0,00 INR

No products in the cart.

தேவ மனோகரி – 2

தொடர் கதை

ஓவியம் : தெய்வா

பாரதி

ஸ்டியரிங்கை வளைத்து கல்லூரி வளாகத்தில் நுழைந்தபோதே மனோகரிக்கு அன்றைய தினப்பலன் ஒருவாறு புரிந்து போயிற்று. காம்பவுண்டு சுவருக்கு வெளியில் இரண்டு போலீஸ் ஜீப்புகளும் கேட்அருகில் நின்று கொண்டிருந்த காக்கி உடைக்காரர்களும் இந்த கல்லூரிக்கு புதிய விஷயமல்ல.

மாணவர்கள் நிர்வாகத்துடன் மோதுவதும்,  மாணவர்களுக்குள் மோதிக்கொள்வதும் ஆண்டுக்கு நான்கைந்து முறையாவது காவல்துறைக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் தலைவலியாக மாறிக் கொண்டிருக்கிறது. இதைத் தவிர அரசியல் காரணங்களுக்காகவும் அவ்வப்போது போராட்டம் நடத்துவார்கள்.

காலப்போக்கில் இதுவே இந்த கல்லூரிக்கு தனித்த அடையாளமாக ஆகிவிட்டது. விடாமல் இந்த அடையாளத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மனோகரியை எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி இதுதான். தனசேகரன் கல்லூரியிலா வேலை பாக்கறீங்க? அங்கே எப்படி மாணவர்களை சமாளிக்கிறீங்க? வகுப்பெல்லாம் ஒழுங்காக நடக்கிறதா?

மனோகரிக்கு இந்தக் கேள்விகள் பழகிவிட்டன. இதற்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லியும் பழகிவிட்டது.

”அதெல்லாம் ஒரு பிரச்னையுமில்லை. இங்கேயும் வகுப்புக்கு ஒழுங்காக வரும் மாணவர்கள் இருக்காங்க”

”இல்லை,  அடிக்கடி போராட்டம்னு தெருவுக்கு வந்துடறாங்களே!” என்று விடாமல் கொக்கி போடுவார்கள்.

”ரொம்பக் காலமாகவே இந்தக் கல்லூரி வெறும் படிப்புக்கான இடமில்லை. அரசியல் பயிற்சியும் இங்கேதான் அவங்களுக்குக் கிடைக்கிறது. அதனால்தான் அப்படி” என்று விட்டுக் கொடுக்காமல் பதில் சொல்வாள்.

ஹேண்ட்பேகை சுமந்துக் கொண்டு படிகளில் ஏறி வராந்தாவில் நிதானமாக நடந்தாள். ஒன்பது மணிக்குக் கல்லூரி தொடங்குகிறது என்றால் பத்து நிமிடம் முன்பாகவே வந்துவிடுவது அவள் வழக்கம். அதனால் நடையில் பரபரப்பு தேவையற்றது.

எதிரில் வந்தவர்கள் வணக்கம் சொன்னபோது தலையசைத்து ஏற்றுக் கொண்டாள். கணிதத்துறையைக் கடந்து போனபோது இவளுக்கு முன்னதாகவே பேராசிரியர் சிவராமன் வந்துவிட்டிருந்தார்.

ஒரு கணம் உள்ளே நுழைந்து “ஹலோ சார்,  குட்மார்னிங் உடம்பு சரியாயிடுச்சா? நீங்க மெடிக்கல் லீவ்ல இருக்கறதா சொன்னாங்க.”

சட்டென்று எழுந்து நின்றார் சிவராமன்.

“குட்மார்னிங் மேடம். ஆர்த்ரைடிஸ் ப்ராப்ளம்தான். பிசியோதெரபிக்குப் போனேன். இப்ப கொஞ்சம் பரவாயில்லை.”

சிவராமனை நலம் விசாரித்துவிட்டு தமிழ், ஆங்கிலத் துறைகளைக் கடந்து தத்துவத் துறைக்குள் பிரவேசித்தாள் மனோகரி. தன் ஆஸ்தான இடத்தில் அவள் உட்கார்ந்தபோது ஒவ்வொருவராக வரத் தொடங்கியிருந்தார்கள்.

துறைத்தலைவர் கணேசமூர்த்தி வரும்போதே பதற்றத்துடன் வந்தார்.

