
"நமக்கு புது மேலதிகாரியாக கோட்டேஸ்வர ராவு வரப்போகிறார், சார்!" என்றான் ரிகார்டு அசிஸ்டென்ட் நித்யானந்தம், சீனியர் அசிஸ்டென்ட் சிந்தாமணியிடம்.
தான் நெய்த வலையில் வந்து விழும் உயிரினத்தைப் பார்த்து மகிழும் சிலந்திப் பூச்சியைப் போல தமக்கு உணவாகப் போகும் பாவப்பட்ட அந்த மேலதிகாரி மேல் இரக்கப்பட்டான் சிந்தாமணி.
அந்த செய்தி சற்றைக்கெல்லாம் செக்ஷன் முழுவதும் பரவியது. தடித்த கண்ணாடி அணிந்த டைப்பிஸ்ட் பிரேமாஞ்சலி, கால்குலேடரோடு விளையாடிக் கொண்டிருந்த கேஷியர் கூர்மானந்தம், சொல்வார் சொற்பேச்சை சிரத்தையோடு கேட்கும் அசிஸ்டென்ட் சிந்தாமணி, அடாது மழை பெய்தாலும் அசராத ஜூனியர் அசிஸ்டென்ட் ஜஸ்வந்தராவு, கால்ரூபாய்க்கு பழைய அம்புலிமாமா வாங்கிப் படிக்கும் அடென்டர் அப்பாராவு…. இப்படி அனைவரும் எதிர்பார்த்திருக்கையில் அந்த துரதிர்ஷ்டமான முகூர்த்ததில் அலுவலகத்தில் காலடி எடுத்து வைத்தார் சூபரின்டென்டென்ட் கோட்டேஸ்வர ராவு.
அவர் தன் அறைக்குச் செல்லவேண்டுமென்றால் செக்க்ஷன் நடுவில் இருந்துதான் போக வேண்டும். கோட்டேஸ்வர ராவு ஹால் நடுவில் நின்று தன்னைத் தான் அறிமுகம் செய்துக்கொண்டு அனைவருக்கும் வணக்கம் வைத்தார். யாரும் திரும்பி வணங்கவில்லை. அதோடு ஸ்வீப்பர் முதற்கொண்டு யாரும் சீட்டை விட்டு மரியாதைக்காக எழுந்திருக்கக் கூட இல்லை. அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை கோட்டேஸ்வர ராவு.
"எல்லோரும் என் அறைக்கு வாருங்கள்! டீ, பிஸ்கட் சாப்பிட்டு செக்ஷன் விஷயங்களை டிஸ்கஸ் செய்வோம்!" என்று அழைத்துவிட்டு தன் அறைக்குள் புகுந்தார்.
"மாப்பிள்ளைக்கு ஐஸ்வர்யம் வந்ததாம்… பாதி ராத்திரியில் குடை கேட்டானாம் என்பது போல் உள்ளது இவர் செய்வது!" பிரேமாஞ்சலி கூறியதைக் கேட்டு அனைவரும் உரத்து சிரித்தனர்.
இருக்கையில் அமர்ந்துக் கொண்ட கோட்டேஸ்வர ராவு, பையிலிருந்து பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து மேசை மேல் வைத்தார். அதற்குள் முன்பே ஆர்டர் கொடுத்திருந்தபடி காண்டீன் பையன் பத்து பேருக்கு டீயை கெட்டிலில் ஊற்றி கப்புகளோடு எடுத்து வந்து மேசை மேல் வைத்தான்.
எத்தனை நேரம் காத்திருந்தாலும் யாரும் வரவில்லை. மணி அடித்தால் அட்டென்டரும் வரவில்லை. ஸ்வீப்பர் கூட உள்ளே வரவில்லை. கால் மணி நேரம் பார்த்துவிட்டு டீ பையன் போகிறேன் என்றபோது அவனிடம் டீக்கு காசு கொடுத்து அனுப்பிவிட்டு செக்க்ஷனின் நிலை பற்றி யோசித்தபடி இருந்துவிட்டார் கோட்டேஸ்வர ராவு.
