spot_img
0,00 INR

No products in the cart.

எடப்பாடியின் பிடிவாதமும் – ஓ.பி.எஸ்.ஸின் மௌனமும்

கவர் ஸ்டோரி

– ஹர்ஷா

 

மௌனம் மிக வலிமையான மொழி. சொல்லாத சொற்கள் சொல்லிய சொற்களைவிட கனமானது.  கோபத்தின் வெளிப்பாடாகவோ அமைதியின் அடையாளமாகவோ இருக்கும் மொழி மௌனம். ஆனால் ஒரு அரசியல் கட்சியில் தலைவர்களின்  மௌனம் கட்சியில் குழப்பத்தை விளைவித்திருக்கிறது.

அண்மையில்  சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.தலைமைக் கழகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் `தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன’  என்கிறது அவர்கள் வெளியிட்டிருக்கும் பத்திரிகைக் குறிப்பு.

ஆனால்,  உண்மையில் அந்தக் கூட்டத்தில் உறுப்பினர்களிடையே நடந்த மோதல், வார்த்தைப் போர், ஒரு கட்டத்தில் இரண்டு தலைவர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளக்கூட முயன்றார்கள்  என்கிறார், கூட்டத்தில் பங்கேற்ற  கட்சி நிர்வாகி ஒருவர். இந்தக் கட்சி இதுவரை சந்திக்காத காட்சி இது.

கடந்த சில மாதங்களாகவே இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். இருவருக்குமிடையே நடந்து கொண்டிருக்கும் நிழல் யுத்தம் இந்தக் கூட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பன்னீர் செல்வம் பேசும்போது, தான் ஒருங்கிணைப்பாளராக இருந்தும் கட்சி நிர்வாகிகளும், மாவட்டச் செயலாளர்களும் மதிப்பதில்லை.  முக்கிய விஷயங்களில் கலந்தாலோசிக்கப்படுவது இல்லை என்று  சொன்னதுதான்  வெடியின் முதல் பொறி.

கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி  ஆளுநரை சந்தித்தார். அப்போது அவருடன் துணை ஒருங்கிணைப்பாளர்கள்  கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மற்றும் எடப்பாடிக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சென்றிருந்தனர். அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் அப்போது இந்த குழுவில் இல்லை. “அவர் ஆயுர்வேத சிகிச்சையில் இருந்தபோது அவருக்கே தெரியாமல் ஆளுநரை எடப்பாடி சந்தித்துவிட்டார்” என்று கட்சிக்குள் பரவலாகப் பேசப்பட்ட விஷயம்.

“பன்னீர் செல்வத்தை  இபிஎஸ் ஒதுக்குகிறார்  என்பதை வெளிப்படுத்த  கட்சி தொண்டர்களுக்கு கொடுத்த சிக்னல் இது” என்கிறார்கள் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள்.

“இல்லை… இது பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைக்காக கொடுக்கப்பட்டிருக்கும்  எச்சரிக்கை” என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.

சசிகலாவால் எழுந்த பிரச்னையா?

சசிகலாவை அ.தி.மு.க.வுக்குள் மீண்டும் கொண்டு வரும் விவகாரத்தில் ஓபிஎஸ்ஸுக்கும், இபிஎஸ்ஸுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நீடித்துக்கொண்டே இருக்கிறது. எந்த  சசிகலாவிற்கு எதிராகத்  தர்ம யுத்தத்தைத் தொடங்கினாரோ இப்போது அவரை கட்சிக்குள் கொண்டுவர விரும்புகிறார் பன்னீர் செல்வம்.

பசும்பொன்னில் நடைபெற்ற  தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது, `சசிகலாவை அ.தி.மு.க ஏற்றுக் கொள்ளுமா?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ”அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை ஏற்றுக் கொள்வது என்பது மக்களின் விருப்பம். அவரை அ.தி.மு.கவில் இணைப்பது தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகள் பேசி முடிவுசெய்வார்கள். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தொடங்கிய இந்த இயக்கம் தொண்டர்களுக்காகவே இன்றளவும் செயல்பட்டு வருகிறது. மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் கட்சி செயல்பட்டு வருகிறது” என்றார்.

அ.தி.மு.க.வில் சசிகலா சேர்க்கப்படுவார், சேர்க்கப்படமாட்டார் என்று ஒற்றை வார்த்தையில் ஓ.பன்னீர்செல்வத்தால் பதில் அளிக்க முடியும். ஏனெனில் அவர்தான் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர். கட்சியின் முழு அதிகாரம் உள்ளவர்களில் அவரும் ஒருவர். ஆனால், அவர் அளித்த பதிலினால், “சசிகலா  கட்சிக்குள் வர வேண்டும் என்று ஓபிஎஸ் விரும்புகிறாரா? அப்படி அ.தி.மு.க.வில் இணைய வந்தால் ஓபிஎஸ், ஏற்க தயாராக உள்ளாரா” என்ற கேள்விகள் எழுகிறது.

கட்சியில் ஓபிஎஸ்ஸின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு இருக்கிறதா?

“சசிகலாவை இணைப்பது பற்றி தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள்” என்று  ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்கு உடனடியாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆக்ரோஷமாகக் கருத்து தெரிவித்தார். “சசிகலாவுக்கு ஆதரவு தெரித்தவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தெரியும்” என்றார்.  மற்றொரு மூத்த தலைவர்  கே.பி. முனுசாமியும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான தொனியிலேயே கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில்தான், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அதிரடியாகப் பேட்டி கொடுத்தார் ஜே.சி.டி.பிரபாகர்.  செல்லூர் ராஜு, அன்வர் ராஜா போன்ற தலைவர்களும் பன்னீர் செல்வத்தின் கருத்தை ஆதரித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றனர்.

