0,00 INR

No products in the cart.

அதைச் சரியான கோணத்தில் புரிந்து கொண்டேன் என்பது நிஜம்

ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  – 15

 

மம்முட்டி

தமிழில் கே.வி.ஷைலஜா

 

துயரத்தின் பாடல்

 

ந்த பாடல் காட்சியைப் படமாக்கும்போது நான் கதாநாயகியைக் கூர்ந்து கவனித்தேன். முகத்தில் ஏதோ ஒரு மாற்றம். விரகதாபத்தில் காதலனை நினைத்துருகி பாடுவதான காட்சி அன்று படமாக்கப் பட்டுக்கொண்டிருந்தது. காதலன் அருகில் வருவதும் சட்டென மறைவதுமான காட்சி. படப்பிடிப்பின் இடைவேலையில் அவர் தனியே அமர்ந்து எதையோ நினைத்து துக்கப்படுவது போலத் தோன்றியது.

இரண்டு மூன்று மாதகாலம் வெளிநாட்டுப் பயணத்தை முடித்தபிறகு நடிகை படப்பிடிப்பிற்கு வந்திருக்கிறார். சாதாரணமாகப் பயணத்தைப் பற்றிப் பேசும் பழக்கமுள்ளவர். ஆனால் வந்த இரண்டு நாட்களில் ஒன்றும் பேசவில்லை. முதல் நாளைவிட இரண்டாம்நாள் மிகுந்த மன வேதனையோடு இருப்பதாய் அவள் முகம் காட்டிக்கொடுத்தது.

‘எப்போதும் பேசுவது போன்ற கேலிப்பேச்சுகள் அவரைக் காயப்படுத்தி விட்டதோ’ என்று பயந்தேன். பல நேரங்களில் சாதாரண கேலிகளும், கிண்டல்களும்கூட எதிரில் இருப்பவர்களால் சரியாய் புரிந்துகொள்ளப்படாமல் சங்கடமேற்படுத்துவதுண்டு. ‘அபத்தமாக ஏதாவது பேசிவிட்டோமோ’ என்று யோசித்து அவரிடம் கேட்டேன்.

“என்ன ஆச்சு? ரொம்ப வருத்தமாவே இருக்கீங்க?”

“என்னோட துக்கம் யாரிடமும் சொல்ல முடியாதது  சார். நீங்க அதைத் தெரிஞ்சிகிட்டு உதவமுடியாது. அதனாலதான் எதுக்குச் சொல்லணும்னு….”

துக்கத்தில் அவள் கண்கள் பனிக்க படப்பிடிப்பு தொடர்ந்தது. கதாநாயகி எழுந்தும் போய்விட்டார். யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத துக்கம் என்று அறிந்தபோது எனக்கு என்னென்னவோ யோசனை தோன்றியது. வெளியில் சொல்லமுடியாத ஏதாவது வியாதி இருக்குமோ, பணம் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருந்தால் கடனாகவாவது உதவலாமே, ஆனால் மிகவும் நல்ல நிலையில் இருந்த நடிகையாயிருந்ததால் அதற்கான வாய்ப்புகளும் இல்லை.

ஏதோ யோசனையில் கண் நிறைந்து பொங்கும் முகத்தை நான் ஏறெடுத்ததை அவர் கவனித்துவிட்டார். கவனிக்கப்பட்டதை அறிந்த நான் நகர்ந்து உட்கார்ந்தேன்.

“பொதுவாகவே நான் முரட்டுத்தனமானவன் என்றுதான் சொல்வார்கள். இனி ஒரு கதாநாயகியை அழவைத்த ‘கல்மனசுக்காரன்‘ என்ற கெட்ட பெயரும் வரவேண்டுமா” என்று யோசித்தேன். ஆனால் படப்பிடிப்பின்
இடைவேளையில் அவர் மறுபடியும் என்னருகில் வந்து உட்கார்ந்தார்.

