0,00 INR

No products in the cart.

கை குட்டை கனவு

ராதிகா பி.எஸ்ஸி., மேத்ஸ் 2ஆம் ஆண்டு ஆர்.எஸ். கலைக்கல்லூரி,
கோ-எட்டில் படிக்கும் ஒரு சராசரி மாணவி. கணிதம் எடுத்திருந்தாலும், கணிதத்தில் சற்று வீக்தான். பள்ளிக்காலம் முதலே, தனக்குத் தெரிந்த சஞ்ஜையிடம் தனது சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவது வழக்கம். அவனும் சளைக்காமல் மிக எளிதாக விளக்கம் தந்து அவளது சந்தேகங்களைத் தீர்த்து வைப்பான்.

ராதிகாவின் வீட்டிற்கு 3ஆவது தெருவில்தான் சஞ்ஜையின் வீடு இருந்தது. அவனும் பி.எஸ்ஸி., 3ஆம் ஆண்டு அருகில் உள்ள வி.ஆர்.எஸ். ஆண்கள் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தான். இவர்கள் அடிக்கடி பார்த்து பேசுவது என்பது கல்லூரி வளாகத்தில்தான். கல்லூரி 9 மணிக்கு என்றால்,     8 மணிக்கெல்லாம் ஆர்.எஸ். கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேன்டீன் அருகில் காத்துக் கொண்டிருப்பாள் ராதிகா.

ஒருநாள் வழக்கம் போல், ராதிகாவும், சஞ்ஜையும் பேசிக் கொண்டிருந்தனர். எதிரே ஆர்.எஸ். கல்லூரியின் வார்டன் ஜெயராஜ் முன் வந்து நின்றார். இந்தக் கல்லூரி மாணவன் இவன் இல்லையே என ஒருவாராக சந்தேகித்தார் வார்டன். அதுமட்டுமல்ல, ‘‘கேன்டீன் என்பது இங்கு உள்ள ஹாஸ்டல் ஸ்டூடன்ஸுக்கு மட்டும்தான். வெளியில் உள்ளவர்களுக்கு அல்ல’’ – என்று உரத்தக் குரலில் சஞ்ஜையைப் பார்த்துக் கூறினார். உடனே சஞ்ஜை, ‘‘நோ சார், நான் கேன்டீனுக்கு வரல, மேத்ஸ்ல சில டவுட், மற்றும் டிஸ்கஷனுக்காக வந்தேன்’’ – என்றான்.

‘‘உண்மையில் கணக்கு சொல்லித் தரவா? இல்லை கணக்கு பண்ணவா? ம்… ம்… டோன்ட் ரிப்பீட்’’ – என்று சொல்லிக் கொண்டே தனது முன்னந்தலையில் அடித்துக் கொண்டு போனார்.

வார்டன் சென்றவுடனே, வலையில் மாட்டிக் கொண்ட மீன் போல் துடித்தாள் ராதிகா.

ஏதோ ஒருவித குற்ற உணர்ச்சி, அந்த வார்டன் தன்னை தவறுதலாக நினைத்து விட்டாரோ…? என்று. அடக்க முயன்றும் முடியாதவளாய் அடிமனதில் குமுறினாள். பின் அடைத்து வைத்த வெள்ளம் புரண்டோடுவது போல் அழ ஆரம்பித்து விட்டாள்.

கன்னங்களில் வழிந்தோடும் நீர், அவளது புடைவையின் மேல் பட்டு மறைந்தது. தொடர்ந்து வரும் கண்ணீரை மறைக்க, தனது பையைத் திறந்து, ஒரு கர்ச்சீப்பை எடுத்து துடைக்கலானாள்.

இதுவரை அவள் அழுவதைப் பார்த்திராத சஞ்ஜைக்கு, சஞ்சலம் அதிகமானது. இவள் அழுகைக்கு நான் ஒரு வேளை காரணம் ஆகி விட்டேனோ? என மனதுக்குள் ஐயமுற்றான்.

‘‘ராதிகா, அழாதே. இதெல்லாம் கல்லூரியில் சகஜம் தானே? வார்டன் சார், அவர் வேலையைத் தான் செய்தார். இனி நாம இந்த கேன்டீன் அருகில் சந்திப்பதை தவிர்த்து, வேறு இடத்தில் சந்திப்போம், நீ அழுவதைப் பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு’’ – என்று அவளைத் தேற்றினான்.

