0,00 INR

No products in the cart.

கர்மா 

 

ள்ளிரவு இரண்டு மணி. தொலைபேசி சிணுங்கியது. பெரும் நெருக்கடி நிலைமையாகத்தான் இருக்க வேண்டும். விடிகாலைத் தூக்கத்தில் ஒரு அலாதி இன்பம்தான். ஆனால், கடமை அழைக்கும்போது டாக்டர் வசந்தியிடம் ஒரு சுறுசுறுப்பு தானாகவே எழும்.

ஒரு அதி முக்கியமான நபருக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. சிறுநீரகம் செயல்படாததால் இரத்தம் உடனடியாக சுத்திகரிக்கப்பட வேண்டும். உங்களது சேவை மிகவும் அவசியம். விரைந்து வாருங்கள்…

செய்தி சுருக்கமாக இருந்தது.

வசந்தி எழுந்தாள். களைப்பும் தூக்கமும் அறவே நீங்கியிருந்தன. ஒரு டாக்டருக்கான கடமை உணர்ச்சி பெருகிக்கொண்டிருந்தது.

வருடம் 2003. ஜெட்டா, சவுதி அரேபியா.

ஒரு வருட காண்டிராக்ட்டில் டாக்டர் வசந்தி அங்கு வந்திருந்தாள். ஆனால், குடும்பத்துடன் வசித்த இடம் கனடா.

நீண்ட கருப்பு ‘அபயா’ அங்கிக்குள் டாக்டர் வசந்தி தன்னை திணித்துக்கொண்டாள். சவுதியின் அப்போதைய சட்ட திட்டங்கள் அப்படி ! வசந்தி கார் ஓட்டவும் முடியாது. பெண்கள் ஓட்ட அனுமதி இல்லை. ஓர் ஆண் டிரைவர் அவளை அழைத்துச் செல்ல உடனே வருவார் என்று அவளுக்குத் தெரியும். செல்லும் நேரத்தைக் குறைக்க அபார்ட்மெண்டிலிருந்து வெளி வந்து வசந்தி காத்திருந்தாள். அந்த நள்ளிரவிலும் கோடையை ஒத்த தட்பவெப்ப நிலை!

ஆஸ்பத்திரியை அடைந்ததும் டையாலிசிஸ் உபகரணத்தை தயார் செய்தாள். எமர்ஜென்சி பிரிவுடன் உடனே தொடர்பு கொண்டாள். தான் தயாராக இருப்பதைத் தெரிவித்தாள். நோயாளி பற்றிய விவரம் வேண்டும். நோயாளியின் மருத்துவ வரலாறு இப்போதைய ஸ்திதி ஆகிய இரண்டும் மிக முக்கியம்.

தலைமை டாக்டரே லைனுக்கு வந்தார். வசந்திக்கு நோயாளியின் முக்கியத்துவம் உடனே புரிந்தது.

நோயாளி ஆப்பிரிக்காவிலிருந்து வந்த முக்கிய நபர். குறைந்த பட்சம் நான்கு லிட்டர் திரவமாவது வடிக்கப்பட வேண்டும். தலைமை டாக்டரின் குரலில் எச்சரிக்கையுடன் மிரட்சியும் அதிகமாகத் தெரிந்தது.

சாதாரண டையாலிசிஸ் இல்லாமல் முழு இரத்தத்தையும் சுத்திகரிக்கும் ஹெமோடையாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கும் என்பது டாக்டர் வசந்திக்குப் புரியாமல் இல்லை.

கிங் ஃபைசல் ஹாஸ்பிடல், ஜெட்டா. பல ரக பிணிகளுக்கும் தீர்வு தரும் மையமாக இருக்கும் பெரிய மருத்துவமனை! உலகின் பல தேசங்களிலிருந்தும் மருத்துவர்கள் வந்து பணிபுரியும் இடம். செல்வம் சேர்க்கும் எண்ணமட்டுமில்லாது தங்கள் திறமைக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நம்பி வசந்தியைப்போல வந்த மருத்துவர்கள் அங்கு அனேகம்.

