0,00 INR

No products in the cart.

இந்த மலை அக்காவுடையது… அந்த மலை மாமாவுடையது…

– வானதி சீனிவாசன்

நாகலாந்து தரும் ஆச்சரியங்கள்….!

ந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் இடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தும் நிகழ்வை ஆண்டு முழுவதும் பா.ஜ.க. நடத்தி வருவதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். நாகலாந்து மாநில பா.ஜ.க. மகளிரணியினர் விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நாகலாந்து ஒரு வித்தியாசமான மாநிலம். அங்குள்ள பழங்குடியின மக்கள் தங்களுக்குள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு ஜனநாயக முறைப்படி வாழ்ந்து வந்துள்ளனர். இதில் கோன்யா பழங்குடியினர் மட்டும் விதிவிலக்கு. இவர்களுக்கு ராஜா, ராணி எல்லாம் உண்டு. ஆங்கிலேயர்கள் வெளியேறியபோது ஆட்சி அதிகாரத்தை பழங்குடியினரிடமே விட்டுச் சென்றுவிட்டனர். இதனால் சில பகுதிகளில் அங்குள்ள ராஜாக்களும், மற்ற பகுதிகளில் அங்குள்ள பழங்குடியினர் பிரிவுகளும் ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வந்துள்ளனர். பழங்குடியினர் பிரிவுகளுக்குள் மோதல்களும் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன.

திரையரங்குகள் இல்லாத நாகலாந்து

1963-ல்தான் நாகலாந்து இந்தியாவுடன் இணைந்தது. அப்போது ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதில் கையெழுத்திட்ட ஒருவர் இப்போதும் இருக்கிறார். அவருக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. அவரை சந்திக்க முயற்சி செய்து வருகிறேன். நாகலாந்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற குறிப்பிடத்தகுந்த பெண்கள் யாரும் இல்லை. எனவே, இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தும் கலை நிகழ்ச்சிகளுக்கு அம்மாநில பா.ஜ.க. மகளிரணியினர் ஏற்பாடு செய்திருந்தனர். நாகலாந்தில் ஒரே ஒரு திரையரங்கம் மட்டுமே இருந்து வந்துள்ளது. இப்போது அதுவும் இல்லை. இந்தியாவிலேயே திரையரங்கம் இல்லாத மாநிலமாக நாகலாந்து மட்டுமே இருக்கும் என்று நினைக்கிறேன்.

திமாப்பூரில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெண் பாஸ்டர் ஒருவர் பிரார்த்தனைகள் செய்து நிகழ்வை தொடங்கி வைத்தார். நாகலாந்தில் உள்ள பழங்குடியின மக்கள் தங்களுக்கென உள்ள பாரம்பரிய ஆடைகள், மணிகள், தலைப்பாகை அணிந்து தங்கள் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

இதுதவிர, நேபாளி நடனம், பிஹாரி நடனம், கூர்க்கா நடனம், வங்காள நடனம் என்று பல்வேறு மாநில கலாசாரங்களை நினைவுகூரும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. நாகலாந்தில் உள்ள சிறுபான்மை மக்களின் அதாவது, இந்துக்களின் அதாவது, பிற மாநில மக்களின் கலாசார நிகழ்வுகளை நடத்த பொது அரங்குகளில் வாய்ப்பு கிடைப்பது அபூர்வம். அதனால், இந்நிகழ்வில் அவர்களுக்கும் வாய்ப்பளித்தாக மகளிரணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நாகலாந்து பா.ஜ.க. நிர்வாகிகளுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது கோன்யா பழங்குடியினர் பற்றி பல்வேறு தகவல்கள் கிடைத்தன. ஒருகாலத்தில் நாகலாந்தில் கோன்யா பழங்குடியினர், வேறு பகுதிகளில் இருந்து தங்கள் நிலப்பகுதிக்குள் நுழையும் மனிதர்களை கொன்று, அவர்களின் தலையை வெட்டி எடுத்துச் சென்று விடுவார்களாம். எத்தனை மனிதத் தலைகளை வெட்டி எடுத்துக் கொண்டு வருகிறார்களோ, அதைப் பொறுத்து அவர்களின் வீரம் மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வரலாறு நமக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. எத்தனை மனித தலைகளை வெட்டி வீழ்த்தினார்களோ, அத்தனை இறகைகளை (ஹார்ன்பில் பறவையின் இறகுகள்) தலையில் வைத்துக் கொள்வார்களாம். தாங்கள் கொன்ற மனிதர்களின் தலை முடியை எடுத்து இடுப்புக்கு பின்னால் வால் போல கட்டிக் கொள்வார்களாம்.