கட்சிக் கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக ஓ.பன்னீர் செல்வம்  (நவம்பர் 23) ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு அ.தி.மு.க.வில் அடுத்தக்கட்ட  விவாதத்தை உண்டு பண்ணியுள்ளது. அவருடன் இந்த சந்திப்பில் ஜே.சி.டி. பிரபாகரும் இருந்தார். இவர் ஏற்கெனவே அ.தி.மு.க.வின் வழிகாட்டு குழு உறுப்பினராக ஓ.பன்னீர் செல்வத்தால் நியமிக்கப்பட்டவர். அமைப்புச் செயலாளர், சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளராகவும் இருக்கிறார்.

“எனக்கும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். என்னாலும் கவர்னரைச் சந்திக்க முடியும்” என்று காட்டுவதற்காக, “அவர் செய்த செயல் இது”  என்று விமர்சிக்கப்பட்டாலும் “ஒருங்கிணைப்பாளர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்ற நிலையை வெளிச்சமிட்டு காட்டிய நிகழ்ச்சி இது”  என்பதுதான்  உண்மை.  கட்சியில் நிர்வாகிகள் பலர் இபிஎஸ் மீது அதிருப்தியிலிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் கட்சி கூட்டம் நடந்துக்கொண்டிருந்த அதே நேரத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  சோழவந்தான்  மாணிக்கம்,  வழிகாட்டு குழுவின் உறுப்பினர் அ.தி.மு.க.விலிருந்து  பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்.

தொண்டனின் நிலை என்ன?

“தொண்டர்களின் கட்சி” என்று சொல்லப்படும் அ.தி.மு.க.வின் தொண்டன்  இன்று மிகுந்த குழப்பத்தில் இருக்கிறான். இதேபோல் சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் இன்று அவரை ஆதரிப்பாரா என்ற கேள்வி அவன் முன் நிற்கிறது.

சசிகலா விவகாரத்தில் தன் நிலையை மாற்றிக்கொண்டு அவர் மூலம் கட்சியில் தன் நிலையைத் தக்கவைத்துக் கொள்ளவே பன்னீர்செல்வம் எடப்பாடியைப்போல சசிகலாவுக்கு எதிரான நிலையை வெளி[ப்படையாக அறிவிக்காமல் மௌனம் காக்கிறரா?  என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

இது குறித்து கட்சியின்  மூத்த தலைவர்களில் ஒருவரன அன்வர்ராஜாவிடம் பேசியபோது:-

2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தல், 2021  சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தாலும், தோல்வியிலிருந்து சரியான பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

ஆரம்பத்தில் சசிகலாவுக்கு தொண்டர்களிடம் எதிர்ப்பு இருந்தது. தற்போது அவருக்கு ஆதரவான அலை வீசுகிறது. டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வில் இல்லை. அவர் அ.ம.மு.க.வை நடத்தி வருகிறார். அ.தி.மு.க. இரட்டை தலைமையின் கீழ், செயல்படுவதால் சாதகங்களைக் காட்டிலும் பாதகங்களே அதிகம். இரண்டு பேரிடமும் கருத்திணக்கம் இல்லை. கட்சி உடைந்தால் சின்னம் முடக்கப்பட்டு விடும் என்பதால் இருவரும் விட்டுக் கொடுத்து வருகிறார்கள்.  “தற்போது அ.தி.மு.க. தொண்டர்கள், அ.தி.மு.க.வை வழிநடத்த ஒற்றை தலைமைதான் வேண்டும்” என்று விரும்புகிறார்கள். அதனால் “கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து ஒற்றை தலைமையைத் தேர்வு செய்ய வேண்டும்” என்றார்.

அப்படிப்பட்ட ஒற்றைத் தலைமை யார்? எடப்பாடியா? பன்னீர் செல்வமா? இருவரும் மௌனம் காக்கிறார்கள்.

 

Other Articles

Stay Connected

263,924FansLike
1,887FollowersFollow
3,050SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி சறுக்கலா?  சதியா?

0
  கவர் ஸ்டோரி   - ஹர்ஷா   பஞ்சாப் மாநிலத்தில்  சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்துக்காகப் பிரதமர் மோடி பஞ்சாப் செல்வதாகப் பயணத் திட்டம். பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, ரூ.42,750...

“சாய் வாலா” ஆகிறார் லேடி சூப்பர் ஸ்டார்

1
நயன்தாரா டீ   - வினோத் டீ கேரளாவின் தேசிய பானம் என்று கொண்டாடப்பட்டாலும் அது தமிழர்களின் உணர்வோடும் உடலோடும் கலந்துவிட்ட ஒரு பானம். கிராமம், சிறுநகரம் பெருநகரம் என எல்லா இடங்களிலும் எப்போதும் கிடைக்கும் ஒரே...

மம்தாவின் கனவுகள் பலிக்குமா?

1
கவர் ஸ்டோரி - ஆதித்யா   நமது தேசிய அரசியலில் களத்திலிருக்கும் இரண்டு கூட்டணிகளிலிருக்கும் கட்சிகள் இடம் மாறுவது  நமக்கு புதிதல்ல. ஆனால், முதல் முறையாக  இப்போது எதிர்கட்சிகளின் அணியாக இருக்கும் கூட்டணியான UPA வின் முக்கிய...

பகல் வேஷம்

1
சுஜாதா தேசிகன்                                             ...

இந்த மலை அக்காவுடையது… அந்த மலை மாமாவுடையது…

1
- வானதி சீனிவாசன் நாகலாந்து தரும் ஆச்சரியங்கள்....! இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் இடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தும் நிகழ்வை ஆண்டு முழுவதும் பா.ஜ.க. நடத்தி வருவதை ஏற்கெனவே...