ஆனாலும், விக்கல் வருகிற அளவில், விக்கி விக்கி அழுதாள். அவளது கைகுட்டையும் நனைந்து, இனி வரும் கண்ணீரை உறிஞ்ச மறுத்தது.

‘‘சரி வா… முதலில் இங்கிருந்து செல்வோம்’’ – என சஞ்ஜை சொல்லும் போதே, கல்லூரி மணி அடித்து, உள்ளே அழைத்தது ராதிகாவை.

‘‘சரி… சரி… நான் க்ளாஸுக்கு போறேன்’’ – என வேக வேமாக எழுந்தவள், ஒருவித மன அழுத்தத்துடனே வகுப்பிற்குச் சென்றாள்.

அவள் உள்ளே செல்லும் வரை, வச்சக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்ஜை. அவள் சென்றதும் தான் தெரிந்தது அவளின் கண்ணீரை சேர்த்து வைத்திருந்த கர்ச்சீப், கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்து சஞ்ஜைக்கு ஒரு தோணல்,

இதை நான் எடுத்து வைத்துக் கொண்டால் என்ன?

அவள் கண்ணீர் கூட மண்ணில் படக்கூடாது.

அவள் ஞாபகமாக நான் வைத்துக் கொள்ள இயற்கையே எனக்குத் தந்த பரிசு என நினைத்து தனது பாக்கெட்டுக்குள் வைத்து அடைத்தான்.

இரண்டு நாட்கள் கழித்து தனது நண்பன் ரவியை சந்திக்க நேரில் சென்றான். தண்ணீரில் விட்ட ஒரு சொட்டு எண்ணெய், எவ்வாறு மிதந்து கொண்டு இருக்குமோ, அதேபோல அவளது கர்ச்சீப்பும் அவன் மனதில் மிதந்து கொண்டிருந்தது.

தான் செய்தது சரியா? தவறா? இனி அடுத்தக் கட்டமாக அதை என்ன செய்வது? இதன் மூலம் அரும்பியுள்ள காதலை எப்படி வெளிப்படுத்துவது? என்பது போன்ற பல கேள்விகளுடன் நண்பன் ரவியை அணுகினான். சஞ்ஜை லேசாகத்தான் தனது கதையைச் சொல்ல ஆரம்பித்தான். ஆனால், ரவி சற்றும் யோசிக்காமல்,

‘‘மச்சான், கர்ச்சீப்பில் தொடங்குகிற காதல் ஃபெயில் தான். இதை நீ நம்பினாலும், நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை. கண்டிப்பா ஃபெயில் ஆயிடும்’’ – என்று வெகு திருத்தமாகச் சொன்னான்.

நொறுங்கின அப்பளம் போல, மனதில் கட்டின கை குட்டை கனவெல்லாம் சுக்கு நூறாக உடைந்தது போல் இருந்தது சஞ்ஜைக்கு. ரவி சொன்னதை நினைத்து நினைத்துப் பார்த்தான்; கர்ச்சீப்பால் துவங்கும் காதல் கனவு கந்தலாகிவிடும் போலிருக்கிறது… அப்படியானால், இந்த கர்ச்சீப்பை, மீண்டும் ராதிகா பையில், அவளுக்குத் தெரியாமல் வைத்துவிட வேண்டியது தான்… என தனது மனதுக்குள்ளே திட்டம் தீட்டினான். தனது தலையை பக்கவாட்டில் ஆட்டிக் கொண்டே இருந்தான்.

இதைப் பார்த்த ரவி, கேட்டான்.

‘‘என்ன மச்சான்! எங்க இந்த கர்ச்சீப்பை எடுத்தோமோ அங்கேயே வைச்சுடலாம்ன்னு தானே யோசிக்கிற…? என் காதலிலும், நானும் அப்படித் தான் யோசிச்சேன். செஞ்சேன், நானும் உன் ஃப்ரண்ட் தானே! உன்ன மாதிரி தான் யோசிச்சிருப்பேன். ஆனா, நடந்தது என்ன தெரியுமா?’’

‘‘என்னடா…?’’ என கண்களை அகல விரித்து கேட்டான் சஞ்ஜை.

என் லவ்வரை ஒரு நாள் பார்த்து, அவளது பைக்குள் நான் எடுத்த கர்ச்சீப்பை மீண்டும் வைக்கும் போது அவள் என்னை, கையும் களவுமாக பிடித்து விட்டாள். உடனே அவள் கொடுத்தப் பரிசு, என் கன்னத்தைப் பதம் பார்த்து விட்டது. என் காதலும் பறிபோனது. நான் தெரிஞ்சு கொண்டது எல்லாம், லேடீஸ் பையை அவங்க பர்மிஷன் இல்லாம தொடுவது கூட தப்புதான் என்றான் ரவி. இதை கேட்டவுடன், சஞ்ஜையின் மனதில் திருப்பி கொடுப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டி வந்தது.

