0,00 INR

No products in the cart.

மன்னிப்புக் கிடைத்தது

ஓவியம் : தமிழ்

தெலுங்கில் : டாக்டர் பிரபாகர் ஜைனி

தமிழில்: ராஜி ரகுநாதன்

தாய்மொழி தமிழ். திருமணத்துக்குப்பின் வாழ்க்கையை ஹைதராபாத்தில் தொடங்கியதால் தெலுங்கு மொழியைக் கற்றுத் தேர்ந்து அதில் இலக்கியம் படைக்குமளவுக்குத் திறன் பெற்றவர். தமிழிலும் தெலுங்கிலுமாக இரு மொழி இலக்கிய உலகிலும் தொடர்ந்து இயங்கி வரும் சிறப்பு இவருக்கு உண்டு.
“பால் டம்ளர்” என்ற தலைப்பில் தற்காலத் தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் இருபத்தொரு சிறுகதைகளின் தொகுப்பு இவருடைய மொழிபெயர்ப்பில் 2020ல் வெளிவந்தது.
அண்மையில் தெலுங்கு மொழியில் வெளியான சிறந்த சிறுகதைகளைக் கல்கி இதழுக்காக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

 

வனைப் பற்றி….

வாரங்கல் மத்திய சிறைச்சாலை காம்பவுண்டுக்குள் உள்ள பெட்ரோல் பங்கிலிருந்து பார்க்கையில் எதிரிலிருந்த பத்ரகாளி அம்மன் கோவில் வண்ண விளக்கொளியில் ஜகஜ்ஜோதியாக ஒளிர்ந்தது. தசரா பண்டிகை நாட்கள் அவை. மாலை ஆறு மணிக்கே இருள் சூழ ஆரம்பித்தது. சற்று குளிராக தோன்றியதால் அணிந்திருந்த ஸ்வெட்டரின் பொத்தான்களை போட்டுக் கொண்டேன்.

தேநீர் குடிக்கலாமென்று நினைத்து சூபர்வைசரிடம் சொல்லிவிட்டு எம்.ஜி.எம். மருத்துவமனை சென்டரை நோக்கி நடந்தேன். என் இதயம் திடீரென்று படபடவென்று அடித்துக் கொண்டது.

அந்த மருத்துவமனை மார்ச்சுவரி அறைச் சுவரின் முன்னால் கைகளில் விலங்கோடு மணிக்கட்டில் கட்டோடு நின்ற அந்த நாள்… அந்த மரண காண்டம் நிகழ்ந்து பத்தாண்டுகள் கழிந்தாலும்…. இதயம் வெடித்துவிடுவது போல் நான் அழுத அழுகை… இப்போதும் என் இதயத்தில் எதிரொலித்துக் கொண்டே உள்ளது. பாயில் சுற்றிய என் அண்ணனின் உடலை ஜீப்பில் ஏற்றி இதே காந்தி ஆஸ்பத்திரி கேட்டிலிருந்து எங்கள் ஊருக்கு எடுத்துச் சென்ற காட்சி இப்போதும் தெளிவாக என் கண் முன் தெரிகிறது. அந்தக் காட்சியை நினைத்துப் பார்ப்பதற்காகவே நான் இயன்றபோதெல்லாம் அந்த மருத்துவமனை கேட்டின் முன் உள்ள ஓடு வேய்ந்த ஹோட்டலுக்கு வந்து டீ அருந்தியபடி ஒரு பத்து நிமிஷமாவது அமர்ந்திருப்பேன். பெட்ரோல் பங்கில் டூட்டி விழும் போதெல்லாம் இது என் தவறாத தினசரி செய்கையாகிப் போனது.

சாதாரணமாக மத்திய சிறையின் பொறுப்பில் நடக்கும் எங்கள் பெட்ரோல் பங்கில் எனக்கு ஒரு கணம் கூட ஓய்வு கிடைக்காது. அலுவலகம் விடும் நேரத்தில் இன்னும் ரஷ் அதிகமாக இருக்கும். பலவித வாகனங்கள்… கார்கள் வந்துக்கொண்டே இருக்கும்.

சிறையில் இருக்கும் ஆயிரக்கணக்கான கைதிகளில் ஒரு நூறு பேருக்குக் கிடைக்கும் அதிர்ஷ்டம் இது. நம் நன்னடத்தை, அதிகாரிகளிடம் காட்டும் பணிவு, சிறையில் சண்டைப் போடாமல் இருப்பது, முக்கியமாக, ”வெளியில் சுதந்திரமாக விட்டால் ஓடிப்போக மாட்டோம்” என்ற நம்பிக்கையை ஏற்படுத்துபவருக்கே ‘ஓபன் ஏர் ஜெயில்’ வசதிகள் கிடைக்கும்.

