0,00 INR

No products in the cart.

தேவ மனோகரி – 6

 தொடர்கதை                             

பாரதி

ந்தப் பெண்தான் எவ்வளவு துருதுருவென்று இருக்கிறாள்? முகம் முழுக்க சிரிப்பு. அதேசமயம் கொஞ்சம் சீரியஸான பெண்ணும் கூட. விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம் இருக்கிறது. இனியாவை சில நாட்களாகவே நெருக்கத்தில் கவனித்த மனோகரிக்கு ஒரு புதிய உற்சாகம் தொற்றிக் கொண்டது.

இனியா விவரித்த கிராமத்து சூழ்நிலையும் இறுக்கமான கட்டுப்பாடுகளும் மனோகரிக்கு ஆச்சரியமாக இல்லை.

எல்லாம் தெரிந்த விஷயம்தான். ஆனால் அதிலிருந்து மீள எதிர்நீச்சல் போடும் இந்தப் பெண்ணை நினைத்து பெருமையாக இருந்தது.

“என்னுடைய அப்பா நான் மணிகண்டனை காதலிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார் மேடம். அவசரப்பட்டு கலப்பு கல்யாணத்துக்கு சிக்னல் காட்டிவிட்டார்” என்று சொல்லிவிட்டு கட்டுப்படுத்த முடியாமல் வாய்விட்டு சிரித்தாள் இனியா.

அவளுக்குள் அப்படியொரு எண்ணமே இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. இருந்தாலும் கேட்டு வைத்தாள் மனோகரி.

“இப்போதைக்கு அப்படியொரு எண்ணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் அப்படி நேரிடலாம் இல்லையா?”

“சான்ஸே இல்லை மேடம். மணிகண்டனுக்கு ஊரில் முறைப்பொண்ணு காத்திருக்கா. வேலை கிடைத்த அடுத்த மாசமே கல்யாணம்தான்” சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தாள் இனியா.

“காதலில் சிக்கிக் கொள்ளாத பருவம் மிக அழகானது இனியா. எந்த சுமையும் இல்லாதது. பட்டாம்பூச்சியைப் போல் பறந்து திரியும் பருவம் இதுதான். சலனமற்ற இந்த வாழ்க்கையை ஒவ்வொரு நிமிஷமும் என்ஜாய் பண்ணு…”

“உங்களுடையது லவ் மேரேஜா மேடம்?” துணிந்து கேட்டுவிட்டாள் இனியா.

“அரேன்ஜ்ட் மேரேஜ்தான். இருபத்தி மூன்று வயசில் கல்யாணம். இருபத்தைந்து வயதில் நவீன் பிறந்து விட்டான்”

அன்று இரவு தூக்கம் வராமல் புரண்டாள் மனோகரி. தன் குடும்பத்தாரைப் பற்றி ஒரு சமயம் இனியா கேட்டபோது ‘நாக்பூரில் இருக்காங்க.  ஆனா ஒரு தொடர்பும் இல்லை’ என்று ஒற்றை வரியில் தான் பதில் சொன்னது நினைவுக்கு வந்தது.

எப்படி சொல்ல முடிந்தது தன்னால்? இப்படி வறண்ட குரலில் எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல்! எல்லா காயங்களையும் காலம் ஆற்றிக் கொண்டிருக்கிறதோ?

சில வருடங்களுக்கு முன்புகூட யாராவது தன் குடும்பத்தைப் பற்றிக் கேட்டால் உடனே கண்கள் குளமாகும். வார்த்தைகள் குளறும்.

அவளுக்கு திடீரென்று நவீனின்  ஞாபகம் வந்தது. இவளுடைய தனிமை வாழ்க்கையை கேள்வி கேட்பவன் அவன் ஒருவன்தான். “ஏனம்மா இப்படி? இது என்ன ஒரு வாழ்க்கை?” என்று எப்போதும் கேள்விதான்.

“தன் கையில் தவழ்ந்து தான் வளர்த்த ஒரு பிள்ளை இந்த சின்ன வயதில் எதையெல்லாம் யோசிக்கிறான்” என்று அவளுக்கு ஆச்சரியம்தான்.

