0,00 INR

No products in the cart.

தல யாத்திரை செய்யும் அளவு பிரபலமான கோயில்கள் உள்ள நாடு அது!

உலகக் குடிமகன் – 31 

நா.கண்ணன்

ரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பானும், ஜெர்மனியும் கடும் உழைப்பு போட்டு முன்னேறிய பின்னும் தக்கார் யார்? தகவிலார் யார்? எனச் சொல்லி அமெரிக்காவும், இங்கிலாந்தும் இந்த நாடுகளை அடக்கியே வைத்திருந்தன. அமெரிக்காவின் இராணுவம் இந்த நாடுகளில் “கண்காணிப்புப் படை” என்ற பெயரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதற்கான செலவுகளை இந்த நாடுகளே தாங்கிக் கொள்ளவேண்டும் என்பது ஒப்பந்தம். அதன்படி கீல் நகரில் ஆங்கிலத் துருப்புகள் இருந்தன. ஜப்பானின் ஒக்கினவாத் தீவில் அமெரிக்கத் துருப்புகள் இருந்தன. ஒரு நிலையில் இது பெரிய உள்நாட்டு அரசியல் பிரச்னை ஆகிப் போனது. ஜெர்மானியருக்கு அமெரிக்கர்களைப் பிடிக்கவில்லை, ஜப்பானிலும் இதே மனப்பான்மைதான். ஏதோ வேண்டாத சனியனைத் தோளில் தொங்கப் போட்டு வைத்திருப்பது போன்ற மன உளைச்சல். இந்தப் பகை உணர்ச்சி எத்தகையது எனத் தோக்கியோ விமான நிலையத்தில் ஒருமுறை பார்த்தேன்.

குடிநுழைவுக் கவுண்டரில் ஒரு அமெரிக்கனுக்கும், ஜப்பானிய அதிகாரிக்கும் உரசல். ஜப்பானியருக்கு ஆயிரம் முகம் என்பார்கள். எவ்வளவுதான் உள்ளே கடுப்பு இருந்தாலும் அதை வெளியே காட்டவே மாட்டார்கள். சிரித்த முகத்தோடு பணிவோடு நடந்து கொள்வர். ஆனால் அமெரிக்கர்கள் அப்படியல்ல. தான் உயர்ந்தவன் என நினைத்தால் அப்படியே நடந்து கொள்வர். வாக்குவாதம் முற்றுவதைக் கவனித்தேன். இதில் இன்னொரு சிக்கலும் இருந்தது. அதுதான் மொழி. ஜப்பானியருக்கு ஆங்கிலம் வராது. அமெரிக்கர்களும், ஆங்கிலேயரும் ஆங்கிலம் உலக மொழி என்று சொல்லி வேறு மொழி பேச மாட்டார்கள். ஒருவருக்கொருவர் என்ன பேசிக் கொண்டார்களோ? திடீரென்று அந்த வெள்ளை அமெரிக்கன் படீரென்று ஜப்பானிய அதிகாரியின் முகத்தில் ஒரு அறை விட்டு நகர்ந்து விட்டான். பணிவிற்குப் பெயர் போன ஜப்பானியருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. கையில் துப்பாக்கி, கம்பு எல்லாம் இருக்கிறது. ஆயினும் ஒன்றும் செய்யவில்லை. பிடிக்க முயன்றார்கள். அமெரிக்கரின் தைர்யம் என்னவென்றால் இதை உடனே அமெரிக்க ஜனாதிபதி வரை எளிதாக எடுத்துக் கொண்டு போய் விட முடியும் என்பது. அங்கு குடியுரிமை சாசனத்திற்கு அத்தனை மதிப்பு. அமெரிக்கர் பின்னால் இவர்கள் ஓடுவது வரைதான் தெரிந்தது. எனது விமானத்தைப் பிடிக்க நான் பின் விரைந்து விட்டேன்.

