0,00 INR

No products in the cart.

என்ன பொழப்புடா இது? ரொம்ப வலிச்சிடுச்சா?”

ஒரு கலைஞனின் வாழ்க்கையில் – 10

மம்முட்டி

தமிழில் கே.வி.ஷைலஜா

டகேரளத்தின் ஓர் உள்ளடங்கின கிராமத்தில்தான் அந்த முதியவளைப் பார்த்தேன். கேரளாவில் எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் பொங்கிப்பெருகும் உற்சாகம் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. அன்றைய படப்பிடிப்பு ஒரு பழைய வீட்டில் நடந்தது. வீட்டு வராந்தாவின் ஒருபுறமாகவே ஒப்பனைக்கு இடம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தேவைக்கும் குறைவான மங்கிய வெளிச்சத்திலும் சுற்றிலும் பலர் வந்து இடம் பிடித்திருந்தார்கள்.

கிராமங்களில் நடக்கும் படப்பிடிப்புகளில் அவர்களை வெளியே போகச் சொல்வதெல்லாம் முடியாத காரியம். கூட்டத்திற்கிடையில் பலரும் சினிமா டயலாக்குகளைச் சொல்வதைக் கேட்க முடிந்தது. ‘இக்கா’ என்றும் ‘சேட்டா’ என்றும் ‘அண்ணா’ என்றெல்லாம் என்னைக் கூப்பிட்டுப் பார்க்கிறார்கள். இந்தச் சப்தங்களுக்கிடையில் என் பின்னாலிருந்து நான் எப்போதும் கேட்காத ஒரு குரலைக் கேட்டேன்.

மிகவும் பழக்கப்பட்டக் குரலில் ‘மோனே’ என்று வாஞ்சையுடன் ஒரு முதியவளின் குரல் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. எழுபது வயது மதிக்கத்தக்கவள். பார்ப்பதற்கு மிகவும் ஐஸ்வர்யத்தோடு இருந்தார். முடியில் நரையின் மினுமினுக்கும் அழகு. மல்லுவேட்டி கட்டி மல்லுத்துணியிலேயே தைத்த ஜாக்கெட் அணிந்து மார்பில் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு சிரித்தபடி நிற்கிறார். பற்கள் வெற்றிலைச் சாறில் ஊறிச்சிவந்திருந்தது. மெலிந்த உடல்.

அனுமதிக்கெல்லாம் காத்திருக்காமல் பக்கத்தில் வந்து நின்று முகத்தையும், தலையையும் தடவிக் கொடுத்தபடி அவள் கேட்டாள்.

“நீ வர ஏன் இவ்வளவு நேரமாச்சு? நான் மறுபடியும் ரெண்டு நாளக்கி முன்னாடி வருவேன்”

“கொஞ்சம் நேரமாயிடிச்சு” அந்தம்மாவைத் தவிர்க்க நான் சங்கடத்துடன் சொன்னேன். மேக்கப் போட்டுக் கொள்ளும்போது என்னைத் தொடுவதும், கவனம் சிதற வைப்பதும் என்னை லேசாக எரிச்சல்பட வைத்திருந்தது. படப்பிடிப்புக்குழு மொத்தமும் என் வருகைக்காகக் காத்திருந்தது. ஆனால் அவள் சூழலின் கனமறியாது தொடர்ந்தாள்.

“மாட்டைக் கட்டக்கூட ஆளில்லை, சரோஜினியோட குழந்தை ஸ்கூலுக்குப் போயிட்டா. நான்தான் எல்லாத்தையும் பாக்கணும், முடியல…..”

முதியவளின் வீட்டு மனிதர்கள் எனக்கு மிகவும் தெரிந்தவர்கள் மாதிரி பேசிக்கொண்டே போனாள். ஏதோ நினைத்த நான் அவளுக்கு ஒரு நாற்காலியைப் போடச் சொல்லி உட்காரச் சொன்னேன்.

“அடுத்த மாசம்தான் அப்பாவுக்குத் தெவசம். எல்லாரும் வருவாங்களான்னு தெரியல. விலாசினி நெற மாசமா இருக்கா. முன்ன மாதிரி முடியலன்னாலும் ஏதாவது செய்து அனுப்பவேண்டாமா? நீ வந்தபிறகு முடிவு பண்ணிக்கலாமின்னு நெனச்சேன். நீ எப்ப வரே?”

நடுவில் ஒரு ஷாட்டுக்காகப் போய்விட்டு திரும்பி வந்தபோதும் அவள் அங்கேயே உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் மீண்டும் பேசத்தொடங்கினாள்.