மூன்று வருஷங்களுக்கு முன்பு லண்டனிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்தான் நவீன். இரண்டு நாள் நண்பர்களுடன் கோவா போவதாக சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

திரும்பி வந்தவன் தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். இவளிடம் பேசுவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தான்.

வைவா ஏற்பாடு ஒன்றில் பரபரப்பாக இருந்தாள் மனோகரி. அந்த வாரக் கடைசியில்தான் சற்று ஓய்வு கிடைத்தது.

தயங்கித் தயங்கி அவள் முன் பேச உட்கார்ந்தான் நவீன்.

“அம்மா,  நான் ஆக்சுவலா கோவா போகலை. நாக்பூருக்குத்தான் போயிருந்தேன்.”

தலைக்குத் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டிருந்தவளின் கைகள் சட்டென்று இயங்குவதை நிறுத்திக் கொண்டது. திகைப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“பெரிய மாமா வேலை செய்யும் ஆபீசுக்குப் போனேன். அவர் லீவில் இருப்பதாகச் சொல்லி அட்ரஸ் கொடுத்தார்கள். அங்கிருந்து வீட்டுக்குப் போயிருந்தேன்”

அவன் மேற்கொண்டு பேசட்டும் என்று காத்திருந்தாள் மனோகரி.

“என்னைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அவர்கள்”

“இப்ப எப்படி இருக்காங்க?” இயல்பாகக் கேட்க முயற்சி செய்தாள்.

“பெரிய மாமா பரவாயில்லை. வேலையில் புரமோஷன் கிடைத்து முக்கியமான பொறுப்பில் இருக்கிறார். ஆனால் கோபால் மாமாதான் முழுசாக மீளாதது மாதிரி தெரிகிறார். முகத்தில் சிரிப்பே இல்லை. ஆனா என்னைப் புரிந்துக்கொண்டு பரபரப்பாக மேலும் கீழும் பார்த்தார்.”

“நீ எதுக்காக  அங்கே போனே நவீன்?”

“சும்மாதான் போனேன். நமக்கு சொந்தக்காரங்கன்னு இருக்கிறது அவங்கதான். நான் பிறந்ததிலிருந்தே அவங்க யாரையும் பார்த்ததில்லை. பார்க்கலாம்னு தோணுச்சு போனேன்.”

மனோகரியின் முகத்தில் இறுக்கம் தளரவில்லை. தன்னிடம் சொல்லாமல் பிள்ளை இப்படியொரு காரியத்தை செய்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

“மாமிதான் அந்த வீட்டுல கலகலப்பா பேசறாங்க. உங்கள ரொம்ப விசாரிச்சாங்க”

இதற்கு மேல் அவன் பேசுவதற்கோ, தான் தெரிந்து கொள்வதற்கோ ஒன்றுமில்லை என்பது போல் எண்ணெய் பாட்டிலை எடுத்துக்கொண்டு தன் அறைக்குப் போனாள் மனோகரி.

மறுநாள் காலையில் மறுபடியும் பேச்சை ஆரம்பித்தான் நவீன்.

“என்மேல கோபமா அம்மா?”

“கோபமில்லை நவீன், வருத்தம். நீ ரொம்ப மாடர்ன்னு நினைச்சேன். ஆனால் மரபுரீதியான சிந்தனைதான் உனக்கும் இருக்கு.”

“எப்படி சொல்றீங்க?”

“அம்மாவை விட்டுட்டு ரொம்ப தொலைவில் இருக்கணும்னு  நீ தெளிவா தீர்மானம் செஞ்சிருக்கே. இங்கே அம்மாவுக்குப் பாதுகாப்பா மனுஷங்க வேணுமேன்னு கவலைப்படறே. சரிதானே?”

நவீன் மௌனமாக இருந்தான்.