மாலை நான்கு மணி ஆனாலும் ஸ்டாஃப்களிடமிருந்து ஒரு ஃபைல் கூட வரவில்லை. காலையில் இருந்து யாரும் எந்த வேலையும் செய்யவில்லை என்பது புரிந்தது அவருக்கு. எழுந்து நேராக செக்க்ஷனுக்குள் சென்றார்.
டைப்பிஸ்ட் பிரேமாஞ்சலியோடு சினிமா கதை பேசிக்கொண்டிருந்தான் சீனியர் அசிஸ்டென்ட் சிந்தாமணி. கேஷியர் கூர்மாநந்தத்தின் காதைக் கடித்து ஏதோ ரகசியம் பேசிக் கொண்டிருந்தான் ஜூனியர் அசிஸ்டென்ட் ஜஸ்வந்தராவு. தான் கொடுத்த் கடனுக்கு வர வேண்டிய வட்டி பற்றி தீவிரமாக கணக்கு பார்த்துக் கொண்டிருந்தான் ரிகார்டு அசிஸ்டென்ட் நித்யானந்தம். தரையில் சுவரில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டு பழைய அம்புலிமாமா புத்தகத்தில் வேதாளம் கதை படித்துக் கொண்டிருந்தான் ஸ்வீப்பர் சிம்ஹாசலம். சுவரை ஒட்டியிருந்த ஸ்டூல் மீது காலை மடித்து உட்கார்ந்து குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தான் அட்டெண்டர் அப்பாராவு. அங்கிருந்த நிலைமை முழுவதும் புரிந்து போனது சூப்பரின்டென்டென்ட் கோட்டேஸ்வர ராவுக்கு.
"என்ன இது? என்ன செய்கிறீர்கள்?" பெரிய குரலில் வினவினார் கோட்டேஸ்வர ராவு.
தங்கள் நிலையில் இருந்து வெளியில் வந்து அனைவரும் அவரை எரிச்சலோடு பார்த்தார்கள்.
"இப்போது மாலை நான்கு மணி. ஒருவரிடமிருந்தும் ஒரு ஃபைல் கூட வரவில்லை. இப்படி இருந்தால் பொறுக்க மாட்டேன். நாளையில் இருந்து ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்" என்று ஒரு சத்தம் போட்டு விட்டு தன் அறையில் சென்று அமர்ந்தார் கோட்டேஸ்வர ராவு.
"இவர் பேச்சை கேட்டு நாமெல்லாம் வேலை செய்ய வேண்டுமாம்… ஹஹஹா!" சத்தமாகச் சிரித்தாள் பிரேமாஞ்சலி.
"சாருக்கு இனிமேல்தான் நம்மைப்பற்றி தெரிய வரும்" க்ரீச்சென்று சிரித்தான் கேஷியர் கூர்மானந்தம்.
"அம்புலிமாமா கதையில் வேதாளம் பதில் தெரிந்தாலும் கூறாவிட்டால் உன் தலை ஆயிரம் துண்டாகி விடும் என்று சொன்னது போல் இவர் நம் மேல் ஆர்டர் போடுறார்" பகபகவென்று குரலெடுத்து சிரித்தான் ஸ்வீப்பர் சிம்ஹாசலம்.
உடனே தம் தம் கைப்பைகளை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பிச் சென்று விட்டனர். மறுநாள் காலை பத்து மணிக்கு வர வேண்டிய ஸ்டாஃப் எப்போதும் போல் பதினொரு மணிக்கு வந்தார்கள். பத்து மணிக்கு ஒரு அரை மணி நேரம் முன்பாகவே வர வேண்டிய ஸ்வீப்பர் கூட அவர்களோடு சேர்ந்து வந்து விருப்பமில்லாமல் ஏதோ அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் பெருக்கினான். அன்று செக்க்ஷன் ஹாலுக்கு வந்த கோடேஸ்வரர் ராவு அவர்கள் நேற்று மாலை அரை மணி நேரம் முன்பாகவே அலுவலகத்தை விட்டுச் சென்றதற்கும் இன்று அரை மணி நேரம் கழித்து வந்ததற்கும் அவர்களை கண்டித்தார். மதியத்திற்குள் நேற்றைய பெண்டிங் பைல்கலை எல்லாம் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டார்.
