இந்த ஆட்டத்தின் ஊடாக காதல் மலர்ந்திருக்கிறது. கவிதைகள் மலர்ந்திருக்கின்றன.

இந்த ஆட்டத்தின் ஊடாக காதல் மலர்ந்திருக்கிறது. கவிதைகள் மலர்ந்திருக்கின்றன.
Published on

 நூல் அறிமுகம்
 

புதியமாதவி
 
 வாசிப்போம் தமிழ் வளர்ப்போம் குழு

 

விளையாட்டுகள் வெறும் விளையாட்டுகள் மட்டுமல்ல, அவை  கடந்து வந்திருக்கும் பாதை மனித வரலாற்றை அப்படியே பிரதிபலிக்கின்றன.

திறந்தவெளியில் விளையாடும் விளையாட்டுகளைவிட ஓரிடத்தில்
அமர்ந்து விளையாடும் விளையாட்டுகள் மனித எண்ணங்களைக் கட்டமைத்தத்தில் பெரும்பாங்காற்றி இருக்கின்றன.
அதில் செஸ்.. சதுரங்க ஆட்டம்..

அப்ப்பா.. யோசிக்கும்போது சதுரங்க ஆட்டத்தின் காய்களும்
கட்டங்களும் ஒரு வரலாறாக விரிகின்றன. இதைப் பற்றிய ஒரு புத்தகம் ரொம்பவும் சுவாராசியமான தகவல்களைக் கொண்டிருக்கிறது. அப்புத்தகத்திலிருந்து, · இந்த சதுரங்க ஆட்டம் அரச குடும்பத்தினருக்கான ஆட்டம். அரண்மனை விளையாட்டு. இதை பொதுமக்கள் ஆடுவதற்கு அனுமதி இல்லை என்று அரசு அதிகாரம் ஆணைப் பிறப்பித்திருந்த வரலாறும் உண்டு.

புராணங்களில் இதிகாசங்களில் கிறித்தவ, இசுலாமிய இந்து மத கடவுள்கள் ஆடிய ஆட்டம் இது. அதாவது அவ்வளவு சர்வ வல்லமை மிக்கவர்களின் ஆட்டம் சதுரங்கம்.

இது எங்கிருந்து புறப்பட்டது ? இதிலும் உலக நாகரிகத் தொட்டில்கள் அனைத்தும் இந்த விளையாட்டுக்கு சொந்தம் கொண்டாடுகின்றன.
கி.மு. 6000 க்கு முன் மொசபடோமியாவில் விளையாடப்பட்டது என்று ஆதாரம் காட்டுகிறார் டாக்டர் ஸ்பீசர்.

கி.மு. 5550ல் இராக்கின் வடபகுதியில் விளையாடப்பட்டது சதுரங்கம் என இன்னொரு தகவலும் உண்டு.

கி.மு. 1200ல் எகிப்து அரசன் 'அங்க் ஆமன்' கல்லறையில் சதுரங்க காய்களும் பலகையும் சேர்த்தே புதைக்கப்பட்டிருக்கின்றன. மரணித்த மன்னன் சதுரங்க ஆடுவான் என்ற நம்பிக்கையில்.

கி.மு. 2500 ல் சிந்துவெளியில் சதுரங்கம் ஆடினார்கள் என்று சொல்கிறது அகழ்வாராய்ச்சி.

டிராய் போரின்போது ஹெலனை மீட்க கிரேக்கத்தை எதிர்த்த படைவிரர்கள் பத்து ஆண்டுகள் சோர்வடையாமல் இருக்க சதுரங்கம் ஆடி, போர் உணர்வை தக்க வைத்துக்கொண்டிருந்தார்கள் என்பதும் ஒரு தொன்மக்கதை.

