0,00 INR

No products in the cart.

அப்ரைசர் முத்துசாமி

மகேஷ் குமார்

 

திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் மெயின் ரோட்டில் இருக்கும் அந்த வங்கியின் வாசலில் காலை 9 மணிக்கே கூட்டம் நெரியும். அந்த இரண்டு தினங்களில்தான் நகைக்கடன் கொடுக்கப்படும். பெரும்பாலானோரின் கையில் ஒரு மஞ்சள்பையோ, சுருட்டிய உரச்சாக்கோ இருக்கும். தொட்டுத்தொட்டுப் பார்த்துக்கொள்வார்கள்.

“பொரட்டாசியே பொறக்கப்போகுது… காலைலயே இந்த வெயில்.. சே! இவனுக எப்ப வந்து… தொறந்து… அவனவனுக்கு வேலை வெட்டி இல்லையா?” என்று ஒரு சிலர் அலுத்துக்கொள்வார்கள்.

“ரெண்டு டேமுலயுந் தண்ணியில்ல… கெணத்துலயும் மோட்டார் இப்பவே அடி பெட்டுல இருக்கு. 5 நிமிசமுங் கோட ஓட்ட முடீல. மாரீம்மாவுங் கண்ணத் தொறங்க மாட்டீங்கறா… என்ன பொளப்போ..” என்று மற்றொருவர் புலம்புவார்.

செக்யூரிடி வந்து கதவைத் திறந்து உள்ளே போய் எல்லாம் ஒருமுறை சுற்றி வந்து சரி பார்த்துவிட்டு வரும்போதே சிவப்பு டோக்கன் வில்லைகளை எடுத்து வருவான். “பவுன் லோனெல்லாம் இப்பிடி செவுத்தோட நில்லுங்க. சும்மா காச் மூச்னு கத்தாதீங்க” என்று இறைந்துவிட்டு வரிசையாக ஆளுக்கொரு டோக்கன் கொடுப்பான்.

எல்லோரும் ரோடு முச்சந்தியையே பார்த்தவாறு நின்றால் பத்து மணிவாக்கில் “ம்ம்…ம்…ம்.. எஸ்ஸெம் வராரு.. எஸ்ஸெம் வராரு…” என்று கூட்டம் தனக்குள் பேசியபடி பரபரப்பாகும்.

‘எஸ்ஸெம்’ எனப்படும் எஸ்.முத்துசாமி பேங்கின் அப்ரைசர். பளீரென்ற வெள்ளை வேட்டி, வெள்ளை முழுக்கைச் சட்டை. காலருக்கும் கழுத்துக்கும் நடுவே பவுடர் கொட்டிய கர்சீப்.  பந்து போல உருண்டையான முகத்தில் சின்னதாக சந்தனக் கீற்றும் அதன் நடுவே திருத்தமாக ஒரு குங்குமப் பொட்டும். தடிமனான தங்க ஃபிரேம் சாளேஸ்வரக் கண்ணாடியில் குறுக்கே கோடு தெரியும். இடதுகையில் “கங்கா தங்க மாளிகை” லெதர் பேக் நெஞ்சோடு அணைத்தபடி. வலது கையில் மதிய சாப்பாடு கேரியர்.

பேங்க் வாசலுக்கு வந்ததும் நின்று பரெட் பார்க்கும் இன்ஸ்பெக்டர் போல வரிசையைப் பார்ப்பார். பல வணக்கங்களும், முறுவல்களும் பறக்கும். பேங்க் படிகளைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, லேசாக சிரித்து தலையை ஆட்டியபடி உள்ளே போவார். பேங்கின் உள்ளே மாடிப்படி சிறிது ஏறி திரும்பிச்செல்லும் இடத்தில் கீழேதான் அவருடைய சாம்ராஜ்யம். ஒயர் பின்னிய எஸ்-வடிவ நாற்காலியும், பெரிய மேசையும். அருகில் ஒரு சின்ன ஃபைல் அலமாரி. மேசை மேல் ஒரு நகைத் தராசு, மேசை விளக்கு, டார்ச் லைட் மற்றும் ஒரு சின்ன மரப் பெட்டி. பெட்டிக்குள் உரை கல், பூதக்கண்ணாடி, சின்ன இடுக்கி, துணி, பிரஷ், சின்ன குப்பியில் நகை கற்கள் சுத்தம் செய்யும் கரைசல் எல்லாம் இருக்கும். பின்னால் சுவற்றில் தனலட்சுமி காலண்டர்.