"சார்! நாங்கள் உடல் ஊனமுற்றவர்கள். அதனால்தானே எங்களை நீங்கள் இப்படி ஹராஸ்மென்ட் செய்கிறீர்கள்?"
"எங்களிடம் வைத்துக் கொள்ளாதீர்கள், சார்! இங்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மேலதிகாரி மாறிக் கொண்டிருக்கிறார். நீங்கள் அத்தனை காலம் கூட தாக்கு பிடிக்க மாட்டீர்கள்".
"நாய்க்கு அதிகாரம் கொடுத்தால் செருப்பை எல்லாம் கடித்து வைக்குமாம். கொஞ்சம் ஜாக்கிரதையா நடந்துக்குங்க சார்!".
இவ்வாறு எல்லோரும் ஒன்று சேர்ந்து கோடேஸ்வர ராவை எதிர்த்து நின்றார்கள்.
என்ன செய்வது என்று புரியாமல் அவர் மீண்டும் தன் அறைக்குள் சென்று அமர்ந்தார். ஆபீசர் ஆனந்தராவு தன்னை இந்த அலுவலகத்திற்கு மேலதிகாரியாக அனுப்பிய போது கூறியவை எல்லாம் நினைவுக்கு வந்தன.
"மிஸ்டர் கோடேஸ்வர ராவு! உங்களை 'டி' செக்க்ஷனுக்கு அனுப்புகிறேன். அதற்கு காரணம் உங்களுக்குள்ள பொறுமை, திறமை மட்டுமே. அங்கு எந்த ஒரு மேலதிகாரியை அனுப்பினாலும் மூன்று மாதம் கூட இருப்பதில்லை. அது ரிகார்டு செக்க்ஷன் என்பதால் வேலைச் சுமை அதிகம் இருக்காது. அதனால் நம் அலுவலகத்தில் உள்ள ஊனமுற்றோர் எல்லோரையும் அங்கு பணியில் அமர்த்தியுள்ளேன். அவர்களோடு நட்பாக இருந்து கவனமாக வேலை புரிய வைக்க வேண்டும். 'ஊனமுற்றோரை வருத்தினார்கள்' என்ற ரிப்போர்டில் இதுவரை அனைவரையும் டிரான்ஸ்பர் செய்ய வேண்டி வந்தது. நீங்கள் அந்த நிலைமையை எடுத்துவர வேண்டாம்" என்று எச்சரித்தார்.
அந்த சொற்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்த கோட்டேஸ்வர ராவு அன்றிலிருந்து யாரையும் எதுவும் சொல்லவில்லை. தானே பைல் எழுதிக் கொண்டார். அட்டெண்டருக்கு பதில் தானே ஆபீசரிடம் பைலை எடுத்துச் சென்று கையெழுத்து வாங்கி வந்தார். கோடேஸ்வர ராவை ஒரு ஆட்டம் ஆட்ட வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அவருடைய நல்ல குணம் பிடிக்கவில்லை.
மூன்று மாதங்கள் கடந்து விட்டன. இத்தனை அதிக காலம் அந்த செக்க்ஷனில் சூபரின்டென்டாக யாரும் பணிபுரியவில்லை. ஆனால் இவரை அங்கிருந்து விரட்டுவதற்கு சரியான காரணம் கிடைக்கவில்லை. இறுதியில் யோசித்து யோசித்து, 'ஆபீசுக்கு நேரத்தோடு வரச் சொல்கிறார், ஆபீஸ் முடியும்வரை இருக்கச் சொல்கிறார்' என்று குற்றம் கண்டுபிடித்தனர். அனைவரும் கூட்டு சேர்ந்து ஒரு நாள் ஆபிசரை சந்தித்து, 'எங்கள் மேலதிகாரி ஊனமுற்றோரான எங்களை பயங்கரமாக ஹிம்சை செய்கிறார்' என்று புகார் அளித்தனர். அதுமட்டுமல்ல, அவரை உடனே ட்ரான்ஸ்பர் செய்யாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்றும் எச்சரித்தனர்.