“ராஜன் கிட்டயிருந்து தபாலே வர்றதில்ல. பெங்களூர்ல நல்லாயிருக்கான்னு பாத்திட்டு வந்தவங்க சொல்றாங்க. அதானே நமக்கும் வேண்டியது. வேலையெல்லாம் முடிச்சிட்டு அவனுக்கும் வர போக நேரமிருக்காது. பாவம் அவன், என்னப் பாக்காம ரொம்பக் கஷ்டப்படுவான்.”

அவள் பேசுவது கடந்த வாரச் சம்பவங்களின் ஞாபகச் சிதறல்கள்தான். அதற்கு முன்பான தகவல்கள் எல்லாம் எனக்குத் தெரியும் என்று முழுமையாக நம்பினாள். எந்த நொடி என்று உணர முடியாமல் ஒரு சினேகம் அவள்மீது படிந்தது. இரண்டாம்நாள் வரும்பொழுது அவள் கையில் ஒரு சொம்பு இருந்தது. வேட்டியின் மடிப்பிலிருந்து டம்ளரை எடுத்து அது நிறைய சொம்பிலிருந்த பாலை ஊற்றி எனக்குத் தந்தாள்.

“நம்ம மாட்டுப்பால், குடிச்சுப் பாரு”

எப்போதும் பால் குடிக்கப் பிடிக்காத நான் அதை வாங்கி மடமடவெனக் குடித்தேன். தொடர்ந்த உரையாடல்களில் எனக்கு அவளுடைய வீட்டைப்பற்றி அனுமானிக்க முடிந்தது.

மூத்த மகன் பெங்களூரிலும், இரண்டாவது மகன் மிலிட்டரியிலும் இருந்தார்கள். மகளில் மூத்தவள்தான் இப்போது கர்ப்பிணி, கடைசி மகளைப் பக்கத்தில் எங்கோ திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். ஒரு மகளுடைய மகள்தான் கிழவிக்கு எப்போதாவது துணைக்கு வருவாள். ஆனால் அவளுடைய அந்திம நாட்களின் பெரும் பகுதியைத் தனிமைதான் தின்று கொண்டிருந்தது.

இதில் ஏதோ ஒரு மகனுடைய நினைவில்தான் நான் இப்போது பொருந்தியிருக்கிறேன். மிலிட்டரியில் இருப்பவனாக என்னை நினைத்திருக்கலாம். ஏனெனில் நான் அந்தப் படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி வேடமேற்றிருப்பதுகூட அவளை அப்படி நினைக்க வைத்திருக்கலாம். படப்பிடிப்பில் ஒரு கதாபாத்திரம் என்னை முகத்தில் அறையும் காட்சி படமாக்கப்படவேண்டியிருந்தது. குளோசப் காட்சி எடுப்பதற்காக அடித்த உடனே முகத்தைத்திருப்பிய நான்  அவள் முகத்தைத்தான் பார்க்கவேண்டியிருந்தது. நான் நிஜமாகவே அடிக்கப்பட்டேன் என்று நினைத்த அவள் துடித்துப்போனாள். கண்கள் மெல்ல மெல்ல நிறையத் தொடங்கின. பக்கத்தில் வந்தபொழுது கம்மின குரலில் கேட்டாள்.

“என்ன பொழப்புடா இது? ரொம்ப வலிச்சிடுச்சா?”- கேட்டவள் அதிக நேரம் அங்கு நிற்கவில்லை. மறுநாள் வரும்போது மடியிலிருந்து பொட்டலமாய் எதையோ எடுத்து என் கையில் திணித்தாள். குனிந்து பார்த்தபோது கை நிறைய சுட்ட முந்திரி பருப்பு. எனக்கு முந்திரி  பிடிக்கும் என்பதால் அதை முழுவதுமாய் என் பாக்கெட்டில் போட்டு வைத்துக்கொண்டு கொறிக்கத் தொடங்கினேன். முந்திரிப் பருப்பை வாயில் போட்டு மெல்வதைப் பார்த்தவள் சிநேகமாய்ப் புன்னகைத்தாள். சாப்பிடுவது நானாகயிருந்தாலும் ருசியை உணர்வது அவளாயிருந்தது என்பது முகத்திலேயே தெரிந்தது.

மறுநாள் படப்பிடிப்பைச் சட்டென மாற்ற வேண்டியிருந்தது. இரவே நான் திரும்பிவிட்டிருந்தேன். போகும்பொழுது அவளிடம் சொல்லிக்கொள்ள  வேண்டுமென்றோ கையில் ஏதாவது கொடுக்க வேண்டுமென்றோ நினைத்ததெல்லாம் நடக்கவேயில்லை.

நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு அதே படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க அதே கிராமத்திற்குப் போனோம்.

பேர்கூடத் தெரியாத அந்த முதியவளின் முகம் தேடி நான் படபடப்பானேன். ‘மோனே’ என்ற குரலுக்காய்ச் செவி மடுத்துக்காத்திருந்தேன். எதுவும் நடக்கவில்லை.

வழக்கமான வேலைகளுக்கிடையில் நான் கொச்சிக்கு வந்து மகளைப் பார்த்துவிட்டுப் போவதுண்டு. ஆனால் வைக்கத்திற்கு அருகில் இருக்கும் ‘செம்பு’ என்ற என் சொந்த கிராமத்திற்குப் போய் அம்மாவையும் அப்பாவையும் பார்ப்பதில்லை. ஒரு முறை அப்பா கேட்டார்.

“நீ கொச்சிக்கு வந்திட்டு இங்க வராமப் போற?”

“பிள்ளைகளைப் பார்க்கணும்னு ஆசையாயிருந்ததினால வந்தேன். இங்க வர எனக்கு நேரமில்ல”

“அதேபோல எங்க மகனைப் பார்க்க ஆசையோடிருக்கும்  அப்பாவும் அம்மாவும்தானே இங்க இருப்பதும்…”

அதைக் கேட்டதும் நிஜத்தில் நான் கரைந்து போனேன். இதய தமனிகளில் எங்கோ வெடித்ததுபோல உணர்ந்தேன். எனக்கு உடனே படப்பிடிப்பில் பார்த்த அந்த அம்மாவின் நினைவே வந்தது. அவளுக்கு நான்கு பிள்ளைகள் இருந்தும் அனாதையாக இருந்தாள். என் அம்மாவும் எனக்காக நெஞ்சுருகி காத்திருப்பாள் என்ற நினைவே என்னை வேதனைக்குள்ளாக்கியது. அதன்பிறகு, எப்போது கொச்சிக்குப் போனாலும் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து விட்டுத்தான் வருவேன். முடியாமல் போகும்போது உடனே கிளம்புவதற்கான சம்மதத்தையாவது தொலைபேசியில் அவர்களிடம் வாங்கத் தவறியதில்லை.

நாம், அம்மாக்களுக்கும், அப்பாக்களுக்கும் நல்ல வசதியான முதியோர் இல்லங்களை ஏற்பாடு செய்யும் அவசரத்திலிருக்கிறோம். அது மிகப் பெரிய தவறு என்று நாம் உணருவதேயில்லை.

வீட்டிலிருந்து பறித்து வேறு இடத்தில் நடும்பொழுது அவர்களுக்கு நஷ்டப்படுவது வீடில்லை, குழந்தைகளின் ப்ரியம்தான் என்பதை நாம் மறந்துபோகிறோம்.

எந்த முதியோர் இல்லங்களாவது பிள்ளைகளின் ப்ரியத்தைத் தருகிறோம் என்று விளம்பரப்படுத்தமுடியுமா? எவ்வளவு கஷ்டப்படுத்தினாலும் அம்மாவோடும் அப்பாவோடும் உள்ள ப்ரியத்தின் அடர்த்தி அதிகரித்து கொண்டுதான் போகும்.

முதியோர் இல்லங்களைத் தேடி வருகிறவர்களும், வாழ்வின் அவசரத்தில் திரும்பிப் பார்க்க மறந்து போகிறவர்களும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், நமக்காகவும் எங்கோ மூலையில் ஒரு முதியோர் இல்லம் இருக்கிறதென்பதை, ஏதோ ஒரு வீட்டில் நம்மையும் காலம் தனிமைப்படுத்தும் என்பதை. அந்த நொடி சமீபிக்காமலிருக்க வாழ்வின் பரபரப்புகளுக்கிடையில் பெற்றவர்களுக்குப் பிள்ளைகளாக மாறி மகிழ்விப்போம்.

(தொடரும்)

1 COMMENT

  1. வயதான பெற்றோரை பிள்ளைகள் அடிக்கடி சென்று பார்க்க வேண்டும், அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்ற கருத்தை மம்முட்டி சார் போன்ற விஐபிக்களும் மற்றும் பலரும் பரவலாக கூறுவது நியாயம்தான் என்றாலும், இன்றைய பரபரப்பான சூழலில் பிள்ளைகள் அவர்கள் குடும்பத்திற்காக ஓடவே நேரமில்லாமல் இருக்கிறார்கள் என்பதே நிஜம். அனுபவம் மிகுந்த பெற்றோர்கள் புரிந்து கொண்டு எதிர்பார்ப்பை தவிர்க்கலாம் என்பதே எனது கருத்து.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...