0,00 INR

No products in the cart.

அவளுடைய அழுகைச்சத்தம் நீதிமன்றத்தின் ஒவ்வொரு இதயத்திலும் மோதித் திரும்பியது.

ஒரு கலைஞனின் வாழ்க்கையில் – 6

மம்முட்டி

தமிழில் கே.வி.ஷைலஜா

 

மூன்றாம் பிறை

க்கீலாகப் பணி ஆரம்பித்த நாட்கள். ஆரம்பம் என்ற பொருளை உள்ளடக்கி அது பெரிதாக நீண்டு நிலைக்கவில்லை. நீதிமன்றம், வழக்கு என்று கேட்கும் போதே ஒரு மாதிரி பிரமிப்பாக இருக்கும். முதல் முறை நீதிமன்றத்தில் வாதிட்டபோது எனக்குக் கால்கள் இரண்டும் நடுங்கி வேர்த்துக் கொட்டியது. அப்போதெல்லாம் ஒவ்வொரு நீதிமன்றமாய் போய் நடக்கும் வழக்குகளைப் பார்த்து, வாதிடக் கற்றுக் கொள்வோம்.

மஞ்ஞேரி நீதிமன்றத்தில் அந்த வழக்கில் அல்லது வழக்காடுதலில் இருக்கும் ஆர்வத்தின் காரணமாகத்தான் அதை  நான் ஏற்றிருந்தேன். அறுபது வயதான மிகவும் ஐஸ்வர்யமும் சாந்தமுமான மனைவிக்கும், விவசாயியைப் போல எளிமையான தோற்றமும், உடையுமணிந்த கணவருக்கும் இடையிலான வழக்கு. எல்லாக் கட்சிக்காரர்களைப் போல அவர்களும் காலையிலேயே நீதிமன்ற வளாகத்தில் உள்ள வராந்தாவில் காத்திருப்பார்கள். பெரும்பாலான நாட்களில் மாலை வரை அங்கேயே இருப்பார்கள். திருமண பந்தத்தை முடித்துக்கொள்ள நினைத்து கணவனிடமிருந்து ஜீவனாம்சம் வேண்டி மனைவி வழக்கு தொடுத்திருக்கிறார். மஞ்ஞேரி நீதிமன்றத்தில் மட்டுமல்ல; பெரும்பான்மையான நீதிமன்றங்களில் இதுதான் நிலைமை. பல வழக்குகள் உண்மையானவை. பல வழக்குகள் சொந்தபந்தங்களின் கௌரவப் பிரச்னைகளுக்காக  தொடரப்பட்டவைகள். இதில் கணவருக்கோ மனைவிக்கோ இடமில்லை.

மெல்ல மெல்ல நான் இவர்களைக் கவனிக்கத் தொடங்கினேன். அம்மா தன் சகோதரனின் காரில் வந்து இறங்குவாள். சகோதரர்களுக்காகத் தான் இந்த கேஸ் நடத்துகிறாள் என்பது பார்த்தாலே தெரியும். கணவரோ யாருடைய துணையுமில்லாமல் தனியாக பஸ்ஸில் வந்து இறங்குவார்.

ஜூனியர்களான நாங்கள் நீதிமன்றத்திற்குள் காரசாரமாய் எதிரெதிரே விவாதித்தாலும் வெளியில் ஒரு சிகரெட்டைப் பலர் இழுத்தும், ஒரு டீயைப் பலர் பகிர்ந்தும் குடிக்கும்  நண்பர்களாக இருந்தோம். ஆனால் கட்சிக்காரர்கள் உடன் இருந்தால் இப்படி நடந்து கொள்வதில்லை. வழக்கின் வெற்றிக்கும் அதற்குத் தேவையான சாட்சியங்களை நீதிமன்றத்திற்கு முன்னால் நிலைநாட்டவும் நாங்கள் படாதபாடுபட்டு எதிரெதிரே வாதாட வேண்டியிருக்கும்.

