0,00 INR

No products in the cart.

இந்திய நடைமுறை ஜாதி சார்ந்தே செயல்படுகிறது எனும் கசப்பான உண்மையை விழுங்கினேன்.

உலகக் குடிமகன் – 10

 

– நா.கண்ணன்

லகம் எங்கு நகர்கிறது எனக் கூர்மையாக அவதானித்தால் கட்டுப்பாடுகளிலிருந்து கட்டற்ற சுதந்திரம் எனும் நிலையை நோக்கி எனப் புரியும். நம் வாழ்வில்தான் எத்தனை கட்டுப்பாடுகள்? ஆணுக்கும், பெண்ணுக்கும் பிற உயிர்களுக்கும். ஆங்கில காலனி ஆட்சியில் தமிழர்கள் வெறும் பல்லக்குத் தூக்கிகளாக, சஞ்சிக் கூலிகளாக ஆக்கப்பட்டு அடிமை வாழ்வு வாழ்ந்தனர். கருப்பின மக்கள் ஆடுமாடுகள் போல் சந்தையில் விற்கப்பட்டனர். ஸ்பானியர் தென் அமெரிக்க பழம்குடிகளை  கூண்டில் அடைத்து விலங்கு போல் தெரு வீதியில் கொண்டு சென்றனர். கப்பல் ஓட்டுவது பெரும் திறன். ஊக்குவிக்கப்பட வேண்டிய தொழில் திறன். ஆனால், என்ன நடந்தது? கப்பலோட்டியதற்காக வ.உ.சிதம்பரம் 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு தெருவில் நாயை இழுத்துக் கொண்டு செல்வதுபோல் இழுத்துச் செல்லப்பட்டார். அதைக் கண்டனம் செய்த பத்திரிக்கையாளர் மகாகவி பாரதியை ஊர் ஊராக அலைய விட்டனர்.

பெண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் ’அடுப்படி விட்டு தாண்டக்கூடாது’ என்பது விதி. அன்னை நிவேதிதா கவிஞர் பாரதியிடம் கேட்கிறார், உங்கள் ஜனத்தொகையில் 50% பெண்கள் இருக்கும்போது அவர்களை முடக்கிவிட்டு என்ன மாதிரி சுதந்திரத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? என்று.

இந்திய விடுதலையில் பெண் விடுதலை என்பது முக்கியமானது. பின் பால்ய விவாகம், தேவதாசி முறை, உடன்கட்டை ஏறுதல் போன்ற எண்ணற்ற கொடுமைகள். இவைகளையெல்லாம் கடந்து வந்திருக்கிறோம். ஆயினும் இன்னும் பாலியல் வன்கொடுமைகள் நம் பெண்கள் மீது ஏவப்படுகிறது.

பெண்களுக்கு அடுத்து அடிமைப்படும் வர்க்கமாக சிறார்கள் அமைகின்றனர். இவர்களைக் கூலித் தொழிலாளர்களாக குறைந்த சம்பளத்திற்கு நியமிப்பது இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

1960களில் செய்தி என்பது ஒரு அரிய பொருள். செய்தி அறிய கையூட்டு கொடுக்க வேண்டும். திருப்பூவணத்தில் ஒரு தாலுகா அலுவலகம் இருந்தது. அங்கு இறையாண்மை செய்யும் தாசில்தாருக்கு ’ஃபங்கா’ எனும் சாமரம் வீசத் தனியாக ஒரு சேவகர் இருப்பார். கிராமத்து சனங்கள் தங்கள் விவசாயக் கோரிக்கைகளை முன் வைக்க தாலுகா ஆபீஸுக்கு வருவர். தாசில்தார் இருக்காரா? இல்லையா? என அறிய வாசலில் இருக்கும் பியூனுக்கு கையூட்டுத் தரவேண்டும். பொதுவாக எந்த விஷயத்தைச் சொல்லவும் ரொம்பவும் கிராக்கி பண்ணிக் கொள்வார்கள் அந்தக் காலத்தில். பள்ளிக் காலத்தில் வேடிக்கையான ஒரு நிகழ்ச்சி… எங்கள் தெருவில் ’கொய்யா மர வீடு’ என்று ஒன்று உண்டு. அங்கு ஒரு பாட்டி இருப்பாள். அவள் நல்ல, நல்ல கரி வாங்கி அடுப்பெரித்து சமையல் செய்வாள். அவளிடம் நாங்கள் போய், ‘பாட்டி, இந்தக் கரி எங்கு வாங்குகிறீர்கள்? இவ்வளவு அருமையாக இருக்கிறதே’ என்று சொன்னால் போதும். பாட்டி பிகு பண்ண ஆரம்பிப்பாள். முதல் பதில் இப்படியிருக்கும், ‘உங்களுக்கு எதுக்கு இந்த மாதிரி சமாச்சாரமெல்லாம். இது பெரியவர்கள் விவகாரம்’ என்று எங்களைப் புறம்தள்ளப் பார்ப்பாள். நாங்களா விடுவோம்… மீண்டும் பாட்டியிடம் “இந்த ஊரிலேயே இப்படியான அடுப்புக் கரி பார்த்ததில்லையே! அதனால் கேட்கிறோம்” என்று சொன்னவுடன், இன்னும் கிராக்கி அதிகமாகிவிடும். “அதையெல்லாம் சின்னப் பையன்களிடம் சொல்ல முடியாது. ஒரு ஆள் மூலமாக வாங்கிக் கொள்கிறேன்” என்பாள். அதற்கு மேல் ஒன்றும் பெயராது. ஒரு அல்ப அடுப்புக்கரி. அதற்கே இந்த மதிப்பு என்றால், ’வெளிநாடு போவதற்கான சேதிகள்’ என்றால் எவ்வளவு கிராக்கி இருக்கும். இந்தியா முழுவதுமே ஒரு சிவப்பு நாடா தன்மையில் ஒரு காலத்தில் இருந்தது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது.

