
இரவு நேரத்தில் எப்போதும் வெறிச்சோடிக்கிடக்கும் அந்த மெட்ரோ நிலையத்தில் என்றுமில்லாத அளவில் கூட்டம் ஆங்காங்கே குழுக்களாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குழுவின் நடுவில் சித்தார்த் நின்று பேசிக்கொண்டிருக்கிறான். அவன் உக்ரைன் நாட்டின் கார்கீவ் நகரில் ஸ்டேட் மெடிகல் யூனிவர்சிட்டியில் மருத்துவக் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவன். பள்ளி இறுதி தேர்வில் 98% பெற்றும் நீட்தேர்வில் ஒரு மார்க்கில் அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை இழந்தவன். இயல்பாகவே நல்ல பேச்சுத்திறனும் தலைமைப் பண்பும் வாய்க்கப் பெற்றவன்.
கடந்த ஆண்டு பாரதி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டு அந்த நாட்டின் பல்வேறு நகரங்களிலிருக்கும் 40 பல்கலைக் கழகங்களில் படிக்கும் தமிழ் மாணவர்களைத் தேடிப்பிடித்து இணைத்து ஒரு வாட்சப் குழுவை உருவாக்கியவன். அது இப்போது கைகொடுக்க அனைவரையும் இங்கு வரச்சொல்லி செய்தி அனுப்பியதின் விளைவு இந்த கூட்டம்.
"நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். இந்த கார்கீவ் நகரம் மட்டு மில்லை, பல நகரங்களில் வெளிநாட்டு இன்டெர்நெட்டை துண்டித்து விட்டார்கள். அதனால்தான் நேற்று இரவுக்குப் பின்னர் நம்மால் இந்தியாவில் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. தலைநகர் கீவிலிருக்கும் நம் எம்பஸி டெலிபோன்கள் அதிகமான கால்களினால் ஜாம் ஆகிவிட்டதால் நான் கீவ்விலுள்ள என் நண்பருக்குச் செய்தி அனுப்பி நேரில் சென்று தகவலைச் சொல்லச் சொன்னேன். எம்பஸியிலிருந்து சக்சேனா என்ற அதிகாரி என்னிடம் பேசினார். அவர் சொன்ன செய்தி இன்று இரவு முழுவதும் எப்படியாவது பாதுகாப்பாக இருந்துகொள்ள வேண்டும். நாளை காலை 6 மணிக்கு இந்த ரயில் நிலையத்துக்கு ஒரு ரயில் வருகிறது. டிக்கட் வாங்க வேண்டாம். உங்கள் ஐடியைக்காட்டினால் போதும். அதில் ஏறி நாம் கீவ் நகருக்குப் போய்விட வேண்டும். அந்த ரயில் நிலையத்திலிருந்து கிடைத்தால் பஸ்ஸில் அல்லது நடந்து விமான நிலையம் போய்ச்சேர வேண்டும். அங்கு சக்சேனா காத்திருப்பார். ஏர் இந்தியா விமானம் வருகிறது. டெல்லி வரை போகும். அங்கிருந்து நம் ஊர்களுக்குப் போகத் தமிழ்நாடு அரசாங்கம் விமான டிக்கட் தரும்.
சொல்லி முடித்தவுடன் கைதட்டல் எழுந்தது. "அனாவசிய ஆர்ப்பாட்டம் வேண்டாம். இது இக்கட்டான நேரம். நாமெல்லாம் டாக்டர்களாகப் போகிறவர்கள். எமோஷன்களுக்கு ஆளாகாமல் செயலாற்ற வேண்டும். நமது இரவு உணவுக்கு ரொட்டியும் சீஸ்ஸும் முடிந்தால் பழங்களும் வாங்க நவீனும் சஞ்சனாவும் அருகிலுள்ள கவர்ன்மென்ட் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிருக்கிறார்கள். அதற்கு உங்களிடமிருக்கும் பணத்தில் எவ்வளவு முடியுமோ அதை ராதிகாவிடம் கொடுங்கள்."
