0,00 INR

No products in the cart.

எங்கள் முடிவினை நாங்கள்  மாற்றிக்கொள்ளவில்லை. ஏன்?

அண்ணாத்தே வந்த பாதை – 8

 

எஸ்.பி.முத்துராமன்                எழுத்து வடிவம் : எஸ்.சந்திரமெளலி

 

“அது எப்படி சார்  ரஜினி, கமல் என்ற தமிழ்த் திரைப்பட உலகின் இரண்டு ஜாம்பவான்களை ஒரே சமயத்தில் இயக்க உங்களால் முடிந்தது?”

பத்திரிகை மற்றும் டி.வி. பேட்டிகளிலும் இந்தக் கேள்வியைத் தவறாமல் கேட்பார்கள். இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுவதற்கு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்போது நான் அளிக்கும் பதில் என்ன தெரியுமா?

“என்னைப் பொறுத்தவரையில் கமல், ரஜினி இருவரும் எனக்கு இரண்டு கண்கள். அவர்களுக்கும் எனக்கும் இடையிலான நட்பு மிகவும் ஆழமானது. ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் நடித்த சின்னஞ்சிறு பையனாக கமலை நான் அறிந்தவன்.  இன்னும் சொல்லப் போனால், ஏவி.எம். ஸ்டூடியோ வளாகத்தில் நான் பார்த்து வளர்ந்த பிள்ளை  கமல். ரஜினியை எடுத்துக் கொண்டால்,  ‘புவனா ஒரு கேள்விக் குறி’யில் ஆரம்பித்து, தொடர்ந்து இருபத்தைந்து படங்களில் நாங்கள் இரண்டு பேரும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். எங்களுக்குள்ளே மிகவும் பர்ஃபெக்ட்டான அண்டர்ஸ்டாண்டிங் உண்டு. அவர், என்னையும், தன் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே மதிக்கிறார். அவரது வீட்டில் ஒரு நிகழ்ச்சி என்றால், நான் கண்டிப்பாக அங்கே இருப்பேன். இன்னொரு விஷயம், கமல், ரஜினி இரண்டு பேரிடமுமே, அவர்கள் நினைப்பதற்கு மாறாக ஒரு  கருத்து எனக்கு இருந்தால், அதை   அவர்களிடம் நான் சொல்லுவதற்குத் தயங்கமாட்டேன். அவர்களும் ஒரு மூத்த சகோதரன் சொல்லும் ஆலோசனையாகவே அதை எடுத்துக் கொள்ளுவார்களே தவிர, ஒருபோதும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதெல்லாம் எங்களுக்கு இடையில் நிலவும் அற்புதமான புரிதலின் பலன்.

ஒரு படத்தின் இயக்குனர் என்ற முறையில் எனக்கும், அந்தப் படத்தின் ஹீரோ என்ற முறையில் அவருக்கும் இடையில் ஈகோ மோதல் வந்ததே கிடையாது. காரணம், இரண்டு பேருக்குமே படம் மிகச் சிறப்பாக வரவேண்டும் என்கிற ஒரே நோக்கம்தான். அதற்காக, அதிகபட்சம், ஈடுபாடு கொண்டு உழைப்பதற்கு நாங்கள் இரண்டுபேருமே தயாராக இருக்கும்போது, எங்களுக்கு இடையில் எந்தப் பிரச்னையும் வருவதற்கு துளியும் வாய்ப்பில்லையே!  ஒரு சில காட்சிகளின்போது, “இதை இப்படி வைத்துக் கொள்ளலாமே!” என்று ரஜினி சொல்லுவார். நான் அந்த இடத்தில் அது பொறுத்தமாகவும், ரஜினி ரசிகர்களிடம் வரவேற்பினைப் பெறும் என்றும் கருதினால், உடனே அதன்படி காட்சியை மாற்றியமைக்கத் தயங்கியதில்லை. அப்படி இல்லாத பட்சத்தில், ரஜினி சொல்லுகிற ஐடியாவை வேறு ஒரு இடத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்று யோசிப்பேன். அதுவும் சாத்தியமில்லாத பட்சத்தில், அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலைமையை அவருக்கு விளக்குவேன். அவரும் அதனை ஏற்றுக்கொள்ளுவார்.

ஒரு இயக்குனர், நடிகரை கன்வின்ஸ் பண்ணனும்.  அப்படி பண்ண முடியவில்லை என்றால், நடிகர் சொல்வதற்கு கன்வின்ஸ் ஆகணும்.படத்தின் வெற்றிக்காக  கன்வின்ஸ் பண்ணுவதும், கன்வின்ஸ் ஆவதும் தவறில்லை. சரியான காரண, காரியங்களுக்காக தாராளமாக விட்டுக் கொடுக்கலாம், இது டைரக்டருக்கும் பொருந்தும்; நடிகருக்கும் பொருந்தும்.

