அமெரிக்காவின் மதுரை

அமெரிக்காவின் மதுரை
Published on

முனைவர் சோமலெ சோமசுந்தரம்

கொளுத்தும் வெயில், காரமான உணவு வகைகள், விறகு அடுப்புச் சமையல் என தமிழகத்திற்கும் டெக்சஸ் மாநிலத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. சந்திர மண்டலத்திலிருந்து முதலில் ஒலித்த வார்த்தை "ஹுஸ்டன்.'' இந்த மாநிலத்தின் மிகப் பெரிய நகரமான ஹுஸ்டனில் அமெரிக்க விண்வெளி நிர்வாகத்தின் கட்டளை மையம் இயங்கி வருவதே அதன் காரணம். கொளுத்தும் வெயில் காரணமாக கொதிக்கும் வெளிப்பிரகாரத் தரையில் சுற்றி வரும்போது அறுபத்து மூன்று நாயன்மார்களையும் வணங்கும் வாய்ப்பு அமெரிக்க மண்ணில் ஹுஸ்டன் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் மட்டுமே கிடைக்கும்.

அப்போது ''நாம் இருப்பது அமெரிக்காவா? மதுரையா?'' என்ற உணர்வு வரத்தானே செய்யும். சங்கம் வளர்த்த மதுரை போன்று ஹுஸ்டன் நகரில் தமிழ் வளர, இரண்டு மில்லியன் டாலருக்கு ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவும் முயற்சிக்கான அடித்தளம் சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

விறகு அடுப்பு சமையல்

மிழகத்தில் பெரும்பாலானோர் விறகு அடுப்புச் சமையலுக்கு விடை கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. டெக்சஸ் பகுதியில் பிரபலமான "Barbeque" சமையலின் ரகசியம் அதில் பயன்படுத்தப்படும் ''ஹிக்கரி'' (Hickory) மற்றும் 'மெஸ்கிட்: (Mesquite) மர விறகுகள் அந்த உணவிற்குக் கொடுக்கின்ற சுவையே. அமரிக்க வீடுகளின் வெளிப்புறங்களில் செய்யப்படும் "Barbeque" சமையல் விறகு அடுப்பிலிருந்து கரி அடுப்பு, வாயு அடுப்பு, மின்சார அடுப்புகளுக்கு மாறிவிட்டாலும், விறகின் மகிமை கிராமப்புறங்கிலும், பெருநகரங்களின் சில உயர்தர உணவகங்களிலும் இன்றும் உணரப்படுகின்றன.

2017-இல் என் மகளின் திருமணச் சமையல் எங்கள் சொந்த ஊரான நெற்குப்பை கிராமத்தில் நடந்து கொண்டிருந்தபோது சில உணவு வகைகளை மட்டும் பெரிய விறகு அடுப்புகளில் சமையல் செய்வதைப் பார்த்து ''வாயு (gas) அடுப்புகளுக்குத் தட்டுப்பாடா?'' என நான் கேட்டதற்கு, ''விறகு அடுப்புச் சமையல் சுவை வாயு (gas) அடுப்புச் சமையலில் வராது'' என்றார் எழுதப் படிக்கத் தெரியாத அந்தப் பெரியவர். சில மாதங்கள் கழித்து, டெக்சஸ் மாநிலத்தில் ஒரு புகழ்பெற்ற உணவக அட்டையில் ''நாங்கள் விறகு அடுப்பு வைத்துச் சமைக்கிறோம். அதுவே எங்கள் சுவையின் ரகசியம்'' என்பதைப் படித்தபோது அந்தப் பெரியவரின் முகம் என் நினைவலைகளில் தவழ்ந்தது.

டெக்சஸ் பகுதியின் சமையற் கலைகளில் மற்றொரு சிறப்பு வகைக்குப் பெயர் "Tex-Mex".  அமெரிக்கச் சமையல் மற்றும் அருகே உள்ள மெக்சிகோ நாட்டின் சமையல் இரண்டின் சங்கமமே "Tex-Mex" உணவு வகைகள். இவற்றில் மெக்சிகோ சமையலை விடக் காரம் அதிகமாக இருக்கும்.

ஆறு நாடுகளும் ஒரு மாநிலமும்!

மெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில் டெக்சஸ் மாநிலம் மட்டுமே வெவ்வேறு கால கட்டங்களில் ஆறு நாடுகளின் பகுதியாக இருந்துள்ளது. 1519 முதல் 1685 வரை ஸ்பெயின், 1685 முதல் 1690 வரை பிரான்ஸ், 1821 முதல் 1836 வரை மெக்சிகோ எனப் பல நாடுகளின் பகுதியாக இருந்தது இந்த மாநிலம். 1836 முதல் 1845 வரை தனி நாடாகவும் டெக்சஸ் இருந்துள்ளது. 1861 முதல் 1865 வரை  "Confederate States" என்ற அமெரிக்காவில் இருந்து பிரிந்த 11 மாநிலங்களின் பகுதியில் இருந்து, அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு 1865 முதல் அமெரிக்க நாட்டுடன் இணைந்தது டெக்சஸ். இவற்றின் விளைவால் ஆறு நாடுகளின் ஆதிக்கத்தில் அவற்றின் கொடிகள் பறந்த மண் டெக்சஸ்.

