0,00 INR

No products in the cart.

மம்முட்டிக்கு பயங்கர கர்வமோ?

ஒரு கலைஞனின் வாழ்க்கையில் – 2

தமிழில் கே.வி.ஷைலஜா

நான் அமிதாப்பச்சனுடன் பங்கு பெற்ற அந்த நிகழ்ச்சியை வாழ்நாளில் மறக்கமுடியாது. அதை மறக்கமுடியாமல் போனது  அந்நிகழ்ச்சியின் மகத்துவத்தினால் அல்ல, மாறாக மலையாளியின் மனதில் நான் கண்டுணர்ந்த கசடுதான் காரணமானது.

அமிதாப்பச்சனும் நானும் அருகருகே அமர்ந்திருந்தோம். சினிமாவில் புகழ்பெற்ற பலரும் வணங்கி மரியாதை செலுத்தியபடி எங்களைக் கடந்து போனார்கள். யார் வந்தாலும் சிரிப்புடன் நெஞ்சில் கை வைத்து மரியாதை செலுத்தினேன். ஆனால் அமிதாப்பச்சன் பெண்கள் வந்தபோது அவர்களுடைய வயதிற்கு தகுந்தாற்போல நாற்காலியிலிருந்து எழுந்து மரியாதை செலுத்தினார். நான் மிகவும் வெட்கப்பட்ட தருணமாயிருந்தது அது.

மலையாளிகளாகிய நாம் பெண்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துவதில்லை என்பது மட்டுமல்ல, ஆண்கள் வரும்போது பெண்கள் எழுந்திருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். நமக்கு எல்லாவற்றின் மீதும் எப்போதும் அலட்சியம் இருக்கிறது. நமக்குப் பிறர் மரியாதை தரவேண்டும் என்பதை நம் வாழ்வின் எதிர்பார்ப்பாய் நினைக்கிறோம். பேருந்துகளில் பெண்களின் இருக்கைகளில் நாம் உட்கார்ந்திருந்தாலும் எழுந்து அவர்களுக்கு இடம் கொடுக்க யோசிப்போம். ஆனால் கடைக்கோடி கிராமத்தில் வாழும், எழுத்துக்கூட்டி வாசிக்கக்கூடத் தெரியாத வடஇந்தியனோ, தமிழனோ, தெலுங்கனோ பெண்களுக்காக எழுந்திருப்பான். பேருந்திலாக இருந்தால் உட்காரச் சொல்லி நின்று பயணிப்பார்கள்.

பெண்களின் மீதான அவமதிப்பு மலையாளிகளின் பழைய பாரம்பரியமில்லை என்பது நிஜம். நம் பண்டைய இலக்கியங்களில் எல்லாம் காதலன் காதலியை பகவதி, தேவி என்றுதான் கூப்பிட்டிருக்கிறான். அங்கிருந்து வந்த இப்பதங்கள் நம் மொழியிலிருந்தும் இப்போது மாயமாயிருக்கிறது. திருமண நிகழ்வுகளில்கூட இப்போது மரியாதை செலுத்தும் வழக்கமில்லை. இந்த மரியாதையின்மை நம் ரத்தத்தில் கரைந்ததின் பலனை நாம் அனுபவிக்காமலில்லை. ’யாருக்கும் அடங்கி அடிமையாய் வாழமுடியாது’ என்கிற மனசுதான் எவ்வளவோ வரலாற்றுப் போராட்டங்களுக்கு நம்மைக் கொண்டு சென்றிருக்கிறது. அதனுடைய பலனைப் பாவப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் அனுபவிக்கவும் செய்கிறார்கள். ஆனால் அதெல்லாம் இதை நியாயப்படுத்தக் கூடியதல்ல.

தமிழ்நாட்டில் பரஸ்பரம் ‘சார்’ என்றுதான் கூப்பிடுகிறார்கள். அவ்வார்த்தையில் மரியாதையின் ஊற்றுக்கண் இருக்கிறது. நமக்கே ‘சார்’ என்று கூப்பிடுவதைக் கேட்க ஆசையிருக்கும். ஆனால் கூப்பிட அல்ல. அப்படி கூப்பிட்டாலோ அதனுடைய அர்த்தம் வேறாக இருக்கிறது. ஒரு ஆட்டோ டிரைவரை ‘சார்’ என்று கூப்பிட நம்மால் முடியுமா? ஆனால் ஒரு தமிழரோடு பிரயாணம் செய்தால் நாம் இதைப் பார்க்கவும் கேட்கவும் முடியும்.

மற்றவர்களின் மேல், குவியும் தனிப்பட்ட மரியாதையைக்கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது. கொச்சியில் இந்த ஐந்து வருடத்தில் லட்சாதிபதியான மனிதர் ஒருவர் இருக்கிறார். நான் வெளிநாட்டிற்கு சென்றிருந்தபோது அந்நாட்டினர் அவர் பட்ட கஷ்டங்களையும், செலுத்திய உழைப்பையும், அடைந்த வளர்ச்சியையும் குறித்து மிகவும் மரியாதையோடும், வாத்சல்யத்தோடும் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அவர் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு உலகச் சந்தையில் நல்ல மதிப்பும், விலையும் இருக்கிறது. அவருடைய வியாபார உத்தியும், கடின உழைப்பும்தான் அப்படி அவர் ஜெயித்ததற்குக் காரணமாக இருந்திருக்கிறது. ஆனால் சொந்த ஊரில், கள்ளக் கடத்தல் செய்து கிடைத்த பணம்தான் அது என்று ஒரே வரியில், ஒரு மனிதனின் எல்லா உழைப்பையும், திறமையையும் ஒன்றுமில்லாமல் செய்திருந்தார்கள். மற்றவர்களின் நியாயமான வளர்ச்சிக்கு அவர்கள் கொடுத்த விலையையும், உழைப்பையும் உடனே மறந்து விடுகிறோம். சக மனிதர்களை மட்டுமல்ல, அவர்களின் வளர்ச்சியைக்கூட மதிக்க முடியாத ஆட்களாகிவிட்டோம் நாம்.

