0,00 INR

No products in the cart.

ஜன்னலோரம்

சிறுகதை                                                                 ஓவியம் : தமிழ்

– சுபாஷிணி ரமணன்

முகத்தில் இளம் வெயில் அடிக்க, மெதுவாகக் கண்களைத் திறந்தாள் மாலா.

எனக்குத் தவறாமல் குட்மார்னிங் சொல்பவன் நீதான்… மனசுக்குள் நினைத்ததும், மெதுவாகச் சிரித்துக்கொண்டாள்.

மெதுவாக எழுந்தமர்ந்து தலையணையைச் சாய்த்த மாதிரி வைத்துக்கொண்டு ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.

குட்டி அணில் ஒன்று…. கொய்யா மரத்தில் உட்கார்ந்திருந்தது. கொய்யாப்பழம் ஒன்றை முன் கால்களால் பற்றியபடி கொறித்துக் கொண்டிருந்தது. மாலா ஜன்னலைத் திறந்ததும், “நீதானா?” என்கிற மாதிரி அலட்சியமாய் ஒரு பார்வையை அவள் மேல் வீசிவிட்டு மறுபடி பழத்தைத் திங்க ஆரம்பித்தது.

முன்பெல்லாம் ஜன்னல் கதவைத் திறந்ததும் ‘குடுகுடு’வென குட்டிக் கால்களால் மரத்தைப் பற்றியபடி ஓடிவிடும்.

“இப்பல்லாம் என்னைப் பாத்து உனக்குப் பயமே இல்லாம போயிடுச்சு, இல்லையா சின்டுக் குட்டி?” என்று கேட்டவாறு, அருகிலிருந்த பாட்டிலிலிருந்து இரண்டு பாதாம் பருப்புகளை ஜன்னல் ஓரத்தில் வைத்தாள். “ஆமாம்” என ஒத்துக்கொள்வதுபோல் மெதுவாய் வந்து, பருப்புகளைக் கொறிக்க ஆரம்பித்தது. அது கொறிக்கும் அழகையும், அதன் குட்டிக் கால்களையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.

பணிப்பெண் காலை உணவை எடுத்துக்கொண்டு, கதவைத் திறந்து உள்ளே வந்தாள். சத்தம் கேட்டதும் சின்டு ஓடி விட்டது.

“உனக்குக் காலை உணவு முடிஞ்சிட்டது. நானும் சாப்பிட்டுடறேன். பை சின்டு” சிரித்தவாறு சாப்பிட ஆரம்பித்தாள்.

பட்டாம்பூச்சிகளுக்குக் கையும், காலும் முளைத்து நடந்து சென்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் தோன்றியது, பள்ளிக்குப் புறப்பட்டு பள்ளிப் பேருந்தில் ஏறுவதற்காக தெருக்கோடிக்குச் சென்று கொண்டிருந்த குட்டிக் குழந்தைகளைப் பார்த்தபோது. எதைப் பார்க்க மறந்தாலும், அவள் இதைப் பார்க்க மட்டும் தவறுவதே இல்லை.

ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்டும், ஏதோ பேசிக்கொண்டும் அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். தாய்மார்கள் ‘பேருந்து வந்துவிடப் போகிறதே’ என்ற பரபரப்பில், சற்றுக் கைகளைப் பற்றி இழுத்தவாறே வேகமாக நடந்தார்கள்.

பாவம், அவர்களுக்குத் தங்களைப் பற்றி நினைவுகூட இருப்பதாகத் தெரியவில்லை. வாராத தலை, நீண்ட நைட்டியின் மேல் ஒரு துண்டோ அல்லது துப்பட்டாவோ அணிந்திருந்தார்கள்.

ஆண்கள் அரை நிக்கரோ,  லுங்கியோ அணிந்திருந்தார்கள்.

பத்து, பதினைந்து குழந்தைகள் இருக்கலாம்.

அவள் பார்வை அவர்கள் பேருந்து ஏறும்வரை தொடர்ந்தது.

வீதியின் வெறுமையை அவள் உணர்வதற்குள் அடுத்த ஊர்வலம் தொடங்கியது.

அவர்கள் குடியிருப்புப் பகுதி சிறு கிராமம் போலவே இருக்கும். ஆடு, மாடுகளை வளர்ப்பவர்கள் காலையில் மேய்ச்சலுக்காய் அவைகளை ஓட்டிச் செல்வது வழக்கம்.

அப்படிப் போகும்போது வீட்டு வாசலில் சில பேர் மீதமான காய்கறிக் கழிவுகள், பழங்களின் தோல்கள், கழுநீர் முதலானவற்றைப் பாத்திரத்தில் கொட்டி வைத்திருப்பார்கள்.

அவை தின்பதற்கு நேரம் கொடுப்பதற்காக மாட்டுக்காரர் முதலில் மாடுகளை ஓட்டிவிட்டு, நிதானமாகக் கொஞ்சம் பொறுத்துப் பின்னால் வருவார். பழகிய வழி என்பதால் மாடுகளும் சரியாக யார் வீட்டில் வைப்பார்கள் என்று தெரிந்துகொண்டு அங்கே போய் நிற்கும்.

மாடுகளின் ஊர்வலம் முடிந்தபின்பு, வீதி கொஞ்ச நேரம் வெறிச்சோடிக் கிடக்கும். நடுநடுவே வேஸ்ட் பேப்பர் வாங்குபவரின் குரல், காய்கறி, பழம் விற்பவர்களின் குரல் கேட்கும்.