“எதுவும் செய்ய முடியாதுன்னாலும் எனக்கு உங்ககிட்ட சொல்லணும் போல இருக்கு. கேக்கறதில உங்களுக்கு ஏதாவது பிரச்னையிருக்கா சார் ?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. பேசலாம்னா பேசுங்க”

கதாநாயகி ஒரு கதைபோல அதைச் சொல்ல ஆரம்பித்தார்.

தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்திற்கு முன்பு அவர் ஒரு நல்ல மனிதனைப் பார்த்திருக்கிறார். மெர்சண்ட் நேவியிலிருக்கும் அவருடன் ஆரம்பத்தில் நட்பாய் தொடங்கிய பழக்கம் பிறகு காதலாக மாறியிருக்கிறது. இருவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள். ஜாதியில் சிறிய வேறுபாடிருக்கலாம். இவர்களின் திருமணம் இரு குடும்பத்தையும் பெரிதாய் பாதிக்கப் போவதில்லை. தன் காதலைப் பற்றி நடிகை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. ‘வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு வந்து விடலாம்’ என்று இருந்துவிட்டார். பயணத்திற்கு முன்பாக நடிகை அவரைக் கூப்பிட்டிருந்தார். ஆனால் அதற்குள் பணி நிமித்தமான அவருடைய பயணம் தொடங்கிவிட்டது.

கப்பல் கரையைச் சமீபிக்கும்போது மட்டுமே அவரால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளமுடியும். மூன்று மாதங்களாவது அவர் கப்பலில் இருக்கவேண்டும். இரண்டுபேரும் பயணத்திலேயே இருந்ததால் பேசமுடியவில்லை. முதல் மாதத்தில் சில சந்தோஷ இ-மெயில்கள் கைமாறின. இந்தப் படப்பிடிப்பிற்காகத்தான் நான்கு நாட்களுக்கு முன்பு பயணத்தை முடித்துக்கொண்டு நடிகை திரும்பி இருக்கிறார். வந்த உடனேயே இன்டர்நெட், ஃபோன், மொபைல் ஃபோன், கடிதம் என எந்த விதத்திலாவது தன் காதலனிடமிருந்து செய்தி வந்திருக்கிறதாவென ஏக்கத்தோடு பார்த்தவருக்கு ஏமாற்றமே பதிலாகக் கிடைத்திருக்கிறது. நடிகை அனுப்பியிருந்த எந்தவொரு காதல் பகிர்விற்கும் அவரிடமிருந்து பதிலில்லை.

குறைந்த நாட்களே பழகியிருந்தாலும் மிகப்பெரிய கனவுகளையும், காதலையும் சுமந்திருந்த அவருக்கு இந்த ஏமாற்றத்தின் வாள்வீச்சைத் தாங்கமுடியவில்லை. ஆழம் அதிகமாக இருந்தாலும், செருகப்பட்டிருப்பது வாள் என்றும், அதன் வேதனை மிக ஆழமானதென்றும் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள முடியாத ரகசிய வலி அது. ஒருவரிடமும் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே குமைந்து, குமைந்து வெடித்துப் பெரிதாகும் வேதனை யாருக்கும் தெரியாமல் கண்ணீராய் கசிகிறது. இரண்டு நாட்களின் தொடர் தேடலுக்குப் பிறகு அவர் வீட்டுத் தொலைபேசி எண் கிடைத்திருக்கிறது. அதில் தொடர்பு கொண்டிருக்கிறார்.

“………….னோட வீடுதானே?”

“ஆமாம்”

அந்த முனையில் துயர்தோய்ந்ததொரு கனத்த குரல் பதில் சொன்னது. ஏறக்குறைய தன் காதலனின் குரலையொத்த குரல். சில தடவைகள் மட்டுமே பேசியிருந்ததால் பேசிய குரல் அவருடையதுதானா என்றுகூடச் சந்தேகப்பட வைத்தது.

“அவர்கிட்ட பேச முடியுமா?”

“நீங்க யாரு?”

“நான் அவருடைய ஸ்நேகிதி…… ப்ளீஸ், ஃபோன அவர்ட்ட குடுக்கமுடியுமா?”