தன்னிடம் சொன்னபடி ஏன் இன்னும் நிர்மலா வரவில்லை? என்று சற்றே கவலையுடன் மெட்ரோவின் வாசலைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் சித்தார்த். நிர்மலா உக்ரைனிலுள்ள பி.எஸ்.எம்.யூ. என்ற உலகப்புகழ் பெற்ற மெடிக்கல் ஸ்கூலில் ஸ்காலர்ஷிப் பெற்றுப் படிக்கும் மாணவி. சித்தார்க்கு அவளிடம் ஒரு ஈர்ப்பு.
ராதிகா பணம் வசூலித்துக்கொண்டிருக்கிறாள். 8 மணி நேரம் கழித்து ஆபத்பாந்தவனாக வரப்போகும் ரயிலுக்காகக் காத்திருக்கிறார்கள் அந்த மாணவர்கள்
*** *** ***
நிலத்தடியிலிருக்கும் அந்த பங்கரில் நெருக்கியடித்துக்கொண்டு 200 பேர் நிறைந்திருக்கிறார்கள். அந்த நகரம் சோவியத் யூனியனுடன் இருந்த காலத்தில் உருவானது. அன்றைய அரசு நகரின் எல்லா கட்டிடங்களும் அவசியமானால் ராணுவத்துக்குப் பயன்பட வேண்டும் என்ற முன் யோசனையுடன் அமைக்கப்பட்ட பதுங்கு குழிகள் இப்போது பயன் படுகிறது.
"இரண்டு கிலோ மீட்டர் அருகில் நேற்று ஒரு குண்டு வீசப்பட்டதால் நமது கல்லூரி நிர்வாகம் மறு அறிவிப்பு வரும் வரை இங்கு பாதுகாப்பாக இருக்கச் சொல்லியிருக்கிறது. நம்மில் சிலர் சித்தார்த் அனுப்பிய செய்தியின்படி மெட்ரோ நிலையத்துக்குள் இருக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஆனால் இப்போது இங்கிருந்து நகர முடியாது. வெளியில் போனால் 'சுடப்பட்டு விடுவீர்கள்' எனப் பயமுறுத்துகிறார் வார்டன். மெஸ்ஸில் 3 நாட்களுக்கான உணவு இருக்கிறதாம். அதற்குள் மற்ற நாட்களுக்கு ஏற்பாடு செய்வோம் என்கிறார்கள். இந்தியன் எம்பஸிக்கு அவர்களே செய்தி அனுப்பி விட்டதாகச் சொல்லுகிறார்கள். நம்புவோம்". என்றாள் நிர்மலா ராகவன்.
அவள் அந்த மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவி. நட்பைத் தாண்டிய கட்டமாக சித்தார்த்துடன் இப்போதுதான் காதல் அரும்பியிருக்கிறது. வரமுடியாமல் போனதற்குக் காரணத்தை சித்தார்த் புரிந்துகொள்வானோ, மாட்டானோ என்ற சந்தேகத்துடன் வேறு வழியில்லாததால் காத்திருக்கிறாள் நிர்மலா.
*** *** ***
இந்த நீண்ட கியூவில் நிற்கும் நவீனுக்கு நாம் கடையை நெருங்குவதற்குள் இரவு ஊரடங்கு எச்சரிக்கை சங்கு ஒலித்துவிடுமோ என்ற கவலை. ஏன் இவ்வளவு அதிகமாக வாங்குகிறீர்கள்? என்று கேட்டால் உக்ரைன் மொழியில் பதில் சொல்ல எழுதி வைத்திருப்பதை மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் சஞ்சனா. பல சூப்பர் மார்க்கெட்களில் 'இங்கிலிஷ் அல்லது ரஷ்ய மொழி செல்லாது' என்று அவளுக்குத் தெரியும். படிப்புக்கு அவசியமில்லாவிட்டாலும் மெல்ல உக்ரைன் மொழியை கற்று வருகிறாள் சஞ்சனா. இன்னும் சில நிமிடங்களில் அந்த அரசு கட்டிடம் மீது ரஷ்ய ராக்கெட் வீசப்படப்போவதை அறியாமல் நண்பர்களுக்காக ரொட்டி வாங்கக் காத்திருக்கிறார்கள்.