அன்று ஒன்றாம் தேதி. சம்பளம் கொடுக்கும் நாள். அனைவரும் பத்து மணிக்கே வந்து விட்டார்கள். பதினோரு மணிக்கெல்லாம் ரிஜிஸ்டரில் கையெழுத்து வாங்கி சம்பளம் பட்டுவாடா செய்து விடுவார் மேலதிகாரி. ஆனால், மதியம் ஒரு மணி ஆனாலும் சூபரின்டென்டென்ட் யாருக்கும் சம்பளம் கொடுக்கவில்லை. அதுவரை விறைப்பாக இருந்த செக்க்ஷன் ஸ்டாஃப் எல்லோரும் இந்த விந்தை என்னவாக இருக்கும் என்று கண்டுபிடித்து வரச் சொல்லி சீனியர் அசிஸ்டன்ட் சிந்தாமணியை அனுப்பினர். மேலதிகாரியின் அறைக்குச் சென்ற சிந்தாமணி அதிர்ச்சி அடைந்தான். அங்கு அமர்ந்திருந்தது அழகான மேலதிகாரி சுலோசனா.
தலையை நிமிர்த்திப் பார்த்த சுலோசனா ஆத்திரமடைந்தாள்.
"அறிவு இல்லை? யார் பர்மிஷனோடு உள்ளே வந்தாய்?" என்று கர்ஜித்தாள்.
இத்தனை முரட்டுத்தனமான சொற்களை கனவில் கூட எதிர்பார்க்காத சிந்தாமணி, "மேடம்! கொஞ்சம் மரியாதை கொடுத்துப் பேசுங்கள். உங்களை மேலதிகாரியாக போட்டது எங்களுக்குத் தெரியாது" என்றான் கோபமாக.
"ஏன்? உன்னிடம் சொல்லிவிட்டுத்தான் போடணுமா? கெட் லாஸ்ட்! ஓவராகப் பேசினால் நிலைமை மிகவும் கெட்டுப் போய்விடும்".
வெளிறிப்போன முகத்தோடு சிந்தாமணி வாலைச் சுருட்டிய பூனை போல வெளியில் வந்தான். ஜன்னல் வழியே சிந்தாமணிக்கு 'சிருங்கார பங்கம்' நடந்ததைப் பார்த்த ஆபீஸ் ஸ்டாப் எல்லாம் திரும்பி வந்து எதுவும் நடக்காதது போல் தம் தம் ஆசனங்களில் அமர்ந்தனர்.
நிலைமை சீரியசாக இருந்தது. அதற்குள் பெல் ஒலித்தது. எப்போதும் இல்லாத விதமாக பயத்தோடு உள்ளே சென்றான் அடென்டர் அப்பாராவு.
"பத்து மணி ஆபீசுக்கு பதினோரு மணிக்கு வருகிறாயே! உன் காக்கி யூனிபாரம் என்ன ஆச்சு? யாருக்காவது விற்று காசு வாங்கிட்டாயா? உன்னை இப்போதே சஸ்பென்ஷனுக்கு ரெகமென்ட் செய்கிறேன்" என்று உறுமினாள் சுலோசனா.
சொன்னபடி செய்துவிடுவாள் என்று தோன்றியதால் இரு கை கூப்பி வணங்கினான் அப்பாராவு. "மன்னிச்சுடுங்க அம்மா! நாளைலேருந்து ஆபீசுக்கு நேரத்தை விட அரை மணி முன்பே வந்து விடுகிறேன்" என்று கெஞ்சினான்.
"இப்போது மன்னிக்கிறேன். போய் ஸ்வீப்பரை அனுப்பு!"