வீட்டிற்குச் சென்ற ராதிகா, தன்னைத் தானே நொந்துக் கொண்டாள். நடந்த நிகழ்வுக்கெல்லாம் தான் தான் காரணம் என்று! சரி, சஞ்ஜையின் வீட்டிற்குச் சென்று மன்னிப்பு கேட்கலாம் என நினைத்து, 3ஆவது தெருவிலிருக்கும் சஞ்ஜையின் வீட்டிற்குச் சென்றாள். அங்கே சஞ்ஜையின் அம்மா, மங்கை, மகனின் துணிகளை எல்லாம் துவைத்து, சீராக உலர்த்திக் கொண்டிருந்தாள். அதில் ஒரு கர்ச்சீப்பும் காயப் போட்டிருப்பதைக் கண்ட ராதிகா, ஒரு நிமிடம் மலைத்து நின்றாள். அவள் கண்கள் ஸ்தம்பித்தது.

‘‘வா ராதிகா வா! என்ன அங்கே நின்னுட்ட…?’’ – என்று கேட்டவாறு வந்தாள் மங்கை.

‘‘இல்ல ஆன்ட்டி, சஞ்ஜையிடம் ஒரு புக் வாங்கிக் கொண்டு போகலாம்ன்னு வந்தேன்’’ – என்றாள்.

‘‘அவன் வெளியே போயிருக்கான், இன்னிக்கு சாயங்காலம் தான் வருவான், வந்தால் சொல்றேன்’’ – என்றாள் மங்கை.

‘‘ஆன்ட்டி, இந்த கர்ச்சீப் ரொம்ப நல்லா இருக்கே… எங்கே வாங்கனீங்க?’’
– என்றாள் ராதிகா.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. சஞ்ஜை பாக்கெட்டில் இருந்தது. எடுத்தேன், துவைத்தேன், உலர்த்தினேன் – அவ்வளவுதான் எனக்குத் தெரியும்” என்று சிரித்தாள் அம்மா.

மங்கையிடம் விடை பெற்றுக் கொண்ட ராதிகா, நினைத்தாள் சஞ்ஜையின் அம்மா, எவ்வளவு இன்னோசென்ட்டாக இருக்காங்க. ஆண்கள் கர்ச்சீப், பெண்கள் கர்ச்சீப் என்று கூட தெரியவில்லை! அவர்கள் உடையும் சுத்தமும் உள்ளமும் சுத்தமாக இருக்கே! இவள் பெற்ற மகனும் (சஞ்ஜை) அப்படி தான்…  எனது கர்ச்சீப்பை துவைத்து கொடுக்க வேண்டும் என நினைத்து இருக்கான்… என பாஸிட்டிவாகவே நினைத்தாள்.

அடுத்த நாள் கல்லூரி சென்ற ராதிகாவுக்கு சைக்காலாஜி க்ளாஸ். லெக்சரர், வந்தவுடன் துவங்கினார்.

‘‘உலகில் ஒருவர் தெளிந்த அறிவுடன் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமெனில், அவரின் டிரெஸ்சிங் சென்ஸ்… அதாவது உடை உடுத்தும் விதம், முறையாக, சரியாக, சுத்தமாக பொறுத்தமாக, தனக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். எதை எதை, எப்பப்ப பயன்படுத்த வேண்டும்? என்றும் தெரிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு,

ஒரு கர்ச்சீப் ‘‘(அ) ‘‘கை குட்டை’’ – என்றாலும் அதற்கு பல்வேறு பயன்பாடுகள் இருக்கு. சிறு துறும்பும் பல் குத்த உதவும் – என்பார்கள் அல்லவா! அப்படி தான். இந்த சிறிய கர்ச்சீப்பும், சாப்பிட்டு விட்டு துடைக்க மட்டுமல்ல, கண்ணீர் துடைக்கவும் பயன்படும். காதலிலும் கூட கை குட்டையின் பங்களிப்பு உண்டு. இது தேவதாஸ் காலத்திலிருந்தே சொல்லி வருகிற ஒன்று. அதாவது, கர்ச்சீப்பில், ஒரு லெட்டர் அல்லது பூ அல்லது ஸ்வீட் இப்படி ஏதாவது ஒன்று வெச்சு கொடுத்தால், அந்த காதல் சக்ஸஸ் ஆகுமாம். ஆனா, அதுவே, வெறும் கர்ச்சீப் கொடுத்தா, தோல்வியில் தான் முடியும் என்று சொல்வார்கள். ஆனால் அது வெற்றியைத் தருவதும், தோல்வியைத் தருவதும் நாம் கையாளும் விதத்தில்தான் இருக்கிறது.