“எல்லோரும் தாமதிக்காம கிளாசுக்கு போங்க. இன்னிக்கு ஸ்டூடண்ட்ஸ் ஸ்டிரைக் பண்ணுவாங்கன்னு பிரின்சிபாலுக்கு தகவல் வந்திருக்கு. கிளாஸ் முடிஞ்சதும் உடனே வெளியே வராதீங்க.  அடுத்து யாருக்குக் கிளாஸோ அவங்க வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுங்க” என்று உத்தரவாக சொல்லிவிட்டு பரபரப்புடன் வெளியேறினார்.

போர்டிகோவில் பிரின்சிபால் பக்கத்தில் போய் நின்றுகொண்டு மாணவர்களை கண்காணிப்பதும்,  அவர்கள் கும்பலாக வந்தால் கலைத்து அனுப்புவதுமாக அவருக்கு நிறைய வேலைகள் காத்திருந்தது.

மனோகரி வருகைப் பதிவேட்டை கையில் எடுத்துக்கொண்டு வகுப்புக்குப் போனாள். நான்கைந்து மாணவர்கள் மட்டுமே உட்கார்ந்திருந்தார்கள். பெரும்பாலும் இப்படித்தான். இவர்களில் சில பேர் விடியற்காலை எழுந்து வீடு வீடாகப் பால்பாக்கெட் போட்டுவிட்டு வருபவர்கள். நியூஸ் பேப்பர் போடுபவர்கள். இவர்களையெல்லாம் நேரத்துக்கு வரவில்லை என்று கோபித்துக் கொள்வதில் ஒரு அர்த்தமுமில்லை. ஆனால் அடுத்த பதினைந்து நிமிடத்தில் வகுப்பு நிறைந்துவிடும்.

மனோகரி பொறுமை காத்தாள். முந்தைய தினம் நடத்தியதை நினைவூட்டும் வகையில் அதே பாடத்தை மறுபடியும் ஒரு முறை சொல்லத் தொடங்கினாள். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த பிறகு பாடம் புதிய விஷயங்களை நோக்கி கிளை கிளையாகப் பிரிந்து பாயும்.

முதல் வரிசையில் சுந்தரும் கிருஷ்ணமூர்த்தியும் ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். பின்வரிசையில் உட்கார்ந்திருந்த ரமேஷ் எவரையோ எதிர்பார்ப்பது போல் அடிக்கடி வராந்தா பக்கம் பார்வையை ஓட்டிக் கொண்டிருப்பதை மனோகரி கவனித்தாள்.

“குட்மார்னிங் மேடம்” என்ற குரல் வராந்தாவில் கவனத்தைக் கலைக்க திரும்பிப் பார்த்தாள். இனியா நின்று கொண்டிருந்தாள். அவள் எதையோ சொல்ல வந்திருக்கிறாள் என்பது புரிந்து தலையசைத்து உள்ளே அழைத்தாள் மனோகரி.

“வெளியில் ஸ்டூடண்ட்ஸ் ஸ்டிரைக் பண்றாங்க மேடம். எந்த நிமிஷமும் உள்ளே வரலாம்னு தோணுது”

குனிந்து காதருகில் தகவலை சொல்லிவிட்டு வெளியேறினாள் இனியா. அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தபோதே மனோகரியின் கண்கள் ரமேஷ் மீது நிலைத்தது. அவன் முகத்தில் ஒரு விஷமப் புன்னகை.

கேட்டருகில் குழுவாக சேர்ந்த மாணவர்கள் அங்கிருந்து கோஷம் போட்டுக் கொண்டு மெல்ல முன்னேறினார்கள். ஹாஸ்டல் கட்டணத்தைக் குறைக்கச் சொல்லி போராட்டம். இது எல்லோரையும் பாதிக்கிற பிரச்னை அல்ல. ஆனாலும் போராட்டம் என்று வந்துவிட்டால் எல்லோரும் சேர்ந்து கொள்வார்கள். அதுதான் மாணவர்களின் சைக்காலஜி.

போர்டிகோவில் பிரின்சிபாலும்,  சீனியர் பேராசியர்களும் தடுக்க முயன்றும் பயனில்லை. வராந்தாவிலும், மாடிப்படிகளிலும் முன்னேறிய மாணவர் கூட்டம் கதவுகளை படபடவென்று அடித்தது. எவரும் அவர்களைத் தடுக்க முடியாது.

உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும்போது மாணவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடுவதுதான் புத்திசாலித்தனம் என்பது காலம் புகட்டிய பாடம். தடுத்தால் வீரியம் அதிகமாகும். பெஞ்சுகள் உடையும். தடுக்காவிட்டால் கதவுகளைத் தட்டுவதோடு நிறுத்திக் கொள்வார்கள்.