“ஆக, பெண்கள் தனியா இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. புருஷன்,  பிள்ளை அதுவும் இல்லாவிட்டால் மறுபடியும் பிறந்த வீட்டுக்கே பேக் செய்யணும்! அவ்வளவுதானே? அப்படித்தானே நீ யோசிச்சிருக்கே?”

அம்மாவின் கேள்வி இப்படி ஒரு கோணத்தில் தன்னை தாக்கும் என்று நவீன் எதிர்பார்க்கவில்லை.

“என்னை என் பிறந்த வீட்டோடு சேர்த்து வைக்க நீ எந்த முயற்சியும் செய்ய வேண்டாம் நவீன். ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் மை ஃபீலிங்க்ஸ்”

விருட்டென்று கிளம்பி காரில் ஏறினாள் மனோகரி.

***    ***   ***    ***

முந்தைய இரவு பழைய நினைவுகள் புரட்டிப் போட்டதில் நான்கு மணி நேரம்தான் தூங்கியிருந்தாள் மனோகரி. உடம்பு அசதியாக இருந்தது. ‘கல்லூரிக்குக் கிளம்பியாக வேண்டும்’ என்ற உணர்வு உந்தித் தள்ள மெல்ல எழுந்தாள்.

கிளம்பியபோது மழை மெல்லத் தூறிக் கொண்டிருந்தது. பன்னீர் தெளிப்பது போல் சற்று நேரத்திற்கெல்லாம் நின்று போனது.

காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தாள் மனோகரி. கல்லூரியின் இளம் சிவப்பு நிற கட்டிடத்தின் பக்கவாட்டுச் சுவற்றில் அரசமரம் ஒன்று முளைத்து கிளைவிட்டிருந்தது.

நடைபாதை ஓரம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார் தோட்டக்காரர். இவளைப் பார்த்ததும் வணக்கம் சொன்னார்.

“பெரியவரே, அங்கே பாருங்க, கட்டடத்துல மரம் வளர்ந்திருக்கு. அதை முளையிலேயே வெட்டிப் போட வேணாமா?”

அப்போதுதான் முதல் முதலாக பார்ப்பதுபோல் கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தார் தோட்டக்காரர்.

“ரெண்டாவது மாடியில இருக்குதுமா. மேலேந்து கயிறு கட்டி இறங்கி வெட்டணும். என் ஒருத்தனால முடியாது. வெளியிலேருந்து ரெண்டு ஆளுங்கள கூட்டியாரணும். ஐநூறு, ஆயிரம்னு கேட்பாங்க. நீங்க பிரின்ஸிபால் ஐயா கிட்ட ஒரு வார்த்தை சொல்லுங்க.”

“சொல்றேன். ரெண்டு நாள்ல வேலைய முடிச்சிடுங்க.”

போர்டிகோவைக் கடந்து படிகளில் ஏறினாள் மனோகரி.

கல்லூரி நிர்வாகம்,  பிரின்ஸிபால், துறைத்தலைவர்கள் என்று அதிகாரம் சார்ந்த எந்த இடத்திலும் தான் இல்லை என்பது மனோகரிக்கு நன்றாகவே தெரியும். மற்றவர்களுக்கும் தெரியும். அதனால் என்ன? ஒரு நிறுவனத்தின் மீது அக்கறை இருப்பதுதான் முக்கியம்.

துறைக்குப் போவதற்கு முன்பு பிரின்ஸிபாலைப் பார்த்து தோட்டக்காரரின் கோரிக்கையை சொல்லிவிட்டுத்தான் போனாள் மனோகரி.

அவள் வகுப்புக்குப் போனபோது அன்றைக்கு சுந்தர் வந்திருக்கவில்லை. மறுநாளும், அதற்கு அடுத்தநாளும் கூட அவன் வரவில்லை என்பது அசாதாரணமாகத் தோன்றியது.

கிருஷ்ணமூர்த்தியைக் கூப்பிட்டு விசாரிக்கச் சொன்னாள்.