பதட்டமும் வேகமும்கூட, காத்திருத்தலின் வலியுடன் உடல் வியர்வையில்  நனைய அதில் துக்கத்தின் கனம் கூடியது. தொண்டைச் செருமலுடன் அந்தப் பக்கத்திலிருந்து பதில் வந்தது.

“நான் அவனோட அப்பா. மூன்று வாரத்திற்கு முன்பு அவன்…. அவனொரு வாகன விபத்தில் இறந்துவிட்டான்.”

வழக்கத்திற்கு மாறாக கப்பல் பயணத்தைப் பாதியில் முடித்துக்கொண்டு அவர் திரும்பி இருக்கிறார். சொந்த ஊருக்கு வந்து சேர்ந்ததும்தான் இப்படி ஒரு துர்மரணம். வெளிநாட்டுப் பயணம் முடித்துவரும் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துச் சந்திக்கத் திட்டமிட்டு வந்த வருகை அது.

சொல்லி முடித்தபோது நிறைந்து வழியும்  நடிகையின் கண்களை என்னால் பார்க்கமுடியவில்லை. காதலையே வெளியே சொல்லாமல் பொத்திப் பாதுகாத்த பெண் அதன் வேதனையை எப்படிப் பகிர்ந்துகொள்ள முடியும்? யாரிடமும் சொல்லி அழவும் முடியவில்லை. ‘நான் உங்கள் மகனுடைய காதலி’ என்று அவனுடைய வீட்டில் போய்ச் சொல்ல முடியுமா? சொன்னால் மட்டும் எந்த விதத்தில் அவர்களிடமிருந்து ஆறுதலை எதிர்பார்க்க முடியும்? தன் வீட்டில் சொன்னால் நம்புவார்களா? நெருக்கமானவர்கள்கூட இதொரு கட்டுக்கதை என்றுதானே சொல்வார்கள். “இரண்டு மாதம் முன்பு பார்த்த, பழகிய, காதலித்த மனிதனை நினைத்து இவ்வளவு துக்கப்பட வேண்டுமா” என்று யாராவது தன் காதலின் மேன்மையைக் குலைத்துவிட்டால்?

யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத துக்கம் நமக்கெல்லாம்கூட இருக்கும். துக்கம் ரகசியமானதாக இருந்தாலும் அதை யாரிடமாவது சொல்ல முடிந்தால் எப்படியிருக்கும்? என்னிடம் எல்லாவற்றையும் கொட்டிவிட்டதால் அவர் சிறிது ஆசுவாசப்பட்டார். மனப்புழுக்கம் லேசாகி இதமான மனநிலைக்கு வந்தார். அதில் எனக்கும்  நிம்மதி ஏற்பட்டது.

அந்த நடிகையின் துக்கத்தை அழித்து இல்லாமலாக்கச் செய்ய எந்த வித்தையும் என் கைவசமில்லை. ஆனால் அதைச் சரியான கோணத்தில் புரிந்து கொண்டேன் என்பது நிஜம். சொல்ல வருவதை அதே அர்த்தத்தில் புரிந்துகொள்ள எதிரில் உள்ளவரால் முடியுமென்பது எத்தனை பெரிய பாக்கியம்! பல நேரங்களில் சொல்ல வருவது அதே நீள, அகல, ஆழத்தில் தெளிவாகப் புரிந்துகொள்ளப்படுவதில்லை என்பதுதான் பலரின் பிரச்னை. நம்முடைய சிறியதொரு ஆறுதல் வார்த்தைகூடப் பெரிய ஆறுதலாய் மனதில் இருக்கும். அதோடு கோடைமழை போல நம் வெப்பத்தைத் தணிக்கும். விம்மித் ததும்பும் மனதோடு சாய்ந்துக் கொள்ள ஒரு தோள் தேடிவருபவர்களை வார்த்தைகளால் நீவி விடவும், அவர்களின் கொதிக்கும் மனவேதனையில் விழும் ஒரு துளி குளிர்ந்த நீராயாவது மாற வேண்டுமென்பதுதான் என் விருப்பம்.

(தொடரும்)

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...