மாட்டு வண்டிகளில் வந்திறங்கிய இலக்கிய சீர் வரிசைகள்…. 

மாட்டு வண்டிகளில் வந்திறங்கிய இலக்கிய சீர் வரிசைகள்…. 
Published on

– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

புதுக்கோட்டையில் ஒரு திருமணம். ஊரே வியந்து பார்த்த திருமணம் அது. அகில இந்திய அளவில் மிகவும் பிரபலங்கள் பங்கேற்ற திருமணமா? மிக மிக ஆடம்பர டாம்பீகத் திருமணமா? பொன்னும் பொருளும் சிறு சிறு குன்றுகளாகக் குவித்து வைத்துத் தந்த திருமணமா?

அதெல்லாம் ஏதுமில்லை. மணமகளுக்கு வந்திறங்கிய சீர்வரிசைகள்தான் ஊரில் எல்லோரையும் விரும்பிப் பார்க்க வைத்தன. திரும்பிப் பார்க்க வைத்தன. ஒன்பது மாட்டு வண்டிகளில் செந்தமிழின் இலக்கிய நூல்களைச் சுமந்து நகர வீதிகளில் ஊர்வலமாக வந்துள்ளது அந்த இலக்கிய சீர் வரிசை.

மணமக்கள் காவியா மூர்த்தி – சுதர்சன். ஆவுடையார் கோயில் குருங்களூர் ராமச்சந்திரன் – லீலாவதி தம்பதியினரின் மகன் சுதர்சன். புதுக்கோட்டை
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேனிலைப்பள்ளியின் தாளாளர், சாகித்திய அகாடமியின் முன்னாள் ஆலோசனைக் குழு உறுப்பினர், கவிஞர் தங்கம் மூர்த்தி – அஞ்சலிதேவி தம்பதியினரின் மகள் காவியா மூர்த்தி. இவர்களது திருமணம் பிப்ரவரி 2௦ ஞாயிறு அன்று புதுக்கோட்டை நகரில் நடைபெற்றது.

மாட்டு வண்டிகள், அதனுள்ளே தமிழின் இலக்கிய நூல்கள், சீர் வரிசை ஊர்வலம்… இதெல்லாம் எவ்விதம் யாருடைய மனதுக்குள் தோன்றியது?

'தமிழினி புலனம்' என்று வாட்ஸ் அப் குழு ஒன்று இயங்கி வருகிறது. அதில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் அரசு மற்றும் தனியார் அலுவலர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அதன் அட்மின்களில் ஒருவர் தங்கம் மூர்த்தி. தமிழினி புலனத்தின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சுபாஷ்காந்தி. குறிப்பிட்ட புலனத்தின் ஒருங்கிணைப்பாளர்க்கு முதன்முதலில் அந்த எண்ணம் தோன்றியுள்ளது. அதனைப் புலனத்தின் உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார். "இது அருமையான செயல்பாடு. இவ்விதம் யாரும் சீர் வரிசைகள் இதுவரை தந்ததில்லை. நம் கவிஞரின் மகளுக்கு அன்புடன் நாம் தந்து விடுவோம்" என்று எல்லோரும் சம்மதித்துள்ளனர். உடனே செயலிலும் ஈடுபடத் தொடங்கி விட்டனர்.

சென்னை புத்தகக் காட்சியிலும், சில பதிப்பகங்களிலும் தேர்வு செய்யப்பட்ட குறிப்பிட்ட புத்தகங்கள் வாங்கி சேமித்தனர். திருமண நாளில் புதுக்கோட்டை நகரில் கோலாகலமாக நடைபெற்றது மாட்டு வண்டிகளில் மணமகளுக்கான சீர் வரிசை ஊர்வலம்.

"தமிழினி புலனத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு. திருவள்ளுவர், ஔவையார், கம்பர், இளங்கோவடிகள், பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி ஆகியோரின் படைப்பு நூல்களை வாங்கினோம். அவரவர் முகங்கள் பெரிதாக வண்ண ஓவியங்களாகத் தயார் செய்தோம். ஒன்பது மாட்டு வண்டிகள் ரெடி பண்ணினோம். தமிழின் மேற்குறிப்பிட்ட படைப்பாளிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு மாட்டு வண்டி. அதனுள்ளே அவரவர் படைப்புகள். பட்டுத் துணிகளின் மேலே படைப்பு நூல்களை அடுக்கி வைத்திருந்தோம்.

ஒன்பது பெண்களின் கரங்களில் தாம்பாளங்கள். அவைகளில் மா, பலா, வாழை என முக்கனிகள். ஊர்வலத்தின் முன்பாக தாரைத் தப்பட்டை இசை முழங்கச் செய்திருந்தோம். பாரம்பரிய முத்தமிழ் அரிய பொக்கிஷங்களுடன் சீர் வரிசை ஊர்வலம் நடைபெற்றது. இயல் சார்ந்து புத்தகங்கள். இசை சார்ந்து தாரை தப்பட்டைகளுடன் உறுமி மேளங்களின் இன்னிசை. அதற்கு ஏற்றார்போல ஆடல் பாடலுடன் எளிமையாகவும் அமர்க்களமாகவும் இருந்தது. புதுக்கோட்டை பாரத் நகர் தங்கம் மூர்த்தி அவர்களின் வீட்டில் இருந்து தொடங்கியது மாட்டு வண்டி ஊர்வலம். ராம் நகர் வழியாக திருமண மண்டபம் வந்தடைந்தது. பாரம்பரிய முறைப்படி மணமகளுக்கான மிக எளிய சீர் வரிசையாக முத்தமிழ், முக்கனிகள் போன்றவைகளை மன நிறைவுடன் பேரன்புடன் சேர்ப்பித்தோம்." என்கிறார் தமிழினி புலனத்தின் (வாட்ஸ் அப் குழு) ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சுபாஷ்காந்தி.

"என்னிடம் நண்பர்கள் இதனைத் தெரிவித்தபோது எனக்கே மிகவும் புதிதாகத் தெரிந்தது. ஆச்சர்யமாகவும் ஆர்வமாகவும் என் மனம் எனக்குத் தெரியாமலே மிதக்கத் தொடங்கியது. இயல்பாகவே நான் புத்தகங்களின் தீராதக் காதலன். என் குடும்பத்தினரும் அப்படித் தான். எங்கள் அன்பு மகளுக்கு செந்தமிழின் செவ்விய நூல்களை சீர் வரிசைப் பொருட்களாகத் தருவார்கள் என் நண்பர்கள் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. பொன்னோ பொருளோ அவைகள் பின்னாட்களில் உருமாறிப் போகும். இந்தப் புத்தகங்கள் என் மகள் காலம், எங்கள் பேரன் பேத்திகள் காலம் அவர்களது தொடர் சந்ததிகளின் காலங்களிலும் மிக மிக அரிய புத்தகங்களாகவே போற்றிப் பாதுகாக்கப்படும். வாசிக்கப்படும். அந்தப் புத்தகங்கள் வாசிப்போரை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். தமிழினி புலனத்தின் ஒவ்வொருவருக்கும் எனது பேரன்பு." என்று மிகுந்த மகிழ்வுடன் பேசுகிறார் கவிஞர் தங்கம் மூர்த்தி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com