பொதுவாக வெறும் கர்ச்சிப், தோல்வியில் முடியும் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? – வெறும் கர்ச்சீப், பிட்துணி, பீஸ் துணி, போர்த்த துணி – இப்படி துண்டு துணியைத் தரக்கூடாது. இது அமங்கலத்தின் அறிகுறியாகவே அந்நாள் முதல் கருதப்பட்டு வருகிறது’’ – என முடித்தார்.

இதைக் கேட்ட ராதிகா, நினைத்தாள். இந்த விஷயமெல்லாம் சஞ்ஜைக்குத் தெரிந்திருக்கும் போலிருக்கு. அதனால் தான் சஞ்ஜை, எனது கர்ச்சீப்பை, என்னிடம் தரவில்லை. அவனுக்குத் தான் எவ்வளவு இங்கிதம் தெரிந்திருக்கு – என பாஸிட்டிவாகவே நினைத்தாள். அவனைப் பார்த்து பேச வேண்டும் என அவளின் உள்மனது சொல்லிற்று; அதற்காக, அவளது தோழி கயல்விழி மூலம் தூது அனுப்பினாள். அவள் அனுப்பிய தூதின்படி, கல்லூரி கேட் அருகில், சரியான நேரத்தில் வந்து விட்டான் சஞ்ஜை. வேண்டுமென்றோ, சற்று தாமதமாக வந்து சேர்ந்தாள் ராதிகா. அவனைக் காக்க வைப்பதில் தான் எத்தனை இன்பம் அவளுக்கு? ஆனால், அவள் வருவதை, அவன் மனதின் அதிர்வுகள் சொல்லிற்று. அவள் வருவதைக் கண்ட சஞ்ஜை, தன்னையும் அறியாது எதிர்கொண்டு போனான்.

‘இன்றைக்கு, இப்படியே காலார நடந்து போகலாமா?’ – என்றாள் ராதிகா.

‘‘போகலாமே, அப்படியே, ஒரு காபி ஷாப்பில், ஒரு காப்பி குடிச்சிட்டும் போகலாமே’’ – என்றான் சஞ்ஜை.

‘‘ஏன்! இன்னொரு முறை கர்ச்சீப் எடுக்கவா?’’ – என்றாள் ராதிகா.

ஒரு நிமிடம் ஆடி போய் விட்டான் சஞ்ஜை. கர்ச்சீப் விஷயம் இவளுக்குத் தெரிந்திருப்பதை நினைத்து, அதெல்லாம் ஒண்ணுமில்ல… அன்னிக்கு, நான் வந்தேன், நீயும் வந்தே… அந்த வார்டன்… பிறகு நீ ‘ஓ’வென அழ – பின் நீ ஓடிட்ட க்ளாஸுக்கு நீ மறந்து, தவற விட்ட உன் கர்ச்சீப்பை, பத்திரப்படுத்தி, உனக்கு தரணும்ன்னு தான் இருந்தேன். ஆனா என் நண்பன் சொன்னான் கர்ச்சீப் கொடுத்தா காதல் முறிஞ்சி போகும்ன்னு. அதனால… என இழுத்தான்…

இதைக் கேட்ட ராதிகா, இவன் ஒழுக்கமானவன், கணிதத்தில் கெட்டிக்காரன், என்று மட்டும் தான் நினைச்சிருந்தேன். ஆனால், இன்று, நான் தவற விட்ட கர்ச்சீப்பையே இந்த அளவு பத்திரமா பாவிக்கும் இவன், என்னையும் பத்திரமா பாதுகாப்பா பார்த்துக் கொள்வான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், இவள், அவனை கண்ணால் மட்டும் கட்டி இழுக்கவில்லை, மனதாலும் அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

சஞ்ஜையை பொறுத்தமட்டில், கர்ச்சீப் சமாதானத்தின் அடையாளமாகவே இருந்தது.

Stay Connected

261,755FansLike
1,915FollowersFollow
7,230SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...