சைடு பெட்

சைடு பெட்
Published on

கடைசிப் பக்கம்

சுஜாதா தேசிகன்

நான் பள்ளிச் சிறுவனாக  படித்த காமிக்ஸ் புத்தகம் ஒன்றை நேற்று படித்துக்கொண்டு இருந்தேன்.( நம்புங்கள் இன்னும் என்னிடம் இருக்கிறது! )  சிறுவனாக அன்று படித்த அதே அனுபவம் நேற்றும் கிடைத்தது.

காரணத்தை யோசித்தேன்.

அழகான படங்களும், கதைக்கு ஏற்ற முகபாவங்கள், முக்கியமாக கதை சொல்லும் விதமும் என்று புலப்பட்டது. படிக்கும் போது எந்த பக்கத்திலும் தொய்வு இல்லை. கிட்டத்தட்ட ஒரு பக்கத்துக்கு ஐந்து அல்லது ஆறு இடத்தில் மட்டுமே கதை மாந்தர்கள் சிக்கனமாக பேசுகிறார்கள். எல்லா காமிக்ஸும் மொத்தம் 30 பக்கங்கள் தான்.

இந்த சூக்ஷ்மம் தெரிந்தால் நல்ல திரைப்படம் எடுக்கலாம் என்று தோன்றுகிறது. திரைப்படத்தில் மொத்தம் கிட்டத்தட்ட 60 சீன்கள், அதை சுவாரசியமாக கொடுத்தால் படம் நன்றாக இருக்க எல்லா வாய்ப்பும் இருக்கிறது. திரைக்கதை எழுத முற்படுபவர்களுக்கு பயிற்சி புத்தகமாக நான் சிறுவர் காமிக்ஸ் புத்தகங்களைச் சிபாரிசு செய்வேன்.

நல்ல கதைக்கு என்ன செய்யலாம் ? கொரியன் படங்களைப் பார்ப்பதற்கு பதில் நல்ல சிறுகதைகளைப் படிக்க வேண்டும். உதாரணமாக ஒன்று சொல்லுகிறேன்.

முன்பு ஒருமுறை எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் சந்தித்தபோது அவர் எனக்கு அன்பளிப்பாக அவர் மொழிபெயர்த்த சிறுகதை புத்தகம் ஒன்றை பரிசளித்தார். அதில் "ஒன்று நீ, அல்லது நான்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை படித்தேன்.  (ஆங்கில மூலம் 'வில் எஃப். ஜென்கின்ஸ்' (Will F. Jenkins) எழுதிய 'சைடு-பெட்' (Side Bet) என்ற கதை)

முப்பது பக்கங்களில் காமிக்ஸ் கதை போல, சிறுகதை எழுதுவது ஒரு கலை. சில பக்கங்களில் முழு கதையும் சொல்ல வேண்டும், சொல்லும் விதம், வார்த்தை சிக்கனம் என்று அது கிட்டத்தட்ட ஒரு சவாலாகவே இருக்கும்.

'ஒன்று நீ, அல்லது நான்' என்ற கதை ஒரு மனிதன், ஒரு எலி தீவில் அகப்பட்டுக்கொள்ள, 'வாழ்வா சாவா' என்று பிரச்னை வரும்போது, இருவருக்கும் நடக்கும் போராட்டம் எப்படி ஒரு பந்தயமாகிறது? என்று சொல்லியிருக்கிறார் ஜென்க்கின்ஸ்.

இந்த மாதிரி கதை எழுதுவது மிகக் கடினம். மனிதன், எலி ஆகிய கதாபாத்திரம் இரண்டும் பேசிக்கொள்ள முடியாது என்பதே ஒரு பெரிய சவால். மனிதர்களும் அவர்களுடைய பிரச்னையும் மையமாக வைத்து கதை எழுதுவது சுலபம். நம் வீட்டு ஜன்னலும், பக்கத்து வீட்டு ஜன்னலும் திறந்து இருந்தால் போதும். கற்பனை அதிகம் தேவைப்படாது. ஆனால் ஒரு மனிதனும் எலியையும் ஒரு தீவில் வாழ்வா சாவா என்று நடக்கும் போட்டியை மையமாக வைத்து கதை எழுத அசாத்திய திறமை வேண்டும்.

மொழிபெயர்ப்பு என்பது போல இல்லாமல் பட்டர் பேப்பரில் எழுதியது போல வழுக்கிக்கொண்டு போனது ரா.கி.ராவின் எழுத்து. இதன் ஆங்கில மூலத்தை தேடி படித்தபோது பல ஆச்சரியங்கள் புலப்பட்டது.

கதை கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஆங்கில கதையில் முதல் பாரா முடிவிலேயே எலி வந்துவிடுகிறது, ஆனால் மொழிபெயர்ப்பில் மூன்றாம் பக்கத்தில்தான் எலி எண்டரி கொடுக்கிறது.

தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு கதையையும் படித்தால் கதையை எப்படி எல்லாம்  சுவாரஸியமாக சொல்லலாம் என்று கற்றுக்கொள்ளலாம். சிறுகதை எழுத துடிக்கும் என் போன்ற ஆசாமிகளுக்கு இந்த கதையை படிக்க சிபாரிசு செய்வேன்.

மனிதனையும், எலியையும் வைத்து 'சைடு பெட்'  என்ற இந்த த்ரில்லிங் கதை ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காகின் 'Alfred Hitchcock Presents: 12 Stories for Late at Night' தொகுப்பில் இருக்கிறது.

இந்த கதையை வசனமே இல்லாமல் குறும்படமாக எடுக்கலாம். அப்படி எடுத்தால் இந்த படத்துக்கு வசனம் எழுதும் பொறுப்பை என்னிடம் தரலாம்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com