0,00 INR

No products in the cart.

மழை ராணி

 

டியும் மின்னலுமாய் பொழிந்து கொண்டிருந்தது பெருமழை.

வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து பெய்யும் மழையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனி.

ரஞ்சனிக்கு அவளுடைய அப்பா சூட்டி இருக்கும் செல்லப் பெயர்
மழை ராணி.

அவள் பிறந்து பத்துப் பதினைந்து நாட்களுக்குள் அவளுடைய அப்பா அவளை மழை ராணி என்று அழைக்கத் தொடங்கி விட்டார். அந்த அளவிற்கு ரஞ்சனி மழையின் தீவிர ரசிகையாக காதலியாக இருந்தாள்.

மழையை மட்டுமல்லாமல் அதற்கு இசைவாய் ஒலிக்கும் இடியும் ஒளிக்கீற்றென சட்டென்று கோடிட்டு மறையும் மின்னலும் மழைவிட்ட பின்பு வானத்தில் தோன்றும் வானவில்லும் அவளை வசீகரிக்கும் அழகுகள்.

ரஞ்சனி மெதுவாய் எழுந்து அவளுடைய வீட்டு முற்றத்தின் இறுதிப் பகுதிக்குப் போய் நின்று கொண்டு கைகளை வெளியே நீட்டி சோவென பெய்யும் மழைத்துளிகளை கைகளின் மீதும் உள்ளங்கைகளை விரித்தும் வாங்கிக் கொண்டு அதன் சில்லிடலில் சிலிர்த்துக் கொண்டாள்.

ரஞ்சனியின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்கள் மழையோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. ரஞ்சனியை மழையின் குழந்தை என்று செல்லமாய்க் கூப்பிடுவாள் ரஞ்சனியின் பாட்டி.

ரஞ்சனியை வயிற்றில் சுமந்து கொண்டு அவளைப் பெற்றெடுப்பதற்காக தாய் வீடிருந்த ஊருக்குப் போயிருந்தாள் ரஞ்சனியின் அம்மா.

ரஞ்சனியின் பாட்டி வாழ்ந்தது முழுக்க வளர்ச்சி அடைந்த நகரமும் அல்ல; எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத கிராமமும் அல்ல. இரண்டுங் கெட்டான் ஊரான ஸ்ரீவில்லிப்புத்தூர். ரஞ்சனி பிறந்த காலத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அத்தணை வளர்ச்சி அடைந்த நகரம் இல்லை.

“உங்க ஆத்தாள் கொஞ்சம் அரைகுறை அறிவுக்காரி தான். அவள்  நாள் தள்ளிப் போனதை அத்தனை சரியா ஞாபகம் வச்சு இருக்கல. ஆசுபத்திரியில மருத்துவச்சி கேட்டப்போ ஏதோ ஒரு நாளைச் சொன்னாள்; அதைவச்சு மருத்துவச்சியும் ஒரு தேதியச் சொல்லி குழந்தை பொறக்கும்னு சொல்லீட்டாள்.

அப்பயெல்லாம் இப்ப இருக்கிறது மாதிரி குழந்தையோட வளர்ச்சியை துல்லியமா கண்டுபிடிக்கிற ஸ்கேன் எல்லாம் புழக்கத்துக்கு வந்துருக்கல. ஒருவேளை பட்டணத்து ஆசுபத்திரிகளில் இருந்திருக்கலாம். ஸ்ரீவிலிப்புத்தூர் ஆசுபத்திரிகளுக்கு வந்துருக்கல.

மருத்துவச்சி குழந்தை பொறக்கும்னு குறிச்சுக் குடுத்த நாள்ல ஆசுபத்திரிக்குப் போனோம். உங்க ஆத்தாளுக்கு குழந்தை பொறக்குறதுக்கான அறிகுறியே தெரியல. அன்னைக்கு முழுவதும் வலியே வரல. சரி, வீட்டுக்குப் போயி இருந்துட்டு இலேசா வலி வந்ததும் ஆசுபத்திரிக்கு வாங்கன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. நாங்களும் வீட்டுக்கு வந்துட்டோம்.

