“அந்தச் சந்திப்பு ஊடகத்தின் சக்தியை எனக்கு உணர்த்தியது.”

“அந்தச் சந்திப்பு ஊடகத்தின் சக்தியை எனக்கு உணர்த்தியது.”
Published on

நேர்காணல்

'ஜெய் பீம்' இயக்குனர் த.செ. ஞானவேல்
– எஸ். சந்திர மௌலி

விளிம்பு நிலை பழங்குடி இன மக்களின் மீதான காவல்துறையின் அடக்குமுறையை எடுத்துச் சொல்லும் உண்மைக் கதையான 'ஜெய் பீம்' படத்தின் இயக்குனர் தா.செ.ஞானவேல். சொந்த ஊர் வேலூர். மிகச் சாதாரணமான குடும்பப் பின்னணி கொண்டவர். 'கல்வித்துறையில் பணி மேற்கொள்ள வேண்டும்' என்ற நோக்கத்தில் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்தபோது 'விகடன்' மாணவப் பத்திரிகையளர் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஊடகத்துறைக்கு வந்தவர். தனது ஜெய் பீம் திரைப்படம் மூலமாக மக்களின் கவனத்தை ஈர்த்து, வெகுஜனப் பாராட்டு பெற்றிருப்பதுடன், அரசியல் ரீதியான சர்ச்சைக்கும் உள்ளாகி இருக்கிறார். தன் வெற்றிக் கதையை 'கல்கி'க்கு அளித்த பேட்டியில் விவரிக்கிறார் ஞானவேல். முக்கிய பகுதிகளின் தொகுப்பு:

கல்வி அமைச்சரைக் கேள்வி கேட்டேன்

மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, பல்வேறு பிரமுகர்களை பேட்டி கண்டதுண்டு என்றாலும், ஒரு பத்திரிகையாளருக்கு என்ன பவர் இருக்கிறது என்பதை எனக்கு புரிய வைத்தது அன்றைய கல்வி அமைச்சருடனான எனது பேட்டி. நான் ஓர் அரசுக் கல்லூரி மாணவன். எனது கல்லூரியின் முதல்வரால் கூட மாநிலத்தின் கல்வி அமைச்சரை சந்தித்து அவரைக் கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஒரு மாணவ நிரூபராக அமைச்சரை சந்தித்து, அப்போது அவர் மீது கூறப்பட்ட குற்றச் சாட்டுக்களுக்கு "உங்கள் பதில் என்ன?" என்று கேட்டேன். அவரும் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பொறுமையாக தன்னுடைய விளக்கத்தைச் சொன்னார். அந்தச் சந்திப்பு ஊடகத்தின் சக்தியை எனக்கு உணர்த்தியது.

'விகடன்' என்ற கல்லூரி

கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், விகடனிலேயே முழு நேர நிரூபராகச் சேரும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு கல்லூரியில் சேர்ந்து விஸ்காம் படித்திருந்தால் கூட அது ஊடகத்துறை பற்றிய ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்திருக்கும். ஆனால், விகடன் நிரூபராக பணியாற்றியது அனுபவபூர்வமாக எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. எத்தனை விதமான மனிதர்கள்! எத்தனை வகையான மக்கள் பிரச்னைகள்! "தாய் மண்ணே வணக்கம்" என்ற தொடரின் மூலமாக நல்லக்கண்ணு முதல் நம்மாழ்வார் வரை பல்வேறு துறைகளையும் சேர்ந்த மாமனிதர்களின் கருத்துக்களை பதிவு செய்யும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 'குலதெய்வ' வழிபாடு என்பது தமிழ் பாரம்பரியத்தின் முக்கிய அம்சம். பல்வேறு பிரமுகர்களும் தங்கள் குலச்சாமிகள் குறித்து பகிர்ந்துக்கொண்ட தொடருக்கும் பரவலான வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாட்டின் புவியியலை எனக்குப் புரியவைத்தது. பிரகாஷ் ராஜின் வாழ்க்கை அனுபவ பேட்டித் தொடர் பெற்ற வரவேற்பு வரலாறு காணாதது. படு பிசியாக தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் அவர்  நடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. எனவே, ஷூட்டிங்கிற்காக இந்தியா முழுவதும் பறந்துக்கொண்டிருப்பார். அந்த ஒரு தொடருக்காக கேரளா, ஆந்திரா தொடங்கி உத்தரப்பிரதேசம் வரை பல்வேறு மாநிலங்களிலும் அவர் இருந்த லொகேஷன்களுக்குச் சென்று உரையாடியது எனக்கு அகில இந்தியப் பயணமாகவே அமைந்தது.