“வள், வள்” “வள், வள்” விடாமல் நாய் குரைக்க ஆரம்பித்தது.

“ஓ, மணி பத்து ஆச்சா” தனக்குள் முணுமுணுத்தாள் மாலா.

சரியாகத் தினமும் காலை பத்து மணிக்குப் பக்கத்து வீட்டுப் பெண் தன்னுடைய நாயுடன் மொட்டை மாடிக்கு வருவாள். யோகா செய்து முடிக்கும் வரை அந்த நாயும் அவள் கூடவே இருக்கும்.

அவ்வப்போது தன்னுடைய முன்னங்கால்களை மொட்டை மாடி சுவற்றில் வைத்துக் கொண்டு, மாலாவைப் பார்த்துக் குரைக்கும்.

“ஆமாம், உங்கள் வீட்டில் திருடத்தான் நான் வரப் போகிறேன், போயேன்” என மனத்துக்குள் நினைப்பாள் மாலா.

தூரம் அதிகம் என்பதால் பயமில்லாத போதும், அதன் நீண்ட கால்களையும், அதன் கூர்மையான நகங்களையும் பார்த்துப் பயத்தால் மாலாவுக்கு உடல் சிலிர்க்கும்.

நாளடைவில் அந்தப் பெண் உடற்பயிற்சியை முடிக்கும் வரையில் ஒருவரை ஒருவர் வேடிக்கைப் பார்ப்பது பழக்கமாகி விட்டது. இருந்தாலும், அவ்வப்போது எட்டிப் பார்த்துக் குரைக்கும்.

ஒருவழியாய் மூன்று மணி ஆனதும், மாலை நிகழ்வுகளின் ஆரம்பம். காலையில் நடந்ததெல்லாம் மறுபடியும் எதிர்த்திசையில் தொடரும்.

காலையில் புதுப்பூவாய்ப் போன குழந்தைகள் வாடிய பூவாய்த் திரும்புவார்கள்.

பேருந்து நிற்கும் முன்பு அவர்கள் பார்வை வீட்டு ஆட்களைத் தேடும். கண்டு விட்டாலோ மலர்ச்சிதான். இறங்கியதும் ஓட்டமாய் ஓடி வருவார்கள்.

கூட்டிப் போக வந்தது, பெற்றோரோ, இல்லை தாத்தா, பாட்டி என்றாலோ சலுகையுடன் தூக்கச் சொல்லி அடம்பிடிப்பார்கள். பணியாளர்கள் என்றால் பையை மட்டும் தந்துவிட்டுச் சோர்வுடன் நடப்பார்கள்.

மாலா ஒவ்வொரு குழந்தையையும் உன்னிப்பாகக் கவனிப்பாள். பூக்களின் மலர்ச்சியையும், வாடலையும் கவனிப்பதுபோல அவளுக்குத் தோன்றும். மாலையில் அவர்களைப் பார்க்கும்போது பாவமாய் உணர்வாள். சில பெரிய குழந்தைகள் தினமும் அவளைப் பார்ப்பதால், சினேகமாய்ச் சிரிப்பதும், “குட் மார்னிங்” “குட் ஈவ்னிங்” சொல்வதும் உண்டு. அந்த நேரத்தில் மாலா பூரிப்பாய் உணர்வாள்.

காக்கைகளும், பறவைகளும் கூடு திரும்புவது தெரியும். மாலை முடிந்து, இருள் லேசாக ஆரம்பிக்கும் நேரம், மேய்ச்சல் மாடுகள் திரும்பும் நேரம். அதே வழியாய் அவை திரும்பிப் போனதும், இரவுப் பொழுது ஆரம்பித்துவிடும். நிலவும் நட்சத்திரங்களும் தலைகாட்டும் நேரமிது. நிலாப் பாட்டுகளாக மனத்தில் ஓடும். ’தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்…’ பாடல் நினைவுக்கு வரும். ’கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா’ பாடல் வரிகளை வாய் முணுமுணுக்கும்.

அதற்கு மேல் நடமாடும் மக்கள் நிழலுருவமாய்த்தான் தெரிவார்கள் என்பதால், திரைச்சீலையால் ஜன்னலை மூடிவிடுவாள்.

பின்னர் தனக்குள் நினைவுகளுக்குள் மூழ்குவாள்.

ஜன்னலருகே வைக்கப்பட்ட சாதத்தைச் சாப்பிட வருவதற்காய் நடந்து வரும் காக்கையின் நடையிலிருந்து, ஆடு, மாடுகளின் நடை, நாய்களின் நடை, குழந்தைகளின் நடை, பெரியவர்களின் நடை என அன்று பார்த்த அனைத்தையும் நினைவுகளில் அசைபோடுவாள். பின்னர் நடக்க முடியாத தன் கால்களைக் குனிந்து பார்த்துக் கொள்வாள். நிராசையும், வேதனையுமாய் ஒரு சோகச் சிரிப்பு இதழ்களில் தோன்றும்.

கால்களை வளைத்தும், நெளிந்தும், விண்ணுக்கும், மண்ணுக்குமாய் குதித்து தான் நடனமாடுவது போல் கற்பனை செய்வாள். சிறிது நேரத்தில் நீண்ட சோகப் பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்துவாள்.

மாலாவின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் இப்படித்தான் கழிகிறது. நடுநடுவில் பிறர் உதவியுடன் குளிப்பதும், சாப்பிடுவதுமான நிகழ்வுகளை அவள் பொருட்படுத்துவதில்லை.

அவளின் ஒரு நாள் கழிந்தது.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...