“வருமுன் காப்பானாக இருங்கள்”

 “வருமுன் காப்பானாக இருங்கள்”
Published on

தலையங்கம்

வேளாண் சட்டங்கள் அரசால் திரும்பப்பெறப்போவதற்கான அறிவிப்பை தங்கள் வெற்றியாக எதிர்கட்சிகள் கொண்டாடுகின்றன. இந்தக் கொண்டாட்டங்களில் அவர்கள் கவனிக்கத் தவறிய ஒரு மிக முக்கியமான விஷயம்.

அந்த அறிவிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் தெரிவித்த
'ஒரே நாடு, ஒரே சட்டமியற்றும் முறை' குறித்த திட்டம்.

இந்தத் திட்டம் குறித்து இதுவரை எதிர்கட்சிகள் எந்த எதிர்வினையும் ஆற்றாமலிருப்பது ஆச்சரியம். ஒரு மிகப்பெரிய தேசிய விவாதமாக உருவெடுத்திருக்க வேண்டிய விஷயம் கவனம் பெறாமல் கடந்து செல்லப்பட்டிருக்கிறது.

இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம், அதன் நாடாளுமன்றக் கட்டமைப்பு. அதில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் ஒரு முன்மொழிவு அப்போதே விவாதிக்கப்பட்டால், சில தவறுகளை முன்கூட்டியே தவிர்க்க முடியும். ஆனால், வழக்கம்போல எதிர்க்கட்சிகள் அரசமைப்பில் திருத்தம் செய்யப்படும்போதோ அத்திருத்தம் நடைமுறைக்கு வரும்போதோ மட்டும்தான் வாயைத் திறக்கின்றன. இதைப் பா.ஜ.க. அரசு ஒவ்வொரு முறையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது.

மாநிலச் சட்டமன்றங்களின் சபாநாயகர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர், நாடு முழுவதற்கும் ஒரே சட்டமியற்றும் முறை என்று கூறினாலும், தன்னுடைய திட்டத்தை முழுமையாக விளக்கவில்லை. 'சட்டமியற்றும் முறை' (லெஜிஸ்லேடிவ்) என்ற வார்த்தை மாநிலச் சட்டமன்றங்களை மட்டுமின்றி நாடாளுமன்றத்தையும்கூடக் குறிக்கும் என்பதால், அவரது உரை பல சந்தேகங்களை எழுப்புகிறது.

ஏற்கெனவே 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதை பா.ஜ.க. தனது இலக்காக அறிவித்துச் செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் அதற்காக அதிகமான எண்ணிக்கை இருக்கைகளுடன் பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை உருவாக்கிக்  கொண்டிருக்கிறது என்பதையும்  இந்த இடத்தில் நினைவில் கொள்ளவேண்டும்.

அதேபோல், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, "அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் உருவாக்கப்படும்" என்று தனது உரையில் தெரிவித்துள்ளார். சட்டமன்றங்களின் அதிகாரம் இந்திய அரசமைப்பால் வரையறுக்கப்பட்டு அதன்படியே செயல்பட்டுவரும் நிலையில், சட்டமன்றங்கள் தங்களுக்கான விதிமுறைகளை இயற்றிக்கொள்ளும் அதிகாரத்துக்குள் நாடாளுமன்றம் ஏன் தலையிட வேண்டும் என்ற கேள்வியை இதுவரை எந்தக் கட்சியும், மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் கட்சிகளுக்கு எழுப்பவில்லை.

நமது எதிர்கட்சிகள் வந்தபின் காக்கப் போராடுபவர்களாக இருப்பதில் மட்டும் நீண்ட நாள் பயனில்லை. அரசின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கவனித்து வரும் முன் காப்போனாகச்செயல்பட வேண்டும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com