ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய ஜன்னல்

ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய ஜன்னல்
Published on

நூல் அறிமுகம்

– உஷா ரஞ்சனி

என் ஜன்னலுக்கு வெளியே – மாலன் 

ந்திரம்போல் சொல்லின்பம் கைவரப்பெற்ற திரு. மாலன் அவர்களின் புதிய புத்தகம் 'என் ஜன்னலுக்கு வெளியே". பிரபல வார இதழ் ஒன்றில் 71 வாரங்கள் அவர் எழுதி வந்த வித்தியாசமான கட்டுரைகளின் தொகுப்பு இது. ஜன்னல் வழியே தான்கண்ட புறக்காட்சிகளின் தொடர்ச்சியாக சமகால வாழ்க்கை, சமூக நிகழ்வுகள் அகத்தில் எழுப்பிய சிந்தனைகளை கவிதை போன்ற நடையில் பதிவு செய்துள்ளார். புத்தக்தைப் பற்றி, அவருடைய வார்த்தைகளைப் பயன்படுத்தியே சொல்வதானால், "நல்ல பச்சை வாழையிலையில் பொல பொலவென்று சாதத்தை தட்டினாற்போல" மணமும், ருசியும், சத்தும், இளம் சூடும் நிறைந்த எழுத்து.

என் வீட்டு ஜன்னலுக்கு புறம்பே கையகல மொட்டுக்களைக் கொண்ட பெயர் தெரியாத பெரிய மரமொன்று இருக்கிறது. 'இத்தனைப் பெரிய மொட்டுக்கள் இத்தனை நெருக்கத்தில் எப்படி மலர்ந்து விரியும்' என்று வியந்து பார்த்துக் கொண்டிருந்திருந்தேன்.  முதலில் வெளிவட்டம் விரிந்து மலர்ந்தது, அது உதிரும் தருணத்தில் அதன் உள் வட்டம், பின் அதற்கடுத்தது என்று முழுக்கவும் மலர்ந்து சிரித்தது.

அதுபோல திரு. மாலன் எழுத்துக்களும், ஒரு எண்ணம், அது தரும் கருத்து என்று வாசகனை கரம்பிடித்து, கறவைகளை பைய நடத்தும் ஆயனைப்போல (மாலனல்லவா) நடத்திச் செல்கிறது.  ஒவ்வொன்றாக பூக்களை அடுக்கி நெருக்கித் தொடுத்த மலர்ச்சரம் போல மலர்ந்து மணம் வீசுகிறது.

வான் மழை போல சொல் வந்து பொழிந்த அவரது சொல்மழையிலிருந்து கை கையாய் அள்ளிய நீர்ச்சரங்கள் சில:

  • "உப்புத்தண்ணீரை உவப்புத்தண்ணிராக மாற்றும் மேகம்"
  • "அழகிலும் அனலிலும் பிறப்பது தானே கவிதை"
  • "அடியாட்களை ஏவி அப்பாவிகளை தாக்குகிற மனித கலாசாரம் காட்டு யானைகளுக்கும் கற்பிக்கப்பட்டது (கும்கி)"
  • "கேள்விக்குறிகள் குனிந்து நிற்கும்போது சந்தோஷங்கள் தலைதூக்குவதில்லை"
  • "வானிலிருந்து உதிர்ந்த உறைபனி வழி தெரியாமல் தங்கிவிட்டது (மலைசிகரங்களில்)"
  • "அச்சுறுத்த ஒரு பூச்சாண்டி இருந்தால், தன்னம்பிக்கை தர ஒரு சாண்டாகிளாஸ் இருக்கக் கூடாதா?"
  • "கசப்பில் நனைந்ததோ வெட்கமுறச் செய்ததோ, வேதனை சுமந்ததோ. நினைவுகள் எதுவாயினும் கொண்டாடத் தகுந்தவை"
  • "ஸ்நானப்பொடி என்று சமஸ்கிருதத்தில் குளித்த பெயர்"
  • "இசை, கூளம் இரண்டையும் சமமாக ஏந்தி வரும் காற்று"
  • "கீழ்வெண்மணியில் எரிந்த குடிசை இதயத்தில் வைத்த தீ"
  • "நதி உறைந்தது போல் நடுப்பகல் உறைந்து கிடந்தது"
  • "குப்பை சேகரிக்கும் பெண்ணுக்குத் தெரியும் புறக்கணிப்பின் வலி"

அரிய தகவல்கள் தரும் பக்கங்களும் உண்டு. யுவாங் சுவாங் சாமிநாத சர்மா, ஆஸ்திரேலியா ஆல் ரவுண்டர் லிசா, எம்.ஜி.ஆர்.பற்றிய புதிய தகவல், ஆயிரக்கணக்கான மைல்கள் பறக்கும், வலுவற்றதாக நாம் கருதும் பட்டாம்பூச்சி எனப்பல. சாம்பார் பற்றிய சுவையான தகவலும் உண்டு.