அதிகாரம் அரசனுக்குரியது , அவனை வழி நடத்தும் மந்திரிகள் தளபதிகள் என்றிருந்த வரலாற்றில் அரசி எப்போது வருகிறாள்? இங்கிலாந்தின் அரசியல் உலக அரசியலாக மாறுகிறது. இங்கிலாந்தின் அரசி மேரியின் அதிகாரம் சதுரங்க ஆட்டத்தின் விதிகளை மாற்றியதில் பெரும் பங்காற்றியதாக சொல்கிறார் இப்புத்தக ஆசிரியர். அத்தோடு இத்தாலியின் கேதரினா சபோர்சாவின் அதிகாரமும் ஒரு காரணமாகி அரண்மனை        ஆட்டத்தில் ராணியின் சக்தியை விரிவுப்படுத்தி மந்திரிகளை ஓவர்டேக் செய்திருக்கிறது.

இதை எப்படி எல்லாம் விளையாண்டிருக்கிறார்கள் என்று இப்புத்தகம் விவரிக்கிறது. அதில் ரொம்பவும் ரசனைக்குரியதும் அதிகாரத்தின் உச்சமும் முகலாய அரண்மனையில் விளையாண்ட சதுரங்க ஆட்டம்தான். அரண்மனையில் தரையே சதுரங்க கட்டமாகி உயிருள்ள மனிதர்கள் அந்தந்த அலங்காரத்துடன் கட்டங்களில் நிறுத்தப்படுவார்கள். அரசனும் அரசியும் ஆடுவார்களாம். அவர்கள் சொல்கிறபடி உயிருள்ள சதுரங்க காயகள் நகர்ந்து கொள்ளும். அடடா.. அதிகாரத்தின் சாறெடுத்து அருந்திப்பார்த்திருக்கிறார்கள் அரண்மனைவாசிகள். அதிகாரத்திற்கு எப்போதுமே உயிருள்ள குடிமக்கள் அரசின் விருப்பப்படி நகர வேண்டும் . இல்லைஎன்றால் அவுட் தான்! இது அரண்மனையை விட்டு இந்த விளையாட்டு விடைபெற்ற பிறகும் புதிய மக்களாட்சிக்கும் பொருந்துவதாகவே இருக்கிறது பாருங்கள்.

18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெள்ளையர்கள் ஒரு பக்கமும் இந்திய விடுதலை தளபதிகள் ஒருபக்கமுமாக வைக்கப்பட்டு வெள்ளையர் ஆட்சி ஆடிக் களித்திருக்கிறது.

கேரளாவின் சதுரங்கம் இன்னொரு காட்சியாக விரிகிறது. அதில் ராஜாவாக ஸ்ரீராமன். ராணியாக சீதாப்பிராட்டி, யானையாக விநாயகர்,
குதிரையாக கல்கி, ரதமாக கோபுரம், சிப்பாய்களாக அனுமன் படை..இந்த ஆட்டத்தில் எதிரணியில் ராஜா இராவணன்.. மற்றதெல்லாம் கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்ளுங்கள்..இப்படியாக ஒரு சதுரங்க ஆட்ட இராமாயணம் ஆடி இருக்கிறார்கள்.

இந்த ஆட்டத்தின் ஊடாக காதல் மலர்ந்திருக்கிறது. கவிதைகள் மலர்ந்திருக்கின்றன. (இது எனக்கு ரொம்பவும் விருப்பமான வரலாறாக இருக்கிறது) இந்த ஆட்டம் அரண்மனை அதிகாரத்தைக் கட்டமைத்திருப்பதில் பெரும்பங்காற்றி இருக்கிறது. காலம்தோறும் தங்கள் அதிகாரத்தை கூர்மைப்படுத்திக்கொள்ளவும் நிலை நிறுத்திக்கொள்ளவும் சிறுசிறு மாற்றங்களுடன் தொடர்கிறது சதுரங்க ஆட்டம்.
சதுரங்க ஆட்டம் புத்திசாலிகளுக்கானது என்பதும் அதனூடாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும் கருத்தியலும் இப்புத்தகம் பேசாத இன்னொரு வரலாறு.

புத்தகம் : சதுரங்கம் விளையாடுவது எப்படி?
ஆசிரியர் : டாக்டர் எஸ், நவராஜ் செல்லையா
வெளியீடு : எஸ். எஸ். பப்ளிகேஷன், சென்னை.
96 பக்கம், விலை ரூ. 35/-

 

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com