ரெண்டு நாள் கழிச்சு உங்க ஆத்தாளுக்கு இடுப்பு வலி வந்ததும் ஆசுபத்திரிக்குக் கொண்டு போகலாம்னா அன்னைக்குப் பார்த்து மழை. மழைன்னா இலேசுபாசான மழை இல்ல. பேய்மழைன்னு சொல்வாங்களே, அப்படி ஒரு மழை. அக்கம் பக்கத்து வீடுகளே தெரியாத அளவுக்கு சாரைசாரையா அடிச்சு ஊத்துது. உங்க தாத்தாவும் வீட்ல இல்ல. அப்ப எல்லாம் ஆம்புலன்ஸ் வசதியோ வீடுகள்ல வாகன வசதிகளோ அதிகமில்ல; எனக்கோ என்ன செய்றதுன்னே தெரியல…

உங்க ஆத்தாளுக்கு வலி பெருசா வந்து துடிக்கத் தொடங்கீட்டா. எங்க தெருவுலயே நாலஞ்சு வீடு தள்ளி கொஞ்சம் வயசான அம்மா ஒருத்தங்க இருந்தாங்க. அந்தக் காலத்து மனுஷி. கொஞ்சம் கொஞ்சம் பிரசவம் பார்க்குற பண்டுவங்கள் தெரியும்.  மழையில நனைஞ்சுக்கிட்டே போய் அவங்களக் கூட்டிக்கிட்டு வந்தேன்.

அவங்களும் வந்து அவங்களுக்குத் தெரிஞ்சதை எல்லாம் பண்ணிப் பார்க்குறாங்க. பனிக்குடம் உடைஞ்சிருச்சு; ஆனால் குழந்தை வெளிய வர்றாப்புல இல்ல. வயித்த அறுத்துத்தான் குழந்தைய எடுக்கணும் போலருக்கேம்மான்னு சொல்லி பயப்படுறாங்க. ஆனால், இந்த மழையில எப்படி ஆசுபத்திரிக்குக் கூட்டிக்கிட்டு போக முடியும்?

கொஞ்ச நேரத்துல பார்த்தா குழந்தை வெளிய வர்ற வழியில தலை முதல்ல வர்றதுக்குப் பதிலா கால் அதுவும் ஒத்தைக் கால் வெளிய வருது. அம்மா புள்ளை ரெண்டு உசுருக்குமே உத்திரவாதமில்லைன்னு புரிஞ்சு போயிடுச்சு. நான் கதறி அழுகத் தொடங்கீட்டேன்.

மருத்துவக் கிழவி சமயோசிதமா ஒரு தீக்குச்சிய கிழிச்சு எரியிற தீயை ஊதி அணைச்சிட்டு அந்த கங்கை குழந்தையோட கால்ல இலேசா வைக்கவும் குழந்தை சூட்டை உணர்ந்து கால உள்ள இழுத்துக்கிச்சு. உடனேயே மருத்துவக் கிழவி குழந்தை வெளியவர்ற வாயை இறுக்க மூடிக்கிட்டு  தாயோட வயித்துல அங்கங்க அமுக்கி என்னன்னவோ சித்து வேலைகள் எல்லாம் செய்தாள்.

குழந்தை திரும்பி அதோட தலை வெளிய வரத் தொடங்குச்சு. அப்புறம் தான் எங்களுக்குப் போன உசுரு திரும்பவும் வந்துச்சு. பூமிக்கு வரும்போதே மழையைக் கூட்டிக்கிட்டு வந்தவளாக்கும் நீ…” என்று பாட்டி ரஞ்சனி பிறந்ததை கதைகதைகளாக சொல்லி இருக்கிறாள்.

ரஞ்சனி பிறந்த தகவல் ஊருக்கு சொல்லப்பட்டு பத்து நாட்களுக்கு அப்புறம் தான் அவளுடைய அப்பா ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு மகளைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார். அவர் வந்த தினத்திலும் இலேசான மழை பெய்திருக்கிறது.

ரஞ்சனியின் அப்பா குழந்தையைக் கையில் தூக்கவும் அவருடைய பெரிய மீசை, முரட்டு முகம் எல்லாம் பார்த்து விடாமல் அழுதிருக்கிறது குழந்தை. எவ்வளவு கொஞ்சியும் குழந்தையின் அழுகை நிற்கவே இல்லை.