நான் கடந்த பத்தாண்டுகளாக இதே சிறையில் இருக்கிறேன். ஏதோ கொஞ்சம் படித்துள்ளேன்.

தொர்ரூருக்கு அருகில் உள்ள குக்கிராமம் எங்களுடையது. வயல் வரப்புத் தகராறு ஏற்பட்டு, பேச்சு முற்றி, ஆத்திரம் தாங்காமல் குடி மயக்கத்தில் நான் என் அண்ணனை கத்தியால் குத்தியதால் அவன் அங்கேயே துடிதுடித்து கீழே விழுந்தான். அண்ணன் என் கண் முன்பாகவே ரத்தக் குட்டையில் கிடப்பதைப் பார்த்ததும் என் போதை இறங்கியது. ஆவேசம் சட்டென்று அடங்கிப் போனது. அண்ணனின் அருகில் அமர்ந்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுது கதறினேன். நானே போலீசுக்கு போன் செய்தேன்.   அம்மாவும் அப்பாவும் இறந்த பின் சொந்த மகனைப் போல் என்னை வளர்ந்த என் அண்ணனையே கத்தியால் வெட்டியதற்காக நான் பச்சாதபத்தோடு துக்கம் தாளாமல் என் கை மணிக்கட்டை கத்தியால் கிழித்துக் கொண்டேன். இதே காந்தி ஆசுபத்திரிக்குத்தான் என்னையும் அண்ணனையும் எடுத்து கொண்டு வந்தார்கள். ஆனால் அண்ணன் பிழைக்கவில்லை. எனக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து சிறையில் அடைத்தார்கள். நான் குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டதால் ஆயுள் தண்டனை விதித்தார்கள்.

எங்கள் குடும்பத்தின் இரு ஆண் பிள்ளைகளில் ஒருவன் கொலை செய்யப்பட்டும், இன்னொருவன் அதே குற்றத்திற்காக தண்டனை அனுபவித்தும் வந்ததால் எங்கள் இரு குடும்பங்களும் தத்தளித்தன. இரு பெண்மணிகள், வளரும் குழந்தைகளோடு கிராமத்தாரின் விமரிசனங்களைத் தாங்கிக் கொண்டு வாழ்வது சிரமமாக இருந்ததால் வீட்டையும் நிலத்தையும் வந்த விலைக்கு விற்றுவிட்டு கிராமத்தை விட்டுச் சென்று விட்டார்கள்.

என் அண்ணியும் பிள்ளைகளும் எங்கே சென்றார்களோ என்ன ஆனார்களோ தெரியாது. என் மனைவி என் மகளையும் மகனையும் அழைத்துக் கொண்டு முதலில் அவள் பிறந்த வீட்டுக்குச் சென்றாள். பின் இரு ஆண்டுகள் கழித்து வேறொருவனை மணம் புரிந்துக்கொண்டு பிள்ளைகளோடு சேர்ந்து அவனோடு சென்று விட்டாள்.

தன் இருப்பிடம் எனக்குத் தெரியக் கூடாதென்பதில் மிகவும் கவனமாக இருக்கிறாள். இப்போது என் மகளுக்கு இருபத்தைந்து வயதும் மகனுக்கு இருபது வயதும் ஆகியிருக்கும். மகளுக்குத் திருமணமாகி குழந்தைகளோடு எங்காவது குடித்தனம் செய்து கொண்டிருப்பாள். என் சொந்தங்களையும் என் மனைவி, அண்ணி, அண்ணன் பிள்ளைகள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்று மனம் அடித்துக் கொள்கிறது. ஆனால் அது நடக்காது என்று எனக்குத் தெரியும்.

நான் குடி மயக்கத்தில் செய்த தவறுக்கு என் உறவினரும் ஊராரும் என்னைத் தம் வாழ்விலிருந்தே துரத்தி விட்டார்கள். நான் எங்கே இருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால், அவர்கள் வர முடிந்தாலும் வரமாட்டார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாதாகையால் நான் போக நினைத்தாலும் போக முடியாது.

