வேதா இல்லம் கோவில்தான்

வேதா இல்லம் கோவில்தான்
Published on

நேர்காணல்

– ஹர்ஷா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்  அவர் வாழ்ந்த இல்லம் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி அதை அவர் நினைவிடமாக  அவசர அவசரமாக கடந்த தேர்தலுக்கு முன்பு  அன்றைய அ.தி.மு.க. அரசு ஒரு அரசாணையை வெளியிட்டிருந்தது. அரசின் இந்த முடிவை எதிர்த்து  முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் வாரிசுகள் சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வெளியாகியிருக்கிறது.

அந்தத் தீர்ப்பில், "அரசால் 'வேதா நிலையம்' கையகப்படுத்தப்பட்டது செல்லாது" என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாரிசுகளில் ஒருவரான  திருமதி தீபாவை தொடர்புண்டு பேசியபோது:-

சட்டப் போராட்டத்தில் வெற்றிபெற்றதில் மகிழ்ச்சிதானே?

"இது நியாயமான தீர்ப்பு. சட்டம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை எதிர்பார்த்துத்தான் காத்திருந்தோம். இந்தத் தீர்ப்பில்,  "தனிநபரின் சொத்துகளை கையகப்படுத்தி, அதை அரசுடைமையாக்கி, நினைவு இல்லமாக மாற்றவோ, அது தொடர்பாக சட்டம் இயற்றவோ அரசுக்கு அதிகாரம் இல்லை" என்று நீதிபதி தெரிவித்திருக்கிறார். 3 வாரத்திற்குள் வீட்டுச் சாவியை  எங்களிடம்  ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதன்படி  அரசு செயல்படும் என்று நம்புகிறோம்."

நீங்கள் அங்கு குடியேறி வசிக்கப்போகிறீர்களா?

"வேதா இல்லத்தின் சாவியைப் பெறுவதோடு எல்லாம் முடிந்துவிடாது. நிறையச் சம்பிரதாயங்கள் இருக்கின்றன. பல விஷயங்களை சரி செய்ய  வேண்டியிருக்கிறது.

முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார் 'வேதா நிலையம்  அதிமுக தொண்டர்களின் கோவில்'  என்கிறாரே?

" 'வேதா இல்லத்தைக் கோயிலாகப் பார்க்கிறோம்' என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொன்னது சரியான கருத்துதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதை நானே சொல்லியிருக்கிறேன். அதற்காக சட்டப்படியான வாரிசு தாரர்களிடம் அந்த பொறுப்பு செல்வதைத் தடுக்கக் கூடாது.  அதைத்தான் நீதிபதியும் 'வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது' என்று  சொல்லியிருக்கிறார்."

மேல் முறையீடு செய்ய அரசிடம் வேண்டுவோம் என்கிறாரே?

"மேல் முறையீடு செய்யபட்டால் அதையும்  சட்டப்படி சந்திப்போம்."

ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை வசூலிக்க துறையினருக்கு நீதி மன்றம்  அனுமதி அளித்திருக்கிறதே?

"அவரது வருமான வரி பாக்கி  குறித்த விபரம் எதுவும்  எங்களுக்குத்தெரியாது."

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com