கையில் துப்பாக்கி இருந்தாலும் சுட முடியாத ஜப்பானியரின் பணிவு எனக்குப் புரிந்தது. ஜப்பானியர் தினம் இரவு குடிப்பதற்குக் காரணம் மன அழுத்தமே. சொல்ல முடியாத வேதனை என்பது ஒவ்வொரு ஜப்பானியரின் உள்ளத்திலும் எப்போதும் இருக்கும். ஒருமுறை ஒரு வெள்ளந்தியான ஜப்பானிய சுற்றுலாப் பயணி கலிபோர்னியாவைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். தவறுதலாக ஒரு பெரிய வீட்டின் கொல்லையில் நடந்து போய் கொண்டிருந்திருக்கிறார். எங்கிருந்தோ ஒரு குரல், “ஃபீரீஸ்” என்று. இப்படியொரு கட்டளை வந்தால் சத்தம் போடாமல் நின்று விட வேண்டும். அவர்கள் வந்து சோதித்து அனுப்பும் வரை. ஆனால் இந்த அப்பாவி ஜப்பானியருக்கு அது புரியாமல் மேலும் நடந்திருக்கிறார். மேலுமொரு எச்சரிக்கை. அதை அவர் மதிக்கவில்லை எனக்கருதி செக்குரிட்டி கார்டு அவரை சுட்டுத் தள்ளிவிட்டான். இதை அமெரிக்கா அனுமதிக்கிறது. இச்செய்தி ஜப்பானில் வெளியான போது ஜப்பானே திகைத்து நின்றது, என்ன பண்பாடற்ற செயலென்று. அதுதான் ஆசியர்களுக்கும், அமெரிக்கர்களுக்குமுள்ள வித்தியாசம். மதுரைப் பல்கலைக் கழகத்திலிருந்து அமெரிக்கா படிக்கப்போன மாணவரொருவர் இப்படித்தான் தாதாகளுக்குள் நடந்த துப்பாக்கி சூட்டில் அறியாமல் இடையிலிருந்து குண்டடி பட்டுச் செத்தார். அப்போது எங்களுக்கெல்லாம் குலை நடுங்கியது. மதுரை செல்லூரிலும் இப்படி ரவுடிக் கூட்டங்கள் ரகளை பண்ணுவதுண்டு. கண்ணாடி பாட்டில்கள் பறக்கும். ஆனால் கிராஸ் பயஃரில் செத்தான் என்று கேள்விப்பட்டதில்லை. அமெரிக்கா ஒரு துப்பாக்கி கலாசாரம். எத்தனையோ எதிர்பாராத அசம்பாவிதங்கள் அங்கு நடந்த பின்னும் ‘கன் லா’ எனும் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை மட்டும் அவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.

அந்த வகையில் ஜெர்மனியும், ஜப்பானும் மிகவும் பாதுகாப்பான நாடுகள். இரண்டிற்கும் பெரிய பாரம்பரியமுள்ளது. இந்த நாடுகளில் இரவு உணவிற்குப் பின் சாவகாசமாக தெருவினில் நடக்கும் வழக்கமுண்டு. ஐரோப்பிய நாடுகளுக்குப் போவதின் ஈர்ப்பே இத்தகைய மாலை/இரவு நடைகள்தான். இதே பழக்கத்தில் கொலம்பியா நகரில் இரவு உணவிற்குப் பின் நடை போகலாமா? எனக் கேட்டேன். ஹோட்டல் டெஸ்கில் இருந்தவர் மிரண்டுவிட்டார். என்ன விபரீத வேண்டுகோள் என எனக்கு விளக்கினார். நான் அடுத்த நாள் இது குறித்து விருந்தோரிடம் பேசியபோது, எனக்கு விளக்கி, உங்களுக்கு நடைதானே போக வேண்டும், வாருங்கள் மார்க் டுவெயின் நடந்த ஆற்றோரப்பாதைக்கு பகலில் அழைத்துப் போகிறேன் என அழைத்துப் போனார். மிசிசிபி ஆறு அழகாக ஓடிக் கொண்டிருந்தது. நான் வேலை நிமித்தம் அமெரிக்கா பலமுறை போயிருக்கிறேன், வடக்கு, தெற்கு, மேற்கு கிழக்கென்று எல்லாத்திசைகளிலும் பயணப்பட்டுள்ளேன்.