“அவங்க அப்பாகிட்ட பேசினேன் மேடம். அவன் காலேஜுக்கு வரவே விருப்பப்படலயாம். எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டேங்கிறானாம்”

மனோகரிக்கு மனசு சங்கடத்தில் ஆழ்ந்தது. ‘நோ, இதை இப்படியே விடக்கூடாது’.

அன்று மாலை இனியாவையும்,  கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுந்தரின் வீட்டுக்குப் புறப்பட்டாள் மனோகரி. அவள் அஞ்சியது போல்தான் விஷயம் இருந்தது.

சாதாரணமாக இவளைப் பார்த்தவுடன் கண்களில் ஒரு பிரகாசத்துடன் பேசும் சுந்தர் இப்போது பேச்சிழந்து போயிருந்தான். மனோகரிக்கு அவன் மனநிலைமை நன்றாகவே புரிந்தது.

அவன் அம்மா வேறு வளவளவென்று நடந்ததையே பேசிக் கொண்டிருந்தாள்.

காரில் ஏறும் முன்பு சுந்தரின் அப்பாவை தனியாக அழைத்தாள் மனோகரி.

“நடந்த விஷயம் அவன் மனசை பாதித்துவிட்டது என்று நினைக்கிறேன். என் சிநேகிதர் ஒருவர் உளவியல் நிபுணர். அவரால் கவுன்சிலிங் செய்து சுந்தரைப் பழையபடி ஆக்க முடியும். நீங்கள் பொறுமையாக அவனை அழைத்துக்கொண்டு போக வேண்டும்.”

“கண்டிப்பாக அழைச்சுக்கிட்டு போறேம்மா. நீங்க இவ்வளவு அக்கறை எடுத்துக்கிறீங்க. நாங்க அதிகம் படிச்சவங்க இல்ல. எங்களுக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. எப்படியாவது அவன் சரியானா போதும்.”

ஒரு மெல்லிய பெருமூச்சுடன் காரை ஸ்டார்ட் செய்தாள் மனோகரி.

“நீங்க முயற்சி செய்தா சுந்தருக்கு சரியாயிடும்னு தோணுது மேடம்” என்றாள் இனியா.

“இது வெறும் முயற்சிதான். அவனுடைய பேரண்ட்ஸ் இதைப் புரிஞ்சுக்கிட்டு ஒத்துழைச்சாதான் சரியாகும். லாங் வே டு கோ.”

வீட்டுக்கு வந்த பிறகு வெகு நேரம் சுந்தரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள் மனோகரி.

இன்றைக்குக் காலம் எவ்வளவோ மாறியிருக்கிறது. மனநலம் பற்றி சுமாராகவாவது சிலபேருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அன்றைக்கு தம்பி கோபாலின் மனதில் சின்ன விரிசல் ஏற்பட்ட போது  குடும்பத்தில் யாருக்குமே என்ன செய்வது என்று தெரிந்திருக்கவில்லை.

ஒரு பெருமூச்சுடன் நினைவை திசை திருப்ப முயன்றாள் மனோகரி.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

“அட! பேராண்டி! அவரோட மாப்பிள்ளையா நீ?

0
  ஒரு நிருபரின் டைரி - 20 - எஸ். சந்திரமெளலி   ஏ. நடராஜன்   என்னும்  அனுபவப் பொக்கிஷம்  திருச்சி வானொலி நிலையத்தில் திரு. ஏ. நடராஜன் (நண்பர்கள் வட்டாரத்தில் ஏ.என். சார் அல்லது தூர்தர்ஷன்  நடராஜன்)  பணிபுரிந்துகொண்டிருந்த...

தேவ மனோகரி – 20

0
தொடர்கதை                                               ...

அம்மாக்களின் எதிர்பார்ப்புகளைக் காப்பாற்ற வேண்டாமா?

0
  ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 20 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா கம்ப்யூட்டர்   படப்பிடிப்பிற்கு நடுவில் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது இயக்குநர் சத்யன்அந்திக்காடின் இரட்டைக் குழந்தைகளுக்கும் கம்ப்யூட்டரில் ஆர்வம் இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொண்டேன். சத்யன் இதுவரை அவர்களுக்கு...