வகுப்பு வகுப்பாகப் போய் மாணவர்களைக் கலைத்து தங்களுடன் இணைந்து கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். சதுர வடிவிலான அந்தக் கட்டிடத்தில் கடைசி வகுப்பில் மனோகரி இருந்தாள்.

சீழ்க்கை ஒலியும், கோஷமுமாக வகுப்பறை வாசலில் வந்த மாணவர் கூட்டத்தை அமைதியாக திரும்பிப் பார்த்தாள்.

“ஸ்டிரைக் பண்றோம் மேடம். ஸ்டூடண்ட்ஸை வெளியில அனுப்புங்க. இன்னிக்கு கிளாஸ் நடக்காது” என்று அதிகாரமாக குரலை உயர்த்தினான் பரட்டைத் தலையன் ஒருவன்.

“ஓ தாரளமாக! ஸ்டூடண்ட்ஸ்,  உங்களுக்கு விருப்பமிருந்தால் வெளியில் போய் கலந்து கொள்ளலாம்” என்று அவள் சொன்னவுடன், ரமேஷும், அவன் சகாக்கள் இருவரும் விருட்டென்று எழுந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். மற்றவர்கள் எவரும் அசையக்கூட இல்லை.

வெளியில் இருந்த மாணவர்கள் ஊளையிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ரமேஷ் அவர்களிடம் மெல்லிய குரலில் “இது மேடம் கிளாஸ். அவங்க யாரும் வரமாட்டாங்க. நாம போகலாம் வாங்கடா” என்று கூட்டத்தை நகர்த்திக் கொண்டுப் போனான்.

ஊளை சத்தம் ஓய்வதற்காக இரண்டு நிமிடம் காத்திருந்தாள் மனோகரி. பிறகு அமைதியாக வகுப்பைத் தொடர்ந்தாள்.

வகுப்பு முடிந்து ஐந்து நிமிடத்திற்கு மேல் காத்திருந்தும் அடுத்த நபர் வரவில்லை. மனோகரிக்கு வேறொரு வகுப்பு இருந்தது. வேறு வழியில்லாமல் வருகைப் பதிவேட்டைத் தூக்கிக் கொண்டு துறைக்குள் அவள் நுழைந்தபோது அனேகமாக எல்லோரும் அங்கே அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

“மேடம்,  எங்கிருந்து வர்றீங்க? அதுதான் கிளாஸைக் கலைச்சிட்டாங்களே? என்று டேவிட் கேட்டார்.

“கிளாஸிலிருந்துதான் வரேன். ஸ்டூடண்ட்ஸ் காத்துக்கிட்டு இருக்காங்க. அடுத்த ஹவர் யாருக்கு?”

“ஸ்டூடண்ட்சுக்கு விரோதமா கிளாஸ் எடுக்காதீங்க மேடம். கல்லை எடுத்து விட்டெறிஞ்சா யார் பொறுப்பு? அஞ்சு வருஷத்துக்கு முன்னே பேராசிரியர் கருணாகரனுக்கு மண்டை உடைந்தது மறந்து போயிடுச்சா உங்களுக்கு?” என்று இவளுக்கு பரிந்து பேசுவதுபோல் கசப்பை உமிழ்ந்தார் ரத்னசாமி.

மனோகரி எதற்கும் பதில் சொல்லவில்லை. அடுத்த ஹவருக்கு அட்டெண்டன்ஸை எடுத்துக் கொண்டு பத்மாவதி கிளம்பியபோது அவள் முகத்தில் எரிச்சல் மண்டிக் கிடந்தது.

“அதுதான் ஸ்டிரைக் நடக்குது இல்ல? பசங்கள கலைச்சுவிட்டு வராம இவங்க எதுக்கு கிளாஸ் எடுக்கணும்? பிறகு நம்ம உயிர வாங்கணும்?” என்று வராந்தாவில் முணகிக் கொண்டே போனாள்.

வெளியேறிய மாணவர்கள் மெயின் ரோடுக்குப் போய் பஸ்ஸை வழிமறித்து கலாட்டா செய்யத் தொடங்கினார்கள். பஸ் மீது கல்லை விட்டெறிவதாக மணிகண்டன் ஓடிவந்து தகவல் சொன்னான்.

காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்குமா என்ன? லத்தியால் அடித்துத் துரத்தினார்கள். நான்கைந்து மாணவர்களை வேனில் ஏற்றிக்கொண்டு போனார்கள்.

மறுநாள் மனோகரி கல்லூரிக்குள் நுழைந்தபோது வராந்தாவில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள் இனியா. “இதோ மேடம் வந்துட்டாங்க. அவங்ககிட்ட சொல்லுங்க” என்றாள்.