அமெரிக்கா மிக, மிக அழகான நாடு. நயாக்கரா நீர் வீழ்ச்சியா? கிராண்ட் கெண்யனா? ரெட்வுட் பாரஸ்ட் எனப்படும் செம்மரக் காடுகளா? ஸ்மோக்கி மவுண்டன் எனும் மஞ்சு மலையா? எதைச் சொல்வது எதை விடுவது? அதுவொரு அழகான நாடு. ஆன்மீகத்திலும் நாட்டமுள்ள நாடு. சாந்தாஃபீ போன்ற ஆன்மீக கிராமங்கள் நாட்டமுள்ளோருக்கு சொர்க்கம். வெறும் 50 டாலர் கையில் வைத்துக் கொண்டு 65 வயதில் அமெரிக்கா போன ஸ்வாமி பிரபுபாதாவை எப்படித்தூக்கித் தலையில் வைத்துக் கொண்டது அமெரிக்கா! பிட்ஸ்பெர்கா? மாலிபூவா? எத்தனை திருப்பதிகள் அங்கு? அமெரிக்கா சென்று தல யாத்திரை செய்யும் அளவு பிரபலமான கோயில்கள் உள்ள நாடு அது!

மற்ற நாடுகள் போல் அமெரிக்காவை விளக்கிவிட முடியாது. ஒவ்வொரு மாநிலப் போக்கும் ஒவ்வொரு விதமாயிருக்கும். மேலும் பூகோள அறிவு என்பது சாதாரண அமெரிக்கனுக்குக் குறைவு. என்ன இல்லை இந்தத் திருநாட்டில்! என்று வளர்த்திருக்கிறார்கள். எனவே, அமெரிக்கா தவிர அவர்களுக்கு வேறொரு உலகம் இருப்பதே தெரியாது. ஒருமுறை அமெரிக்கா சென்ற ஸ்பெயின் நாட்டவரிடம் ஒரு அமெரிக்கர் கேட்டிருக்கிறார், எங்கிருந்து வருகிறீர்களென்று. இவன் கான்சாஸ் சிடி, எல்லே, நியூயார்க் என்று ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்த்திருக்க இவன் ஸ்பெயின் என்று சொல்லியிருக்கிறான். அமெரிக்கனுக்கு முகத்தில் ஈயாடவில்லை. அது என்ன ஸ்பெயின்? எந்த மாநிலத்தில் உள்ளது என்று கேட்டிருக்கிறான்! நான் ஜப்பானிலிருந்த காலத்தில் ஒரு அமெரிக்கத் தம்பதியர் வந்தனர். அந்த அம்மா, நான் யார், எந்த ஊர், இந்துவா? என்றெல்லாம் கேட்டுத்தெரிந்து கொண்டார்கள். என்னைப் பார்த்து அந்த அம்மா, “நீங்கள் இந்துதானே! ஏன் இந்தியாவில் இந்துப் பெண்கள் கூரையில் நடக்கிறார்கள்? என்று கேட்டு விட்டார். எனக்குத் தலையும் புரியலை காலும் புரியலை. கூரையில் குரங்கு நடக்கும்? நம் பெண்கள் நடப்பரா? எப்படிப் பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அந்த விஞ்ஞானியும் என்னை ஆச்சர்யத்தில் மூழ்கினார். உலகின் மிக ஆழமான நன்னீர் ஏரி அமெரிக்காவிலுள்ள கிரேட் லேக்ஸ் என்றார். நான் இல்லை என்றேன். அவருக்கு அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரஷ்யாவிலுள்ள பைக்கேல் ஏரிதான் உலகிலேயே மிக ஆழமான ஏரி என்றேன். அங்கு நன்னீர் டல்பினெல்லாம் உண்டு என்று நான் சொன்னபோது அவரது அமெரிக்கப்பீடு தாக்கப்பட்டது. அமெரிக்கா, கனாடாவைப் பிரிக்கும் கிரேட் லேக்ஸ் (மாவேரிகள்) மிகப்பெரிய ஏரிகள். நான் நேரில் பார்த்த போது அசந்துவிட்டேன். ஏரியில் அலையடித்து நான் பார்த்ததில்லை. அடுத்த கரை தெரியாத அளவு கடல் போன்றது. அந்த ஏரியில் பயணப்பட்டு மூழ்கிய கப்பல்களெல்லாம் உண்டு. எனவே, அதுவே பெரிது என நம்பிவிட்டார். எனக்கு பைக்கல் போக வேண்டுமென்று ஆசை. ஆனால் நான் வந்த பிறகு எனது சகா தனாபே சான் சென்று வந்தார். நான் வித்திட்ட கனவு அது.