உடை அணிவதில்கூட நமக்கு வேறுபாடு இருக்கிறது. வேட்டியும் ஜிப்பாவும்கூட கொஞ்சம் அதிகபடியாக, விசேஷ நேரங்களில் மட்டும் அணிந்து கொள்ளுமொரு அலங்காரம். கரை வேட்டியும், ஜிப்பாவும் அணிந்தால் என்ன விசேஷமென்று எல்லோரும் கேட்பார்கள்.

மலையாளிகளின் வீட்டிற்குள்ளேகூட இம் மாற்றத்தை நாம் பார்க்க முடிகிறது. எவ்வளவு வயதானவர்கள் உட்கார்ந்திருந்தாலும் அவர்களுக்கு இணையாக உட்கார, நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அப்பாவும் பிள்ளைகளும் உடன் அமர்ந்து மது அருந்துவதுகூட வளர்ச்சியின், நாகரிகத்தின் அடையாளமாய் மாறிவிட்ட சமூகத்தில் நாம் வாழ நேர்ந்திருக்கிறது.

காலில் விழுந்து வணங்குவதும், சாஷ்டாங்கமாய் வணங்குவதும் தேசத்தின் பல இடங்களில் அன்பின், மரியாதையின் வெளிப்பாடாய் இருக்கிறது. ஆனால் மலையாளிகளுக்கு அது பிடித்தமான செயல் அல்ல. அவனுக்கு அது வெறும் காலில் விழுவது என்ற நிலையிலேயே கற்பிக்கப்பட்டிருக்கிறது. மனிதன் தன் சக மனிதனின் காலில் விழுவது எனக்கும் பிடித்தமான செய்கை அல்ல. ஒரு மனிதனைப் பார்க்கும்போது மரியாதை செலுத்த வேண்டும் என்று நினைத்தால் குனிந்து காலைத் தொட்டு வணங்குவது என்பதை மரியாதையின் நிமித்தம் என்று மட்டுமே யோசித்தால் போதும்.

’மம்முட்டிக்குப் பெரிய கர்வம்’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். எனக்கும் அப்படித் தோன்றியிருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ அது நடந்திருக்கலாம். அந்நியனிடம் தோன்றும் மரியாதைக் குறைவுதான் அதற்குக் காரணம். ஆனால் மிக முக்கியமாக என்னுடைய ரத்தத்திலும் மலையாளியின் அணுக்கள் கலந்திருப்பதுதான் காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

அமிதாப்பச்சனை நினைக்கும்போதெல்லாம் குற்ற உணர்வு மேலிட என்னைத் திருத்திக் கொண்டு அதிலிருந்து வெளியேற முயற்சிக்கிறேன். ஆனாலும் எங்கோ அறுபட்ட ஒரு வாலின் மீதி….. மீதி…… அப்படியே இருக்கிறது. மனசு பல இடங்களில் குனிய மறுக்கிறது. ’நெற்கதிர்போல மனிதன் இருக்க வேண்டும்’ என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. நெல்லின் கனம் அதிகரிக்க அதிகரிக்க கதிர் குனியும். ஆனால் நாமோ செயற்கை உரமிட்டு வளர்க்கப்பட்ட கதிர்கள். அவை தானாகக் குனியாது. வேண்டுமானால் குனிய வைக்கலாம்.

(தொடரும்)

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...

தமிழனுக்கு ஓர் இயல்பான வாழ்வியல் அமைதியைத் தருகிறது…

1
 உலகக் குடிமகன் - 32  நா.கண்ணன்   நான் கொரியா செல்வேன் எனக் கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால், என் ஜப்பானிய ஆய்வை அமெரிக்கர்களும், கனடாக்காரர்களும், ஜெர்மானியரும், ஆங்கிலேயரும் கவனித்தது போல் கொரியர்களும் கவனித்து வருகிறார்கள் என...

சலூன் கிரி மாமா

0
மகேஷ் குமார்   கிரி மாமாவின் நிஜப்பெயர் அதுதானா என்பது எனக்குத் தெரியாது. அவரை முதல் முதலாகப் பார்த்த சலூனின் பெயர் ‘கிரி சலூன்’. அதிலிருந்து அவர் பெயர் கிரி மாமா. நல்ல உயரமும் உடலுமாக,...

குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்   அன்று நள்ளிரவில் அவன் வீடு திரும்பியதும் அவனுக்கு சாப்பாடு போட டேபிளில் தட்டு வைத்தாள். “எனக்கு வேண்டாம்” “ஏன்?” “வெளிய சாப்பிட்டேன்” “ஹோட்டல் உணவு உடம்புக்கு நல்லதில்லை” “நாம தனியா போன பிறகு உன் கையால் சாப்பிடுகிறேன். அதுவரை...

அப்ரைசர் முத்துசாமி

0
மகேஷ் குமார்   திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் மெயின் ரோட்டில் இருக்கும் அந்த வங்கியின் வாசலில் காலை 9 மணிக்கே கூட்டம் நெரியும். அந்த இரண்டு தினங்களில்தான் நகைக்கடன் கொடுக்கப்படும். பெரும்பாலானோரின் கையில் ஒரு...