அகரத்தின் அழைப்பு

ஒரு கட்டத்தில் பேட்டிகளும், கட்டுரைகளும் எனக்கு அலுப்புத் தட்டியது. கல்வித்துறை சார்ந்து ஏதாவது செய்யலாம் என்று தோன்றியது. அப்போதுதான் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் அவருடன் சேர்ந்து செயல்படும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் குடும்பத்தில் நானே ஒரு முதல் தலைமுறை பட்டதாரி. என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியூட்டவே உருவாக்கப்பட்டது அகரம். முழு நேரமாக அங்கே பணியாற்றிய நான்கு ஆண்டுகள் எனக்கு பெரும் மனநிறைவைக் கொடுத்தது.

சினிமா பிரவேசம்

பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதா மோகன் இயக்கிய 'பயணம்' படத்துக்கு ஒரு பத்திரிகையாளர் வசனம் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவர்கள் என்னை வசனம் எழுதச் சொன்னார்கள். தயக்கத்துடன் ஒப்புக்கொண்டேன். நான் சினிமாத்துறைக்கு வந்தது அப்படித்தான். ஆனாலும், எனது வசனங்கள் நன்றாக அமைத்ததாகப் பாராட்டு கிடைத்தது. தொடர்ந்து பிரகாஷ் ராஜ் இயக்கிய 'தோனி' உள்ளிட்ட சில படங்களுக்கு வசனம் எழுதினேன். அவருடைய உதவி இயக்குனர், இணை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறேன். 2017ல் அசோக் செல்வன்-பிரியா ஆனந்த நடித்த 'கூட்டத்தில் ஒருவன்' படத்தின் மூலமாக இயக்குனர் ஆனேன். ஒரு சாமானிய இளைஞன் இந்த சமூகத்தில்  தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள எப்படியெல்லாம் போராடுகிறான் என்பதுதான் அந்தப் படத்தின் கதை.

ஜெய் பீம்

ஒரு பத்திரிகையாளராக இந்த மண்ணில் முகவரி இல்லாத இருளர் சமூகத்தினரின் பிரச்னைகள் குறித்து நான் கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு மற்றும் பல்லாண்டுகளாக இருளர் சமூக மேம்பாட்டுக்காக செயல்பட்டு வரும் கல்யாணி ஆகியோரிடம் உரையாடி கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் ஜெய் பீம் கதையை உருவாக்கினேன். படம் ஓடிடி தளத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. நான் யார் மனதையும் புண்படுத்தும்  நோக்கில் கதையையோ, காட்சிகளையோ அமைக்கவில்லை. அதையும் மீறி யாருடைய மனமாவது புண்பட்டிருக்குமானால், எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினார். அதைவிட மகிழ்ச்சியான விஷயம், காலம் காலமாக கண்டுகொள்ளப்படாத இருளர் சமூகத்தினர் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்த  உத்தரவிட்டிருக்கிறார். இருளர் இன மக்களின் நலத்திட்டங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர்
திரு. இறையன்பு அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

விமர்சனம் என்பது தனி மனிதப் பார்வை. அது அவர்களின் உரிமை. சுட்டிக்காட்டி உள்ள விமர்சனங்களில் நியாயம் என என் மனதுக்குப் படும் விஷயங்களை நான் அடுத்த படத்தில் கவனத்தில் கொண்டு செயல்படுவேன்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com