பயத்தோடு வெளியில் வந்து, வரவழைத்துக் கொண்ட புன்சிரிப்போடு, "உள்ளே போ!" என்பது போல் ஸ்வீப்பருக்கு சைகை செய்தான்.
"எனக்கு என்ன பயம்?" என்று ஸ்வீப்பர் சிம்ஹாசலம் படித்துக் கொண்டிருந்த அம்புலிமாமாவை குப்புற வைத்துவிட்டு உள்ளே அடி வைத்தான்.
தலையை நிமிர்த்திக் கொண்டு உள்ளே வந்த ஸ்வீப்பரை முறைத்துப் பார்த்தாள் சுலோசனா. "இது என்ன? என் அறை மூலையெல்லாம் ஒட்டடை தொங்குது. இது ஆபீசா? இல்லை பாழடைந்த குடிசையா? நாளையிலிருந்து வேலைக்கு வராதே. அந்த காக்கி யூனிபாரத்தை அட்டென்டரிடம் ஒப்படைத்து விட்டு நீ வீட்டுக்குப் போகலாம்".
சிம்ஹாச்சலத்தின் கர்வம் ஒரே கணத்தில் காணாமல் போனது.
"thaooaauttytgyதெரியாம செய்துட்டேன் அம்மா! நாளைலேருந்து செக்க்ஷனையும் உங்கள் அறையையும் சுத்தமா பெருக்கி துடைக்கிறேன்" என்று மன்னிப்பு வேண்டினான்.
"சரி சரி இனிமேலாவது ஒழுங்கா நடந்துக்க" என்று உறுமினாள் சுலோச்சனா. தப்பித்தோம் பிழைத்தோம் என்று வேகமாக வெளியில் வந்தான் சிம்ஹாசலம்.
மாலை நான்கு மணி ஆனது. இன்னும் சம்பளம் பட்டுவாடா செய்யவில்லை. கேட்பதற்கு யாருக்கும் துணிவு இல்லை. கொடுப்பாளா? இல்லையா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்பட்டது. இறுதியில் ஐந்து மணிக்கு ஐந்து நிமிடங்கள் இருக்கும் போது அடென்டர் மூலம் அனைவரையும் உள்ளே வரச்சொன்னாள் சுலோசனா.
"உண்மையில் உங்களுக்கு இந்த மாதம் சம்பளம் கொடுக்க வேண்டிய தேவையே இல்லை. ஏனென்றால் கடந்த மாதம் நீங்கள் யாரும் வேலையே செய்யவில்லை. அந்த விவரங்கள் எல்லாம் என்னிடம் உள்ளன. ஆனால் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறேன். ஏனென்றால் நான் சேர்ந்த இந்த நாள் முதலாவது நீங்கள் ஒழுங்காக வேலை செய்வீர்கள் என்று நம்புகிறேன்" என்று ரிஜிஸ்டரில் கையெழுத்து வங்கிக் கொண்டு எல்லோருக்கும் சம்பளம் பட்டுவாடா செய்தாள்.
நாட்கள் நகர்ந்தன. இப்போது அலுவலக வேலை ஒழுங்காக நடக்கிறது. வம்புப் பேச்சுகளோ கதை படிப்பதோ இல்லை. அவரவர் வேலையை அவரவர் சரியாக செய்தார்கள். மேலதிகாரி சுலோச்சனா அழைத்தாள் என்றாலே எல்லோருக்கும் நடுக்கம்.
அப்படி எத்தனை நாள்தான் விட்டு வைப்பது? அனைவரும் சேர்ந்து ஒரு நாள் டைரக்டர் அறைக்குச் சென்று, அவளை உடனே மாற்ற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தாம் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் கண்டிப்பாக தெரிவித்தார்கள்.
"வேண்டுமானால் உங்களை மாற்றுகிறேன். சுலோச்சனாவை மாற்றும் யோசனையே எனக்கு இல்லை" என்று டைரக்டரும் கண்டிப்பாக கூறிவிட்டார்.