சாமக்கிரியைகள் எல்லாம் அதனதன் இடத்தில் வைத்து செட்டிலானதும் செக்யூரிடியை அழைத்து அவனுடன் வால்ட் ரூமுக்குள் போய் ரெகார்ட் டைரியை எடுத்து வருவார். அவன் முன்னிலையில் புதிய தேதி போட்டு மேனேஜர் ரூமில் சீல் வைத்துக்கொள்வார். எத்தனை டோக்கன் கொடுத்தான் என்று ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு பிறகு டோக்கன் நம்பர் காட்டும் மானிட்டரை ஆன் செய்து முதல் எண்ணை அழைப்பார்.

“வாங்கய்யா வாங்க… உக்காருங்க. என்ன வெயிலு பாருங்க… தண்ணி சாப்படறிங்களா?” என்று பாட்டிலிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொடுப்பார். வந்தவர் உட்கார்ந்து தண்ணீர் குடித்த பின்…

“ம்ம்… சொல்லுங்க. மீட்டணுமா?” என்று கேட்பார். காலை முதல் ஆசாமியிடம் கடன் வேணுமா என்று கேட்டு நாளைத் துவங்குவதில் அவருக்கு உடன்பாடில்லை. எனவே வைத்ததை மீட்கணுமா என்று கேட்பது வழக்கம்.

மீட்டுக்கொள்பவராக இருந்தால் எஸ்ஸெம்க்கு உற்சாகம் வரும். லோன் கிளியரென்ஸ் ஸ்லிப்பை சரிபார்த்து, செக்யூரிடியுடன் வால்ட் ரூம் போய் புறாக்கூடு ஒன்றிலிருந்து சரியான நகையை எடுத்து வந்து, கடன் கொடுக்கும்போது இருந்த விவரிப்புகளுடன் ஒப்பிட்டு, எடை போட்டு, கற்களை எண்ணி, ஸ்லிப்பில் கையெழுத்து போட்டு மேனேஜர் அல்லது டெபுடியை அழைத்து அவர்களிடமும் காட்டி கையெழுத்து வாங்கி, வந்தவரிடம் நகையை ஒப்புவித்து அவரிடமும் கையெழுத்து வாங்கி விட்டு, ரெகார்டில் சிவப்பு மையால் கோடு போட்டு விட்டு “நல்லபடியா பத்திரமாக் கொண்டு போங்க. சாயங்காலமா புள்ளாருக்கு ஒரு செதறுகா போட்டுருங்க” என்று சொல்லி கைகூப்பி அனுப்பிவைப்பார்.

கடன் கேட்டு வந்தவரானால் அவரது அணுகுமுறையே வேறு. பெரும்பாலும் ஊரில் அவருக்குத் தெரிந்தவர்கள்தான். வந்தவரிடம் பழனிக்குக் காவடி எடுத்தது போன்ற விஷயங்களைப் பேசிய பிறகுதான் நகைக்கு வருவார். வருபவரிடம் “லெச்சுமியை ஏன் இங்க கொண்டாந்து அடைக்கிறீங்க? பெர்சனல் லோன் எதாச்சும் முயற்சி பண்ணினீங்களா? மேனேஜர் அருமையான ஆளு. எதாச்சும் வழி இருக்கும். பாக்கறீங்களா? நானே சொல்லவா?” என்று அக்கறையுடன் கேட்பார். அந்த வழியெல்லாம் தூர்ந்து போய்விட்டது என்று தெரிந்தால் பிறகு தன் வேலையை ஆரம்பிப்பார்.