’ஏண்டா செல்லம் அழுகுற? உன் அப்பாடா….!’ என்று சொல்லிக் கொண்டே வராண்டாவிற்கு குழந்தையைக் கொண்டு வந்திருகிறார். குழந்தை மழையைக் கொஞ்சம் அதிசயமாய்ப் பார்த்திருக்கிறது. ஆனால் அழுகை நிற்கவில்லை.

குழந்தைப் பிறந்த சில நாட்களில் அதை வெயிலுக்குக் கொண்டுபோய் காட்ட வேண்டுமென்பது ஐதீகம். ஆனால், ரஞ்சனி பிறந்ததிலிருந்தே மழை பெய்து கொண்டு மழை இல்லாத போதும் வெயிலே வராமல் எப்போதும் மேகமூட்டமாய் இருந்ததால் அவளை வெயிலுக்குக் கொண்டுபோய் காட்டுவதற்கான தோது அமையவில்லை.

ரஞ்சனியின் அப்பாவிற்கு அவளை வெயிலுக்குக் காட்டுவதற்குப் பதிலாக மழைக்குக் காட்டலாம் என்று மனதுக்குள் தோன்றவும்,  குழந்தையின் பூச்செண்டு போன்று இருந்த மெல்லிய சின்னக் கையை பெய்யும் மழைக்குக் காட்டி இருக்கிறார் ரஞ்சனியின் அப்பா. மழைத்துளிகள் கையில் படவும் சிலிர்த்துப் போய் அப்பனைப் பார்த்து அழுது கொண்டிருந்த குழந்தை சிரிக்கத் தொடங்கி இருக்கிறது. அதற்கப்புறம் குழந்தை  எப்போது அழுதாலும் அது மழைநாளாக இருந்தால் மழையைப் பார்த்ததும் குழந்தை அழுகையை நிறுத்திக் கொள்வதைக் கவனித்தார்கள்.

அவளுக்கு ‘ரஞ்சனி’ என்று பெயர் சூட்டி இருந்தாலும் அவளுடைய அம்மா பாட்டி அப்பா எல்லோருமே அவளை ‘மழை ராணி’ என்றுதான் அழைத்து செல்லம் கொஞ்சுவார்கள்.

ரஞ்சனி வளர வளர மழையில் போய் ஆட்டம் போடுவது அதிகரித்தது. ரஞ்சனிக்கு காய்ச்சலோ சளியோ பீடித்துக் கொள்ளுமோ என்று அவளின் அப்பாவும் அம்மாவும் பயந்து அவளைக் கண்டித்தார்கள். ஆனால், மழையின் ரம்மியமான ஈரம் ரஞ்சனியின் உடம்பை ஒன்றுமே செய்ததில்லை.

ரஞ்சனி ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த போது ஒரு மழைநாளில் தான் அவளுடைய அப்பாவை பிணமாகக் வீட்டிற்குக் கொண்டு வந்தார்கள்.

அப்பா மின்சார வாரியத்தில் ஃபோர்மேனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மழைநேரத்தில் மின்சார இணைப்பில் உள்ள பிரச்னையை சரிபண்ணிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக எலக்ட்ரிக் ஷாக் அடித்து உயரமான கம்பத்தில் இருந்து கீழே விழுந்து அந்த இடத்திலேயே அப்பா இறந்து போனார்.

அப்பாவின் அகால மரணத்தினால் அம்மா மிகவும் உடைந்து போனாள்.  தெற்கு வடக்குத் தெரியாத அம்மா; எல்லாவற்றிற்கும் அப்பாவை மட்டுமே சார்ந்திருந்த அம்மா. அப்பாவின் இறப்பிற்குப் பின்னால் வீட்டில் வறுமை தலைகாட்டத் தொடங்கியது. ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருந்தும்  ரஞ்சனியால் கல்லூரியில் சேர்ந்து படிக்க  முடியவில்லை.

அப்பா பணியில் இருக்கும் போது இறந்து போயிருந்ததால் மின்சார வாரியத்தில் இருந்த அப்பாவின் நண்பர்கள் அரசுடன் போராடி மின்சார வாரியத்தில் ரஞ்சனிக்கு வேலை வாங்கிக் கொடுத்தார்கள்.  ரஞ்சனி கிளார்க்காக மின்சார வாரியத்தில் வேலையில் சேர்ந்த முதல் நாளிலும் மழை பெய்தது என்பது ஆச்சர்யமான விஷயம்தான்.