இந்த கோன்யா பழங்குடியின மக்கள் வாழும் நாகலாந்தின் கிழக்கில் உள்ள இரு மாவட்டங்கள் இன்றும் பின்தங்கியே உள்ளன. அங்கு எந்த வளர்ச்சி திட்டங்களும் வந்து சேரவில்லை. இன்றும் கூட அவர்கள் கரடி முடியால் செய்யப்பட்ட தலைப்பாகை, புலியின் பற்களால் செய்யப்பட்ட மாலை, யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட பாசிகள் என்று விலங்குகளின் பற்கள், எலும்புகளால் செய்யப்பட்ட ஆபரணங்களையே அணிகின்றனர். அவர்களுக்கென தனி இட ஒதுக்கீடு இருந்தாலும் முன்னேற்றங்கள் நிகழவில்லை.

இந்த கலாசார நிகழ்ச்சி முடிந்ததும், திமாப்பூரிலிருந்து நான்கு வழிச் சாலை வழியாக நாகலாந்து தலைநகர் கோகிமா வந்து சேர்ந்தோம். காரில் சுமார் ஒன்றரை மணி நேரப் பயணம். நாகலாந்தின் ஒரே நான்கு வழிச்சாலை இது. ஏற்கெனவே தொடங்கப்பட்ட இந்த சாலை பிரதமர் மோடி ஆட்சியின் முயற்சியால் இப்போது முடியும் தருவாயில் உள்ளது.

கோகிமா உயரமான இடத்தில் உள்ளதாகும் காலநிலை மிகவும் குளிராக உள்ளது. முதலில் போர் நினைவுச் சின்னத்தை பார்க்க அழைத்துச் சென்றார்கள். இரண்டாம் உலகப்போரின் போது இந்த வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற ஜப்பானிய படைகளை, நாகா படைகள் உதவியுடன ஆங்கிலேயர்கள் வீழ்த்தியுள்ளனர். இந்தப் போரில் 1,400 ஆங்கிலேய படை வீரர்கள் உட்பட சுமார் 2300 வீரர்கள் கொல்லப் பட்டுள்ளனர். அவர்களின் பிரம்மாண்டமான கல்லறை, நினைவுச் சின்னமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லறைத் தோட்டத்தில் இப்போது செரி மரங்கள் நிறைந்துள்ளன.

நேதாஜி இந்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால்

கோகிமா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானம் அருகில் தான் இந்த போர் நடைபெற்றுள்ளது. அந்த டென்னிஸ் மைதானத்தையும் நினைவுச் சின்னமாக இன்றும் காட்சிக்கு வைத்துள்ளனர். இங்குள்ள பிரிட்டிஷ் ராணுவ வீரர்களின் கல்லறைகளில் அஞ்சலி செலுத்துவதற்காக அவர்களின் வாரிசுகள் இங்கிலாந்திலிருந்து இன்றும் வருவதாக தெரிவித்தனர்.

இந்தப் போரில் ஜப்பானிய படைகள் வென்றிருந்தால் இந்தியாவின் வரலாறு வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஏனெனில் ஜப்பானியப் படைகள் உதவியுடன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆங்கிலேயப் படைகளை வீழ்த்த போராடி வந்தார். இந்தப் போர் நடைபெற்ற தருணத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கோகிமா அருகில் உள்ள பழங்குடியின கிராமங்களில்தான் தனது இந்திய தேசிய ராணுவப் படையுடன் முகாமிட்டிருந்ததாக சொல்கிறார்கள். நேதாஜியின் இந்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவின் வரலாறு வேறாக இருந்திருக்கும்.

கல்லறைத் தோட்டத்தை பார்த்தபிறகு நாகா ஹெரிடேஜ் கிராமத்திற்கு சென்றோம். டிசம்பர் 1 முதல் 10 நாட்களுக்கு நடைபெறவுள்ள ஹார்ன்பில் திருவிழாவிற்காக அந்த கிராமம் தயாராகி வருகிறது. நாகலாந்து பழங்குடியினரின் கலாசாரம், நாகரிகத்தைப் பறைசாற்றும் கல் ஓடுகள், புற்கள் கொண்டு கட்டப்பட்ட வீடுகள், மரப்பொருட்கள் விலங்குகளின் பற்கள், எலும்புகளால செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

இங்கு மரத்தால் செய்யப்பட்ட டிரம் ஒன்றை பார்த்தோம். இது ஒரு இசைக்கருவி. பழங்குடி மக்கள் நல்ல செய்தியாக இருந்தாலும், கெட்ட செய்தியாக இருந்தாலும் அதனை மற்றவர்களுக்கு சொல்வதற்கு இந்த மர டிரம்மைதான் பயன்படுத்தியுள்ளனர். நாகலாந்து பழங்குடியின மக்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளை இங்கு நடத்த அரசாங்கமே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறது.

