“யானை என்பது நடமாடும் வனம்”

“யானை என்பது நடமாடும் வனம்”
Published on

நூல் அறிமுகம்

– சித்ரா

'இந்து தமிழ் திசை'யில் வெளிவந்த 'யானைகளின் வருகை' என்ற தொடரின் முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக்கப்பட்டுள்ளது.  இப்போது அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பகுதி வெளிவந்திருக்கிறது.

பொதுவாகவே யானை – மனித மோதல்கள் முன்பு அரிதாக இருந்தது. தற்போது அது தினசரி நிகழ்வாகிவிட்டது.  மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி, ஆனைகட்டி , வாளையார், சத்தியமங்கலம், பகுதிகளில் தினசரி நிகழ்வு. இதில் மனிதனோ, வன உயிரோ இறக்கும்போது செய்தியாகிறது.  செய்தியாகாமல் செத்த… காயப்பட்ட உயிர்கள் எத்தனை..??!!!  இந்த தொடர் அதை வெகு நேர்மையாக பதிவு செய்திருக்கிறது. வனப்பேருயிர் ஏன் வனத்தைவிட்டு வெளியேறுகிறது.  மனித காரணம் மட்டுமின்றி, சூழலியல் காரணத்தையும் நேர்மையாக பதிவு செய்திருக்கிறது இந்தப் புத்தகம்.

பொதுவாக மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் யானை மனித மோதல் ஏற்படும் போதெல்லாம் அது ஒரு நாள் பரபரப்பு செய்தியாகி அடங்கும். இதில் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பேருயிர்களைதான் வில்லன் போல சித்தரித்து "யானைகள் அட்டகாசம்!!!" என்ற தலைப்பில் செய்தி வெளியாகும். ஆனால் நிஜத்தில் யானைகள் படும் பெருந்துயர் சொல்லில் அடங்காது.

"யானை என்பது நடமாடும் வனம்"

யானை பல்லுயிர் சங்கிலியின் ஆதாரகன்னி.. யானை பாதிக்கப்பட்டால் ஒரு வனம் பாதிக்கப்படுகிறது… அழிகிறது எனப்பொருள். அறிய வகை வனவிருட்சங்கள் யானையினால் மட்டுமே விதைபரவலாக்கம் மூலம் பரப்படுகிறது. சூழலியலில் வன உயிர்கள் அத்தனையும் முக்கியம். அதில் நடமாடும் வனம் எனும் இந்த பேருயிர்தான் ஆதார கன்னி. வனத்தில் ஏற்படும் சிறுமாற்றம் கூட வன உயிர்களை எப்படி எல்லாம் பாதிக்கிறது என நூல் விவரிக்கிறது.

மேற்குதொடர்ச்சி மலையை… அதன் வளத்தை… முக்கியத்துவத்தை… சூழலியல் கேட்டை… அதன் பாதிப்பை என அத்தனையும் மிக நேர்மையாக பதிவு செய்திருக்கிறார் மூத்த பத்திரிக்கையாளார்  கா.சு. வேலாயுதன். இது ஏதோ ஓரிடத்தில் அமர்ந்தபடி தகவல்களை கேட்டு எழுதியதல்ல. ஒருபுறம் மேற்கே சிறுவாணி தொடங்கி வைதேகி அருவி, மருதமலை, ஆனைகட்டி, சிறுமுகை, மேட்டுப்பாளையம்,  நீலகிரி வரை வடக்கே விரிகிறது.  மறுபுறம் கோவை குற்றாலம் தொடங்கி குனியமுத்தூர், மதுக்கரை, வாளையார் வரை தெற்கே நீள்கிறது. ஆக… மிகத் துல்லியமாக யானையின் வலசை மொத்தமுமே அலைந்து திரிந்து பார்த்ததை, உணர்ந்ததை வார்த்தைகளில் வடிக்கப்பட்டிருக்கும்  ஓர் ஆவணம்.

இந்த இரண்டாம் பாகத்தில் வலசை பாதை பற்றி மட்டுமல்லாமல், இந்த பேருயிர் ஏன் வனத்தை விட்டு வெளியேறுகிறது என்பதை விரிவாக அலசியுள்ளது. ஒரு கட்டடம் கட்டுவதால் என்ன பிரச்சனை என கேட்போர் இதை வாசித்து தெளிவடைக. பாதையில் கட்டப்படும் கட்டடம், பல்கலைக்கழகம், ஆஷ்ரமங்கள் தங்கும் விடுதிகள், நீர்விளையாட்டு விடுதி, மட்டுமல்லாது வனத்தில் யானையின் உணவு பற்றாக்குறையை சுட்டிக்காட்டுகிறது. வனத்தில் யானைக்கு உணவில்லையா என கேட்போருக்கு, ஆம் யானைக்கு உணவில்லைதான். வழமையான அரிசி உணவின்றி தொடர்ந்து மிக குறைந்த அளவே ஜங்க் உணவு தின்றால் நமக்கு எப்படி இருக்கும்… என்னென்ன விளைவு ஏற்படுமோ அப்படித்தான். யானையும் அதன் உணவு குன்றியதால் வேறு வழியின்றி கிடைத்ததை உண்டு குடற் புழுவாலும் ஒவ்வாமையாலும் ஆரோக்கியமும் ஆயுளும் குறைந்து சாகிறது.  யானை உன்னக்கூடிய விருட்சங்கள், தாவரங்கள் வனத்தில் குறைந்து அந்த இடத்தில் உனிச்செடியும் பார்தீனியமும், சீமைக் கருவேலமும் ஆக்கிரமித்துவிட்டது. சூழலியல் பற்றி அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். தவிர, ஆக, 'மோசமான மனிதர்களான  நாம் அந்த பேருயிரின் உணவு பட்டியலை எப்படி மாற்றியிருக்கிறோம்' என இதை வாசித்தால் தெரியும். வன சுற்றுலாவில் உப்பும் புளியும் திண்று பழகிய யானை தன் உப்பு தேவைக்கு அதுவரை திண்ற நதியோர உவர்மன் திண்ணாமல் நம்மை எதிர்பார்க்க வைத்தோம். அடுத்து சாராய வியாபாரிகள் ஏற்படுத்திய சீர்கேடு பனைசோறு திண்று தள்ளாடும் நிலைக்கு தள்ளினோம். குவாரிகளால் , சூளைகளால் அளவு மீறி வெட்டி எடுத்த விளைவு அந்த படுகுழியில் வீழ்ந்து செத்த பேருயிர்கள் எத்தனை..??

ஆலைகழிவு, சாக்கடை கழிவுகளை நதியில் கலந்துவிட்டு அதை குடித்து குடற்புழுவாலும் நோயாலும் சாகிறது வன உயிர்கள். தவிர வேட்டைகாரர்கள், நாட்டு வெடிகுண்டு போன்றவற்றால் படும் வேதனை சொல்லி மாளாது…

இதில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்னைகளை தீவிரமாக பேசவும் அதற்கு தீர்வை திறந்த மனத்தோடு தேடவும் முனைய வேண்டிய நேரமிது..! சூழலியல் குறித்த அக்கரையும் வன உயிர்கள் மீதான தெளிவும் வேண்டுவோர் அதை அடுத்த தலைமுறைக்கு புரியவைக்க வேண்டுவோர்களிடம் நிச்சியம் இருக்க வேன்டிய புத்தகம் இது.

யானைகளின் வருகை,
ஆசிரியர் கா.சு. வேலாயுதன்,
காக்கை கூடு பதிப்பகம்,
விலை ரூ. 220/-

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com