இங்கிருந்து அமெரிக்கா சென்ற நம்மவரும் இதுபோல் வெள்ளந்தியாகக் கேள்வி கேட்பதைக் கண்டுள்ளேன். அமெரிக்கன் கல்லூரியிலிருந்து நாஷ்வெல் சென்ற ஒரு விஞ்ஞானி நான் ஜெர்மனியிலிருந்து வருகிறேன் என்றவுடன், என்னிடம் கேட்டார். அமெரிக்காவிலுள்ளது போல் பெரிய ட்ரெக்கெல்லாம் அங்குண்டா? என்று. இந்தியாவிலேயே இருக்கிற லாரிகளெல்லாம் பென்ஸ் லாரிகளாக உள்ள போது மெர்சிடிஸ் பென்ஸ் உள்ள ஜெர்மனியில் பெரிய ட்ரெக் இல்லாமலா? நான் இருந்த காலத்தில் போக்ஸ் வாகனின் லேடிபக் கார் ரொம்பப் பிரபலம். இப்போது அந்த மாடல் வருவதில்லை. கார்களுக்குப் புகழ் போன இங்கிலாந்தில் இப்போது கார் உற்பத்தியே இல்லை. எல்லாவற்றையும் ஜெர்மன் கம்பெனிகள் வாங்கிவிட்டதே உண்மை. அதேபோல் அமெரிக்கக் கார் உற்பத்தி என்பதை ஒட்டு மொத்தமாக ஜப்பானும், கொரியாவும் குத்தகைக்கு எடுத்துவிட்டன.

நான் என் வீட்டிற்கு வாஷிங் மெஷின் வாங்கும் போது விற்பனையாளரிடம் கேட்டேன், இது இங்கிலாந்து பிராண்டுதானே (விர்ல்பூல்) என்று. அவர் சிரித்துக் கொண்டே மோட்டார் மட்டும் அவர்களுடையது மற்ற எல்லாம் ஜப்பான், தைவான் என்றார். நான் தைவான் இருமுறை போயிருக்கிறேன். கடின உழைப்பாளிகள். இப்போது என்னடாவென்றால் உலகில் எங்கு போனாலும் சீனா சரக்குதான். இந்தியக் கடவுளரெல்லாம் சீனாவில்தான் உற்பத்தியாகின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய இராமானுஜர் சிலை கூட சீனாவில் செய்ததுதான். உலகின் ஒவ்வொரு ஐந்தாவது மனிதனும் ஒரு சீனன் என்பது கணக்கு. அவர்கள் இல்லாத நாடு கிடையாது. எனவே சீன மார்க்கெட் உலக மார்கெட். ஆனால் நாட்டிற்கு ஏற்றவாறு தரக்கட்டுப்பாடு வேறுபடுகிறது. ஐரோப்பா செல்லும் சரக்கு தரத்தில் மிக உயர்ந்ததாக இருக்கும். அதுவே மூன்றாம் உலக நாடுகள் என்றால் படு மட்டமாக இருக்கும். வியாபார நுணுக்கத்தில் சீனர்கள் அமெரிக்கரை வென்று விட்டனர்.

ஜப்பானிய தொலைக்காட்சி சீனர்களை மட்டமாகக் காட்டும். கொரியர்கள் வெறும் வம்பர்கள் என்று காட்டும். இந்தியா என்றால் பாம்பாட்டிகள், பிச்சைக்காரர்கள் நிரம்பிய நாடு என்று காட்டும். எலிகளைத் தெய்வமாக வழிபடும் கோயிலைக் காட்டும். இப்படி இவர்கள் கொடுத்த பிம்பத்தில்தான் நான் கொரியா சென்றேன். ஆனால் நான் பார்த்தது வேறு கொரியா, வேறு சீனா!

(தொடரும்)

Previous articleமழை ராணி
Next articleஜோக்ஸ்

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...