கு போதுமானதாக இருந்தது. ஆனால், வழக்கத்திற்கு மாறான தற்போதைய காத்திருப்புக்கு காரணம் புரியாமல் தவித்தான். 9698 அவன் மனக்கண் முன் ஓடி மறைந்தது.

அப்பொழுது, கலங்கிய கண்களுடன், கோதுமை கலரில், வாட்ட சாட்டமான ஒரு பெண்மணி, அவன் அருகில் வந்து நின்று,  உடலை வளைத்து, காலை தொட முயற்சித்தார்.

செய்வதறியாது திகைத்தவன் சுதாரித்து, ‘நீங்க யார்… எதுக்கு இதெல்லாம்…?’ என்று காலை பின்னுக்கு இழுத்தான்.

“ஆப் பகவான் ஹை…என்று ஆரம்பித்தவள், உணர்ச்சி பொங்க, இந்தியில் பேச ஆரம்பித்தாள்.

அவள் என்ன பேசுகிறாள் என்று புரியாமல் தவித்தவனுக்கு மொழி பெயர்த்து சொல்ல  நர்ஸ் உதவிக்கு வந்தாள்.

“ஆக்சிடெண்டெட்டில் அடிபட்டு, உயிருக்கு போராடிக்கிட்டிருந்த என்னோட ஒரே பொண்ணுக்குத்தான், அரிய வகை ரத்தத்தை கொடுத்து காப்பாத்தி இருக்கீங்க. அவள், ஐ.சி.யூ.விலிருந்து வெளியே வரும்வரை உங்களை வெயிட் பண்ண வைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கறேன். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை. நன்றி உணர்வுகளை மனதிலிருந்து கொட்ட, பாஷை ஒரு தடையா இருக்கு. வடநாட்டிலிருந்து, வியாபாரத்திற்கு சென்னை வந்து ஆறு மாசம் ஆகுது. ஆனா, இன்னும் சரியா தமிழ் கத்துக்கலைங்கறதை நினைச்சா வெட்கமா இருக்கு.”

“நீங்க என்ன மொழி..?”

“தமிழ்…!’‘ அந்த வார்த்தையை உச்சரித்த போது, பெருமிதம் அவனுள் பொங்கி வழிந்தது.

“நான் இந்தி இலக்கியம் படிச்சவள்.  தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். தமிழ் ஓர் அழகான, பழைமையான மொழின்னு கேள்விப்பட்டிருக்கேன். அதன் இலக்கியம் செழிப்பானது.  மொழி புரியலைன்னாலும், ஷிண்டே நடிச்ச பாரதியார் படம் பார்த்திருக்கேன். அந்த ஆவேசக் கவியின் கவிதைகளை படிச்சு ரசிக்கணும். வள்ளுவரின் இரட்டை வரி பூங்கொத்துகளை படிச்சு, கருத்தை உள் வாங்கணும். நாலடியாரை படிச்சு பயனடையணும்…” தழுதழுத்த குரலில் பேச ஆரம்பித்த அந்த பெண்ணின் குரல்,  தமிழை பற்றி கருத்து பகிர்ந்தபோது, புத்துயிர் பெற்றது போல் தோன்றியது.

“என்னுடைய மகளுக்கு தமிழ் ரத்தம்தான் உயிர் பிச்சை கொடுத்திருக்கு.  அவளுக்கு இப்ப எட்டு வயசு. இப்பொழுதிலிருந்தே, அவள் தமிழை நல்லா கத்துக்கணும். அவளோடு சேர்ந்து, நானும் தமிழையும், தமிழ் இலக்கியத்தையும் வேகமாக கற்றுக் கொள்வேன். அதற்கு, உங்களால் உதவி செய்ய முடியுமா…நீங்க தற்போது என்ன வேலை செய்துகிட்டு இருக்கீங்க…?”

பார்த்திபன் சற்று யோசித்தான். சொல்லலாமா…வேண்டாமா என்பதற்கான பட்டிமன்றம் அவன் மனதிற்குள் ஓடி, ‘தப்பில்லை…சொல்லலாம்’ என்ற  தீர்ப்பை வழங்கியது.

“ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு பிறகு, தமிழ் ஆசிரியர். தனியார் பள்ளியில் ஒரு வருட கற்பித்தல் அனுபவம். திருக்குறள்,  நாலடியார், திரிகடுகம்,நான்மணிக்கடுகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி,இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக் கோவை ஆகிய அனைத்து தமிழ் நூல்களும், ஓரளவு அத்துப்படி…” இதை சொல்லும்போது, அவன் குரலில் பெருமிதம் கலந்திருந்தது.

நர்ஸ் மொழி பெயர்த்தாள்.

“நான் எதிர்பார்க்கும் அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளது…” என்று சொல்லிய அந்த பெண்மணி, தன் கைப்பையை திறந்து, செக் புத்தகத்தை எடுத்தாள்.

“ரத்த தானத்திற்கு பணம் வாங்கறதில்லைன்னு நர்ஸ் சொன்னாங்க. ஆனால், தமிழ் மொழி கற்பித்தல் என்கிற தானத்திற்கு இந்த செக்கை வாங்கிட்டுதான் ஆகணும். இதை குரு தட்சணையா ஏத்துக்கோங்க…” ஒரு லட்ச ரூபாய்க்கான செக்கை, இரு கரம் குவித்து, அவன் கையில் கொடுத்தாள்.

கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும்; பிறர்க்குத் தருவதால் குறையாது; (கற்றவர்) புகழை எங்கும் பரவச் செய்யும்; (தாம்) உயிரோடு இருக்கும்வரை அழியாது. ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்தை யாம் கண்டதில்லை.

என்ற பொருளை உள்ளடக்கிய நாலடியார் வெண்பா

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்

தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்

எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து.

அவன் நினைவுக்கு வந்தது.’ கல்வி’ என்ற இடங்களில், ‘தமிழ் கல்வி’ என்ற சொல்லை நிரப்பி, மனதில் அழகு பார்த்தான். வேற்று மொழியை சேர்ந்த ஒருவர், தமிழை மதித்து போற்றிய சொற் கோவை, அவனுடைய தமிழ் பற்றுக்கு புத்துயிர் கொடுத்தது.

“எங்க குடும்பத்துக்கு நீங்கதான் தமிழ் ஆசிரியர் என்றவள், தன் விலாசம் அடங்கிய பெயர் அட்டையை பார்த்திபனிடம் கொடுத்தாள்.

அதில் வீட்டு எண் 96-98 என்று குறிப்பிடப்பட்டிருந்தது!

 

1 COMMENT

  1. In the contemporary society, plagued by a pandemic obsession with the ubiquitous social media, with its acute limitations and grotesque syntax, the discourse, particularly among the youth, and of late alarmingly among the middle aged as well, is often bounded by 280 characters as in Twitter, with words and phrases being supplanted by bizarre abbreviations and acronyms, and pseudolanguages such as Emojis and GIFs, languages as one has known, as a vehicle of articulation, might be headed towards extinction.

    This story, by a quintessential linguapgile, is a breath of fresh air, and the author has adroitly woven an engaging narrative around the love for Tamil, the central theme, and his felicity with Tamil, eclectic reading across genres and the mastery in the art of storytelling have come together into a remarkable story.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...