*** *** ***
'நமது டெர்னோபல் டெக்னிக்கல் கல்லூரியை மூடச்சொல்லி அரசு உத்திர விட்டிருப்பதாலும் இரண்டுநாள் ரஷ்யா போர் நிறுத்தம் அறிவித்திருப்பதாலும் நாளைக்குள் நம்மை வெளியேறச் சொல்லி யிருக்கிறார்கள். இரவுக்குள் நாம் நாட்டின் எல்லையைத் தாண்டிவிட வேண்டும். நம் ஏஜென்ட்டிடம் பேசினேன். இரவுக்குள் ஒரு பஸ் ஏற்பாடு செய்கிறேன் என்கிறார். கட்டணம் பயங்கரக் கொள்ளை ஆனால் நல்ல வேளையாக அதை இந்தியாவில் ரூபாயாக அவர்கள் கம்பெனியிடம் கொடுத்தால் போதும். இந்தியன் எம்பஸி அதிகாரி அந்த எஜென்ட்டிடம் பேசி உள்ளூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் பயணம் செய்யச்சொல்லியிருக்கிறார். அதன்படி செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவரும் நம்மோடு போலந்து நாட்டின் எல்லை வரை வருவார். அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது" என்ற செய்தியை நண்பர்களுக்கு அறிவித்தான் விஷ்வா. அந்தக் கல்லூரியில் ஏரோநாட்டிக்ஸ் படிக்கும் மாணவன் அவன்.
இரவு அந்த பஸ்ஸின் முன் கண்ணாடியில் ஒரு செஞ்சிலுவை சின்னமிட்ட கொடியும் இந்தியக் கொடியும் பொருத்தப்பட்டு நிற்கிறது. 30 மாணவர்களும் ஏறியாகிவிட்டது. ஆனால் பஸ் கிளம்பவில்லை. இறுதி நேரத்தில் "என் நாட்டவராகியிருந்தால் கூட பரவாயில்லை எந்த நாட்டு மாணவர்களுக்காகவோ இந்தப் போரில் நான் சாகத் தயாராயில்லை" என்று வரவேண்டிய டிரைவர் கையை விரித்துவிட்டார்… நேரமாகிக் கொண்டிருக்கிறது. அட்மிஷன் வாங்கிக் கொடுத்து உதவிகள் செய்யும் ஏஜென்ட் வேறு ஒரு டிரைவருக்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார். விஷ்வாவும் அவனது நண்பர்களும் காத்திருக்கிறார்கள்
*** *** ***
"நம் எம்பஸி அதிகாரிகள். பாதுகாப்பாக ருமேனியா எல்லைக்குப் போய் விடுங்கள். அங்கிருந்து இந்தியா திரும்ப நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்" என்று சொல்லிவிட்டார்கள். ''கையில் காசு இல்லாத நேரத்தில் எ.டி.எம்.கள் வேலை செய்யாத நிலையில் எப்படிப் போக முடியும் என்று அந்த மர மண்டைகளுக்கு ஏன் புரியவில்லை?" என்று பொருமினான் ரோகித் குமார். உத்திர பிரதேசத்திலிருந்து உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க வந்தவன். அவர்கள் கல்லூரி இருக்குமிடத்திலிருந்து 20 கிலோ மீட்டரில் ருமேனியாவின் எல்லை. அதனால்தான் எம்பஸி அதிகாரிகள் அந்த யோசனைச் சொல்லியிருக்கிறார்கள்.
