நல்ல குருமார்கள் கடவுள் ஆவார்கள்

நல்ல குருமார்கள் கடவுள் ஆவார்கள்
Published on

உத்தவ கீதை – 19

டி.வி. ராதாகிருஷ்ணன்

கிருஷ்ணன் மேலும் சொல்லலானார்…

மனித உடலை எடுத்த ஆன்மா இறைவனின் மீது பக்தி கொண்டு உலகில் வாழ்ந்தாலும், உலகப் பொருள்களின் மீது ஆசை கொள்ளாமல், அவைகள் மனத்தின் மாயை என்று ஒதுக்கி வாழ வேண்டும். தீயவர்களின் நட்பை எக்காலத்தும் எந்தக் காரணத்தைக் கொண்டும் நாடக்கூடாது.

ஊர்வசியிடம் ஆசை கொண்டு, மதியிழந்து, பின்பு மனம் தெளிந்து, முக்தி அடைந்த 'புரூருவன்' என்ற அரசன் கூறுவதைக் கேட்பீராக…

புரூருவன் கூறினான் (மனு வம்சத்தில் உதித்த அரசன். சந்திர குலத்தை சார்ந்த மன்னன்)

எனது மனது காமத்தால் நிரம்பி நின்றது. நாள்தோறும் சூரியன் உதித்ததும், மறைந்ததும் எனக்குத் தெரியாது. இப்படியே பல வருடங்கள் கழிந்தன.

மனதிலுள்ள காமத்தால் பேரரசனாகிய நான், ஒரு பெண்ணின் கைப்பாவையானேன். அவள் பிரிவு தாங்காமல் அழுது… அவள் பின்னால் ஓடினேன். காற்றில் பறக்கும் ஒரு துரும்பு போல… அவள் பின்னால் தள்ளப்பட்டேன்.

பெண்ணின்பால் மனதை இழந்தவனுக்கு தவம், புராணங்களைப் படிப்பது, தனிமையில் மௌனமாய் இருத்தல் ஆகியவைகளால் என்ன புண்ணியம் கிடைக்கும்?

தற்பெருமையால், மதியிழந்து, அறிவில்லாமல்… ஒரு பெண்ணால்… ஒரு மாடு, கழுதையைப் போல சுய கட்டுப்பாட்டை இழந்தேன்.

எனது இந்த உடல், யாருக்கு உடைமையானது? பெற்றெடுத்த தாய்க்கா?என்னை மணந்த மனைவிக்கா? கல்வி சொல்லிக் கொடுத்த குருவிற்கா? அல்லது என்னை… உயிர் பிரிந்தபின் எரிக்கப்போகிற நெருப்புக்கா? அல்லது இறப்புக்குப் பின் உடலைக் கொத்தித் தின்னும் கழுகுகளுக்கா? நரிகளுக்கா?

பகுத்தறியும் குணமுடையவன், தன் வாழ்நாளை பெண்ணின்பத்தில் செலவிட மாட்டான்.

இப்படி, மனம் வருந்தி, புரூருவன் என்னை வணங்கி என்னை அடைந்தான்.

ஆகையால், ஞானமுள்ளவர்கள் தீயவரின் சேர்க்கையைத் தவிர்க்க வேண்டும். நல்லவர்களின் நட்பை நாடவேண்டும்.

"நான்", "எனது" என்ற எண்ணத்தை அகங்காரத்தை நீக்கியவர்கள் நல்ல குருமார்கள். விருப்பு, வெறுப்பு என்ற இருமுனை. மயக்கங்கள் நீக்கியவர்கள் அவர்கள்.

அப்படிப்பட்டவர்கள் என்னைப் போற்றுபவர்கள்.  அவர்கள்  "தீ" போன்றவர்கள். குளிரையும் நீக்கி, மனத்திலுள்ள பயத்தையும் நீக்கி, இருளையும் நீக்கிப் பயனளிக்கக் கூடியது 'நெருப்பு".

நல்ல குருமார்கள் உறவை நாட வேண்டும். அவர்கள், பிறப்பு ,இறப்பு என்று மாறிமாறி வரும் சூழலிலிருந்து, எப்படி ஒரு படகு பெரிய கடலையும் கடக்க உதவி செய்கிறதோ… அதுபோல நம் வாழ்க்கை எனும் கடலையும் கடக்க உதவி செய்வார்கள்.

நல்ல குருமார்கள் கடவுள் ஆவார்கள். அவர்கள் நானே ஆவேன்…

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com