எங்கள் சிறை அதிகாரி, “பரோலில் போயிட்டு வாப்பா!” என்று அவ்வப்போது கூறுவார். ஆனால் நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு போவேன்? எனவே, எனக்கு இந்த சிறையே வீடாகிப் போனது. இங்கிருப்பவர்களே என் உறவினர்கள். எனக்கு வாழும் ஆசை கூட பெரிதாக இல்லை.

“ஒவ்வொரு ஆகஸ்ட் பதினைந்தின் போதும், ஜனவரி இருபத்தாறின் போதும் கைதிகளுக்கு மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்வார்கள்” என்று என் சக சிறைக் கைதிகள் பலர் ஆவலோடு எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால், எனக்கு அப்படிப்பட்ட ஆசை எதுவும் இல்லை. எனக்கு மன்னிப்பு அளிக்கும்படி கூட நான் விண்ணப்பிக்கமாட்டேன்.

ஏனென்றால் சிறையில் இருக்கும்போது இறந்துபோனால் என் நண்பர்களின் எதிரில் என் இறுதிக் கிரியைகள் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதைத் தவிர வேறே ஆசை எதுவும் எனக்கு இல்லை. அதனால், நான் விடுதலையைக் கூட கோரவில்லை. ஒருவேளை விடுதலையாகி வெளி உலகிற்குள் சென்றால் நான் அனாதைப் பிரேதத்தைப் போல் இறந்து கிடக்க வேண்டி வரும்.

ஏதோ பஸ் சப்தமாக ஹாரன் அடித்ததால் திடுக்கிட்டு யோசனைகளில் இருந்து வெளிவந்து பெட்ரோல் பங்க்கை நோக்கி நடந்தேன். எங்கள் சூப்பர்வைசருக்கு குட்கா பொட்டலங்களைக் கொடுத்துவிட்டு மீண்டும் பெட்ரோல் பம்ப்பை கையில் எடுத்துக் கொண்டேன்.

அதற்குள் போலீஸ் இன்னோவா கார் வந்ததால் அதிலிருந்த அதிகாரிக்கு சல்யூட் அடித்து டாங்க் நிரப்பி பில் எழுதி கூப்பன் வாங்கிக் கொண்டேன். அதன் பின் டிரைவர் கார் டயரில் காற்று செக் செய்யச் சொன்னதால் அதையும் செய்தபின் கார் கிளம்பிச் சென்றது.

*** *** ***

அவளைப் பற்றி…

“என் பெயர் தீக்ஷா…!” என்று நான் கூறிய உடனே… உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் தாகூர் ஆடிடோரியத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும்,

“ஸ்வேரோ, ஸ்வேரோ…!” என்று பெரிய அளவில் வாழ்த்து தெரிவித்து கூச்சலிட்டார்கள். அவர்களுடைய உற்சாகத்தைப் பார்த்து என்னிடமும் மகிழ்ச்சி பொங்கி எழுந்தது. அதனால்தான்,

“ஆமாம்.. நான் தீக்ஷா ஸ்வேரோ, டிஎஸ்பி!” என்று உரத்து ஆகாயத்தை எட்டிப் பிடிக்கும் ஆனந்தத்தோடு உள்ளங்கைகளை அழுத்தி மூடி இரு கைகளையும் உயர்த்திக் கூறியதால் கைதட்டலால் அந்த ஆடிடோரியமே அதிர்ந்தது.

அந்த ஆரவாரத்தால் காலையிலிருந்து என் மனதில் அடர்த்தியாக படிந்திருந்த துயர மேகங்கள் சிதறிப் போயின.

அந்த ஆரவாரம் வெறும் என் வெற்றி குறித்து அறிவித்த ஆனந்தம் மட்டுமல்ல; எங்கள் ஸ்வேரோ அமைப்பு சாதித்த வெற்றிக்கு எங்கள் நிறுவனம் அறிவித்த போர் முழக்கத்திற்குக் கிடைத்த பாராட்டு. அந்த கர்ஜனையில் வாழ்க்கையின் பரிதாபமான நிலையிலிருந்து வந்த தாமும் கூட உயர்ந்த சிகரங்களை எட்ட முடியும் என்ற நம்பிக்கை மிகுந்த ஒரு போர் முரசு கூட கேட்டது.