இந்த வயதானவரின் வழக்கின் நிலையும் இப்படித்தான் இருந்தது. அவரிடம் கடுமையான கேள்விகள் கேட்கும்போது மிகவும் மெதுவான குரலில், தன்மையான மொழியில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். கணவர் பதில் சொல்லும்போது அந்த மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தேன். கணவனிடம் இன்னும் மங்காத ப்ரியமும், மரியாதையும் அந்த முகத்திலிருந்தது. ஒவ்வொரு கேள்வியும்  பதிலும் இதயத்தாலும் கவனிக்கப்படுகிறதென்பதை நான் உணர்ந்திருந்தேன்.

விசாரணைக்குப் பிறகு கூண்டிலிருந்து இறங்கும்போது அவர் மனைவியை ஒரு முறை ஆழ்ந்துப் பார்ப்பார். அவருடைய முகத்தில் துடித்துத் தெரித்துவிழத் தயாராக இருந்த உணர்வுக் கலவைகளை நாம் தரிசிக்க முடியும்.

மனைவியிடம் விசாரணை நடக்கும்போது அவர் எதிர் கூண்டினருகில் நின்றபடியிருப்பார்.  அன்றைக்கும் அப்படித்தான் நின்றிருந்தார். நீதிமன்றத்தின் கேள்விகள் பல நேரங்களில் வயோதிகத்தையும், பெண் என்பதையும் மறந்து போனதாகத்தானிருக்கும். பள்ளி வராந்தாவைக்கூட வேடிக்கைப் பார்த்திராத அந்த முதியவள் எதிர் விசாரணை தொடங்கிய சற்று நேரத்திற்கெல்லாம் வக்கீல் கற்றுக் கொடுத்திருந்த எல்லாவற்றையும் மறந்து போயிருந்தாள்.

பதப்படுத்தாத மொழியில் வெகுளித்தனமாக, களங்கமில்லாத வார்த்தைகளைக் கோர்த்து அவள் பேசிக் கொண்டேயிருந்தாள். பொய் சொல்லும்போது ஏற்படும் இடறல் அவளது வார்த்தைகளில் அப்பட்டமாகத் தெரிகிறது. கணவரின் குரூரத்தையும், அன்பில்லாமையையும், கணவரால் வீணடிக்கப்பட்ட தன் வாழ்க்கையையும் பற்றி வக்கீல் அவளிடம் கேட்டபோது அதைக் கேட்டுக் கொண்டிருந்த முதியவரின் கண்கள் நிறைந்திருந்தன. அதை மறைப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டவராய் அவர் நான்கு திசைகளிலும் கண்களை ஓடவிட்டார். பிடிமானத்திற்காக வேண்டி கூண்டின் மரச்சட்டங்களில் கை ஊன்றி ஒட்டி நின்றபடி மனைவியை ஒருமுறை  பார்த்தார். பார்வை உரசியபோது மனதிலிருப்பதைச் சொல்லமுடியாமல் அந்த முதியவள் உடைந்தழுதாள்.

அவளுடைய அழுகைச்சத்தம் நீதிமன்றத்தின் ஒவ்வொரு இதயத்திலும் மோதித் திரும்பியது. எண்ணி எண்ணி சொல்லும் வார்த்தைகளுக்கிடையில் ’என்னால முடியல தெய்வமே’ என்று சொல்லிக்கொண்டே கூண்டில் தளர்ந்தபடி விழுந்தாள். நீதிமன்றம் அப்படியே அமைதியில் உறைந்து போனது. சட்டென முதியவர் கூண்டிலிருந்து இறங்கி ஓடிவந்து மனைவியைத் தாங்கிப் பிடித்து எழுப்பினார். தோளிலிருந்த துண்டால்  முகத்தை அழுந்தத் துடைத்து நெஞ்சோடு சேர்த்து எழுப்பி நிற்கவைத்து மெல்ல நடக்க வைத்தார்.

நீதிமன்றத்தையோ, வக்கீலையோ, தீர்ப்பையோ, அவளின் சகோதரர்களையோ யாரையுமே மதிக்கவோ உதாசீனமோ செய்யாமல் ஒரு குழந்தையைத் தோள்மேல் போட்டுக் கொள்வது மாதிரி தோளோடு சேர்த்துப் பிடித்தபடி வக்கீல்களுக்கு நடுவில் வழி ஏற்படுத்தி வெளியேறினார். படி இறங்குவதற்கு முன்னால் எங்களைப் பார்த்த அவரின் பார்வையில் பகைமையில்லை.

