0,00 INR

No products in the cart.

டிராம் என்னும் ரொமாண்டிக் சமாசாரம்

– ஜெயராமன் ரகுநாதன்             

 

‘ரொமாண்டிக்’ என்றவுடன் ஏதோ காதல் கீதல் என்று தப்பர்த்தம் செய்து கொள்ளாதீர்கள். நினைத்து நினைத்து மனதில் இனிமையை அசைபோட வைப்பது காதல் மட்டும் தானா! பல தினசரி நிகழ்வுகளில் கூட அந்த ரொமாண்டிக் உணர்வுகள் இருக்குமே! அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் இந்த டிராம் வண்டி!

ராட்சச நத்தைகள் மெட்ராசின் தெருக்களில் மெதுவாக ஊர்ந்த காலம் உண்டு! ஆம், மேலே நீண்ட ஒயர்கள் ஓட அடியில் ஆமை வேகத்தில், இல்லை… இல்லை… நத்தை வேகத்தில், சுமார் மணிக்கு ஏழு கிலோமீட்டர் வேகத்தில் ஓடின டிராம்கள்தான் ஒரு காலத்தில் மெட்ராசின் முக்கிய போக்குவரத்தாக இருந்திருக்கிறது. லஸ் முனையிலிருந்து ஜார்ஜ் டவுனுக்கு இரண்டணா கொடுத்தால் போதும்.

அதுவும் காலை வேளைகளில் டிராம் பயணம் வெகு சுவாரஸ்யமானவை.

“என்ன ஓய்… நேத்து ராகவாச்சாரி பிச்சு உதறிட்டாரே! இன்னிக்கு கிரவுன் கிராஸ் கொஸ்ச்சினும்போது விட்னஸை உடைக்க முடியுமா?”

“வக்கீல் சார்! நாலு மாசமா நானும் உங்களப்பாத்துண்டே இருக்கேன். இன்னுமா கேஸ் வாய்தாவுலேயே இருக்கு! ஏதானும் பண்ணப்படாதா?”

“என்ன சண்முகம்! டிஃபன் பாக்ஸ் பெருசா இருக்கே? உங்க வக்கீலுக்கு இன்னிக்கு விருந்தா?”

“அடப்போம்யா! ரெண்டு நாளா கோர்ட் காண்டீன்ல சாப்பிட்டு ஒரே வாயுத்தொந்தரவாம். அதான் வூட்ல வக்கீலம்மா சீரகம் போட்டு வென்னீர் அனுப்பியிருக்கா! இது டிஃபன் பாக்ஸ் இல்லைங்காணும்! தெர்மாஸ், சரியாப்பாரும்!”

டிராமில் அதிகம் பயணம் செய்பவர்கள் ஹைகோர்ட் வக்கீல்களூம் குமாஸ்தாக்களுமாம். அவர்கள் லஸ் ஏறும்போது கேஸ் பத்தி விவாதிக்க ஆரமிச்சு கோர்ட் ஸ்டாப்புல இறங்கும்போது தெளிவோடு இறங்கி கோர்ட்டுக்குப் போவார்களாம்!

டிராம் பயணத்தின்போது ஜன்னலிலிருந்து வெளியே தெரியும் காட்சிகளின் ரம்மியம் பற்றி அந்நாளைய பெருசுகள் சந்தோஷத்துடன் விவாரிப்பார்கள். டிராம் கூவம் வழியாகப் போகும்போது மூக்கைப்பிடித்துக்கொள்ள தேவையில்லை. ஏனென்றால் அப்போதெல்லாம் கூவத்தில் சுத்தமான தண்ணீர் ஓடினதாம். இரு மருங்கிலும் காலை வேளைகளில் மக்கள் குளிப்பதுண்டாம். தண்ணித்துறை காய்கறி வியாபாரிகள் தம் காய்கறிகளை படகில் இழுத்து வருவதும் உண்டு. அபூர்வமாகப்போகும் ஒன்றிரண்டு வாக்ஸால், மாரிஸ் மைனர், ஃபோர்ட் கார்களைத்தவிர பெரும்பாலும் கை ரிக்‌ஷாக்களும் சைக்கிள்களும் குதிரை இழுக்கும் ஜட்கா வண்டிகளுமே போய்க்கொண்டிருந்த மெட்ராஸ் சாலைகளில் இந்த டிராம்கள் கம்பீரமாகத்தான் போயின.

இன்றைய இளைஞர்களுக்கு டிராம் வரப்பிரசாதமாக இருந்திருக்கக்கூடும்! இப்போது போல பஸ்ஸில் ஓடும்போது ஏறி இறங்கி சாகசங்கள் செய்து உள்ளிருக்கும் காலேஜ் பெண்களை ஓரக்கண்ணால் பார்க்க வைக்கும் முயற்சியின் ஆபத்து டிராமில் இல்லை. சாதாரண பயணிகளே டிராம் நிற்பதற்கெல்லாம் காத்துக்கொண்டிராமல் அப்படியே எறி இறங்கி விடுவதுண்டு, அதான் சொன்னேனே, மணிக்கு ஏழு கிலோமீட்டர் வேகம்!

டிராம் டிரைவர் கியர் மாற்றும்போது உச்சஸ்தாயில் சப்தம் கேட்குமாம்.கூடவே டிங் டிங்கென்று கண்டக்டர் டிக்கட்டுக்காக அடிக்கும் மணி சத்தம்!இரண்டு வகை டிராம்கள் இருந்தன – ஐம்பது அடி நீள பெரியவை மற்றும் முப்பத்தைந்து அடி நீள சின்ன டிராம்கள். சுமாராக அறுபது பேர் உட்கார்ந்து பயணிக்கக்கூடிய மர பெஞ்சுகள் உண்டு.