இந்த ஒரு வருட காண்டிராக்ட் சர்வீஸில் அதிமுக்கிய பல தீவிர நோயாளிகளை வசந்தி கண்டிருக்கிறாள். பெரும்பாலும் அரசியல் பிரமுகர்கள். எனவே, தலைமை டாக்டரைத் துருவி விவரம் தெரிந்து கொள்வதில் வசந்தி அதிக ஆர்வம் காட்டவில்லை.

சிறிது நேரத்தில் ஒரு ஸ்ட்ரெச்சரில் அந்த நோயாளியை நர்ஸ் தள்ளிக் கொண்டு வந்தாள். கனத்த உருவம். அந்த நோயாளியின் இரண்டு பெருத்த கால்களும் ஸ்ட்ரெச்சரின் இருபுறமும் தொங்கிக்கொண்டிருந்தன. நோயாளியின் மூக்கையும் வாயையும் சேர்த்து போடப்பட்டிருந்த ஆக்சிஜன் மாஸ்க் முகத்தை சிறிது மறைத்திருந்தது. மூக்கிலிருந்த குழாய் நீண்டு ஸ்ட்ரெச்சரின் கீழ்ப்புறம் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்தது.

அருகில் வந்ததும் வசந்தி நோயாளியை நோக்கினாள். சற்றே பரிச்சயமான முகம்… கருத்த உருவம்… வசந்தி உடல் சற்றே நடுங்கலானது. வசந்தியின் இருதயம் படக்படக் என்று சற்று அதிகமாகவே துடிக்கலாயிற்று. மற்றவர்கள் கவனித்துவிடப் போகிறார்களோ என்று விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பினாள். அனுபவம் நிறைந்த டாக்டராயிற்றே !

எமர்ஜென்சி டாக்டர் கொடுத்த ரிப்போர்ட்டை வசந்தி ஒருமுறை பார்த்தாள். மானிட்டர்களைப் பொருத்தினாள். நோயாளியின் இதயத் துடிப்பு அதிகமாக இருந்தது. ஆக்சிஜன் மாஸ்க் இருப்பினும் உடலில் ஆக்சிஜன் அளவும் குறைவாக இருந்தது. டையாலிசிஸ் செய்வதற்கு முன் அந்த நோயாளியை இயல்பு நிலைக்குக் கொண்டு வரவேண்டும். இருதயமும் சுவாசமும் நன்கு இயங்க வேண்டும். இல்லாவிட்டால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்… வசந்திக்கு யோசிக்க அதிக நேரமில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து உதவிக்கு டாக்டர்களை அழைத்தாள். நல்லவேளையாக கனடாவில் அவளுடன் தொழில் புரிந்த ஒரு மருத்துவரே உதவிக்கு வந்தார்.

டையாலிசிஸ் முக்கியம் என்பது அந்த நோயாளிக்கும் தெரிந்திருந்தது. வசந்தி ஸ்ட்ரெச்சர் அருகில் சென்றதும் அந்த நோயாளியின் கரம் வசந்தியை ஸ்பரிசித்தது. அதிர்ச்சியாக இருந்தாலும் வசந்தி தாங்கிக்கொண்டாள். விலக்கிக்கொள்ளவில்லை.

‘ ப்ளீஸ் சேவ் மி ‘ தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்… அதிகம் நோய் வாய்ப்பட்டிருக்கிறேன்… என்ற மென்மையான இறைஞ்சல் வசந்திக்குத் தெளிவாகக் கேட்டது. அந்த நிலையிலும் நோயாளியின் வாயிலிருந்து சில சொற்கள் எழுந்ததே வசந்திக்கு ஆச்சரியமாக இருந்தது.

இளம் வயது கசப்பான நினைவுகள் மனதில் எழுந்தபோதும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். நோயாளியை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு தானே தள்ளிச் சென்றாள்.

தீவிர சிகிச்சைப் பிரிவின் பெரிய ஹால் அந்த நோயாளிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வசந்தி தனியாகவே நோயாளியை பராமரிக்கத் தொடங்கினாள். நோயாளி அவளையே ஆனால் கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருப்பது புரிந்தது. என்னை எப்படியாவது காப்பாற்றி விடு… அந்த கூக்குரலே தொடர்வதுபோல் இருந்தது. நோயாளியின் நேர் பார்வையை சந்திக்காமல் வசந்தி தனது கடமைகளையே கவனித்துக் கொண்டிருந்தாள்.