பல நாடகக் குழுக்கள்  தங்களுடைய நாடகங்களைப் பார்க்க வரும்படி  என்னை அழைப்பார்கள். நானும் அவர்களின் அழைப்பை ஏற்று நாடகங்களுக்குச் செல்லுவதுண்டு. நாடகம் பற்றிய எனது கருத்துக்களை மேடையிலோ அல்லது அதன் பிறகு நாடகக் குழுவினருடனோ பகிர்ந்து கொள்ளுவேன். நாடகக் குழுவினர் பலர், நடிப்பு மீது கொண்ட ஆர்வம் காரணமாகத்தான் நடிக்க வருகிறார்கள் என்பது எனக்குத் தெரியுமாகையால், மேடையில் திறமையாக நடிப்பவர்களை
நான் மனம் திறந்து பாராட்டத் தவறியதில்லை.

அப்படி நான் பாராட்டிய சில நாடக நடிகர்கள் அடுத்த சில நாட்களில் என்னை சந்தித்து,  நான் பாராட்டிக் கூறிய வார்த்தைகளை நினைவு கூர்ந்து, “எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை. வாய்ப்பு கொடுங்கள்” என்று கேட்பார்கள். நான் அப்படி வாய்ப்பு கேட்கிறவர்களிடம், “நீங்கள் என்னிடம் வாய்ப்புக் கேட்டு வரவேண்டிய அவசியமே இல்லை. என் படத்தின் கதாபாத்திரங்களுக்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என்றால், நானே உங்களுக்குத் தகவல் அனுப்பி, உங்களை வரவழைத்து வாய்ப்பைக் கொடுப்பேன்!” என்று சொல்லுவேன்.

“சினிமாவில் நடிக்க வேண்டும்; கதாசிரியர்  ஆக வேண்டும்; டைரக்டர்  ஆக வேண்டும்” என்ற கனவுடன் இன்று தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்துக் கோடம்பாக்கத்துக்கு ஏராளமான  இளைஞர்கள் படை எடுக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். “நடிப்பாக இருந்தாலும், எழுத்தாக இருந்தாலும் அல்லது வேறு எந்த ஒன்றாக இருந்தாலும்  அந்தத் “திறமை” உங்களிடம் இருக்கிறதா? அதன் மூலமாக எதிர்நீச்சல் போட்டு வெற்றிப் பெற முடியுமா?”  என்பதை நீங்களே உறுதியாக முடிவு செய்துகொண்டு வாருங்கள்.  அதை முழுமையான ஈடுபாட்டுடன், வெளிப்படுத்துங்கள்; மேலும் மேலும் அந்த திறமையினை மெருகூட்டிக் கொள்ளுங்கள். உரிய நேரத்தில் சினிமா வாய்ப்பு உங்களைத் தேடி வரும்; சினிமா வாய்ப்பினை நீங்கள் துரத்திக்கொண்டு சென்றால், அது எட்டிப் போய்க்கொண்டே இருக்கும்; அதை விடுத்து, நீங்கள் உங்கள் திறமையினை  வெளிப்படுத்தினால், வாய்ப்பு உங்களைத் தேடி வரும். இதற்கு நான் பல உதாரணங்களைக் காட்ட முடியும்.

நடிகரும், இயக்குனருமான விசுவை எடுத்துக் கொண்டால் அவர்  பல அற்புதமான மேடை நாடகங்களை வழங்கியவர். அவரது நாடகங்களின் வசனங்களில் நகைச்சுவை தெறிக்கும்; அதே சமயம் அழுத்தமான விஷயங்களையும் சொல்லி  நாடகம் பார்க்கிறவர்களை சிந்திக்கவும் வைப்பார். அவர் சினிமா உலகில் ‘வாய்ப்பு கொடுங்கள்’ என்று யாரையும் கேட்டதில்லை. அவரது திறமையைப் பார்த்து  இயக்குனர்
கே. பாலசந்தர் அவருக்கு வாய்ப்பு அளித்தார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தன் திறமையினை வெளிப்படுத்தி, புகழ்பெற்ற நடிகராக, கதாசிரியராக, வசனகர்த்தாவாக, இயக்குனராக  விளங்கினார். திரு.வெங்கட்டின் நாடகத்தைப் பார்த்துத்தான், அவரை “நிம்மதி உங்கள் சாய்ஸ்” சின்னத்திரை தொடருக்கு எழுத வைத்தோம். இன்று அவர் இயக்குனராகவும் பரிமளிக்கிறார்.

