வாராவாரம் மரங்களின் ஆரவாரம்

வாராவாரம்  மரங்களின் ஆரவாரம்
Published on

மரக்கன்றுகள் நடுவதில் தொடரும் 370 வாரங்கள்…

– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

டந்த பத்தாண்டுகளில் கொரோனா ஊரடங்கு காலங்கள் தவிர்த்து சமீபத்திய மே 22 ஞாயிறு உட்பட 370 வாரங்கள் பொன்னேரி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் மரக்கன்றுகள் நட்டு வைத்து அவைகளை வளர்த்து வருகிறார் வழக்குரைஞர் ஸ்ரீதர் பாபு. மரக்கன்றுகள் நடுவது மட்டுமல்லாது கடந்த இருபது ஆண்டுகளாகப் பொன்னேரி பகுதிகளில் பல்வேறு சமூகநலப் பணிகளிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார். எவ்விதம் ஏற்பட்டது அவருக்கு இந்த ஆர்வம்.

"இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய நண்பர்கள் பலரும் சேர்ந்து "நேதாஜி சமூக நல அமைப்பு" என்கிற ஒன்றினைத் தொடங்கினோம். பொன்னேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரத்த தான முகாம்கள் நடத்தினோம். இப்பொழுதும் நடத்தி வருகிறோம். இந்தப் பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளைத் தேடி நேரில் சென்று பார்த்து அவர்களுக்கான அரசு உதவிகளும் பெற்றுத் தந்து வருகிறோம். ஒரு கட்டத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பாக, நண்பர்கள் பலரின் தொடர் ஒத்துழைப்பு மற்றும் மனப்பூர்வமான பேராதரவுடன் நம் பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு வைத்துப் பராமரித்தால் என்னவென்று தோன்றியது. அப்போது உடனே செயலிலும் இறங்கினோம். "நேதாஜி மர வங்கி" என்ற ஒன்றினை உருவாக்கினோம். நேதாஜி சமூக நல அமைப்பில் இணைந்திருக்கும் நண்பர்கள் பலரும் வெவ்வேறு பணிகளில் இருப்பவர்கள். அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைதான் விடுமுறை. அதனைப் பயனுள்ள வகையில் அமைத்திடத் திட்டமிட்டோம்.

வாராவாரம் ஆரவாரம் என்பது போல வாராவாரம் மரக்கன்றுகள் நடுதல் என்று வகுத்துக் கொண்டோம். பெரும்பாலும் ஒரு குழுவாக ஒரு அமைப்பாக ஆங்காங்கு மரக்கன்றுகள் நடுபவர்கள், அதன் பின்னர் அவைகளின் நிலை என்ன என்று வந்து பார்ப்பது கூட இல்லை. முதலில் நாம் அவ்வாறு இருந்திடக் கூடாது என்று தீர்மானமாக முடிவெடுத்தோம்."

"சரி. எவ்விதம்தான் செயல்பட்டீர்கள்?"

"நாம் எங்கெங்கு மரக்கன்றுகள் நடுகிறோமோ அந்தந்தப் பகுதிவாழ் பொது மக்களையும் அதிலே ஒன்றிணைக்கிறோம். அருகாமை வீட்டுக்காரர்களை அந்த மரக்கன்றுகளைப் பார்த்துக் கொள்ளுமாறு அன்புடன் பணிக்கிறோம். தண்ணீர் கிடைக்கும் இடங்களில் நாங்களே தண்ணீர் பிடித்து அவைகளுக்கு ஊற்றி வருவோம். தண்ணீர்ப் பற்றாக்குறை இடங்களுக்கு லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று மரக்கன்றுகளுக்கு ஊற்றி வருவோம். எந்தக் காரணம் கொண்டும் நாங்கள் வைத்து விட்டு வரும் மரக்கன்றுகளைக் காய்ந்து போக விட்டுவிட மாட்டோம். கடந்த பத்தாண்டுகளில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டுள்ளோம். அவைகளில் தொண்ணூறு சதம் மரங்கள் நன்கு வளர்ந்து நிழலும் இயற்கைச் சூழலுக்கு நன்மையையும் தந்து வருகின்றன."

"என்னென்ன மரங்கள் நட்டு வைத்து வளர்த்து வந்துள்ளீர்கள்?"