நோயாளியின் கதி இயல்பு நிலைக்குத் திரும்பியதும் இரத்தம் சுத்திகரிப்பிற்கு ஆயத்தமானாள். மற்றவர்கள் சற்று நிம்மதியுடன் அகன்றனர். நீங்கள் ஒரு திறமையான மருத்துவரின் பாதுகாப்பில் இருக்கிறீர்கள் என அந்த நோயாளியிடம் அவர்கள் சொல்லத் தவறவிலை..

சுத்திகரிப்பு தொடங்கியது. கொஞ்ச நேரத்தில் நுரையீரல் மேல் இருந்த அழுத்தம் குறைந்தது. நோயாளியின் சுவாசம் முன்னேறத் தொடங்கியது.

ஒரு சில மணி நேரங்களில் நோயாளியின் முகத்தில் நன்றியை அறிவிக்கும் சாயல் முழுவதும் பரவியிருப்பது தெரிந்தது. டாக்டர் வசந்தியை நோயாளி கையை ஆட்டி தன் அருகில் அழைத்தார். அந்த பெரிய ஹாலில் அவர்கள் இருவர் மட்டும் இப்போது இருந்தனர்.

வெறுப்போ திகிலோ புரியாத நிலை… இருப்பினும் வசந்தி நோயாளி அருகே நகர்ந்தாள். தன் அறிமுகம் நோயாளிக்குத் தேவைப்படுகிறது என்பது வசந்திக்குப் புரிந்தது.

டாக்டர் வசந்தி… வசந்தி மக்வானா

நோயாளியின் கண்களை இப்போது நேராகப் பார்த்தபடி தன் பெயரை வசந்தி உச்சரித்தாள்.

அவள் பெயரைக் கேட்டதும் நோயாளியின் புருவம் நெறிந்தது.

நோயாளியுடன் அவளைத் தவிர வேறு எவரும் இல்லை. சொல்ல வந்ததை இப்போதாவது கூறிவிட வேண்டும் என்பதில் வசந்தி திண்ணமாக இருந்தாள்.

‘நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவள். உங்கள் நாட்டு முறையில் சொல்லப் போனால் ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவள்.

இப்போது அந்த நோயாளி துணுக்குற்று படுக்கையிலேயே சற்று எழ முற்பட்டார்.

உங்கள் நாட்டில் இருந்த அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசியப் பிரஜைகளில் எங்கள் குடும்பமும் ஒன்று. வழிவழியாக எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த நாடு. எங்களைப் போன்ற ஆசியர்கள் அந்த நாட்டைத் தங்கள் தாய்நாடாகத்தான் பாவித்தனர். அந்த நாடு எங்கள் இந்திய வம்சா வழியினருக்கு சொர்க்க பூமியாகத்தான் இருந்தது… நாட்டு வர்த்தகத்தில் 90 சதவிகிதம் ஆசியாவிலிருந்து குடி புகுந்தவர்கள் தன்னகத்தே வைத்திருந்தனர். கடும் உழைப்பாளிகள்..  அவர்கள் அரசு வருவாய்க்கென மறக்காமல் கட்டிய வரியும் 90 விழுக்காடுதான். அந்த நாட்டில் அனைவரும் அறிந்ததுதான்.

பூமத்திய ரேகையை ஒட்டியிருக்கும் நாடு.. ஆண்டு முழுவதும் அமைதியான பருவ நிலை.. பசுமை நிறைந்த இடம்.. ஏரிகள்.. குளங்கள்… என்னதான் இல்லை அந்த நாட்டில்…? ஆப்பிரிக்காவின் முத்து என அழைக்கப்பட்ட அந்த நாட்டிலிருந்து ஆசியர்கள் என்று அனைவரையும் இரக்கமின்றி இரவோடு இரவாக நீங்கள் வெளியேற்றினீர்கள்..  தொண்ணூறு நாட்களுக்குள் வெளியேறாவிட்டால் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என தொலைக்காட்சியிலும் ரேடியோவிலும் முழங்கினீர்கள். உங்கள் ராணுவம் புரிந்த அட்டூழியங்கள் நாங்கள் மறக்க முடியாத ஒன்று.