பகடிக்கும் பஞ்சமில்லை,

"மரத்தின் மீது கல்லெறிந்த சிறுவர்களை கண்டிப்பதுபோல காய்ந்த சுள்ளி ஒன்றை அனுப்பியது மரம்"

"மார்க் சக்கர் பெர்க்கின் பதிவு பலருக்கும்  forward செய்யப்பட்டு  Harvard   முழுக்க களேபரம்"

"Book Fair  என்று சொல்வது Unfair"

"கவிதை வாசிக்கும் கூட்டத்தின் நடுவே காளை மாட்டை பத்தி விட்டாற்போல"

"காலம் காலமாக கதைகளில் குறுக்கும் நெடுக்குமாக பறந்து கொண்டிருக்கும் காகங்கள்"

"செய்திகளை அதிகம் சுவாசிப்பது உடல் நலத்துக்கு தீங்கு என்று உணர்ந்த பட்டாம்பூச்சி செய்தித்தாளிலிருந்து அவசரமாகக் கிளம்பி கவிதைப் புத்தகத்தில் கால் பதித்தது"

நாம் முரண்படும் இடமே இல்லையா?  இருக்கிறது.

கொரோனா காரிருள் அகல விளக்கேற்றச் சொன்ன வைபவம். விளக்கேற்றுவது  ஒருசிலரின் மத கோட்பாடுகளுக்கு எதிரானது என்பது கருத்தில் கொள்ளப்படவில்லையா அல்லது பெருவாரியானவர்கள்  ஏற்றினால் போதும் என்கிற எண்ணமா?

'நாயிடமும்  பூனையிடமும் காட்டும் பரிவு, பாம்புகளிடம் காட்டுகிறோமா' என்று வினவுகிறார். காட்டுகிறோமே, பாம்பிற்கு பால் வார்த்து தெய்வமாக அல்லவா வழிபடுகிறோம்!

"அரசியலைவிட ஆன்மிகம் ஒரு தனி மனிதனை செழுமைப்படுத்துகிறது" என்று நம்பும் ஒருவரை பற்றிய பதிவு.  இறை உணர்வு அரசியலில் இருப்போருக்கு அற உணர்வுகளைத் தூண்டுகிறதா?  ஊழலில் ஊறிப்போய் நீதிமன்ற தண்டனைக்கு ஆளானவர்களின் இறை உணர்வு ஊரறிந்ததே.  அநேகமாக அரசியல் பிழைக்கும் அனைவரும் இறை உணர்வு  மிக்கவர்களாகவே இருக்கின்றனர்.  ஆனால், அது அவர்களை நேர்மைக்கு வழி நடத்தவில்லையே?

இவைதவிர, 'அடிக்கடி திறந்து பார்த்தால் குட்டி போடாது' என்பதால் மயிலிறகை கணக்கு புத்தகத்தில் ஒளித்து வைத்த இளமைப் பருவம், வாசனைகளாலும் கொண்டாட்டங்களாலும் நிறைந்த பிறந்த  ஊரும் அதன் தேர்ச்சக்கரங்களும் அவை பூவாசனை நிறைந்து கடக்கும் இரவுகளும், இன்றைய தலைமுறைக்கு அந்நியமாகிப்போன சிறுகதை, நெடுங்கதை வார, மாதப் பத்திரிகைகளும், இணையம் இல்லாத  நாட்களில் கேட்ட கிரிக்கெட் வர்ணனைகளும் (திரைப்பட ஒலிச்சித்திரங்களை மறந்து விட்டீர்களே) சுடரொளிப்பட்டயங்களாக பொலிகிறது. இவையெல்லாம் இலக்கிய உதாரணங்களுடன், கம்பன், வள்ளுவன், ஔவை, ஆண்டாள், பாரதி. (நூல் ஆசிரியரின் ஆதர்ஸமல்லவா பாரதி! பாருக்குள்ளே நல்ல நாடு பாடல் பிறந்தகதை, புதுவையில் வீசிய புயல், சும்மா இருப்பவர்கள் மேல் சீறிப்பாயும் பாரதியின் சீற்றம்) வழி தரும் மேலதிகமான தகவல்கள்.

ஜன்னல் வழியே காணக் கிடைக்கும் காட்சிகள் சிறிதாயினும் 'என் தேசம், என் மக்கள்' என்கிற பெருமிதமும் அன்பும் பொங்கிப் பூரிக்கின்ற மாலனின் மன விஸ்தீரணம் மாணப்பெரிது.

சுருக்கமாகச் சொன்னால், பொருள் புதிது… சுவை இனிது. வாங்கி, வாசித்து பத்திரப்படுத்த வேண்டிய புத்தகம்.

நூல் : என் ஜன்னலுக்கு வெளியே
ஆசிரியர் : மாலன்
கிடைக்குமிடம்: கவிதா பதிப்பகம்,
8,
மாசிலாமணி தெரு,
சென்னை – 600 017.
போன்: 044 – 42161657
மின்னஞ்சல் :  kavithapublication@gemail.com
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com