மேடை மேல் எங்கள் ஸ்வேரோ அமைப்பின் எதிர்பாராத வெற்றிகளுக்கு மறு பெயராக நின்ற பிரவீண்குமார் சார், புன்னகையோடு என்னைப் பார்த்ததால், என் கண்கள் பனித்து அவருடைய உருவம் மறைந்து அங்கு ஒரு அகண்ட ஜோதி தென்பட்டது. நான் சார் பாதங்களை வணங்கி மீண்டும் மைக்கை கையில் படித்தேன்.

அன்று குருகுலங்களின் குருமார்களுக்கு ஆத்மார்த்தமான சன்மான விழா நடைபெற்றது. நாங்கள் படித்த குருகுலங்களை ஒரு திடமான சங்கல்பத்தோடு, ஒரு மகோன்னத நோக்கத்தோடு நடத்தி வரும் பிரவீண் சாருக்கு உதவியாக அவருடைய கனவுகளைப் புரிந்துகொண்டு கல்விப் புரட்சியை ஒரு யக்ஞம் போல் நடத்தி வரும் ஆசிரியர்களுக்கு சன்மானம் செய்து வரும் சபையில், சில நாட்களுக்கு முன்புதான் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவித்த குரூப் ஒன் ரிசல்டில் டி.எஸ்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக நின்றேன். நான் எங்கள் அமைப்பு சாதித்த வெற்றிக்கு எடுத்துக்காட்டாக இன்று இங்கு நின்றிருக்கிறேன். என் சொற்பொழிவு பலருக்கும் ஊக்கம் அளிக்கும் என்று பிரவீண் சார் கூறியதால் டிபார்ட்மென்டின் அனுமதி பெற்று இங்கு வந்தேன்.

“ ‘ஸ்வேரோ’ என்றால் என்ன பொருள் என்று நாமனைவருக்கும் தெரியும். ஆகாயமே எல்லையாக வெற்றிச் சிகரங்களை எட்டவேண்டுமென்று நம் சார் கண்ட கனவுகளுக்கு மறு வடிவமே ஸ்வேரோ! அது ஒரு புனிதமான ஆலயமானால் அந்த கோவிலின் கருவறையில் ஒளிரும் இறைவன் நம் பிரவீண் சார்!”

நான் அந்த வாக்கியத்தை முடிக்கும் முன்பே மீண்டும் ஒருமுறை ஹால் நிறைந்த கைதட்டல் எழுந்தது. அது எங்கள் சாரிடம் எங்களுக்குள்ள அன்பு, பாசம். இரண்டு நிமிடங்களுக்குப் பின் ஓசை அடங்கி நான் பேசுகையில்,

“என் உண்மையான பெயர் தீக்ஷா அல்ல. என் பெயர் தீனா நாயக். நம்மில் பலரைப் போலவே என் இளமைப் பருவமும் மிக மிகப் பரிதாபமான நிலையில் கழிந்தது. என் தந்தை என் தாயை தினமும் குடித்துவிட்டு வந்து அடிப்பார். குடி அவரை எத்தனை கீழே தாழ்த்திவிட்டதென்றால் மகள் என்று கூட பார்க்காமல் என்னையே பலவந்தப்படுத்த முயற்சித்தார். அபோது புரிந்தது அவர் என் சொந்த அப்பா இல்லை… மறு தந்தை என்று. அன்று என் தாய் பத்திரகாளி அவதாரம் எடுத்தாள். ”மீண்டும் என்னைத் தொட்டால் கையை வெட்டுவேன்” என்று கத்தியை பிடித்துக் கொண்டு வீராவேசமாக கத்தினாள். ஆனாலும் அவன் மீது நம்பிக்கை இன்றி என்னை அழைத்து வந்து பிரவீண் சாரிடம் ஒப்படைத்தாள்” என்று நான் விவரித்த போது, அன்றைய அக்காட்சி கண் முன் தோன்றி என் கண்கள் நிறைந்தன. கண்ணீரைத் துடைத்து துயரத்தை விரட்டி விட முயன்று தோற்றேன். ஆனால் என்னை தேற்றிக் கொண்டு மேலும் பேசினேன்,