1972 ம் வருடம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எனக்கு பதினான்கு வயது. இங்கிலாந்தில் அகதிகளாகக் குடியேறினோம்… பழக்கப்படாத சூழ்நிலை… இனம் புரியாத மக்கள்… குளிர் பூமி.. சுதாரித்துக்கொள்ள எங்களுக்குப் பல வருடங்கள் பிடித்தன.

எங்கள் நெஞ்சுரமும் கடும் உழைப்பும் மட்டுமே எங்களை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. ஏன்…உன்னைப் போன்றவர்களையும் கடந்தவைகளை மறந்து காப்பாற்ற முடிந்தது… ஆனால், என் பெற்றோர்கள் மட்டும் உன்னை மன்னிக்க மாட்டார்கள்..

கோர்வையாக அந்த நேரத்திலும் தன் மனதை அழுத்தியவைகளை சொல்லிய திருப்தி.

ஆனால், நெஞ்சில் புதைந்திருந்த துக்கம் மட்டும் நீர் தாரையாய் டாக்டர் வசந்தியின் கண்களில் பெருக்கெடுத்தது.

அதிர்ச்சியுடன் பேச்சற்ற நிலையில் அந்த நோயாளி இருந்தார்.

அது வேறு யாரும் அல்ல, உகாண்டாவின் சர்வாதிகாரியாக இருந்த
இடி அமின் தான்.

வசிக்கும் இடம் திரும்பி நெடு நேரம் டாக்டர் வசந்தி மௌனமாக அழுது கொண்டுதான் இருந்தாள். கடந்த கால துன்பங்கள் இன்னும் அவளை வாட்டிக்கொண்டிருந்தன.

நேர்த்தியாக நடந்து முடிந்த டையாலிசிஸ் மூலம் இடி அமின் குணம் பெற்றது என்னவோ உண்மை.

ஆனால், அந்த ஆரோக்கியம் நெடுநாட்கள் நீடிக்கவில்லை என்பதை வசந்தி ஆஸ்பத்திரியிலிருந்து அறிந்துகொண்டாள்.  நச்சு மிகுந்து உடம்பின் மேல் தோல் நீங்கும் பிணியில் இடி அமின் அகப்பட்டுக் கொண்டான். உடல் ஒவ்வொரு பகுதியிலும் மேற்புறத் தோல் நீங்கி திசுக்களையும் இரத்த நாளங்களையும் வெளிப்படுத்தும். உடல் இரத்தகுழாய்கள் மூலமே மருந்துகள் செலுத்தப்பட வேண்டிய நிலை. வலி பொறுக்க முடியாமல் இடி அமின் உடல் மடங்கித் துடிக்கும். காலுறைகள் போல பாதங்களிலிருந்து தோல் நழுவுவதை வசந்தியே ஒரு முறை நேரில் கண்டாள்.

இரண்டு மாதங்கள் இடி அமினுக்கு அந்த நிலையில் தடுமாறுவது தொடர்ந்தது. ஆகஸ்ட் 16, 2003 ம் வருடம் ஒரு வழியாக இடி அமினுக்கு மரணம் சம்பவித்தது.

என் விரோதிக்குக்கூட இத்தகைய மரணம் நேரக் கூடாது என்பது என்னவோ வசந்தியின் எண்ணமாக இருந்தது.

ஆனால், இடி அமின் தான் செய்த தவறுகளுக்கு வட்டியும் முதலுமாய் இறுதி நாட்களில் ஈடுகட்ட வேண்டியிருந்தது.

இதுதான் கர்மாவோ…?

 

 

4 COMMENTS

  1. அவரவருடைய கர்மா அவரவர் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை அழகாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது

    • இன்னா செய்தாரை ஒறுத்தல்அவர் நாண
      நன்னயம் செய்து விடல்.என்ற திருக்குறளின் படி டாக்டர் வசந்தி செயல் பட்டு விட்டார்.

  2. கர்ம ரகசியங்களை அறிந்தோர் வெகு சிலரே. நெருப்பின் சுபாவம் சுடுதல். பச்சிளம் குழந்தை அருகில் வருகிறதே என்று தன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளுமோ? அதே போல, தீயகர்ம வினைகளை அனுபவித்தே தீர்க்க வேண்டும்.

    கே.ஆர்.எஸ். சம்பத், திருச்சி- 620017

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...