"நான் முடிவு செய்து விட்டேன். இனி காத்திருக்க முடியாது வாருங்கள் நடக்கலாம்" என்று எழுந்தான் அஜித்.
எஸ்… என்றான் சந்தோஷ்.
என்னது 20 கிலோமீட்டர் நடப்பதா? பைத்தியமா? என்று கத்தினான் அஷ்வின்.
"முடியும் என்று நினைப்பவர்கள் வாருங்கள் இன்னும் இரண்டு நாள் சுட மாட்டார்கள். குண்டு போட மாட்டார்கள். அதற்குள் உக்ரைன் பார்டரை கிராஸ் செய்துவிடலாம்" என்றான் அஜித்.
"நம்மிடம் ருமேனியா விசா இல்லையே" என்றான் பெருமாள் பாண்டி. "அதை எல்லையில் போய்ப் பார்த்துக்கொள்ளலாம். அங்கிருந்து அவர்கள் மூலமாக தலைநகர் புக்கரெஸ்ட்டிலிருக்கும் இந்திய எம்ப்ஸிக்கு செய்தி அனுப்பலாம். அதிகபட்சம் ருமேனியாவில் பாதுகாப்பு கைதியாக இருக்கப் போகிறோம். இங்கு குண்டு பட்டுச் சாவதைவிட அது மேல்" என்ற சந்தோஷை நம்பிக்கையுடன் பல கண்கள் பார்த்தன.
"நான் வரப்போவதில்லை. 12 லட்சம் கடன் வாங்கி என் குடும்பம் இங்கு படிக்க அனுப்பியிருக்கிறது. நான் இப்போது இந்தியா போனால் திரும்ப இங்கு வர முடியாது. நான் போர் முடியும் வரை காத்திருப்பேன். கல்லூரி திறந்தவுடன் படிப்பைத் தொடர்வேன். போரில் நான் செத்துப் போக மாட்டேன். எனக்கு நம்பிக்கையிருக்கிறது" என்றாள் அழுத்தமான குரலில் தமிழரசி. நெல்லை மாவட்டத்தில் ஒரு கிராமப் பள்ளியில் அவளது தந்தை தலைமையாசிரியர். அவளுடன் சேர இரண்டு மாணவிகள் தயாராகினர்.
ஒரு கணம் திடுக்கிட்ட சந்தோஷ் "உங்கள் வாழ்க்கையை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று சொல்லிவிட்டு முதுகில் இந்தியக் கொடியைப் போர்த்திக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
சிவப்பு மார்க்கரில் முதுகில் I AM INDIAN என்று எழுதப்பட்ட வெள்ளை லேப் கோட் அணிந்த மாணவர்கள் அவன் பின்னே நடக்கத் தொடங்குகிறார்கள்.
நாங்களும் உங்களுடன் வரலாமா?" என்று கேட்ட இரண்டு மாணவர்களை அப்போதுதான் ரோகித் கவனித்தான். அவர்கள் பாகிஸ்தானியர்கள். முதலாண்டு படிப்பவர்கள்.
அரை நிமிடம் யோசித்த பின், "வாருங்கள் ஆனால் பிரச்னைகள் எழுந்தால் சமாளிக்கவேண்டியது உங்கள் பொறுப்பு. நான் பேச மாட்டேன்." சண்டைக்கார தேசத்துக்காரனாயிருந்தாலும் அவனும் உயிர்பிழைக்கவேண்டும் என்ற மனிதம் அவனுள் தலை தூக்கியிருந்தது.
எந்த நேரத்திலும் குண்டுகள் விழலாம், என்ற அந்த பதற்றமானப் போர்ச் சூழலிலும் சித்தார்த்தையும் , நிர்மலாவையும் விஷ்வாவையும் துணிவுடனும் துடிப்புடனும் இயக்கும் சக்தி 'எப்படியும் நம் தேசம் நம்மைக் காப்பாறிவிடும்' என்ற நம்பிக்கை.