ரஞ்சனி வேலைக்குப் போனபின்பு தான் வீட்டில் மறுபடியும் மலர்ச்சி வந்தது. வயிறார மூன்று வேளைகளும் சாப்பிடவும் வாய்த்தது.

ரஞ்சனி சிறு பெண்ணாக இருந்த போது சாப்பாட்டுக்காகவும் இட்லிக்காகவும் ஊற வைத்திருக்கும் அரசியை ஆசை ஆசையாக அள்ளிச் சாப்பிடுவாள். ஈர அரிசியின் ருசி அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். அம்மா கூட அவ்வப்போது திட்டுவாள்.

”நனைய வச்ச அரிசியை சாப்பிடக் கூடாதுடி. அப்படிச் சாப்பிட்டா உன் கல்யாணத்தன்னைக்கு மழை பெய்யும்னு பெரியவங்கள் சொல்வாங்கடி….”

”அய்யோ, கல்யாணத்தன்னைக்கு மழை பெய்றது என்பது எத்தனை அற்புதமான விஷயம். மழை பெய்தால் நல்லது தானே, பெய்யட்டும்மா…..”

”அசடு மாதிரி பேசாதடி; மழை பெய்தா கல்யாணக் காரிங்கள் எப்படிடீ ஒழுங்கா நடக்கும்? நசநசன்னு எரிச்சலா இருக்கும். கல்யாணத்துக்கு ஆட்களே சரியா வர மாட்டாங்க; வந்திருக்கிற ஒன்னு ரெண்டு பேரும் பொண்ணையும் மாப்பிள்ளையையும் திட்டுவாங்கடி…..” என்றாள் அம்மா சிரித்தபடி.

தன்னுடைய திருமண தினத்தில்  மழை பெய்தால் அது கடவுளின் ஆசீர்வாதமாக இருக்கும் என்று ரஞ்சனி மழையை வரவேற்கவே காத்திருந்தாள். ஆனாலும் அவளுடைய திருமணத்தில் பொட்டு தூத்தல் கூட விழவில்லை.

அம்மாவிடம் கூட “என்னம்மா நான் தின்ன அரிசிக்கு என் கல்யாணத்துக்கு அஞ்சு நாளைக்காவது அடாது மழை பெய்யும்னு சொல்லி இருந்த? ஆனால் சூரியன் இப்படி பொளந்து கட்டுது…..” என்று சொல்லி சீண்டவும் அப்போதும் அம்மா சிரித்துப் போனாள்.

ரஞ்சனியின் கல்யாண நாளில் பெய்யாத மழை அவள் புருஷனுடன் சேர்ந்து வாழ முடியாது என்று தீர்மானித்து புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்கு வந்த தினத்தில் பெய்து தீர்த்தது. ரஞ்சனியின் மனசில் இருந்த துயரங்களை எல்லாம் கழுவிப் போவதற்காகவே அந்த மழை பெய்ததாக ரஞ்சனி நினைத்துக் கொண்டாள்.

ரஞ்சனியின் அலுவலகத்திற்கு ஆடிட்டிங்கிற்காக தலைமை அலுவலத்தில் இருந்து வந்திருந்த மனோகரனின் கண்ணில் ரஞ்சனி பட்ட தினம் கடவுளால் சபிக்கப்பட்ட தினமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்பதை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை. வானம் நிர்மலமாக மழைக்கான அறிகுறிகளே அற்று இருந்தது.

கண்டதும் காதல் என்பார்களே, அப்படித்தான் தனக்கும் காதல் பீறிட்டு விட்டதாய் மனோகரன் ரஞ்சனியிடம் பிதற்றினான்.

ரஞ்சனிக்கு அவன் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்கிற இலேசான தயக்கம் இருந்தாலும் அவளுக்கும் அவனை அந்த நிமிஷத்தில் பிடித்துத் தான் இருந்தது.