அந்த ஆறு கொடிகளை வைத்தே "Six Flags" என்ற கேளிக்கைப் பூங்கா நிறுவனம் உருவாக்கப்பட்டது. தற்போது வட அமெரிக்காவில் 27 இடங்களில் இயங்கி வரும் இந்த நிறுவனம் வெளிநாடுகளில் பரவும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. கேளிக்கைப் பூங்கா உலகில் டிஸ்னி தனித்துவமானது என்றாலும் எல்லோராலும் டிஸ்னி பூங்காவிற்குச் செல்ல இயலாது. அந்தக் குறையை தீர்க்கும் வகையில் அமெரிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்குகிறது "Six Flags".

வௌவ்வால்களின் சொர்க்கம்

ரே சமயத்தில் இலட்சக்கணக்கான வௌவ்வால்களைப்  பார்க்க விருப்பமா? வாருங்கள் டெக்சஸ் மாநிலத்திற்கு. சான் ஏண்டோனியோ நகருக்கு அருகேயுள்ள பிராக்கென் குகைப் பகுதியில் 200 இலட்சம் வௌவ்வால்கள் வாழ்வதால் இதுவே உலகின் மிகப்பெரிய வௌவ்வால் குடியிருப்பாகும். அருகே உள்ள சான் ஏண்டோனியோ நகரின் வளர்ச்சியால், வௌவ்வால்கள் இருக்கும் பகுதி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு 697 ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 1521 ஏக்கர் நிலப்பரப்பும், அப்பகுதிகளிலுள்ள குகைகளும் வௌவ்வால்களின் சொர்க்கமாக விளங்குகின்றன.

நகர்ப்புறங்களில் மிக அதிகமான வௌவ்வால்கள் உள்ள நகரமும் டெக்ஸஸ் மாநிலத்தில்தான் உள்ளது. ஆஸ்டின் நகரில் உள்ள காங்கிரஸ் அவென்யூ பாலத்திற்கு அடியில் உள்ள பிளவுகளில் குடியிருக்கின்றன 15 இலட்சம் வௌவ்வால்கள். ஒவ்வோர் இரவும் அந்த வௌவ்வால்கள் 9,000 கிலோ வரை எடையுள்ள பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிடுவதால் ஆஸ்டின் நகரப் பகுதியில் பூச்சி கொல்லி மருந்துச் செலவே இல்லையாம். அதுமட்டுமின்றி, சூரியன் மறையும் நேரத்தில் பூச்சிகளைப் பிடிக்கச் செல்லும் அந்த வௌவ்வால் படையைப் பார்த்து மகிழ மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சுற்றுலாப் பயணிகள் ஆஸ்டின் நகருக்கு வருகின்றனர். அழையா விருந்தினராக ஆஸ்டின் நகரம் வந்த வௌவ்வால்களை நகரவாசிகள் அரவணைத்து மகிழ்கின்றனர்.

குடும்பக் கட்டுப்பாடா?

டெக்சஸ் மாநிலத்தில் காணப்படும் வித்தியாசமான சிறு பாலூட்டியின் பெயர் ஆர்மடில்லோ  (armadillo). தென் அமெரிக்க நாடுகளில் மட்டுமே வாழும் இவற்றின் தலை முதல் வால் வரை உள்ள எலும்புகளைக் கொண்ட மேல் ஓடுகள் கவசமாகச் செயல்பட்டு எதிரிகளிடமிருந்து பாதுகாக்கின்றன. 1920களில் அமெரிக்கப் பொருளாதாரத் தாழ்வின்போது மாமிசம் கிடைக்காததால் ஆர்மடில்லோ உணவாக உண்ணப்பட்டதால் அப்போது அதிபராக இருந்த ஹெர்பர்ட் ஹுவரை நக்கல் செய்யும் நோக்கோடு ''ஹுவர் பன்றிகள்'' என அழைக்கப்பட்டன. இவற்றின் ஒவ்வொரு முட்டையும் நான்காகப் பிரிந்து பிரசவம் தோறும் நான்கு குட்டிகளைப் பெறும் இந்தப் பாலூட்டிகள் குடும்பக் கட்டுப்பாடு என்றால் என்னவென்று தெரியாத இனத்தைச் சார்ந்தவை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com