0,00 INR

No products in the cart.

ஜப்பானியருக்கும், ஜெர்மானியருக்கும் அது தெரிந்து இருக்கிறது!

 உலகக் குடிமகன் –  26

 

– நா.கண்ணன்

ஜெர்மன் விசா வாங்கும் முன் ஒரு ஜெர்மானியரை சந்தித்தேன். அவர் எனக்கு முக்கியமான தகவலொன்று சொல்ல வேண்டும் என ஆரம்பித்து தனிமனித தகவல் காப்பு பற்றிச் சொன்னார். ஆசியாவில் எல்லோரும் எல்லோரையும் நம்பி தம் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால், ஜெர்மனியில் அப்படி இல்லை. உன்னை பற்றி நீ ஊருக்கே சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை என்றார். போலீஸ், அரசு அதிகாரிகள் கேட்டால் கூட தகவல் தர மறுக்கும் உரிமை உனக்குள்ளது என்றார். நான் இந்தியாவை நினைத்துப் பார்த்தேன். தொலைபேசி நிறுவனமான பி.எஸ்.என்.எலில் நான் ஒரு நம்பர் எடுத்து ஐந்து நிமிடம் ஆகவில்லை. எனக்கு வந்த முதல் குறுஞ்சேதி, “நீங்கள் தனிமையாக உணர்கிறீர்களா? இந்த எண்ணை சொடுக்குங்கள். உங்களுக்கு துணை இருக்கவே நான் இருக்கிறேன்” எனும் சேதி வருகிறது. என் எண் எப்படி இந்த மாமா கம்பெனிக்குத் தெரிந்தது? இது சபலப்படும் ஆணுக்கு என்று தெரிகிறது. மாமாவுக்கு எப்படித் தெரியும் நான் ஆண் என்று? இன்றுவரை பதில் இல்லை. இங்கு தனி மனிதனுக்கும் பாதுகாப்பில்லை, அவனைப் பற்றிய தகவலுக்கும் பாதுகாப்பில்லை!

ஜெர்மனி வித்தியாசமான நாடு என்று தெரிந்தது. மலேசியாவில் முகநூல் பதிவு இல்லாத நபர்களே கிடையாது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு அப்டேட் வரும். ஜெர்மானியர்கள் முகநூல் பக்கமே வருவதில்லை. அதுவோர் அபத்தம் என்று கருகின்றனர். நான் போன 80 களில் கிரெடிட் கார்டு பயன்பாடு அங்கு மிக, மிகக் குறைவு. எங்கும், எப்போதும் கைக்காசு கொடுத்துதான் செலாவணி. இது எனக்கு ஜப்பானை நினைவூட்டியது. அங்கு நம்பிக்கை அதிகம். தனி மனித ஒழுக்கம் அதிகம். ஓய்வூதியப் பெரியவர் ஒருவர் டாக்சியில் தனது பென்ஷன் பணத்தை வைத்து விட்டுப் போய் விட்டார். டாக்சி ஓட்டுநர் நாள் பூரா தேடி மாலையில் முதியவரின் காசை அவரிடம் ஒப்படைத்துவிட்டார். நான் அங்கு இருந்த போது ஓர் நிகழ்வு. ஒரு கிறுக்கு, தோக்கியோ நகரின் பெரிய கட்டிடத்திலிருந்து லட்சக்கணக்கான யென் கரென்சி நோட்டை வீசி விட்டது. தெருவெல்லாம் ஒரே களேபரம். வானிலிருந்து பணம் கொட்டுகிறது. யோசித்துப் பாருங்கள்… இதுவே அமெரிக்கா, இந்தியா, மலேசியாவாக இருந்தால் போட்ட காசு ஒன்றுகூட போட்டவருக்கு திரும்பிப் போயிருக்காது. ஆனால், ஜப்பான் வேறு. கீழே கிடக்கும் காசை முடிந்தவரை பொறுக்கி காவல் நிலையத்திடம் பொதுமக்கள் கொடுத்துவிட்டனர். நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத செயல்! இல்லையா? ஆனால், சமகால ஜெர்மனியில் டிராம் டிக்கெட் காசைக் கூட மைபல் வைத்து கட்டிவிட முடிகிறது. நான் தோக்கியோவில் எனது ஜப்பானிய சம்பாத்தியத்தை டாய்ச்சு வங்கிக்கு மாற்ற வேண்டும் என்று சொன்னவுடன் ஒரு மூட்டையில் கட்டி பணத்தைக் கொடுத்துவிட்டார்கள். இவ்வளவு பெரிய தொகையை நான் கையாண்டது கிடையாது. ஆனால், அது ஜப்பான். எனவே, அதைத் தூக்கிக் கொண்டு பஸ், டிராம் என்று அலைந்து டாய்ச்சு வங்கியில் கொண்டு வந்து வரவு வைத்துக் கொண்டேன். ஒரு தவறும் இடையில் இல்லை.

