நீதியை விற்றவர்களின் வாரிசுகள் என்ன தவறு செய்தார்கள்?

நீதியை  விற்றவர்களின் வாரிசுகள் என்ன தவறு செய்தார்கள்?
Published on

– சினிமா விமர்சனம்

– லதானந்த்

ன் மகளைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியவனுக்கு உரிய தண்டனை கொடுத்து, அவனது அயோக்கியத் தந்தையின் மூலமே உரிய நீதி கிடைக்காமல் செய்தவர்களை சத்யராஜ் பழிவாங்குவதுதான் கதை.

பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் இறந்தே ஆகவேண்டும் என்ற தமிழ்த் திரைப்பட விதியினை உடைத்து, அவளுக்கும் மறுவாழ்க்கை உண்டு என்பதாகக் கதை அமைத்திருப்பதை முதலில் பாராட்டிவிடுவோம்.

படம் ஆரம்பித்த சுமார் அரை மணி நேரம் சத்யராஜ் தன் குரல் மூலமே வில்லன்களை அலைக்கழிக்கிறார். அதன் பின்னர் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் முதிர்ச்சியடைந்த சத்யராஜின் முகத்தையும் வில்லன்களையும் மட்டுமே பார்த்துத் தீரவேண்டியிருக்கிறது.

கீழமை நீதிமன்றத்தில் நீதி கிடைக்காத சத்யராஜ் மேல் கோர்ட்டுகளை நாடாமல் உடனடியாக வன்முறைப் பாதைக்கு மாறுவது ஏன் என்று புரியவில்லை.

அப்பா சத்யராஜ் – மகள் ஸ்மிருதி வெங்கட் பாசக் காட்சிகளை மிகைப்படுத்திக் காண்பிக்கும்போதே பின்னர் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் என்பதை யூகித்துவிட முடிகிறது.

படத்தின் விறுவிறுப்புக்கு ஒளிப்பதிவு துணைசெய்கிறது. படத்தின் பின்னணி இசையும் படத்தின் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது. ஆனால் பாடல்கள் துருத்திக்கொண்டிருக்கின்றன.

தன் மகனைக் கடத்திவிட்டார்கள் என்பதைக் கேள்விப்படும் வில்லன் மதுசூதனனின் முகத்தில் அதிர்ச்சியோ பயமோ கொஞ்சம்கூடக் காணோம். "இன்னிக்கு வெயில் அதிகம்" என்று சாலையில் செல்பவரிடம் சொன்னால் அவர் எப்படி முகத்தை வைத்துக்கொள்வாரோ அப்படிப்பட்ட பாவனையில் தமது மகன் கடத்தப்பட்ட செய்தியை எதிர்கொள்கிறார்.

பாலியல் வன்முறையாளனின் உடல் பாகத்தை நுட்பமாக அறுவை செய்து (சத்யராஜ் ஒரு டாக்டராக்கும்) மைனஸ் 8 டிகிரி செல்ஷியஸில் படம் முடியும் வரை பாதுகாத்துப் பின் எதற்காகக் கடைசியில் அதைக் குப்பைத் தொட்டியில் எறியச் செய்யவேண்டும்? அவருக்குத்தான் அந்த பாகத்தை வில்லன்களிடம் தரும் எண்ணம் ஆரம்பத்தில் இருந்தே இல்லையே? அறுவை முடிந்ததுமே அதைச் செய்திருக்கவேண்டியதுதானே? அலையடிக்கும் கேள்விகளுக்கு இயக்குநர் தீரன் பதில் சொல்வாரா?

"முக்கியமான சமயத்தில் எப்பத்தான் நம்ம நாட்டில் சிசிடிவி கேமிராக்கள் வேலை செய்திருக்கு?'' என்பன போன்ற நையாண்டி வசனங்கள் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கின்றன.

"மறுபடியும் டீமானிடைசேஷன் வந்திடப் போகுது" என்னும் சத்யராஜின் பேச்சில் கிண்டல் கூத்தாடுகிறது.

பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது, பள்ளி நிர்வாகங்கள் அதில் அலட்சியப் போக்கைக் கடைப்பிடிப்பது போன்ற சமகால சமுதாயப் புரையோடல்களையும் படம் தொட்டுச்செல்கிறது. வாட்ஸப், ஃபேஸ்புக் வெறியர்களுக்குப் போகிறபோக்கில் குட்டு வைக்கவும் தவறவில்லை.

"ஊர்ல நடக்குற விஷயத்துக்கெல்லாம் நாம வருத்தப்படக்கூடாது"  என்னும் அதிகார வர்க்கத்தின் எண்ணத்தை ரேணுகா ஒரு காட்சியில் நியாயப்படுத்திப் பேசுவார்.

தன்னைத் தாக்க வரும் அடியாட்களுக்கிடையில் சண்டை மூட்டிவிட்டு, அவர்கள் அடித்துக்கொள்ளும்போது சத்யராஜ் வீடியோ கேம் விளையாடுவது செம்ம!

ஒரு தவறுமே செய்யாத வாரிசுகளைக் கொன்று எதிரிகளைப் பழிவாங்குகிறாராம்!  இந்த லட்சணத்தில், பழிவாங்கும் படலம் அடுத்த பகுதியிலும் தொடரும் என்று காண்பித்து பீதியைக் கிளப்புகிறார்கள். ஹைய்யோ… ஹைய்யோ!

மொத்தத்தில் : பாலியல் வன்கொடுமைக்குக் கொடூர தண்டனை!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com