“யார் இவர்? என்ன விஷயம்?”

“மேடம்,  இவர் சுந்தருடைய அப்பா. நேத்து போலீஸ்காரங்க இவங்க வீட்டுக்கே போய் சுந்தரை கைது பண்ணியிருக்காங்க” என்று இனியா சொன்னபோது மனோகரியால் நம்ப முடியவில்லை.

“சுந்தரா? இருக்கவே முடியாது. அவன் ஸ்டிரைக்ல இல்லையே? வகுப்புலதானே உட்கார்ந்திருந்தான்?”

எதிரிலிருந்த மனிதர் கண்கலங்கியிருந்தார்.

”ரொம்ப சாதுவான பையன் மேடம்.  நாங்க குடியிருக்கிறது தேனாம்பேட்டையில ஒரு வரிசை வீடு. அங்கே வந்து போலீஸ் இவனை கூட்டிட்டு போனதுல அக்கம் பக்கம் ஒரே அவமானமா போயிடுச்சு. நேத்து ராத்திரியிலேருந்து அவங்க அம்மா சாப்பிடவேயில்ல. அழுதுகிட்டேயிருக்காங்க”

தலை உச்சியில் ஒரு உஷ்ணத்தை உணர்ந்தாள் மனோகரி. ‘நான்ஸென்ஸ், எப்படி இதெல்லாம் நடக்குது?’

விறுவிறுவென்று போய் வருகைப் பதிவேட்டை ஆராய்ந்தாள். இரண்டாவது ஹவருக்கான அட்டெண்டன்ஸ் எடுக்கப்படவேயில்லை.

“பத்மாவதி,  செகண்ட் ஹவர்ல ஸ்டூடண்ட்ஸ் எல்லாமே வகுப்புலதானே இருந்தாங்க? நீங்க கூட போனீங்களே? அட்டெண்டன்ஸ் எடுக்க மறந்துட்டீங்களா?”

“நான் போனபோது வகுப்புல ஒருத்தரும் இல்ல. எல்லாம் கலைஞ்சு போயிட்டாங்க. நான் என்ன செய்யட்டும்? நீங்க என்னவோ என்னைக் கேள்வி கேட்குறீங்க? போய் அந்தப் பசங்களைக் கேளுங்க”

மனோகரி விழுங்கிக் கொண்டாள். இவளுடன் சண்டை போடுகிற நேரம் அல்ல இது. சுந்தரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும். நல்ல மாணவன். ஒரு நாள் கூட அவன் தாமதமாக வந்து இவள் பார்த்தது கிடையாது. அவனுக்குப் போய் ஏன் இப்படி நேர்ந்தது?

(தொடரும்)

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...

தமிழனுக்கு ஓர் இயல்பான வாழ்வியல் அமைதியைத் தருகிறது…

1
 உலகக் குடிமகன் - 32  நா.கண்ணன்   நான் கொரியா செல்வேன் எனக் கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால், என் ஜப்பானிய ஆய்வை அமெரிக்கர்களும், கனடாக்காரர்களும், ஜெர்மானியரும், ஆங்கிலேயரும் கவனித்தது போல் கொரியர்களும் கவனித்து வருகிறார்கள் என...

சலூன் கிரி மாமா

0
மகேஷ் குமார்   கிரி மாமாவின் நிஜப்பெயர் அதுதானா என்பது எனக்குத் தெரியாது. அவரை முதல் முதலாகப் பார்த்த சலூனின் பெயர் ‘கிரி சலூன்’. அதிலிருந்து அவர் பெயர் கிரி மாமா. நல்ல உயரமும் உடலுமாக,...

குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்   அன்று நள்ளிரவில் அவன் வீடு திரும்பியதும் அவனுக்கு சாப்பாடு போட டேபிளில் தட்டு வைத்தாள். “எனக்கு வேண்டாம்” “ஏன்?” “வெளிய சாப்பிட்டேன்” “ஹோட்டல் உணவு உடம்புக்கு நல்லதில்லை” “நாம தனியா போன பிறகு உன் கையால் சாப்பிடுகிறேன். அதுவரை...

அப்ரைசர் முத்துசாமி

0
மகேஷ் குமார்   திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் மெயின் ரோட்டில் இருக்கும் அந்த வங்கியின் வாசலில் காலை 9 மணிக்கே கூட்டம் நெரியும். அந்த இரண்டு தினங்களில்தான் நகைக்கடன் கொடுக்கப்படும். பெரும்பாலானோரின் கையில் ஒரு...