இன்று உலக மக்களையெல்லாம் இணைக்கும் இண்டர்நெட் எனும் தகவல் தொழில்நுட்பமும் முதலில் ஒரு ரகசிய இராணுவ வலைப்பின்னலாகத்தான் உருவாகியது. எப்படியோ இத்தொழில் நுட்பம் பொது நுகர்விற்கு வந்தபின் எத்தனை மாற்றங்கள்? செயற்கை ஞானமெனும் தொழில் நுட்பமும், இணையமும் சேர்ந்து செயற்கரிய செயல்களையெல்லாம் செய்கின்றன. இணையம் பொது நுகர்விற்கு வந்தவுடன் ஒரு பிரேரணை வெளியாகியது. மனிதன் கட்டற்ற சுதந்திரத்தை நோக்கி நகரத் தொடங்கிவிட்டான் என்று. அதுதான் எவ்வளவு உண்மை!

நான் 1976ஆம் ஆண்டு அமெரிக்கன் கல்லூரியை விட்டு மதுரைப் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்தபோது இந்த கட்டற்ற சுதந்திரத்தை உணர்ந்தேன். பேராசிரியர் கிருஷ்ணசாமி தொலை நோக்குப் பார்வையுடன் மதுரைப் பல்கலைக் கழக உயிரியல்துறை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பொறுக்கி எடுத்த விஞ்ஞானிகளை வெளிநாடுகளிலிருந்து அழைத்து வந்தார். அப்போது அவரோடு இணைந்தவர்கள்: அமெரிக்காவிலிருந்து ஜெ.ஜெயராமன், அவர் துணைவியார் குந்தளா ஜெயராமன், பாஸ்டனிலிருந்து ஆர்.ஜெயராமன்; ஜெர்மனியிலிருந்து சந்திரசேகர், டி.ஜே.பாண்டியன். பேராசிரியர் ஞானம், அவரது தாவரவியல் குழு எனத் தேர்ந்த விஞ்ஞானிகளின் ஒரு கூட்டம் மதுரைப் பல்கலைக் கழகத்தில் இருந்தது. உயிரியல் துறைக்குள் நுழைந்தாலே ஓர் சுதந்திரக் காற்று வீசுவதை உணரலாம். அங்கு முனைவர் பட்ட மாணவர்களெல்லாம், அவர்களது ஆய்வு ஆசான்களுடன் சரி சமமாக நடத்தப்பட்டனர். அவர்களோடு பூங்காவில் நடப்பது, டீக்கடையில் சமமாக உட்கார்ந்து தேனீர் அருந்துவது என்று ஓர் விடுதலைப் பூங்காவாக அத்துறை காட்சியளித்தது.

