0,00 INR

No products in the cart.

கடவுள் பற்றி பாட்டு எழுதத் தயங்கியது இல்லை.

மதன் கார்கியுடன் நேர்காணல்

சந்திப்பு : ராகவ் குமார்

 

கவிதை, எழுத்து என்பதை தாண்டி தமிழ் மொழியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்வதில் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார் மதன் கார்க்கி. இவரது மனைவி நந்தினி பிற மொழி படங்களுக்கான சப் டைட்டில் வடிவமைக்கும் பணியைச் செய்து வருகிறார். அண்மையில் வெளியான ’புஷ்பா’ திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே வெற்றி பெற்றதற்கு மதன் கார்க்கியின் வசனமும்
ஒரு காரணம். அவருடன் ஒரு நேர்காணல்.

நீங்கள் வசனம் எழுதும் பிற மொழிப்படங்கள் நம் மொழியுடன் ஒத்து போக என்ன நுட்பத்தைக் கையாளுகிறீர்கள்?
“மூல படங்களின் தளம் வேறு; நம் மொழியின் தளம் வேறு என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டும். சிறு வயது முதல் நிறைய பிறமொழி படங்களை தமிழில் டப்பிங் செய்யப்பட்டு பார்த்து இருக்கிறேன். பல படங்களில் உச்சரிக்கும் வசனம் ஒத்திசைவாக இருக்காது. வார்த்தை அமைப்புகள் சிலவற்றில் இலக்கண மரபுகள் மீறப்பட்டிருக்கும். நான் படம் டப்பிங் எழுதும்போது இதை மனதில்கொண்டு எழுதினேன். படத்தின் flavor மாறிவிடக்கூடாது. ’புஷ்பா’ படத்தின் டைரக்டர் எனக்கு முழு சுதந்திரம் அளித்து இருந்தார். உதாரணமாக ’புஷ்பா’ படத்தில்  ஹீரோவிற்கு “ரா” என்ற வார்த்தை உச்சரிப்பு வராதது போல உருவாக்கி இருந்தேன். இது தெலுங்கு மூலத்தில் கிடையாது. டைரக்டர் அனுமதியுடன் இதை செய்ததால் வசனங்கள் மக்களிடையே சென்றடைந்து உள்ளது. “இதுபோன்று மொழியை மாற்றி வசனம் எழுதுபவர்கள்தான் நாங்கள்” என்று எண்ணாமல் எங்களின் பங்களிப்பை அளிக்க உதவிய இயக்குனர்களால்தான் வசனங்கள் ரசிகர்களிடையே பேசப்படுகிறது.”

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழ் மொழியை மக்களிடையே கொண்டுச் செல்ல முயற்சி செய்கிறீர்கள். இதில் வெற்றி பெற்று விட்டீர்களா?
“இது ஒரு தொடர் பயணம். என் பெயரில் உள்ள வலைதளம் ஆராய்ச்சி மையமாகச் செயல்படுகிறது. தமிழ் மீது நேசம் கொண்ட பலர் பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள் தங்களின் பங்களிப்பைச் செய்து வைக்கிறார்கள்.

பிறந்த குழந்தைகளுக்காக என் வலைத்தளங்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தமிழ் பெயர்களை சேகரித்து வைத்துள்ளோம். பலர் இப்பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்கிறார்கள். அகராதியில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட  தமிழ் சொல்லிற்கு பொருள் உள்ளது. ’பிரிபொறி’ என்ற மென்பொருள் வார்த்தைகளைப் பிரித்து படிக்க உதவுகிறது. என் வலைத்தளத்தில் ’ஆய்வகம்’ என்ற தளத்தில் கருவிகள் உள்ளன. இந்த கருவிகளை பயன்படுத்தி ஒரு சொல்லின் வேர்களை கண்டறிய முடியும். ’தமிழிசை’ என்ற தலைப்பில் பாடல்களை எழுதி உள்ளேன். இதை யார் வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.”

