0,00 INR

No products in the cart.

பந்தப்பட்ட ஆன்மா., விடுதலைப் பெற்ற ஆன்மா

உத்தவ கீதை – 6

டி.வி. ராதாகிருஷ்ணன்

த்தவர்… கிருஷ்ணனைக் கேட்டார்-

இன்பம், துன்பம் என்று அனுபவிக்கும் ஜீவன் (ஆன்மா) எப்படி உடலுடன் பந்தப்படுகிறது?

அந்த ஜீவன் முதலில் உடலுடன் பந்தப்படவில்லையென்றால், பின் எப்படி பந்தப்பட்டது?

பந்தத்திலிருந்து விடுபட்ட ஜீவன் (ஆன்மா) உலகில் எப்படி வாழ்கிறது? எப்படி இன்பம் அனுபவிக்கிறது?

அப்படிப்பட்ட ஜீவனை (யோகியை) அடையாளம் காணுவது எப்படி?

எதை, எப்படிச் சாப்பிட்டு வாழ்கிறார்கள்? உலகில் எப்படி சஞ்சரிக்கிறார்கள்?

எல்லாவற்றையும் உணர்ந்த முழுமுதற் கடவுளே! எனக்கு உபதேசம் செய்யுங்கள்.

ஆன்மா, எப்பொழுதும் உலகம், உடல் ஆகியவற்றுடன் பந்தப்பட்டதா? அல்லது விடுதலை பெற்றதா?

கிருஷ்ணன் சொல்ல ஆரம்பித்தான்…

முக்குணங்களான, சத்துவ, ரஜோ, தமோகுணங்கள் இந்தப் பிரபஞ்சத்தைச் சார்ந்தவை. இவை அறியாமையால், உலக மாயையால் ஏற்பட்டவை. ஆகையால் ஆன்மாவிற்கும் இந்த முக்குணங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.

உண்மையில் ஆன்மாவிற்குப் பந்தமும் கிடையாது. விடுதலையும் கிடையாது. துன்பம், காமம், இன்பம் ஆகியவை உடல் எடுப்பதால் ஏற்படுபவை.

மனிதனின் அறியாமையால்தான் பந்தமும். அதனால் துன்பமும், ஞானத்தால் விடுதலையும், துன்பங்களிலிருந்து விடுபடுதலும் ஏற்படுகின்றன.

அவையாவும் என்னால் ஏற்படுத்தப்பட்ட மாயையால் உண்டாக்கப்பட்டவை.

உண்மையில் மனித ஆத்மா, என்னுடைய பிரதிபலிப்பு. என்னில் ஓர் அங்கம்.

எப்படிப் பாத்திரத்திலுள்ள நீரில் சூரியனின் பிம்பம் தெரிகிறதோ, அதுபோல எல்லா உயிர்களிலும்  “நான்” கலந்து நிற்கிறேன்.

உண்மையில் ஜீவனும் (உடலிலுள்ள உயிரும்) பிரம்மமும் (உலகெங்கும் கலந்து நிற்கும் பரம்பொருளும்) ஒன்றுதான்.

இதை ஞானத்தால் உணர முடியும்.

இனி பந்தத்துக்கும், முக்திக்கும் உள்ள வித்தியாசத்தை ஒரு உதாரணத்தால் விளக்குகிறேன்.

ஒன்றுபோல காணப்படும் இரண்டு பறவைகள் ஒரு மரத்தில் கூடு கட்டி நண்பர்களாய் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு பறவை, மரத்திலுள்ள பழங்களை உண்டது. மற்றது அந்த மரத்தின் கனிகளை உண்ணவில்லை.

கனிகளை உண்ணாத பறவை ஞானம் பெற்றது. கனிகளை உண்ட பறவை அதற்குரிய பலனாகிய இன்பம், துன்பம் இரண்டையும் அனுபவித்தது. அறியாமையால் கனிகளை உண்ட பறவை, நம் உடலிலுள்ள ஜீவன் (ஆன்மா) பந்தத்தால் ஏற்பட்ட பலன்களை ஏற்க வேண்டியதாயிற்று.

உலகில் பற்று வைக்காமல், மரத்தின் கனிகளை உண்ணாத பறவை, ஞானம் பெற்றது. பந்தமும் இல்லை. பாசமும் இல்லை. துன்பமும் இல்லை.

இந்திரியங்கள் பொருள்களை முக்குணத்தால் உணர்ந்தாலும், ஞானமுள்ளவன் அந்த இந்திரிய சுகங்களுடன் தன்னை இணைத்துக் கொள்ள மாட்டான். நடந்தாலும், உட்கார்ந்தாலும், உணவு உண்பது போன்ற எந்தச் செய்கை செய்தாலும், அந்தச் செய்கையில் பந்தப் படாமல் தனித்திருந்து உலகைக் கவனித்திருப்பான்.

இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், காற்று, சூரியன், ஆகாயம் போல எதிலும் கட்டுப்படாமல் இருப்பான். அவனது உயிர் (ஆன்மா) உடலில் இருந்தாலும், மனம், இந்திரியங்கள் ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுபட்டுக் காணப்படுவான். ஞானியானவன், இன்பம், துன்பம், நல்லவை, தீயவை யாவற்றையும் சமமாகப் பார்த்து, யாரையும் குறைகூறாமல் உலகில்  வாழ்வான். ஞானியானவன், நன்மை, தீமை யாவையும் நீக்கி, எங்கும் ஓரிடத்தில் நிலைத்து நிற்காமல், உலகில் சஞ்சரிக்க வேண்டும்.

ஞானியானவன், அர்த்தமற்ற பேச்சுக்களையும்,இறைவனின் மகிமைகளைப் பேசாத சொற்களையும் கேட்கக் கூடாது.

பகுத்தறிவால் உலக மாயைகளை நீக்கி,செயலற்று, சுத்த மனத்துடன் என்னைத்  தியானம் செய்ய வேண்டும்.

அப்படி, மனத்தை ஒருமுகப்படுத்தி “யோகம்” செய்ய முடியவில்லையெனில், பலனில் பற்றின்றி, செயல்களை எனக்கர்ப்பளித்துச் செயல்பட வேண்டும்.

உத்தவரே! என்னை ஆராதித்து, என் புகழ் பாடி , என்னை அடைய வேண்டும். என்மீது பக்தி செலுத்துபவர்கள் என்னை அடைவார்கள்.

என்னை நினைத்து, என்னைப் பற்றிச் சொல்லப்படுகிற கதைகளைக் கேட்டு என்னைச் சரணடைகிறவர்கள்… என்னையடைகிறார்கள்.

(தொடரும்)

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

குருடர்களின் யானை

0
ஒரு நிருபரின் டைரி - 21 - எஸ். சந்திரமெளலி லயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம், “லுக் அவுட்” என்ற லயோலா கல்லூரியின் மாணவர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் நானும் இருந்தேன். நாங்கள் அதன் தமிழ்ப்...

தேவ மனோகரி – 21

1
தொடர்கதை                                               ...

இது கடவுளின் ருசியுள்ள நாடு

0
ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 21 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா   கொச்சியிலிருந்து அதிரப்பள்ளிக்குப் போகும் வழியில்தான் அந்த டீக்கடை இருக்கிறது. பதினெட்டு வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகுமாரன் தம்பியின் ‘விளிச்சு விளி கேட்டு’ (அழைத்தாய் கேட்டேன்) என்ற...