மனோகரன் சில நாட்களிலேயே அவனுடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு ரஞ்சனியின் வீட்டிற்கு அவளைப் பெண் கேட்க கிளம்பி வந்து விட்டான்.  மின்வாரியத்தில் பெரிய அதிகாரியான அவன் தன்னுடைய மகளைப் பெண்கேட்டு வந்ததும் ரஞ்சனியின் அம்மா திக்கு முக்காடித்தான் போனாள்.

ரஞ்சனி மனோகரனை மணந்து கொள்வதற்கு ஒரே ஒரு கண்டிஷன் தான் போட்டாள். திருமனமான பின்பும் தன்னுடைய சம்பளத்தில் ஒரு சிறு பகுதியை அம்மாவிற்கு அனுப்புவதற்கு மனோகரன் வீட்டில் சம்மதிக்க வேண்டும் என்பதுதான் அது.

ரஞ்சனியின் அம்மாவின் வாழ்வாதாரத்திற்கு வேறு வழியும் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட மனோகரனின் குடும்பம் ரஞ்சனியின் கண்டிஷனுக்கு ஒத்துக் கொண்டு, திருமணமும் நடந்தேறியது.

மனோகரனின் குடும்பம் மிகப் பெரியதாக இருந்தது. வாழாவெட்டியாக வீட்டோடு வந்து தங்கி விட்ட அக்காள், கல்லூரியிலும் பள்ளியிலும் படித்துக் கொண்டிருந்த மனோகரனின் இரண்டு தம்பிகள் மற்றும் ஒரு தங்கை. நிரந்தர நோயாளியான அப்பா. குடும்பத்தில் அதிகாரம் செலுத்தும் அம்மா.

நாலைந்து மாதங்களுக்கு ரஞ்சனி அவளின் சம்பாத்தியத்தில் ஒருசிறு பகுதியை அவளுடைய அம்மாவிற்கு அனுப்பியதை சகித்துக் கொண்டவர்கள் அப்புறம் ஆட்சேபிக்கத் தொடங்கினார்கள்.  ஒவ்வொரு மாதமும் சண்டையாக ரஞ்சனிக்கு வீடு நரகமானது.

ஆண்கள் மட்டும் அவர்களின் அப்பா அம்மா உடன் பிறந்தவர்கள் எல்லோரையும் தங்களுடனேயே வைத்துக் கொண்டு ஆதரிப்பார்களாம். ஆனால், பெண்கள் மட்டும் திருமணமானதுமே தன்னுடைய பிறந்த வீட்டிலிருந்து முற்றாக துண்டித்துக் கொள்ள வேண்டுமாம்.

பெண்ணின் பெற்றோர் நிராதரவான நிலையில் தினப்படி வாழ்க்கையை நகர்த்தவே வருமானம் எதுவுமின்றி இருந்தாலும் அவர்களின் பெண்ணின் சம்பாத்யத்திலிருந்து பெற்றோர்களுக்கு ஒரு பைசாவும் தரக்கூடாதாம். இந்த சமூகம்  செய்திருக்கும் ஏற்பாடு மிகமிக ஓரவஞ்சணையாக இருப்பதாகத் தோன்றியது ரஞ்சனிக்கு.

ஆரம்பத்தில் வாய் வார்த்தையாக ரஞ்சனி அவளுடைய அம்மாவிற்கு பணம் அனுப்பக் கூடாது என்று சொன்ன மனோகரன் போகப்போக வன்முறையையும் பிரயோகிக்கத் தொடங்கினான். இனியும் அவனுடன் சேர்ந்து வாழ முடியாது என்பதை உணர்ந்ததும்  ரஞ்சனி அவளுடைய வீட்டிற்குப் போய்விட்டாள்.

ரஞ்சனியின் அம்மாவும் அவளுடனே சண்டைக்குப் போனாள். “எனக்கு பணம் அனுப்பனும்னு முரண்டு பிடிச்சு உன்னோட வாழ்க்கையை சீரழிச்சுக்க வேணாண்டி. என்னோட ஒத்த வயித்துக்கு என்னால சம்பாதிச்சுக்க முடியும். நாலு வீட்டு வாசலை பெருக்கி தண்ணி செழிச்சுக்கூட என் வயித்துப்பாட்டை சமாளிசுக்குவேன். அதனால வா உன்னை மாப்பிளை வீட்டுக்குப் போயி அவங்கள சமாதானப்படுத்தி உட்டுட்டு வர்றேன்….” என்றாள்.