திரும்பி வந்து அனைவரும் விஷயத்தை தீவிரமாக விவாதித்து மாவட்டத் தலைவர்களுக்கு தம் பிரச்னையை தெரிவித்தார்கள். தாம் ஊனமுற்றவர் என்பதால் அவள் தம்மை அவமதிக்கிறாள் என்று கிளரிகல் ஸ்டாஃபும், தன்னை செருப்பால் அடிப்பேன் என்றாள் என்று அடென்டர் அப்பாராவும், தன்னை கம்பை எடுத்துக் கொண்டு செக்க்ஷன் முழுதும் ஓட ஓட விரட்டினாள் என்று ஸ்வீப்பர் சிம்ஹாசலமும் புகாரளித்தார்கள்.
ஒரு நாள் திடீரென்று மாவட்ட தலைவர்கள் இருவர் செக்க்ஷனுக்கு வந்து, "வாருங்கள்! மேலதிகாரியிடம் சென்று உங்கள் புகாரைப் பற்றி விசாரிப்போம்" என்று கூறி அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றனர்.
உள்ளே வந்த தலைவர்கள் நாற்காலியில் அமர்ந்திருந்த சுலோசனாவைப் பாரத்ததும் தம்மை அறியாமல், "நீங்களா, அம்மா?" என்றார்கள்.
அதன் பின் வணக்கம் செலுத்தி, "நல்லா இருக்கீங்களா, மேடம்!" என்று விசாரித்தார்கள்.
"ஆங்… நல்லா இருக்கேன். உட்காருங்கள்!" என்று சிரித்துக் கொண்டே கூறினாள் சுலோச்சனா.
எதோ நடக்கப் போகிறதென்று ஆசையோடு வந்த ஊழியர்களுக்கு அந்தச் சூழ்நிலை புரியவில்லை. ஆனாலும் நம்பிக்கையை இழக்கவில்லை. தலைவர்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளைச் சுற்றி இவர்கள் நின்றார்கள்.
"மேடம்! இனி உங்கள் ஆட்டம் இங்கே செல்லாது" என்றாள் பிரேமாஞ்சலி ஏளனமாக.
"எங்களை உங்கள் சக ஊழியர்களாக மரியாதை கொடுங்கள். நாங்கள் ஒன்றும் வெற்று மனிதர்கள் அல்ல". என்று கோபத்தோடு வார்த்தையாடினான் சிந்தாமணி.
"கூட்டிப் பெருக்குகிறவன் என்று ரொம்பத் தான் ஏளனமாகப் பார்த்தீங்க?", "அடென்டர் என்று என்னை பந்தாடினாங்க!" என்று ஆளாளுக்கு சுலோச்சனாவை மிரட்டினர்.
"நாங்கள் ஊனமுற்றவர் என்பதால் தானே இத்தனை இளக்காரம்?" என்று அப்பாராவு கேட்டதும், "ஆம்!" என்று அனைவரும் கோரஸ் கொடுத்தனர்.
தலைவர்கள் தலையைத் திருப்பி இவர்களை வெறுப்பாகப் பார்த்தனர். தலைவர்களில் ஒருவர் பேசத் தொடங்கினார்.
"புத்திகெட்டதனமா பேசாதீங்க! உங்கள் மேலதிகாரி சுலோச்சனா மிகவும் உயர்ந்தவர். இவர் மேல் எத்தனை புகார்கள் சொன்னீர்கள்? இவர் செருப்பால் அடிப்பேன் என்றார் என்றீர்கள். இவருக்கு உண்மையில் காலே இல்லை செருப்பு அணிவதற்கு. பத்து வயதிலேயே ரயில் விபத்தில் முழங்காலுக்கு மேல் கால் துண்டாகிவிட்டது. இவர் உங்களை கம்பால் அடிப்பதற்காக செக்க்ஷன் எங்கும் துரத்தி துரத்தி வந்தார் என்று சிம்ஹாசலம் கூறினான். கால் இல்லாத இவர் எப்படி துரத்த முடியும்? பொய் சொன்னாலும் பொருத்தச் சொல்லக் கூட துப்பில்லை உங்களுக்கு" என்று கடிந்து கொண்டார்.