ஜெர்மனியும் ஒழுங்கை பிரதானப்படுத்தும் நாடுதான். இந்த உதாரணத்தைப் பாருங்கள்! வீடு எடுத்து ஒரு வாரமாகிறது. சரி குப்பையை போடலாமெனப் போனால், நான்காவது மாடியிலிருந்து ஒரு பாட்டி, குப்பையை பிரித்துப் போடு, பேப்பர் தனி, பிளாஸ்டிக் தனி, போத்தல் தனி, மக்கும் குப்பை தனி என! என எனக்கு ஆர்டர் கொடுத்துக் கொண்டிருந்தாள். இவ்வகைப் பாட்டிகளை நான் காவல் கிழவிகள் என்பேன். ஒருமுறை தெரியாத்தனமாக பெர்லின் நகரில் கார் ஓட்டிக்கொண்டு போகும் போது ஒரு வழிப்பாதையில் புகுந்துவிட்டேன். இந்தியாவில்தான் இம்மாதிரி விஷயமே கிடையாதே. யாரும், எங்கும் புகுந்து போகலாம் என்பதுதானே அங்கு விதி. இந்தியாவில் கார் ஓட்டும் விதியென்று ஏதேனும் உண்டா என்ன? யாரும் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லையே! நான் அந்த வீதி முடிவுவரைப் போகவில்லை. போலீஸ் காத்துக்கொண்டிருக்கிறது. நான் இந்த வீதிக்குள் நுழைந்தது போலீஸுக்கு எப்படித் தெரியும் என மேலே நோக்கினால் 7வது மாடிவில் ஒரு காவற்கிழவி. போலீஸுக்கு புகார் கொடுத்துவிட்டாள். இந்தக் கிழவிகளுக்கு வேறு வேலையே கிடையாதா? என நினைத்துக் கொண்டேன்.

அதேபோல் ரோடைக் கடக்கும்போது சிகப்பில் கடந்துவிட முடியாது. பிடறியைப் பிடித்து நிறுத்தும் ஓர் கை. கூடாது! என்று மிரட்டல் வேறு. வள்ளுவன், ஒழுக்கம் ஓர் விழுப்பம். அது உயிரினும் மேலானது என்கிறான். சங்ககாலத்தில் அப்படிப் போலும். ஜெர்மனியின் குறள்: ஒழுங்குதான் அனைத்தும் என்பது! குழந்தையிலேயே சொல்லிக் கொடுத்து விடுகின்றனர். இத்தகைய சமூக ஒழுங்கு இருப்பதால்தான் அங்கு தெருவில் படுத்துக் கொள்ளலாம் போல் சுத்தமாக உள்ளது.