அப்போதே ஓடின டிராம்களில் பல மிகப்பழையனவாம். பிரபல எழுத்தாளர் தேவன் ஒரு கிழட்டு டிராம் வண்டி மெட்ராஸ் கலெக்டருக்கு கடிதம் எழுதுவது போல நாசூக்காக கிண்டல் அடித்திருந்தார். (பார்க்க படம்) அவர் எழுத்தில் வசீகரமாக “சமாப்தி” என்னும் ஹிந்தி வார்த்தை இட்டிருந்தாலும் அந்த மெல்லிய நகைச்சுவைக்காக அந்த வார்த்தை எப்படி பொருந்துகிறது பாருங்கள்!

மெட்ராஸ் எலெக்ட்ரிசிடி கம்பெனியால் நடத்தப்பட்டு வந்த டிராம் சர்வீஸில் எப்போதும் போல ஏதோ சில காரணங்களுக்காக ஸ்டிரைக் ஏற்பட, அன்றைய முதலமைச்சர் ராஜாஜி, இதுதான் காரணம் என்று ஏப்ரல் 1953ஆம் ஆண்டு டிராம் சர்வீஸை ஒரேடியாக நிறுத்திவிட்டார். டிராம்கள் நின்ற பின்னும் அவற்றுக்காக போடப்பட்டிருந்த தண்டவாளங்கள் சென்னைத் தெருக்களில் எடுக்கப்படாமல் பல ஆண்டுகள் அப்படியே இருந்து அக்கால ஆசாமிகளுக்கு இனிய நினைவுகளைக் கிளறிக் கொண்டிருந்தன.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களின் சாரம் நினைவுகளாய் நிறைந்து மனதில் நிற்பவை. அவற்றில் மறக்க நினைக்கும் கசப்பான அனுபவங்களும் மீண்டும் மீண்டும் நினைக்கத் தூண்டும் இனிமையான அனுபவங்களும் குவிந்து கிடக்கும். ஒரு நாட்டின் மற்றும் மக்களின் நாகரீகம் முன்னாளைய அனுபவங்களின் பாடங்களிலும் இனிமையிலும் முதிர்ச்சியிலுமே செம்மைப்படுகிறது.

எல்லார் வாழ்விலும் அவர்களின் மாலை நேரத்தில் அமைதியாக அமர்ந்து இளமைக்கால இனிமையான விஷயங்களில் நினைவைச் செலுத்தி மகிழ்வதும், உடல் மன ஆரோக்கியத்துக்கு அவசியமே!

நீங்களும் வீட்டில் இப்போதே ஒரு ஈஸி சேர் வாங்கிப்போடுங்கள்!

(முற்றும்)

 

ரகுநாதன்
எழுத்தாளர் ஜெ.ரகுநாதன் வெற்றிகரமான சார்ட்டட் அக்கவுண்டண்ட் CA - இந்திய கார்ப்பரேட் உலகில் பல உயர் பதவிகள் வகித்தவர். பல சிறுகதைகளும், கட்டுரைகளும் தமிழ் முன்னணி இதழ்களில் எழுதி இருக்கிறார். தகவல் தொழில்நுட்பம் குறித்து இரண்டு வருடங்கள் கல்கியில் கட்டுரைகளும், 108 திவ்ய தேசங்கள் குறித்தும், பொருளாதாரம் குறித்துப் பல கட்டுரைகளும், சுய முன்னேற்றக் கட்டுரைகளும் பல இதழ்களில் எழுதியுள்ளார். மூன்று மேடை நாடகங்களை ஜெ.ரகுநாதன் எழுதி அவை வெற்றிகரமான முறையில் தியேட்டர் மெரினாவால் பலமுறை அரங்கேற்றப்பட்டு இருக்கின்றன. சமூக நாவல், மாய யதார்த்த வகை நாவல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...

தமிழனுக்கு ஓர் இயல்பான வாழ்வியல் அமைதியைத் தருகிறது…

1
 உலகக் குடிமகன் - 32  நா.கண்ணன்   நான் கொரியா செல்வேன் எனக் கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால், என் ஜப்பானிய ஆய்வை அமெரிக்கர்களும், கனடாக்காரர்களும், ஜெர்மானியரும், ஆங்கிலேயரும் கவனித்தது போல் கொரியர்களும் கவனித்து வருகிறார்கள் என...

சலூன் கிரி மாமா

0
மகேஷ் குமார்   கிரி மாமாவின் நிஜப்பெயர் அதுதானா என்பது எனக்குத் தெரியாது. அவரை முதல் முதலாகப் பார்த்த சலூனின் பெயர் ‘கிரி சலூன்’. அதிலிருந்து அவர் பெயர் கிரி மாமா. நல்ல உயரமும் உடலுமாக,...

குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்   அன்று நள்ளிரவில் அவன் வீடு திரும்பியதும் அவனுக்கு சாப்பாடு போட டேபிளில் தட்டு வைத்தாள். “எனக்கு வேண்டாம்” “ஏன்?” “வெளிய சாப்பிட்டேன்” “ஹோட்டல் உணவு உடம்புக்கு நல்லதில்லை” “நாம தனியா போன பிறகு உன் கையால் சாப்பிடுகிறேன். அதுவரை...

அப்ரைசர் முத்துசாமி

0
மகேஷ் குமார்   திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் மெயின் ரோட்டில் இருக்கும் அந்த வங்கியின் வாசலில் காலை 9 மணிக்கே கூட்டம் நெரியும். அந்த இரண்டு தினங்களில்தான் நகைக்கடன் கொடுக்கப்படும். பெரும்பாலானோரின் கையில் ஒரு...