காதும் காதும் வைத்த மாதிரி

காதும் காதும் வைத்த மாதிரி
Published on

கடைசிப் பக்கம்

சுஜாதா தேசிகன்

பொதுவாக உடல் உபாதைகளை எழுதுவதில்லை. சற்று யோசித்துவிட்டுத் தான் இதை பொதுவில் எழுதுகிறேன்.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அடித்து, முகக்கவசம் மாமூலாகி, 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' 'ஆன்லைன் வகுப்புகள்' போன்ற சொற்கள் தின அகராதியில் சேர்ந்த காலத்தில், ஒரு நாள் காலை வீட்டில் 'வடவரையை மத்தாக்கி' யை எம்.எஸ். அம்மா ராகமாலிகாவில் இனிமையாக கடைந்துகொண்டு இருக்க

சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே

என்று வரிகளில் வரும் செவியை அழுத்தி அழுத்திப் பாடும் சமயம்  "எதுக்கும் உங்க காதை டாக்டரிடம் காட்டிவிட்டு வந்துவிடுங்கள்" என்றாள் என் மனைவி.

"காதுக்கு என்ன? நல்லா தானே இருக்கு"

"அப்போலேந்து கூப்புடுகிறேன் காதிலேயே விழலை. காதில ஹெட் போன் மாட்டிண்டு கால்ஸ் கால்ஸ் என்று உங்க காதே போச்சு…இன்னிக்கு இல்லை கொஞ்ச நாளாகவே கவனித்துக்கொண்டு வரேன் உங்க காதுல ஏதோ பிரச்சனை" என்றாள்.

"ஆமாம் அப்பாவுக்கு காது கேட்கல, சத்தமா பேசரா, டி.வி.யில வால்யூம் பக்கத்து ஆத்துக்கு கேட்குது…" என்று என் மகள் என் காது கிழிந்த விஷயத்தை ஊர்ஜிதப்படுத்தினாள்.

"நாளைக்கே டாக்டரிடம் போகிறோம்" என்று அபாயின்மெண்ட் புக் செய்த போதுதான் தீவிரத்தன்மை புரிந்தது.

"கோவிட் சமயத்தில் எதுக்கு?"  என்று ஜகா வாங்கப் பார்த்தேன்.

"தினமும்  கத்த முடியலை, உங்க காது முக்கியம். கோவிட் வந்தாலும் பரவாயில்லை" என்று  மறுநாள் பாலிஷ் போடப்பட்ட பெரிய மருத்துவமனைக்குச் சென்றோம்.

போன ஜென்மத்துப் பழைய கடன் பாக்கியை இன்று 'ஈ என் டி' டாக்டரிடம் கொடுப்பது என்று முடிவு செய்து என் முறைக்காக காதுடன் காத்திருக்கிறேன்.

மேஜை மீது காதுக்குக் கடுக்கன் மாதிரி 'ஹியரிங் எய்ட்' விளம்பரங்களைப் பார்த்த மனைவி உங்க டோக்கன் நம்பர் வரும்வரை, "உங்களுக்கு எந்த மிஷின் பொருத்தமா இருக்கும் என்று பார்த்து வையுங்க" என்றாள் நம்பிக்கையுடன்.

என் முறை வரும் சமயம் டாக்டர் ஏதோ எமர்ஜென்சி என்று அவசரமாக ஓட பாரதிராஜா படத்தில் வெள்ளை உடைகள் போட்டுக்கொண்டு கதாநாயகி பின் ஓடும் பெண்கள் போல செவிலியர்கள் டாக்டர் பின் ஓட, ஒரு மணி நேரம் கழித்து டாக்டர் வேகமாக திரும்பினார்.

அழைக்கப்பட்டேன்.

"என்ன பிரச்னை?" என்று அவர் கேட்பதற்கு முன், என் மனைவி காரை சர்வீஸ் விடுவது போல "இவருடைய காதை நீங்க தான் ரிப்பேர் செய்ய வேண்டும்" என்றாள்.

பரிதாபமாக  "காது கேட்குது டாக்டர்" என்றேன்.

"கவலையே படாதீர்கள்… டெஸ்ட் செய்துவிடலாம்" என்று எழுதிக்கொடுக்க பக்கத்து அறைக்கு விஜயம் செய்தேன்.

கண்ணாடிக் கூண்டுக்குள் ஹெட்செட் மாட்டப்பட்டு இமான் ரெக்கார்டிங் தியேட்டருக்குள் இருக்கும்  சித் ஸ்ரீராம் போல காட்சி அளித்தேன்.

"சத்தம் கேட்கும் போது கையை தூக்குங்கள்" என்று "கீச் மூச்" சத்தத்தைக் காதுக்கு செலுத்தினார்கள்.

ஒரு மணிநேரம் கழித்து மருத்துவர் என் அறிக்கையைப் படித்துப் பார்த்து. சந்தேகமாக  "கிட்டே வாங்க" என்று என் காதுக்குள் டார்ச் அடித்து பூதக்கண்ணாடியில் பார்வையால் குடைந்து எடுத்தார்.

உங்க காது பிரமாதமாக இருக்கு. 98% ஆற்றல். அமேசிங். பொதுவாக இந்த அளவு ஆற்றல் அபூர்வம். 'குட்' என்று தட்டிக்கொடுத்து 'நெக்ஸ்ட'  வெளியே தள்ளினார்.

டாக்டர் மீது அளவு கடந்த மரியாதை ஏற்பட்டது. மனைவி எதுவும் பேசவில்லை. ஆட்டோவில் வீடு வந்து சேர்தோம்.

ஆட்டோகாரரிடம் "எவ்வளவுப்பா" என்றேன்.

"…"

"என்ன சொன்ன ?"

"பெரிய ஆஸ்பிட்டல் என்று நம்பிப் போன எதுவும் சரியில்லை!.. இந்தாப்பா பாக்கி சில்லரையை நீயே வைத்துக்கொள்" என்பது காதில் ஸ்பஷ்டமாக விழுந்தது.

காதில் விழாத மாதிரி நடந்தேன்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com