நாகா ஹெரிடேஜ் கிராமத்தை சுற்றிப் பார்த்த பிறகு நாகலாந்து மாநில அறிவியல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் திரு. கிக்கான் (Mmhonlumo Kikon) இல்லத்திற்கு இரவு உணவுக்காக சென்றேன். மனைவியின் சிகிச்சைக்காக சென்னை வந்தது முதல் அவர் எனது நண்பர். 2016- கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டபோது எனக்கு பிரசாரம் செய்வதற்காக வந்திருக்கிறார். இப்போது பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளராகவும் இருக்கிறார். அவரது வீட்டில் நாகா பாரம்பரிய உணவு வகைகளை சாப்பிட்டோம்.

கார்த்திகை தீபத் திருநாள் என்பதால் திரு. கிக்கான் இல்லத்தில் அவரது குடும்பத்தினருடன் தீபங்களை ஏற்றி மகிழ்ந்தோம். அவருடன் நாகலாந்து அரசியல் சூழ்நிலை பற்றி விவாதித்த பிறகு மீண்டும் திமாப்பூர் வந்து சேர்ந்தேன்.

நாகலாந்து சுற்றுப்பயணத்தில் என்னுடன் அம்மாநில பா.ஜ.க. மகளிரணித் தலைவர் கியான் கோன்யா உடனிருந்தார். அவரது தாத்தா கோன்யா பழங்குடி மக்களின் தலைவராக அதாவது, ராஜாவாக இருந்தவர். அந்த ராஜாவின் இரண்டாவது மனைவி கியான் கோன்யாவின் பாட்டி. ’அரச குடும்பத்தை சேர்ந்தவர்’ என்று அவரைச் சொல்லலாம். டெல்லியில் பட்டப்படிப்பை முடித்தவர் என்பதால் வெளி உலகைப் பற்றி நன்கறிந்தவர். பா.ஜ.க.வில் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்து வருகிறார்.

இந்தியாவிலேயே மணிப்பூரில்தான் அதிகமாக அன்னாசிப் பழங்கள் விளைகின்றன. அதற்கடுத்து நாகலாந்தில் அன்னாசிப் பழங்கள் அதிகமாக விளைகின்றன. இங்கு கிடைக்கும் அன்னாசிப் பழங்கள் சுவைக்கு பெயர் பெற்றவை. திமாப்பூரிலிருந்து கோகிமா வரும் வழியில் மலைப் பகுதிகளில் அன்னாசிப் பழங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இன்னும் சீசன் தொடங்கவில்லை. ஆனாலும், குளிர்காலத்தில் விளைந்த அன்னாசிப் பழங்களை ஆங்காங்கே விற்பனைக்கு வைத்திருந்தனர். மலைப் பகுதிகளில் மக்கள் அன்னாசி பழங்களை அறுவடை செய்வது பற்றியும், ’இதற்கு வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டுமா’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சிரித்துக்கொண்டே, அரசாங்கத்திற்கு நிலம் வேண்டும், ஆனால், எங்களிடம் தான் விலைக்கு வாங்க வேண்டும். இந்த மலைப் பகுதி முழுவதுமே இந்த மக்களுக்கே சொந்தம் என்றனர். இங்குள்ள ஒவ்வொரு மலையும் ஒவ்வொருவருக்கு சொந்தமாக இருக்கிறது.

காரில் பயணிக்கும் போது தெரியும் மலைகளைக் காட்டி இந்த மலை என் அக்காவுடையது… அதோ தெரிகிறதே அந்த மலை என் மாமாவுடையது.. என்று அவர் சொன்னது எனக்கு மிகவும் வியப்பைத் தந்தது. அரசாங்கத்திற்கு நிலம் தேவை எனில் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விலை கொடுத்து நிலத்தைப்பெற வேண்டும். நிலங்களை விற்பதை நாங்கள் மிகவும் அவமானகரமான விஷயமாக கருதுகிறோம். நாகலாந்தின் வளர்ச்சிக்கு இது கூட தடையாக இருக்கலாம். ஏனெனில் நிலம் இல்லாமல் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியாது.