இன்று சின்னத்திரையில் ஏராளமான சீரியல்களுக்கு கதை, வசனம் எழுதிக்கொண்டிருப்பவர் தேவி பாலா. அவர் சின்னத்திரையில் வாய்ப்பு கொடுங்கள் என்று யாரிடமும் சென்று கேட்டது இல்லை. அவரது எழுத்தைப் படித்துத்தான்  அவரை அழைத்தோம். சுமார் முன்னூறு நாவல்களை அவர் எழுதி இருக்கிறார். அந்தத் திறமையும், அனுபவமும்தான் அவருக்கு சின்னத்திரையில் எழுதுவதற்கு வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்துள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினியையே எடுத்துக் கொள்ளுங்களேன். பெங்களூரிலிருந்து சினிமாவில் நடிக்கும் லட்சியத்துடன் சென்னை வந்த அவர் யாரிடமும் சென்று வாய்ப்புக் கேட்கவில்லை. சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது என்று கருதி, தன்னுடைய நடிப்புத் திறமையினை வளர்த்துக் கொள்ளும் நோக்கத்துடன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, சென்னையில் நடத்தி வந்த நடிப்புப் பயிற்சி கல்லூரியில் சேர்ந்தார். ஒரு நாள் அங்கே வந்த இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.  இயக்குனர் பாலச்சந்தர்  தனது மனதில் பதிந்த புதுமுகங்களை மறக்க மாட்டார். கண்களில் பட்டார் ரஜினி. அதன் பிறகு சில மாதங்கள் கழித்து, ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. பெரிய கதவுகளைத் திறந்து கொண்டு, ரஜினி உள்ளே நுழையும் காட்சியில் ரஜினி அறிமுகமானார். அந்த குறிப்பிட்ட காட்சியில், ரஜினி கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருவார். “தமிழ்த் திரையுலகம்” என்ற கோட்டையை, ரஜினி திறந்துகொண்டு வந்ததாகவே அமைந்துவிட்டது.

ரஜினியுடன் நான் இணைந்து பணியாற்றிய முதல் படம்  ‘புவனா ஒரு கேள்விக் குறி’. அது நாவலாக  வெளியானபோது, அதைப் படித்துவிட்டு  இது சினிமாவுக்கு ஏற்ற நல்லதொரு கதை என்று முடிவு செய்து, சேலத்திலிருந்த கதாசிரியர் மகரிஷியை  சென்னைக்கு வரவழைத்து உரிமை வாங்கினோம். தமிழில் கதாநாயகனாக  நடித்துக் கொண்டிருந்த சிவகுமாரை  வில்லனாகவும், வில்லானாக அறியப்பட்டிருந்த ரஜினியை கதாநாயகனாகவும்  ஒப்பந்தம் செய்தோம். நானும், பஞ்சு அருணாசலமும்  விஷப்பரீட்சையில் இறங்குவதாக சிலர் எச்சரித்தார்கள். ஆனாலும் எங்கள் முடிவினை நாங்கள்  மாற்றிக்கொள்ளவில்லை. ஏன்? அதற்கு ஒரு அழுத்தமான காரணம் இருந்தது.

(தொடரும்)

 

1 COMMENT

  1. இப்படி தேடி தேடி படிப்பதற்கு பதிலாக கல்கி புத்தகம் படிப்பது போல் சுவாரஸ்யமாக இருக்கும். 40 வருட வாசகனின் வேண்டு கோள் இது

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

அப்ரைசர் முத்துசாமி

0
மகேஷ் குமார்   திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் மெயின் ரோட்டில் இருக்கும் அந்த வங்கியின் வாசலில் காலை 9 மணிக்கே கூட்டம் நெரியும். அந்த இரண்டு தினங்களில்தான் நகைக்கடன் கொடுக்கப்படும். பெரும்பாலானோரின் கையில் ஒரு...

தல யாத்திரை செய்யும் அளவு பிரபலமான கோயில்கள் உள்ள நாடு அது!

0
உலகக் குடிமகன் - 31  நா.கண்ணன் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பானும், ஜெர்மனியும் கடும் உழைப்பு போட்டு முன்னேறிய பின்னும் தக்கார் யார்? தகவிலார் யார்? எனச் சொல்லி அமெரிக்காவும், இங்கிலாந்தும் இந்த நாடுகளை...

கிச்சன் கிளினிக் பார்த்திருக்கிறீர்களா?

0
ஒரு நிருபரின் டைரி - 32 எஸ். சந்திரமௌலி   ஒரு பெண்மணி தன் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும்  மளிகைக் கடைக்கு வருகிறார். கடைக்காரரிடம்,  மிளகு நூறு கிராம், சீரகம் ஐம்பது கிராம், வெந்தயம் நூறு கிராம்,...

குன்றென நிமிர்ந்து…

0
  வித்யா சுப்ரமணியம்   மைதிலி இந்த வரவு செலவு கணக்கைக் கொஞ்சம் டாலி பண்ணித் தரமுடியுமா? எனக்கு கொஞ்சம் வெளில போகவேண்டிய வேலையிருக்கு” சாரதாம்மா ஒரு லெட்ஜரை அவளிடம் நீட்ட, தாங்க மேடம் என்றபடி வாங்கிக்...

சத்திரம் அய்யர்

2
  மகேஷ் குமார்   “காலம்பரக் காபி உனக்கு இந்தச் சத்தரத்துல கெடையாது. கண்காணாம ஒழிஞ்சு போ. ஒரு மணு விறகு எடுத்துப்போடத் துப்பில்ல? பாத்திரம் எல்லாம் ஒரே கரி. பானைல தண்ணி இல்ல... கெணத்துல வாளியும்...