ரஞ்சனி ஏற்றுக் கொள்ளவில்லை. ”உன்னோட பொண்ணு நான் சொளைசொளையா சம்பாதிக்கும் போது நீ ஏன்மா நாலுவீட்ல வேலை செஞ்சு வயித்தை ரொப்பனும். அவரு மட்டும் அவரோட அம்மா அப்பா அக்காள் தம்பி தங்கைன்னு அத்தணை பேரை ஆதரிக்கும் போது நான் என்னோட அம்மாவை ஆதரிக்கக் கூடாதா….?” என்று சொல்லி அம்மா வீட்டிலேயே இருந்துகொண்டாள்.

மனோகரன் வீட்டிலும் அவளைச் சமாதானப்படுத்த பெரிதாய் மெனக்கெடவில்லை.

ரஞ்சனிக்கு மறுபடியும் திருமணம் செய்துவிட அவளுடைய அம்மா நாலுபேரிடம் சொல்லிவைத்து வரன் தேடிக் கொண்டிருந்தாள்.

ரஞ்சனியின் அலுவலகத்தில் முருகேஸ்வரி என்னும் பெண் தொலைதூர கிராமம் ஒன்றிலிருந்து புதிதாய் வேலைக்கு வந்து சேர்ந்திருந்தாள். ஏனோ சொல்லத் தெரியாத இனம்புரியாத பிரியம் ரஞ்சனிக்கு அவள்மீது ஏற்பட்டதில் இருவரும் நெருக்கமாகப் பழகத் தொடங்கினார்கள்.

தொடக்கத்தில் முருகேஸ்வரி பெண்கள் விடுதி ஒன்றில் தங்கித்தான் வேலைக்கு வந்து கொண்டிருந்தாள். ரஞ்சனியுடன் சிநேகம் ஏற்பட்டதும், அவ்வப்போது ரஞ்சனியின் வீட்டிற்குப் போகத் தொடங்கி ஒருகட்டத்தில் ரஞ்சனியின் வீட்டிலேயே பேயிங் கெஸ்ட்டாக தங்கிக் கொள்ளத் தொடங்கினாள்.

அவளுக்கு திருமணம் பேசி முடிவானதும், பதினைந்து நாள் விடுப்பு எழுதிக் கொடுத்துவிட்டு ஊருக்குக் கிளம்பியவள், “நீங்களும் என்கூட வாங்கக்கா, எங்க கிராமத்துல கொஞ்சநாள் இருந்துட்டு வரலாம்…” என்று அழைத்தாள்.

”இப்பவே உன்கூட வந்து நான் என்ன செய்யப் போறேன்? உன் கல்யாணத்துக்கு முதல்நாள் வர்றேன் புள்ள…” என்று ரஞ்சனி சொன்னதை முருகேஸ்வரி ஏற்றுக்கொள்ளவில்லை.

“ஆபீசு, அதைவிட்டா வீடுன்னு செக்குமாடு மாதிரி தினசரி வேலைக்குப் போய் வந்துக்கிட்டுதான இருக்கிறீங்க. என்கூட வாங்கக்கா. எங்க கிராமம் உங்களை மாதிரியே ரொம்பவும் அழகா இருக்கும்க்கா; உங்க மனசுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்க்கா…” என்று அவள் வற்புறுத்தி அழைத்ததும் ரஞ்சனியால் தட்ட முடியவில்லை.

ரஞ்சனியின் அம்மாவும் “போயிட்டுத் தான் வாயேம்மா….”  என்று பச்சைக் கொடி காட்டியதும் ரஞ்சனியும் முருகேஸ்வரியுடன் கிளம்பினாள்.

கொப்புசித்தன்பட்டி என்கிற முருகேஸ்வரியின் கிராமம் பந்தல்குடியிலிருந்து நாலைந்து கி.மீ தூரத்தில் பேருந்தே போகாத பிரதான சாலையிலிருந்து வெகுவாக தள்ளி அமைந்திருந்தது. முருகேஸ்வரியின் அப்பா மாட்டுவண்டி கட்டிக் கொண்டு வந்து பந்தல்குடியிலிருந்து இருவரையும் அழைத்துப் போனார்.