ஜன்னல்கள் தெளிவாக உள்ளன. வீட்டின் முன் ரோஜா நம்மைப் பார்த்து சிரிக்கிறது. அழகுணர்ச்சி என்பதும் ஒழுங்கின் பாற்பட்டதே! தமிழனிடமும் அழகுணர்ச்சி இருந்திருக்கிறது. அதற்கு சாட்சியாக நம் கோயில்கள் உள்ளன. கவிதை, இலக்கியம் உள்ளது. ஆனால், பொது வாழ்வு குப்பை வாழ்வு. இல்லையென்றால் குளிக்கத்தக்க ஆறாக இருந்த கூவம் இப்படி சாக்கடையாக சென்னைக்கு ஓர் ஓரமாக இருக்குமா? யாருக்கும் எவ்வித குற்ற உணர்ச்சியோ? அழகுணர்ச்சியோ இல்லையே! நான் சுவிஸ் போயிருந்தபோது கேட்டேன், ‘ஏன் எல்லோர் வீட்டிலும் பூந்தொட்டிகளை வெளியே காட்சிப்பொருள் போல் வைத்திருக்கிறீர்கள்’ என்று. அதற்கு அவர்கள் சொன்ன பதில், அவர்களின் அழகுணர்ச்சியைக் காட்டியது. ‘ஏன் அப்படி வைக்கிறோம் எனில் அது உங்களை மகிழ்விக்கிறதே? அதற்காகத்தான்’ என்றார்கள்!

பொது இடத்தை ஏன் சுத்தமாக வைக்க வேண்டும்? என நாம் யோசித்ததே இல்லை? வீட்டில் இருமுறை குளித்து, பூஜை புணஸ்காரம் என்று இருக்கும் தமிழன், பொது வாழ்வின் ஒழுங்கை மதிப்பதில்லை. தன் தெரு அசிங்கமாக இருப்பதை பொறுத்துக் கொள்கிறான். ஜெர்மனியில் நாம் தெருவில் வேண்டுமென்றே குப்பை போட்டால் அதைப் பொறுக்கி குப்பைத் தொட்டியில் போட ஒரு சக ஜெர்மானியன் கூச்சப்படுவதில்லை. அதே நேரத்தில் அறிவுறுத்தவும் தயங்குவதில்லை. ஆனால், ரயிலில் போகும் போது டீ குடித்து கப்பை அசால்ட்டாக வெளியே எறிகிறோம். யாரும் ஒன்றும் சொல்வதில்லை. அதுதான் சரியென்று நினைத்து பார்ப்பவனும் எறிகிறான். நான் ஒருமுறை (1989) தூரதர்ஷன் நேர்காணலில் சொன்னேன், “இந்தியா ஓர் சொர்க்கம். ஆனால் நமக்குத்தான் அதை வைத்துக் கொள்ளத்தெரியவில்லை” என்று.

சமூக ஒழுங்கைக் கொண்டு வருவதில் இவர்கள் இருவருக்கும் பெருத்த வேறுபாடு தெரிகிறது. ஜப்பானில் பணிவு, பொறுமை, அடக்கம் இவை முன்னிருத்தப்பட்டு சமூக ஒழுங்கு ஓர் உயர்வொழுக்கம் எனப் பார்க்கப்படுகிறது. அது பௌத்தத்தின் தாக்கத்தால் வந்து இருக்கலாம். ஏனெனில் ஜென் பௌத்த மையம் இன்றும் ஜப்பான்தான். ஒழுங்கே எல்லாம்! எனும் ஜெர்மானிய முழக்கம் தனிமனித அறிவுறுத்தல் மூலமாகவே நடைபெறுகிறது. கீல் நகரில் தெரியாமல் கார் ஓடக்கூடாத சிறு வீதியில் போய் விட்டேன். எதிரே ஒரு மாது வேண்டுமென்றே மெதுவாக என் கார் முன் நடந்து கடுப்படித்து பாடம் புகட்டினாள். அங்கு இதுவொரு வர்க்க, கலாச்சார அச்சுறுத்தலாகவே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அயலகத்தவருக்கு ஒழுக்கமே கிடையாது என்பது போல் கற்றுத்தருவர். அதில் அவர்கள் தயங்குவதே இல்லை. நான் ஜெர்மனியில் வாழ்ந்த காலத்தில் காவல் துறைக்கு பார்க்கிங் டிக்கெட் கொடுத்த காசில் இந்தியாவில் வீடே கட்டியிருக்கலாம். தண்டனை என்பதுதான் ஒழுக்கத்தை நிலை நிறுத்தும் என்று அங்கு நம்புகின்றனர். சிங்கப்பூர் கூட இது போல்தான். கலிபோர்னியோவில் குப்பை போட்டால் ஆயிரம் டாலர் தெண்டம் எனும் இடங்களெல்லாம் உள்ளன.