அதன் பின் இரண்டாவது தலைவர் பேச ஆரம்பித்தார். "நாங்கள் ஊனமுற்றோர் எங்களை துன்புறுத்துகிறார்… என்றீர்கள். உங்கள் ஊனம் எத்தனை சதவிகிதம்? சிம்ஹாசலத்திற்கு முப்பத்தைந்து பர்சென்ட். கூர்மானந்தத்திற்கும் அப்பராவுக்கும் முப்பது பர்சென்ட், ஜஸ்வந்தராவுக்கும், ப்ரேமாஞ்சலிக்கும் இருபத்தைந்து பர்சென்ட் ஊனம் உள்ளது. ஆனால் உங்கள் மேலதிகாரிக்கு எழுபது பர்சென்ட் ஊனம். தெரியுமா உங்களுக்கு? இப்போது யார் யாரை துன்புறுத்துகிறார் என்பது புரிந்ததா? இவர் தன் சம்பளத்தில் ஒவ்வொரு மாதமும் ஊனமுற்றோர்
நல நிதிக்கு பத்து சதவிகிதம் அளிக்கிறார். ஆனால் நீங்கள்…? ஆண்டுக்கு ஒரு முறை தரும் ஐம்பது ரூபாய்க்காக நாங்கள் நூறு முறை உங்களைத் தேடி அலைய வேண்டும். நீங்கள் என்றாவது ஆபீசுக்கு அரை மணி நேரம் முன்னால் வந்து பார்த்திருந்தால் இவர் எப்படி ஆபீசுக்குள் வருகிறார் என்பது புரிந்திருக்கும். ஆபீஸ் வரை ஆட்டோவில் அழைத்து வந்து அதன் பின் இவர் கணவர் தூக்கி வந்து நாற்காலியில் அமர வைப்பார். நீங்கள் என்றாவது அலுவலகத்தில் இருந்து ஒரு அரைமணி தாமதமாக கிளம்பி இருந்தால் தெரிந்திருக்கும் இவர் வீட்டுக்கு எப்படிச் செல்கிறார் என்று. இவர் கணவர் இவரை மீண்டும் தூக்கிச் சென்று ஆட்டோவில் உட்கார வைப்பார்".
அனைவரும் எதுவும் பேச இயலாமல் தலை குனிந்தனர். அதற்குள் பழைய மேலதிகாரி கோட்டேஸ்வர ராவு அறைக்குள்ளே வந்தார். தலைவர்கள் எழுந்து மரியாதையாக அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். அவர் திரும்ப வணங்கி காலியாக இருந்த நார்காலியில் அமர்ந்தார். மேலதிகாரி சுலோச்சனா புன்னகை செய்தாள்.
"இவர் யார் என்று தெரியுமா?" என்று கேட்டனர் தலைவர்கள்.
"எங்கள் பழைய மேலதிகாரி".
"அவ்வளவுதான் உங்களுக்குத் தெரியும். இவர் ஒரு தியாகச் செம்மல். உங்கள் தற்போதைய மேலதிகாரியின் கணவர். இவருடைய ஊனம் தெரிந்தே இவரை மனைவியாக ஏற்ற உத்தமர். அவர் ஊனமில்லாதவராக இருந்தாலும் நம் அசோசியேஷன் நல நிதிக்கு பத்தாயிரம் நன்கொடை கொடுத்து வாழ்நாள் அங்கத்தினராக இருக்கிறார்."
அனைவரும் பனித்த கண்களால் கோட்டேஸ்வர ராவை பார்த்தனர். தாம் அவரை துன்புறுத்திய முறையை நினைத்து வெட்கத்தால் குமைந்தனர். அவரிடம் மன்னிப்புக் கேட்கக் கூடத் தோன்றாமல் வியந்து நின்றிருந்தனர்.