“ஒரு மலையில் சாகுபடி முடிந்தால் அந்த மண்ணுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும என்பதற்காக இன்னொரு மலைக்கு சாகுபடி செய்ய சென்று விடுவோம்” என்று கியான் கோன்யா கூறினார். விவசாய சாகுபடி, அறுவடை என்று அனைத்தையும் மக்கள் கூட்டாக சேர்ந்து செய்கிறோம். ஒருவரின் வீடு எரிந்து போனாலோ, இடிந்து போனாலோ நாங்கள் கூட்டாகச் சேர்ந்து கட்டித் தருவோம். கிராமங்களில் இருப்பவர்கள் நகரங்களில் பிள்ளைகளை படிக்க அனுப்பி விடுவோம். அவர்கள் காப்பாளராக இருந்து பிள்ளைகளைப் படிக்க வைத்தார்கள். எங்களில் பலர் அப்படித்தான் படித்தோம். ஒருவருக்கொருவர் குடும்பம் போல பழகிக் கொள்வது, உதவிக் கொள்வது இங்கு தொன்றுதொட்டு தொடரும் வாழ்வில் முறையாக உள்ளது என்பதைக் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதே நேரத்தில் பழங்குடியினரிடையே சண்டைகள் வந்தாலும் அதுவும் மிகவும் மோசமாக இருக்கும் என்றனர். இப்போது சண்டைகள் குறைந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்தில் இப்போது அதிகமாக படிக்கின்றனர். தமிழகம் அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. செலவு குறைவாகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

தமிழகத்தில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் இப்போது நாகலாந்து வருவதாகவும் தெரிவித்தனர். இந்தியாவின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு மக்கள் சகஜமாக வந்து செல்வதும், கல்வி, வேலைக்காக வருவதும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு வலு சேர்க்கும். ஆனால், சில மாநிலங்களில் நாகலாந்து மக்களை சீன நாட்டினர் என நினைத்து, இன ரீதியாக சிலர் கேலி செய்ததாகவும், மிரட்டுவதாகவும் வருத்தப்பட்டனர்.

1 COMMENT

  1. இக்கட்டுரையைப் படித்து பார்க்கும் பொழுதே நாகாலாந்தில் கலவரம் வெடிவெடித்துள்ளதே! யார்
    கண் பட்டு விட்டதோ!
    திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ஒரு ஒட்டகம் திடீரென்று என் குறுக்கே ஓடிவந்தது.  

3
பயணக் கட்டுரை - வினோத்   நெடுந்தூர பயணங்களை, அதுவும் மோட்டர் சைக்கிளில் செய்வதில் ஆர்வம் அதிகம் கொண்டபெண் நான். “பெண் என்றால் அலுவலகம் போக ஸ்கூட்டர் மட்டும் தான் ஓட்ட வேண்டுமா?” என்று எழுந்த எண்ணத்தில்...

பகல் வேஷம்

1
சுஜாதா தேசிகன்                                             ...

தேடலுக்கான பருவம்

0
- வா. மணிகண்டன் கொரோனா லாக்டவுன் காலகட்டம் முடிவடையும் இக்காலகட்டத்தில் நிறையப் பேர் தங்களுடைய வேலையை மாற்றிக் கொள்வதைப் பற்றி பேசுகிறார்கள்; யோசிக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பை நிறுவனங்கள்...

படம், அதன் நடை,அனைத்துமே தமிழ், ஏன் இந்தியப் படங்களுக்கே புதிது.

1
விமர்சனம் - ஶ்ரீதர் விசில், கைதட்டல் என்று பலத்த ஆரவாரத்துடன் ஆரம்பித்த சிம்புவின் என்ட்ரி... அதே ஆரவாரம் SJ சூர்யா என்ட்ரிக்கும். ஆரம்பம் முதல் கடைசி வரை அனைவரையும் சீட்டின் நுனியில் உட்கார வைத்த ஜெட்...

இன்றைய இளைஞர்களை சிந்திக்கவைக்கும்.

0
அருள்வாக்கில் கார்த்திகை மாதத்தின் சிறப்பினை விளக்கியது படிக்க படிக்க மனதிற்கு இதமாக இருந்தது. திருவண்ணாமலை மலை மேல் தீபம் ஏற்றி இறைவன் ஜோதி வடிவில் உள்ளதை உணர்த்துவது, கோயில்கள் தோறும் பழமை எல்லாவற்றை...