வந்தவர் படு ஜாக்கிரதையுடன் பைக்குள் பை, அந்தப் பைக்குள் பர்ஸ், அதற்குள் ஒரு ஜரிகைப் பேப்பரில் சுற்றி வைத்திருக்கும் சங்கிலியையோ, கம்மலையோ, வளையலையோ சிறு சங்கடத்துடன் எடுப்பார். இதற்குள் எஸ்ஸெம் டிராயரில் இருக்கும் சிவப்பு அல்லது பச்சைக் காகிதங்களில் ஒன்றை எடுத்து எழுந்து நின்று இரு கைகளையும் நீட்டி நகையைக் காகிதத்தில் பவ்யமாக வாங்கிகொள்வார். பிறகு உட்கார்ந்து மேசை விளைக்கைப் போட்டு அதனடியில் வைத்து நன்றாகப் பார்த்துவிட்டு “ம்ம்… அப்பப்ப சுத்தம் பண்றதே இல்லையோ” என்று சிரித்தபடியே கொஞ்சம் கிளீனரை துணியில் போட்டு நகையை சுத்தம் செய்து துடைத்துவிட்டு, சின்ன கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் தராசுக்குள் வைத்து எடை போடுவார். வெளியே எடுத்து பூதக்கண்ணாடி வைத்து பதிக்கப்பட்ட கற்கள், நெளிசல்கள், விரிசல்கள், சேதாரங்கள் எல்லாம் பார்த்துவிட்டு  அருகே இருக்கு சின்ன நோட்டில் கார்பன் காகிதம் வைத்து மேலே ஒரு “உ” போட்டுவிட்டு வந்தவர் பெயர், ஊர், தேதி, நகை விவரம், எடை, பார்த்த விவரம் எல்லாம் எழுதிக்கொள்வார்.

அதன் பிறகு வந்தவர் தன் பணப்பிரச்னையையும் நகையின் நிறைகளையும் சொல்ல, இவர் பேங்க் விதிகளையும் தான் பார்த்த விவரங்களையும் நிகர மதிப்பாக என்ன வரும் என்பதையும் சொல்ல கொஞ்ச நேரம் பேச்சு வார்த்தை நடக்கும். பின்னர் நகையை காகிதத்தில் மடித்து வந்தவரிடமே கொடுத்துவிட்டு, எழுதிய சீட்டையும், தன் பரிந்துரையையும் எழுதிக் கொடுத்து லோன் ஆபீசரிடம் அனுப்பி வைப்பார்.

“கவலைப்படாதீங்க. மற்ற விவரங்கள் எல்லாம் சரியா இருந்தா ஆபீசர் லோன் இன்னைக்கே போட்டுருவார். தை மாசம் அறுவடை இருக்கில்ல… எல்லாம் சரியாப் போகும். பழனியப்பன் பாத்துக்குவான். முருகா..” என்று கிழக்கே திரும்பி கைகூப்பிவிட்டு தைரியம் சொல்லி அனுப்புவார்.

ஒன்றிரண்டு நாட்களில் லோன் ஆபீசர் அப்ரூவல் கிடைத்துவிட்டால் மறுபடி நகையை சோதனை செய்து மதிப்பிட்டு, தேவையான படிவங்களில் விவரங்களை நிரப்பி, கையெழுத்துப் போட்டுக் கொடுப்பார். செக்யூரிடியுடன் போய் வால்டில் பத்திரமாக வைத்துவிட்டு வந்து,  “எல்லாம் நல்லபடியா நடக்கும். லெச்சுமியை இங்கயே விட்றாதிங்க. கூடிய சீக்கிரமே வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு போவீங்களாம்….” என்று முருகனைத் துணைக்கழைத்து அனுப்பிவைப்பார்.

அப்ரைசர்களுக்கு என்று வங்கிச் சம்பளம் ஏதும் இல்லை. ரிடையர்மெண்டும் இல்லை. வந்தவர்கள் கொடுக்கும் மதிப்பீடு கட்டணம், கடன் கமிஷன், மீட்கும்போது உடையவர்களாகப் பார்த்து ஏதாவது கொடுப்பது என்பதுதான் அவருக்கு வரும்படி. மற்றபடி அவர் பல நகைக்கடைகளுக்கும் மதிப்பீட்டுக்குப் போவார். அவருடைய வேட்டி சட்டையைப் போலவே அவர் மனதும் வெள்ளை. அவரின் இறுதி நாட்களில் அவரை பார்க்க வந்துகொண்டே இருந்தவர்களை அவர் குடியிருந்த வீடு இருந்த காம்பவுண்டில் இருந்தோர் பெருமையுடனும் பொறாமையுடனும் பார்த்தபடி இருந்தார்கள்.

(தொடரும்)

ஓவியம்: ராஜன்

 

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...