கட்டுபெட்டியான கல்லூரி வளாகத்திலிருந்து இத்துறைக்கு வந்ததே வெளிநாடு போய்விட்ட ஒரு உணர்வு. அங்குள்ள ஆய்வுகள் வெளிநாட்டு தரத்திலிருக்க வேண்டுமென எல்லோரும் உழைத்தனர். அத்துறைக்கு இந்தியாவின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் மாணவர்கள் வந்து சேர்ந்தனர். இந்தியா ஓர் உபகண்டம். பல்வேறு மொழிகள் பேசும், பல்வேறு இனங்கள் கொண்ட நாடு. எனவே பல்வேறு மாநிலத்தவர் வந்து சேரும் போது போது மொழியாக ஆங்கிலமே பயன்பட்டது. ஜெர்மன் கற்றுக்கொள்ள சி.ஆர்.சந்திரசேகர் ஏற்பாடு செய்தாலும், அதை அக்குழு மாணவர்கள் மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தினர். தமிழ் மட்டுமே பேச்சு மொழியாக இருந்த என் நிலை மெல்ல மாற ஆரம்பித்தது. தினப்படி ஆங்கிலம் பேச வேண்டிய சூழல். படிக்க வேண்டிய ஆய்வு நூல்கள், கட்டுரைகள் ஆங்கிலத்திலேயே இருந்தன. எழுத வேண்டிய திட்ட வரைவுகள், நிதிக் கோரிக்கைகள் ஆங்கிலத்திலேயே அமைந்தன. வெளி நாடுகளிலிருந்து நிறைய விஞ்ஞானிகள் வருவர். அவர்களுக்கு லோகல் டூரிஸ்ட் கைடு நான் தான். ஏனெனில், பலருக்கு தமிழகத்தின் கலாசாரம் தெரியாது. மீனாட்சி கோயிலிருந்து, நாயக்கர் மகால் வரைக்கும் நான்தான் வரும் விருந்தாளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதனால்  என் ஆங்கில மொழி ஆளுமை மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது.

ஆனால், இப்பூஞ்சோலைக்குள் எப்படி நுழைவது எனத் தெரியவில்லை. நல்ல வேளையாக என்னுடன் படித்த ஜி.என்.சந்திரசேகர் நான் வேலை பார்த்த ஒரு வருடத்தில் அங்கு போய் சேர்ந்திருந்தான். நானும் அவனும் நல்ல நண்பர்கள். எனவே அவனைப் போய் முதலில் சந்தித்தேன். அவன் மூலக்கூறு உயிரியல் துறையில் ஆய்வை ஆரம்பிக்க நினைத்திருந்தான். ரீடர் குந்தளா ஜெயராமன் அவர்கள் குழுவில் இருந்தான். அவன் எனக்கு பல அதிர்ச்சியான தகவல்களையும், அணுகுமுறைகளையும் காட்டினான். முதலில் தலையாணி, தலையாணியாக புத்தகங்களை முன் வைத்தான். நான் கல்லூரிக் காலங்களில் காணாத நூல்கள். புதிய, புதிய ஆய்வுத்துறை நூல்கள். இதையெல்லாம் நீ முதலில் படிக்க வேண்டும். துறைசார் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு, ஆய்வு சார்ந்த சஞ்சிகை கட்டுரைகளை வரவழைத்து படிக்க வேண்டுமென வேறொரு கட்டு கட்டுரைகளைக் காண்பித்தான். தலை சுற்றியது. ‘முதல் ஓரிரு ஆண்டுகள் படிப்பதிலேயே போய்விடும். பின்தான் நீ என்ன தலைப்பில் ஆய்வு செய்யப் போகிறாய்’ என்பது தீர்மானம் ஆகுமென்றான். சரிதான்! ஆய்வு என்பது எளிதல்ல என அறிந்துக்கொண்டேன். இதையெல்லாம்கூட சமாளித்து விடலாம், ஆனால் அவன் அடுத்து சொன்ன அணுகுமுறை அதிர்ச்சியைத் தந்தது. அதாவது ஆய்வுக் குழுக்கள் ஆய்வின் அடிப்படையில் அமைந்தாலும், மாணவர் தேர்வுகள் ஜாதீய அடிப்படையிலேயே அமையும் என்ற கசப்பான உண்மைதான் அது! இதை நான் எதிர்பார்க்கவில்லை. அருகிலிருக்கும் வேதியியல் மாணவர்கள் இதை உறுதி செய்தனர். ஆக பிராமணர், பிள்ளைமார், நாடார் இனக்குழுக்கள் அங்கு இருப்பதைக் கண்டேன். ஜாதிதான் தீர்மானிக்கும் என்றில்லை, ஆனால் அது ஓரளவு உதவும் என்றான் என் நண்பன். நான் யாரை அணுகலாமென்றும் யோசனை சொன்னான்! ’எத்தனை உயர்ந்த தந்த பீடத்தில் இருந்தாலும் இந்திய நடைமுறை ஜாதி சார்ந்தே செயல்படுகிறது’ எனும் கசப்பான உண்மையை விழுங்கினேன். அதுவே எனக்கு பெரும் தடைக்கல்லாக அமையும் என்று பின்னால் அறிந்து கொண்டேன்.

(தொடரும்)

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...