மாட்டுவண்டிப் பயணத்தின்போது இருபுறமும் பச்சைப் பசேலென்று விவசாயம் செழித்துக் கிடந்த நிலங்கள் கண்ணுக்குக் குளிர்ச்சி ஊட்டியபடி கூடவே வந்து கொண்டிருந்தன. அதுவரை ரஞ்சனி அசல் கிராம வாழ்க்கையை அறிந்ததே இல்லை.

சேவல் கூவி பொழுது விடியும் என்பதை அவள் புத்தகங்களில் மட்டுமே வாசித்திருக்கிறாள். அங்குதான் நேரில் பார்த்து அதிசயித்தாள். கிணற்றடியில் குளிக்கிற புதிய அனுபவமும் கிடைத்தது. நீச்சல் தெரிந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றியது ரஞ்சனிக்கு.

முருகேஸ்வரியின் கிராமத்தில் தான் விதவிதமான காட்டுக்கீரைகளையும், அதலைக்காய், மிதுக்கங்காய், தட்டாங்காய்கள் என்று பலவற்றையும் பச்சையாகவும் சமைத்தும் சாப்பிடக் கொடுத்தார்கள்.             கம்மங்கருதுகளை தீயிலிட்டு வாட்டியும் தின்னக் கொடுத்தது அத்தணை ருசியாக இருந்தது.

பல சந்தோஷங்களையும் ருசிகளையும் அறிமுகப்படுத்திய கிராமம்தான் மீளமுடியாத துக்கத்திற்கும் அவளை ஆட்படுத்தியது. அந்தத் துக்கமும் ஒரு மழைநாளில் ரஞ்சனிக்கு நிகழ்ந்தது.

ஒருமுறை கிராமத்தினருடன் காட்டுக்குப் போயிருந்த போது சாயங்காலம் பேரிரைச்சலுடன் மழை பெய்தது. மழையின் காதலியான ரஞ்சனி பரவசமானாள். காட்டில் வெட்டவெளியில் பெய்யும் மழை வேறுவிதமான அழகுகளுடன் இருப்பதை ரசித்துக் கொண்டிருந்தாள்.

ஆலங்கட்டி மழை என்பதை ரஞ்சனி கேள்விதான்பட்டிருந்தாள். அன்றைக்குத்தான் ஆலங்கட்டி மழை என்னும் ஐஸ்கட்டிகள் வானத்திலிருந்து விழுவதைக் கண்டு பரவசமுற்று அதை கைகளில் ஏந்தி சிலிர்த்துக் கொண்டிருந்தாள். அப்போது தான் வானத்தில் கடகடவென பெரும் சத்தத்துடன் இடித்து அதீத வெளிச்சத்துடன் மின்னல் ஒன்று கோடிழுத்தது போல் ஓடி மறைந்தது.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனி திடீரென்று இரண்டு கண்களிலும் மின் அதிர்வைப் போல் சுரீரென்று ஒருவலியை உணர்ந்தாள். அவளால் கண்களைத் திறக்கவே முடியாத அளவிற்கு வலி. கதறிவிட்டாள்.

கிராமத்தில் அங்கிருந்தவர்கள் எல்லோருமே பதறி அடித்துக் கொண்டு வண்டிகட்டிக் கொண்டு அவளை மருத்துவமனைக்குக் கொண்டு போனார்கள். ஆனாலும் கிராமத்தில் பெரிய வசதிகள் ஏதும் இல்லாததால் காலங்கடந்து தான் மருத்துவமனைக்கு கொண்டு போக  முடிந்தது. ரஞ்சனியுனுடைய கண்களை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

“வீட்டுக்குள்ள வாடிம்மா… மழையில கண்ணுரெண்டும் அவிஞ்சும் உனக்குப் புத்தியே வர மாட்டேன்கிறதே….” என்று செல்லமாய் கடிந்து கொண்டாள் ரஞ்சனியின் அம்மா.

மழை பெய்யும் அழகை ரசிக்க விடமாட்டேனென்கிறாளே அம்மா என்று மனசுக்குள் அம்மாவைத் திட்டியபடிதான் சுவற்றைத் தடவித்தடவி மெதுவாய் வீட்டுக்குள் நடந்து போனாள் மழைராணி என்று அறியப்படுகிற ரஞ்சனி.

 

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...