பாராட்டுவோம்; நன்றி சொல்வோம்

பாராட்டுவோம்; நன்றி சொல்வோம்
Published on

தலையங்கம்

க்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் உச்சக்கட்டத்தை  அடைந்து 'உலகப்போராகிவிடுமோ' என்ற அச்சம் எழுந்த நேரத்தில் பதறிப்போன நாடுகளில் முக்கியமானது இந்தியா. காரணம், அங்கு கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களில் அதிகமானோர் இந்தியர்கள். கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர்.

பாதுகாப்புக்காக  மெட்ரோ தரையடி ரயில் நிலையத்திலும் பதுங்கு குழிகளிலும் தஞ்சம் புகுந்துள்ள மாணவர்கள் சமூக ஊடகங்களிலும்  தொலைக்காட்சி சானல்களிலும்  சொன்ன செய்திகள் பார்ப்போரை நெகிழச்செய்தது.

ஆனால், அரசாங்கம் மற்றும் தாங்கள் சார்ந்த பல்கலைக்கழகங்கள் சுட்டிக்காட்டிய இடங்களில் தஞ்சம் அடைந்துள்ள இந்திய மாணவர்களை மீட்பதில்  ஒன்றிய அரசு காட்டி வரும் முனைப்பும் செயலாற்றும் வேகமும் நிம்மதியளித்தது.

அந்த நாட்டின் வான் வழித்தடங்கள் மூடப்பட்ட நிலையில், போர் சூழலினால் ராணுவ விமானங்களை அனுப்ப இயலாத சூழலில் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வரும் அரும்பணியை போர்க்கால அடிப்படையில்  செய்த ஒன்றிய அரசைப் பாராட்டுவோம். ஊக்குவித்து வழிநடத்திய பிரதமருக்கு நன்றி சொல்வோம்.

மருத்துவ படிப்புகளுக்காக சென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்களும் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். 'மதுரை, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் உக்ரைனில் உள்ள கீவ், உஸ்கரோத் பகுதிகளில் சிக்கியுள்ளனர்' என்ற செய்தி அறிவிக்கப்பட்டவுடன் மாநில முதல்வர் அவர்களுக்கு உதவ  24 மணி நேரமும் இயங்கும் ஒரு உதவி மையத்தையும், அதற்கு ஒரு  தனி அதிகாரியையும் நியமித்தது அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு நம்பிக்கையையும் மாணவர்களுக்குத் தைரியமும் அளித்த செயல்.

இம்மாதிரி சூழ்நிலையில் வெளிநாட்டில் தவிக்கும் இந்தியர்களை மீட்டெடுப்பது ஒன்றிய அரசால்  மட்டுமே செய்யக்கூடிய பணி என்றாலும் மாநில அரசு  வெறும் வேண்டுகோளுடன் நிறுத்திக்கொள்ளாமல்,  ஒன்றிய அரசின் அந்தச் செயலுக்கு உதவிக்கரம் நீட்டியிருப்பது ஒரு நல்ல நிர்வாகத்தின் அடையாளம்.

தமிழ்நாட்டைச் சார்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள்  மற்றும் புலம்பெயர்ந்தோர் இம்மையங்கள் மூலமாகத் தமிழக அரசைத் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், "தமிழ்நாட்டைச் சார்ந்த  மாணவர்கள் உக்ரைனிலிருந்து தாய்நாடு திரும்புவதற்கு ஏற்படும் பயண  செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும்" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொடர்ந்து ஒன்றிய அரசும் இத்தகைய அறிவிப்பைச் செய்திருக்கிறது.  இது  விமான கட்டணத்துக்குப் பணம் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கும்  மாணவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல்.

"பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது" என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். வான்வெளி போக்குவரத்து மூடப்பட்டுள்ளதால், உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை, அதன் அண்டை நாடான ருமேனியா ஹங்கேரி  வழியாக, தரைவழி மார்க்கமாக மீட்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், ஹங்கேரி, போலந்து நாடுகளிடமும் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. "இந்த நாடுகள் இந்தியா நமது நட்பு நாடு அதற்கு உதவவேண்டும்" என்ற நல்லெண்ணத்தைக்  கொண்டிருப்பதற்கு மிக முக்கியக் காரணம், இந்த நாடுகளிடைய நல்லுறவை  உருவாக்கி அதை நீண்ட நாள் பேணி வந்த ஒன்றியத்திலிருந்த  முந்தைய அரசுகள் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருக்கிறது.  ஏதேனும் காரணங்களால் அது தோல்வியுற்று போர்  உச்சக்கட்டத்தை அடைந்து பேரழிவு ஏற்படுவதற்கு முன்பாக 'இந்திய மாணவர்கள்  மீட்கப் பட்டுவிடுவார்கள்' என்ற நம்பிக்கையை   நாள் தோறும்  அதிகரிக்கும் மீட்பு விமானங்களின் எண்ணிக்கை விதைத்திருக்கிறது.

ஒன்றிய / மாநில அரசுகளைப் பாராட்டுவோம்: நன்றி சொல்வோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com