பிரதமர்  வருகையின்  எதிரொலிகள்

பிரதமர்  வருகையின்  எதிரொலிகள்
Published on
– ஶ்ரீராம்

திட்டங்களின் திருவிழா 

  • 31500 கோடியில்  பல்வேறு  புதிய திட்டங்களை தொடக்கி வைப்பதற்காகவும் சில முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கவும்  இந்திய பிரதமர் நரேந்திர மோதி சென்னையில் கலந்துகொண்ட விழா, ஒரு திருவிழாவாகவே நடந்தது.  நடந்தது அரசு விழாவா? அல்லது பா.ஜ.க.வின் மாநாடா என்று எண்ணுமளவுக்கு நகரெங்கும் பா.ஜ.க.  கொடிகள், பிளக்ஸ் பதாகைகள்தான். தி.மு.க. கொடிகள் அதிகம் காணப்படவில்லை. பிளக்ஸ் பேனர்கள்  தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் "விசேஷ அனுமதி கொடுத்திருப்பார்களோ" என்ற கேள்வி பலரிடம் எழுந்தது. பா.ஜ.க.  கொடிகளை தாண்டி  சிவலிங்கம் பார்வதியின்  சிலைகள் நீரூற்று  அமைக்கப்பட்ட மேடைகள், பலவித வாத்திய குழுக்களின் இசை நிகழ்ச்சிகள் என அமர்க்களப்படுத்தியிருந்தனர்.  பணம் தண்ணீராக செலவாகியிருக்கும்  என்பதை எவரும் எளிதாக யூகிக்க முடியும்.
  • சென்னை நகரம் முழுவதும் போலீஸ் வெள்ளம்,  22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார்.  பா.ஜ.க.வின் பல வேறு அணிகள் கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் நடனமாட சிறு குழந்தைகள் முதல் தொழில்முறை கலைஞர்கள் வரை பல இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தனர்.  மாலை ஆறு மணியளவில் வரப்போகும் பிரதமரை வரவேற்க மதியம் 1 மணியிலிருந்து  வெயிலில் நிறுத்தப்பட்டிருந்த அந்த குழந்தைகளைப் பார்க்க பாவமாயிருந்தது.
  • விழா நடந்த இடம் எழும்பூர் உள்ளரங்கு. அதில்  அழைப்பாளர்கள் தவிர,  பா.ஜ.க., தி.மு.க. கட்சி பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு காரணமாக முன்னதாகவே அனுமதிக்கப்பட்ட  இவர்கள் மதியம் 1 மணியிலிருந்தே அரங்கை நிறைத்துவிட்டிருந்தனர்.  விழா தொடங்கும் வரை இரு கட்சியினரும் மாறி மாறி  உரத்தக் குரலில் முழக்கப்போர்  நடத்திக்கொண்டிருந்தனர். கிரிக்கெட் மைதானத்தில்
    ரசிகர்கள் தாங்கள் ஆதரிக்கும் டீம்களுக்காக கத்துவதுபோல இருந்தது அந்த காட்சி.
  • விழாவில் ஒன்றிய அரசின் துணை அமைச்சர்  முருகன் வரவேற்றபோது கவர்னர்  பெயரையும் பிரதமரின் பெயரையும் குறிப்பிட்டபோது  எழுந்த கைதட்டலைவிட அவர் முதல்வர் ஸ்டாலின் பெயரைச் சொன்ன போது எழுந்த கைதட்டல் நிற்க சில நிமிடங்களாயிற்று.  முருகன் தன் பேச்சை  தொடர முடியாமல் நின்றார்.  இதனாலோ என்னவோ மேற்கோளாக சொல்ல வந்த  "சொல்வது யார்க்கு எளிய அரியவாம்"   என்ற குறளைச் சொல்ல முடியாமல் திணறி நின்றார்.
  • முதல்வர் தன் உரையில் பிரதமருக்கு கோரிக்கைகளை வைத்தார்.  இடையிடையே   மிக முக்கிய கோரிக்கைகளை ஆங்கிலத்திலும் பேசினார்.
  • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை  சில நாட்களுக்கு முன் "தமிழக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை, அதனால் மத்திய அமைச்சர்களிடம் பேசி தமிழகத்துக்கு வேண்டியவற்றைப் பெறமுடியவில்லை"  என்று சொன்னது நினைவிற்கு வந்தது.
  • முதல்வர் தன் உரையை முடிக்கும் முன் கலைஞரின் வாசகமான  உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம், என்று முடித்தார்.
  • மோடியின் சென்னை வருகை எப்படியோ. அவரது பேச்சை மொழிபெயர்த்தவர் பலரது பாராட்டுகளையும் பெற்றுவிட்டார். வழக்கமாக மோடி தான் ஆவேசமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் பேசுவார். ஆனால் இன்று மோடியின் பேச்சை மொழி பெயர்த்தவர் மோடிக்கே டஃப் கொடுக்கும் வகையில் மிகவும் ஆவேசமாகவும், சற்று ஒருபடி மேலே போய் ஆக்ரோஷமாகவும் மொழிபெயர்த்தார். இந்த நிலையில் மோடி பேச்சை மொழி பெயர்ப்பு செய்து, பலரது பாராட்டுகளை அள்ளி இருக்கும் நபர் யார்? என்பது பலரது கேள்வியாகவிருந்தது. அன்று  மோதியின் மாற்றுக்குரலாக ஒலித்தவர்  சக்கரத்தாழ்வார் சுதர்ஷன்,
  • பிரதமர் ஒன்றிய அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்திருக்கிறது என்று பட்டியலிட்டார். ஆனால் கவனமாக முதல்வரின் நிதி பங்கீடு, நீட் தேர்வு  கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கவில்லை.
  • முதல்வர், பிரதமர் இருவரும் கண்ணியமாக பேசி  அழகாக முடிந்த இந்த விழா முடிந்த பின்னர் எழுந்திருக்கும் உரசல்கள்தான் விவாதமாகியிருக்கின்றன. முதல்வர், பிரதமரை அவமதித்துவிட்டார், அரசு விழாவில் அரசியல் பேசினார்  என்று பா.ஜ.க. மாநிலத்தலைவர்  குற்றம் சாட்டியிருக்கிறார்.
  • "உறவுக்கு கைகொடுப்போம்" என்ற முதல்வர் சொன்னது கட்சிகளுக்கிடையே இருக்கும் உறவை என்று நம்புபவர்களையும் பார்க்க முடிந்தது.
  • மொத்தத்தில் அரசு விழா என்று அவிக்கப்பட்டிருந்தாலும் இரண்டு கட்சிகளும் தங்கள் தொண்டர்கள் பலத்தைக்காட்ட இந்த விழாவை ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டன.
  • கொள்கைகளால் எதிரும் புதிருமாக இருக்கும் ஸ்டாலினும் மோடியும் ஒரே மேடையில் இருக்கும் விழா என்பதால் விழா தொடங்கும் வரை என்ன பேசுவார்களோ என்ற  எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டிருந்தது.
  • முதல்வர் எழுப்பப்போகும் அரசியல்  பிரச்னைகளுக்கு பிரதமரின் பதிலாக எழுப்போகும் எதிரொலிகளை எதிர்பார்த்திருந்தவர்கள் கண்ட காட்சி   முதல்வரின்  கோரிக்கைகளுக்கு நேரடியாக எந்த பதிலும் சொல்லாமல் தன் உரையை முடித்த பிரதமர்  கூட்ட முடிவில் புன்முறுவலுடன் ஸ்டாலினுடன் இணைந்து கூட்டத்தினரைப் பார்த்து கையசைத்த காட்சிதான்.
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com