நீதிமன்றங்களால் அளவிட முடியாத, சாட்சியம் சொல்ல முடியாத, வாதிடமுடியாத ப்ரியம் அவர்களிடமிருந்தது. 22 வருடங்களுக்கு முன்பாக வீட்டிலிருந்து இறக்கி விடப்பட்ட அந்த மனிதன், அதன்பிறகு முதல் முறையாக தன் மனைவியைத் தொடுகிறார். அவளோடு பேசுகிறார். வீட்டு ஆட்களின் குடும்பப் பகையினால் அவர்களிருவரும் வார்த்தைகளிழந்த வெற்றுப் பார்வையால் இதயத்தில் மங்கிப் போகாத அன்பைத் தேக்கிவைத்து, கொடுங்காற்றிற் கிடையிலும் அணையாத நெய் விளக்கினை ஏந்தி நடப்பது போல வாழ்ந்திருக்கிறார்கள்.

நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது.

அம்மாவையோ, அப்பாவையோ, பிள்ளைகளையோ வார்த்தைகளால் காயப்படுத்தி புறந்தள்ளினாலும் சட்டத்தால் பந்தங்களை வேரறுக்க முடியாது. ஆனால் கணவன் மனைவி உறவைச் சட்டம் ரத்து செய்து தனித்தனியாக்கிவிடும். அம்மாவும் அப்பாவும் பிள்ளைகளும் உருவாவதும், எல்லா பந்தங்களின் ஆதிவேரும் இந்த உறவின், முகிழ்தலில் தானே பிறக்கிறது. அன்பையும் உணர்வுகளையும் கொண்டு மட்டுமே இணைக்கப்பட்ட இந்த பந்தத்தை அவர்களோடு எந்த பிணைப்புமற்ற நீதி மன்றத்தால் தகர்த்தெறிய முடியாது என்று அன்று எனக்குப்புரிந்தது.

என் மனைவியிடம் ஒரு வார்த்தைக் கோபமாகப் பேசும் போதுகூட அந்த முதியவரின் கண்ணீர் நிறைந்த கண்கள் நினைவிற்கு வரும். சிறு இடறலில்கூட அணைந்து போகும்  உறவின் தீபங்களை எத்தனையோமுறை நீதிமன்றத்தின் வழக்கிலும், வாழ்க்கையிலும் நான் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்குத் திருமணமாகியிருக்க வில்லை. திருமணத்திற்குப் பின் மனைவியை, இந்தப் பெரியவரைப் போல நேசிக்க வேண்டுமென்று நான் முடிவு செய்திருந்தேன்.

கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொள்ளும் அளவு அன்பு இருக்கிறதென்ற நினைப்பில் இறுமாந்திருந்த  நான் அன்று கடலை தரிசித்தேன். ப்ரியத்தில் நின்றிருந்த கடல். ஞாபகங்களின் கரை ஓரத்தில் நிற்பதே மனதை ஈரமாக்குகிறது. நாமும் அவர்களைப் போல ப்ரியம் மீதூர வாழ்வோம்.

(தொடரும்)

1 COMMENT

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

“அட! பேராண்டி! அவரோட மாப்பிள்ளையா நீ?

0
  ஒரு நிருபரின் டைரி - 20 - எஸ். சந்திரமெளலி   ஏ. நடராஜன்   என்னும்  அனுபவப் பொக்கிஷம்  திருச்சி வானொலி நிலையத்தில் திரு. ஏ. நடராஜன் (நண்பர்கள் வட்டாரத்தில் ஏ.என். சார் அல்லது தூர்தர்ஷன்  நடராஜன்)  பணிபுரிந்துகொண்டிருந்த...

தேவ மனோகரி – 20

0
தொடர்கதை                                               ...

அம்மாக்களின் எதிர்பார்ப்புகளைக் காப்பாற்ற வேண்டாமா?

0
  ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 20 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா கம்ப்யூட்டர்   படப்பிடிப்பிற்கு நடுவில் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது இயக்குநர் சத்யன்அந்திக்காடின் இரட்டைக் குழந்தைகளுக்கும் கம்ப்யூட்டரில் ஆர்வம் இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொண்டேன். சத்யன் இதுவரை அவர்களுக்கு...