"புங்கன், பூவரசு, நாவல், இலுப்பை போன்ற மரங்கள் வளர்த்து வைத்துள்ளோம். பொன்னேரி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் கோயில் வளாகங்களின் உள்ளேயும் மரக்கன்றுகள் நட்டு வளர்த்துள்ளோம். சிவாலயங்கள், பெருமாள் கோயில், அம்மன் கோயில்களில் அததற்கேற்ற மரக்கன்றுகள் வைத்து வளர்த்துள்ளோம். பொன்னேரி பகுதியில் இப்போது பசுமை பூத்துக் குலுங்கும் மரங்கள் நாங்கள் வைத்தது தான். சுற்றுவட்டாரக் கிராமங்கள் முழுவதும் மரக்கன்றுகள் நட்டுள்ளோம். நட்டுள்ளோம் என்பதை விட நட்டு வைத்து நன்றாக வளர்த்து விட்டுள்ளோம் என்பதே உண்மை. மீஞ்சூர், ஏடியம்பேடு, சிங்கிடிமேடு, கிருஷ்ணாபுரம், திருவேங்கடாபுரம், காட்டாவூர், அரசூர், மெதூர், தடபுறம்பாக்கம், ஆளாடி, வெள்ளோடை ஆகிய கிராமங்களில் மரக்கன்றுகள் நட்டுள்ளோம். கிராமங்களில் எரிக்கரைகளிலும், குளக்கரைகளிலும் மரக்கன்றுகள் நட்டு அதற்கு வலைக்கூண்டுகள் அமைத்து தண்ணீர் விடுவது வரை அந்தந்தப் பகுதி பொதுமக்களின் ஒத்துழைப்போடு அவர்களையும் இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறோம். இதுதவிர வீடுகளில் சுப நிகழ்வுகளில் மரக்கன்றுகள் அன்பளிப்பாகத் தர விரும்பும் மனம் கொண்டவர்களுக்கு நாங்களே மொத்தமாக மரக்கன்றுகள் வாங்கித் தந்தும் வருகிறோம். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் அன்பளிப்புகள் தருவதற்காகப் பெற்றுத் தந்துள்ளோம்." என்கிறார் பொன்னேரி வழக்குரைஞர் ஸ்ரீதர் பாபு.

சரி. நேதாஜி மர வங்கி அமைப்பாளர் சொல்வது இருக்கட்டும். இது குறித்து கிராம மக்கள் என்ன சொல்கிறார்கள்? திருவேங்கடாபுரம் கிராமத்தில் வசிக்கும் பத்மாவதி என்பவரிடம் போனில் பேசினோம்.

"நான் சும்மா ஏதோ பெருமைக்காக சொல்றேன்னு நினைக்காதிங்க. வக்கீல் தம்பி ஸ்ரீதர் பாபு போல ஒரு புள்ளையப் பாக்குறது ரொம்பவே அபூர்வம். ரத்த தான முகாம் நடத்துறதா ஆகட்டும், கை கால் முடியாம ஊனமுற்றோரா இருக்குறவங்களாகட்டும், அவுங்களுக்கு உதவி செய்றதா இருக்கட்டும் அந்த இடங்களில் எல்லாம் இந்தத் தம்பியப் பார்க்கலாம். சும்மா சொல்லக் கூடாது. எங்க ஊர்ல மரக்கன்று நடுவதற்கு இந்தத் தம்பி வந்தாங்க. எங்களை ஒரு பத்துப் பெண்களை சந்திச்சிப் பேசினாங்க. நாங்க இங்கே நட்டு வெச்சிட்டுப் போற மரக்கன்றுகள் உங்க வீட்டுப் பிள்ளைங்க மாதிரி. அந்த மரக்கன்றுகள் தண்ணீர் இல்லாம வாடிப்போகாமப் பாத்துக்குறது உங்களோடக் கடமைன்னு சொன்னாங்க. நாங்களும் அந்தப் புள்ளைங்க வர்றாங்களோ இல்லியோ அவுங்க வெச்சிட்டுப் போன மரக்கன்றுகளுக்கு விடாமல் தண்ணீர் ஊற்றி வந்தோம். இப்போ பாருங்கோ எல்லா மரங்களும் சூப்பரா வளர்ந்து எங்களுக்குக் காற்றும் நிழலும் தந்து வருது." எனச் சொல்கிறார் பொன்னேரி அருகே திருவேங்கடாபுரம் கிராமத்தின் பத்மாவதி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com