வள்ளுவன் வலியுறுத்தும் ஒழுக்கம், அறனுடை வாழ்வு என்பதை நாம் கடைப்பிடித்திருந்தால் உலகிற்கு வழிகாட்டியாக இருந்திருப்போம். ஆனால் எங்கோ கோட்டை விட்டு விட்டோம். மனுஸ்மிருதி பேசப்படும் அளவு குறள் நீதி நம் மண்ணில் பேசப்படவில்லை. இது ஏன் உறுத்துகிறது எனில் இந்தியா என்றால் பாம்பாட்டிகளும், பல்லக்குத் தூக்கிகளும் எனும் பிம்பம்தான் வெளிநாட்டில் காட்டப்படுகிறது. நாம் பொருளாதாரத்தில் எவ்வளவுதான் வளர்ச்சியுற்று இருந்தாலும் சமூக ஒழுங்கு வெளிப்படவில்லையெனில் உலகில் யாரும் நம்மை மதிக்கப்போவதில்லை என்பது வெள்ளிடை மலை.

ஜப்பானில் இருந்துவிட்டு ஜெர்மனி வந்த பின்பு பழக்க தோஷத்தில் இரவெல்லாம் வேலை செய்து வந்தேன். ஒரு நாள் ஆய்வக இயக்குநர் டன்கர் என்னை அழைத்து இரவெல்லாம் வேலை செய்கிறாயாமே? என்று கேட்டார். நானும் பாராட்டப்போகிறார் என நினைத்து குதூகலத்துடன் ஆம்! என்றேன். ஆனால் அதற்கு அவர் சொன்ன பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ‘இனிமேல் இரவில் வேலை செய்யாதே! உனக்குக் குடும்பம் இருக்கிறதுதானே? அந்த நேரத்தைக் குடும்பத்துடன் கழி!’ என்றாரே பார்க்கலாம். ‘ஏன் சார்?’ என்று கேட்டேன். ’நீ இரவில் தனியாக வேலை செய்யும் போது ஆய்வகத்தில் விபத்து ஏதும் ஏற்பட்டுவிட்டால் அதை ஈடுகட்டும் காப்பீட்டுக் கம்பெனி இதை அனுமதிக்காது. வேலை நேரத்தில் இருக்கும் போதுதான் நம் அனைவருக்கும் காப்பீடு உண்டு. எனவே இரவில் வராதே! அப்படியே வந்துதான் ஆக வேண்டுமெனில் துணைக்கு இன்னொரு ஆய்வாளரை அழைத்து வைத்துக்கொள்! என்றார். யார் வருவார்? அந்த நாட்டில்? எனவே ஜெர்மனியில் எனக்குக் கிடைத்த முதல் போனஸ், இரவுப் பொழுதுகள். அதைவிட மகிழ்ச்சியான செய்தி சனி, ஞாயிறு வேலை செய்ய வேண்டாம் என்பது. வாழ்நாளில் முதல் முறையாக வாரக்கடைசி என்பது என் கண்ணில் பட்டது.

(தொடரும்)

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...