தமிழிசையைப் பரப்ப பலர் முயற்சி செய்தும் தமிழிசையை இலவசமாகத் தரும் நிலைமையில்தான் நாம் இருக்கிறோமா?
“கடந்த பத்து வருடங்களில் தமிழிசையை பற்றிய விழிப்புணர்வு நன்கு படித்த இசை வல்லுநர்களிடம் ஏற்பட்டு வருகிறது . பல மேடைகளில் தமிழிசை பாடல்கள் பாடப்பட்டு வருகிறது. இன்று இலவசமாக தமிழிசையை தரும் சூழல் இல்லை. ‘ராயல்டி பிரச்னை வரவேண்டாம்’ என்பதற்காக இலவசமாக தருகிறேன். என் கவிதைகளுக்கு ராஜீவ் மேனன் இசையமைத்துள்ளார். பாம்பே ஜெயஸ்ரீ, சிக்கல் குரு சரண்,
அனில் ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் பாடி உள்ளனர். நம் இசை ‘பண்’ என்ற மரபில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையானது. இந்த பண்ணிற்கு ஏற்றார் போல பாடல்கள் எழுதுகிறேன்.”

தற்போது சினிமா பாடல்கள் கேட்பது குறைந்து வருகிறதே?… “உண்மைதான். கடந்த தலைமுறைகள் போல, சம காலத்தில் வெளியாகும் சினிமா பாடல்களை கேட்பவர்கள் குறைந்து வருகிறார்கள். இனி எதிர்காலத்தில் திரைஇசை பாடல்களைவிட தனி இசை(independent music
songs) பாடல்கள் கேட்பவர்கள்தான் அதிகம் இருப்பார்கள்.”

தமிழ் மொழியில் பக்திக்கு மிகப் பெரிய இடம் உள்ளது. ஆனால்  நீங்கள் ஆன்மீகம் பற்றி பேசுவது இல்லையே?
“எனக்கும் அப்பாவைப்போல ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லைதான். ஆனால் என்னிடம் கேட்டுக்கொண்டால் கடவுள் பற்றி பாட்டு எழுத தயங்கியது இல்லை. ’பாகுபலி’ படத்தில் நான் எழுதிய ’சிவ சிவா’ பாடல் கோயில்களிலும், விழாக்களிலும் கேட்டுக்கொண்டிருக்கிறது.”

இளையராஜா உடன் இணைந்து பணியாற்றும்  வாய்ப்பு உள்ளதா? “யாருக்குத்தான் ராஜா சாருடன் சேர்ந்து பணியாற்ற பிடிக்காது? ஏற்கெனவே ஒரு முறை ராஜா சாருடன் பணியாற்ற வாய்ப்பு வந்தது. ஆனால் ராஜா சார் என்னுடன் பணியாற்ற ஏதோ காரணங்களால் மறுத்து விட்டதாகத் தகவல் கிடைத்தது. மீண்டும் ராஜா சாருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்.

 

சினிமாவில் சப் டைட்டில் வடிவமைக்கும் நந்தினி மதன் கார்கியிடம்  சில கேள்விகள்:

சப் டைட்டில் மீது ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன?
“நான் மதனின் வெப்சைட்டிற்கு வேலை செய்யும்போது இந்தத் துறை பற்றி சொன்னார்கள். இதைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்ள நெதர்லாந்த் நாட்டில் சப் டைட்டில் தொடர்பான வகுப்பு ஒன்றை ஆன்லைனில் படித்தேன். ’மூன்று பேர், மூன்று காதல்’ படத்திலிருந்து பல்வேறு படங்களுக்கு சப் டைட்டில் செய்து வருகிறேன். தற்போது “சுபமி சப் டைட்டில் அகாடமி” என்ற ஒன்றை ஏற்படுத்தி சப் டைட்டில் பற்றி வகுப்பு எடுத்து வருகிறேன்.”