“சார் என்னைப் பெற்ற தந்தைப் போல பாதுகாத்தார். என் பெயர் தீனமாக இருக்கிறதென்று கூறி அதனை தீக்ஷா என்று மாற்றினார். எனக்கு அரசாங்க உத்தியோகம் செய்ய விருப்பம் என்று அறிந்து என்னை அதற்கேற்ப ஊக்கப்படுத்தினார். இதே பல்கலைக்கழகத்தில் தெலுங்கு இலக்கியத்தில் எம்.ஏ. தேறினேன். தங்கப் பதக்கம் சாதித்தேன். பி.ஹெச்டி செய்து கொண்டே குரூப் ஒன் தேர்வு எழுதினேன். சாரைப் பார்த்து போலீஸ் ஆபீசர் ஆக வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் டி.எஸ்.பி. போஸ்டைத்  தேர்ந்தெடுததேன். நான் சாருடைய கனவுகளுக்கு மறு வடிவம். நீங்கள் அனைவரும் கூட சாருடைய கனவுகளின் ஒளி விளக்குகளே. தீபங்களாக ஒளிமயமான வெளிச்சத்தைப் பரப்பி நீங்கள் அனைவரும் ஸ்வேரோக்களாக உலகை ஆள வேண்டுமென்று விரும்புகிறேன். சாருடைய ஆசிகள் எப்போதும் உங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்று என் உரையை முடித்தேன்.

எங்கள் ஆசிரியர்கள் அனைவரையும் சாரோடு கூட சன்மானம் செய்து என் அலுவலகப் பணியைச் செய்வதற்காகப் புறப்பட்டேன்.

*** ***

அவன்… அவள்…

தினமும் போலவே பெட்ரோல் பங்கில் டூட்டி முடித்தபின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு, இரண்டு சப்பாத்தி தின்றுவிட்டு வந்து என் அறையில் படுத்துக் கொண்டேன். ஆனால் ஏனோ மனதில் ஒரு வருத்தம். ஏதோ நடக்கப் போகிறதென்று தோன்றிக்கொண்டே இருந்தது.

அதற்குள் என் யோசனைகளுக்கு தடை ஏற்படுத்தி என் அறையின் முன்னால் நின்ற கார்ட் என்னை அழைப்பதைப் பார்த்து என் நெஞ்சு திடுக்கிட்டது.

“உனக்கு அரசாங்கம் மன்னிப்பு வழங்கிவிட்டது. உன்னை விடுதலை செய்கிறோம்” என்ற செய்தியை கொண்டுவந்திருப்பாரோ என்று நடுங்கியபடி, “என்ன விஷயம் சார்?” என்று தாழ்ந்த குரலில் வினவினேன். ஆனால் எத்தனை முறை கேட்டாலும் அவர் வாயைத் திறக்காமல் உடன் வரும்படி மட்டுமே கூறினார்.

நான் சந்தேகத்துடனே ஜெயிலர் சாரின் சேம்பருக்குள் நுழைந்தேன். அங்கு ஜெயிலர், சூபரின்டென்டோடு கூட மேலும் சில போலீஸ் அதிகாரிகளும் இருந்தனர்.

நான் உள்ளே நுழைந்தவுடனே, அவர்கள் வெளியில் சென்று விட்டார்கள். ஒரே ஒரு போலீஸ் உயரதிகாரி மட்டும் அங்கேயே இருந்தார்.

“உன் பெயர்?”

“அம்மா! என் பெயர் வீரன்னா.”

“என்ன குற்றம் செய்தாய்?”

“சொந்த அண்ணனையே கொன்ற பாவியம்மா நான்”

“மனைவி குழந்தைகள்?”

“இருந்தாங்கம்மா. இப்போது எங்குள்ளர்களோ தெரியாது. எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்னு தினமும் கடவுளை வேண்டிக்கிறேன் அம்மா!” என்றேன்.

போலீசாரிடம் எதிர்க் கேள்வி கேட்கக் கூடாது என்று தெரியும். ஆனாலும் அந்த பெண்மணி இதையெல்லாம் ஏன் கேட்கிறாள் என்று புரியாமல்,

“அம்மா… தாயி! கோவிச்சுகாதே…! இதையெல்லாம் நீங்க ஏன் கேக்குறீங்கம்மா?” என்று சந்தேகத்தோடு கேட்டேன்.

அதன் பின் சடந்த சம்பவம் நான் கனவில் கூட நினைக்காதது. அந்த அம்மா என் அருகில் நடந்து வந்து என்னை அணைத்துக் கொண்டாள். அவள் கண்கள் அருவி போல் பொழிந்தன.

“ஏனென்றால்… அப்பா! நீ பெற்ற மகள் நான் ஆதலால்” என்று அழுதுகொண்டே தழுதழுத்த குரலில் பதிலளித்தாள்.

