கிருஷ்ணரிடம் சில கேள்விகள்

கிருஷ்ணரிடம் சில கேள்விகள்
Published on

உத்தவ  கீதை – 2

டி.வி. ராதாகிருஷ்ணன்

சுதேவரும் பிறரும் கலந்து ஆலோசித்து…அந்த இரும்பு உலக்கையைப்
பொடியாக்கிக் கடலில் கரைத்துவிடச் சொன்னார்கள். அவர்களும் அப்படியே செய்தார்கள். அப்படிச் செய்தபோது, அந்த இரும்பு உலக்கையில் ஒரு சிறிய துண்டு மிஞ்சியது. அவர்கள் அதை கடலில் வீசி எறிந்து விட்டார்கள்.

அந்த இரும்புத் துகள்கள் கடற்கரையில் ஒதுங்கி "ஏரக" என்ற நாணல் புதராக வளர்ந்தது.

தூக்கியெறியப்பட்ட இரும்புத் துண்டை ஒரு மீன் விழுங்கியது. அந்த மீனை
கடலில் மீன் பிடிக்கும் மீனவன் ஒருவன் பிடித்தான்.

மீனைச் சமைக்க நறுக்கும்போது காணப்பட்ட அந்த இரும்புத் துண்டை மீனவன் தெருவில் வீசி எறிந்தான்.

அந்த இரும்புத் துண்டை எடுத்து கூர்மையாக்கித் தன் அம்பில் பதிய வைத்தான் "ஜரா" என்ற வேடன்.

அந்த அம்புதான் பின்பு கிருஷ்ணரின் உயிரை மாய்க்கும் ஆயுதமாக மாறியது.

யாதவர்களும் அந்த கோரைப் புல்லால் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு மாண்டனர். முக்காலமும் உணர்ந்த கிருஷ்ணருக்கு இவை யாவும் தெரியும்.

ஆனால் அதைத் தடுக்க அவர் முயலவில்லை.

இதனை யாரும் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் கிருஷ்ணரின்
நண்பரும் உதவியாளருமான உத்தவர், இது கண்ணனின் லீலை எனவும், உலகை விட்டு அவர் செல்ல போட்ட திட்டம் என்றும் உணர்ந்தார்.

அதே நேரத்தில் நாரத மகரிஷியும் சிவனும், பிரம்மா போன்ற கடவுள்களும்
துவாரகிய வந்து கண்ணனிடம் நலம் விசாரித்துவிட்டு,  "தாங்கள் அவதரித்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறிவிட்டன. ஆகவே  மீண்டும் உங்கள் இருப்பிடமான வைகுண்டம் திரும்ப வேண்டும்" என கூறினார்கள்.

இதை உணர்ந்த உத்தவர், "கண்ணா,  நீங்கள்  உலகத்தை விட்டுச் செல்லத்
திட்டமிட்டுள்ளீர்கள். என்னால் நீங்கள் இல்லாமல் உலக வாழ்க்கையை
நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நீங்கள் நினைத்திருந்தால் அன்றே அந்த முனிவரின் சாபத்தைத் தடுத்திருக்க முடியும். ஆனால் அதைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

நான் உங்களோடு உணவு உண்டு, விளையாடி… உங்களோடு வாழ்ந்தவன். தாங்கள் யோகத்தின் முடிவுப் பொருள்.

நானோ உலக மாயையால் வசப்பட்டு புலனின் பங்களில் ஈடுபட்டு இந்த உடம்பு எனது என்று எண்ணி எனது மனைவி ,எனது மக்கள் என்று "நான்" எனது என்ற எண்ணத்தில் வாழ்பவன்.

ஆகையால், தாங்கள் எனக்கு ஒரு வழியைக் காட்ட வேண்டும். அது உங்களால் மட்டுமே முடியும். ஆன்மா பற்றியும், முக்தி பெறுதல் பற்றியும் உங்களால் மட்டுமே அருளுரை வழங்க முடியும். சிவனும், பிரம்மாவும் உங்கள் மாயையால் கட்டுப்பட்டவர்கள். ஆகவே, உங்களை சரணடைகிறேன்.

நாராயணனே! எல்லா உயிர்களுக்கும் அன்பு செய்பவனே… குற்றமற்றவணே… எங்கும்
நிறைந்தவனே… எல்லா உயிர்களிலும் கலந்து நிற்பவனே… வைகுண்டவாசியே எனக்கு வழிகாட்டுவீராக!" என்று வேண்டினார்.

கண்ணனும் அன்புடன் மனமிரங்கி உத்தவரை நோக்கி "உலகத்தின் தன்மையை அறிய முற்படுபவர்கள் தங்களின் ஆன்மாவைத் தாங்களே உயர்த்திக் கொள்கிறார்கள். பார்ப்பதாலும், கேட்பதாலும், அனுமானத்தினாலும் தன் உயர்வை ஒருவர் தானே தேடிக்கொள்ள முடியும். ஞானத்தாலும், செய்கின்ற கர்மத்தாலும்… என்னைத் தங்களின் ஆன்மாவே என்பதை உணர முடியும்.

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் என்னிடத்தில் உண்டானவை. அவைகளில் எனக்குப் பிரியமானவன் மனிதன் மட்டுமே! அவர்கள்தான் என்னைக் கண்டுபிடித்து உணர முடியும். பின்னர் என்னையும் அடைய முடியும்" என்று கூறிய கண்ணன் தன் அருளுரையை  வழங்கினார்.

உத்தவ கீதை… உத்தவருக்கும்.. .கிருஷ்ணருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு
உரையாடலாக… கேள்வி பதிலாக அமைந்துள்ளது.

இந்த உத்தவ கீதையில் பல அரிய தத்துவங்கள், பக்தி வழிகள் விளக்கப்படுகின்றன.

எப்படி, பகவத் கீதையில் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு, வாழ்வியல் முறைகள் பலன் கருதாது செயல்படுதல் என்ற மிகப் பெரிய தத்துவம் விளக்கப் பட்டனவோ… அதுபோல இறைவனை சரணடைவது, முக்தி, உடல், உயிர், உலகம் ஆகியவற்றின் தொடர்பு, இறைவனை வழிபடும் முறை ஆகியவை இதில் விளக்கப்படுகின்றன.

இதன் முடிவில் கிருஷ்ணர் "ஜரா" என்ற வேடன் எய்திய அம்பினால்… காலில்
அடிபட்டு உடலை நீத்து வைகுண்டம் எய்தினார்.

உத்தவ கீதை, பக்தி மார்க்கத்திற்கு ஒரு வழிகாட்டியாகும்,

உத்தவ கீதையில் மிகப் பெரிய வாழ்க்கைத் தத்துவங்கள் எளிதாக விளக்கப் பட்டுள்ளன.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com