படித்து தெரிந்து கொள்ளும் அளவிற்கு இந்த சப் டைட்டில் பணி மிக கடினமானதா?
“நுட்பமானது. கதையின் மூலம் மாறாமல், சுருக்கி எழுத வேண்டும். இதற்கு பயிற்சி அவசியம். ’சப் டைட்டில்’ என்பது மொழி பெயர்ப்பாக இல்லாமல் கலாசார பெயர்ப்பாக இருக்க வேண்டும்.

வேறு எந்தத் துறைகளில் உங்களுக்கு ஆர்வம் உள்ளது?
“சங்க இலக்கியம் நற்றின்னையில் நானூறு பாடல்களுக்கு ஒலிவடிவில் விளக்கம் தந்துள்ளேன். இதேபோல குறுந்தொகைக்கும் செய்துள்ளேன். சங்க இலக்கியங்களை எளிமையான வடிவில் மக்களிடையே கொண்டு செல்ல ஆர்வத்துடன் இருக்கிறேன்.

ராகவ்குமார்
ராகவ்குமார் கல்வித் தகுதி: எம் பில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல்.கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக கல்கி குழும பத்திரிகைகளில் தம் படைப்புகளை ஏற்றி வரும் நிருபர், எழுத்தாளர். திரை விமர்சனங்கள், நேர்காணல்கள், சினி கட்டுரைகள் இவரது கோட்டை. 12 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா, கிராபிக்ஸ் & அனிமேஷன் துறையில் ஆசிரியர் பணி.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

‘‘வள்ளி வள்ளி வழி வனந்தனிலே;கிள்ளிக் கிள்ளி கிழங்கெடுப்போம்…!’’

0
  நேர்காணல் , படங்கள், வீடியோ: கா.சு.வேலாயுதன்   ‘‘வள்ளி வள்ளி வழி வனந்தனிலே; கிள்ளிக் கிள்ளி கிழங்கெடுப்போம்...!’’ தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகி அட்டப்பாடி நஞ்சம்மாவுடன் ஒரு சந்திப்பு: மூன்றாண்டுகளுக்கு முன்பு பேட்டி எடுத்தபோது எப்படியிருந்தாரோ அப்படியே...

ஆச்சர்யப்படுத்தும் ஆம்பல் நிறுவனம்.

எழுத்தார்வமிக்க இல்லத்தரசிகள், வளரும் எழுத்தாளர்கள், பருவ இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளார்கள் போன்ற பலருக்கு இருக்கும் கனவு. தன் படைப்புகளை புத்தகமாக வெளியிடுவது. ஆனால் அதை எப்படிச் செய்வது என்று முதல் வழிகாட்ட யாருமின்றியும்...

என் வாழ்க்கையில் பார்த்த மனிதர் களை இந்த படத்தில் சொல்லிருக்கிறேன்

0
  நேர்காணல் : ராகவ் குமார் இயக்குனர் சீனு ராமசாமி   " ‘மாமனிதன்’ படத்தின் ஸ்கிரிப்டை சிவாஜி சாரின் வீட்டின் வாசலில் உள்ள பிள்ளையார் கோவிலில் வைத்து, பிள்ளையாரப்பா இப்படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி நடிப்பில் சிவாஜி சாரை...

அதென்ன பெயர் 3.6.9 ?

நேர்காணல் ஜான்சன்   21  வருடங்களுக்கு பிறகு திரைக்கதை மன்னன் பாக்யராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம்  '3.6.9'. உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக,  நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது   இது குறித்து  இயக்குநர் சிவ். மாதவ்விடம்...

எண்ணிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை

சிபிராஜ் நேர்காணல் ராகவ்குமார்    சிபிராஜ் நடிக்க வந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அவ்வப்பொழுது படங்கள் தந்தாலும் திரும்பி பார்க்கும் வகையில் படங்கள் தருகிறார். விரைவில் வெளிவர இருக்கும் ‘ரங்கா’ பட வேலைகளில் பிசியாக இருந்தவர், நேரம்...