நான் திடுக்கிட்டு தூரமாக விலகி,

“இல்லை… இல்லை…! நான் உன் தந்தையில்லை? நான் ஒரு கொலைக்காரன். நீங்கள் டி.எஸ்.பி., இது உண்மையல்ல” என்றேன் பிடிவாதமாக தலையை ஆட்டி.

தீக்ஷா என் கைகளைப் பிடித்துக்கொண்டு,

“சற்று முன் பெட்ரோல் பங்கில் டீசல் போட்டபோது உன்னைப் பார்த்ததுமே திடுக்கிட்டேன். வயிற்றை ஏதோ செய்தது. நீ டயரில் காற்று அடிக்கும்போது உன் முன்கையில் எல்.வீரன்னா என்று பச்சை குத்தியிருந்ததைப் பார்த்த பின் நீ என் தந்தையே என்று ஐயமற தீர்மானித்தேன்.

பெட்ரோல் பங்கிலிருந்து நான் உடனே ஜெயில் அதிகாரிகளை சந்தித்து உன் ஃபைலை வாங்கிப் பார்த்தேன். அப்பா! நீ என் தந்தையேதான்!” என்று என்னை மீண்டும் அணைத்துக் கொண்டாள்.

இந்த முறை என் உடம்பில் இருந்த ரத்தம் தன் சொந்த மகளை அடையாளம் கண்டுவிட்டது போலும். அடக்க முடியாத ஆனந்தம் கண்கள் வழியாக பெருகியது. அருகில் பத்ரகாளி அம்மன் பெயரில் ஓடும் கால்வாயில் கலப்பது போல் பெருகத் தொடங்கியது.

“ஆமாம் தாயீ!” என்றேன். எனக்குத் தொண்டை அடைத்தது. என் வாழ்க்கையில் கூட அற்புதம் நிகழும் என்ற உண்மையை என் பலவீனமான இதயத்தால் தாங்க இயலவில்லை.

“ஆமாம் அப்பா! நான் உங்க மகளே தான்!” என்று தன் அணைப்பிலிருந்து நழுவிய என்னை பிடித்துக்கொள்ள முயன்றாள் என் மகள்.

இத்தனை பெரிய சந்தோஷத்தை அளித்த பத்ரகாளி அம்மனே என் மகள் வடிவில் வந்திருப்பதாக நினைத்தேன்.

“இதை விட எனக்கு வேறென்னம்மா வேண்டும்? எனக்கு ரொம்ப விருப்பமான சிறைச் சாலை, அம்மனின் சந்நிதி, என் மகளின் மடியில்… அனாயாசமாக…! அம்மா தாயே!”

 

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

சிற்பங்களின் துகள்கள்

1
   தயவு தாட்சண்யம் இல்லாமல் சுளீரென்று சுட்டெரித்துக் கொண்டிருந்தான் சூரியன். தேனீயின் சுறுசுறுப்புடன் துள்ளித் திரிந்த மாணவர்களுக்கு அது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அந்த அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம் ஆரவாரங்களால் நிறைந்திருந்தது. திறந்திருந்த ஜன்னலின்...

காவல் தெய்வம் !

0
பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்   பிள்ளையார்குளம் கிராமத்தில் மிகப்பெரிய விநாயகர் கோயில். ‘அதிவீர விநாயகர்’ என்ற பெயரில் ஆறடி உயரத்தில் வீற்றியிருக்கிறார். கோயிலின் பின்புறத்தில் நீண்டு வளைந்து செல்லும்  தார்ச்சாலை.  அதையடுத்து பெரியகுளம் கண்மாய் இருந்தது. ...

மழை ராணி

0
  இடியும் மின்னலுமாய் பொழிந்து கொண்டிருந்தது பெருமழை. வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து பெய்யும் மழையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனி. ரஞ்சனிக்கு அவளுடைய அப்பா சூட்டி இருக்கும் செல்லப் பெயர் மழை ராணி. அவள் பிறந்து பத்துப் பதினைந்து நாட்களுக்குள்...

சித்திரைப் பூக்கள்

2
  ராமன்                                            எட்டிப் பார்க்கும் லேசான...

பாதாளக் கரண்டி

  30 வருடத்துக்குப் பிறகு, சொந்த ஊர் செல்கிறேன். நான் வசித்த வீடு. எங்கள் முதலாளி முதலியார் வீடு  பார்க்க தயாரானேன். எங்கள் வீடு நாங்கள் விற்றவர் கையிலிருந்து இன்னொரு கை மாறியிருந்தது. என்னை...