0,00 INR

No products in the cart.

நம்பியழகனின்  நம்பிக்கைகள்

 

 

ன்னும் இரண்டு நாளில் தூக்கு தண்டனை.

தூக்கு தண்டனை கைதி –  நம்பியழகன். வயது 40.

சுமத்தப்பட்ட /ஒப்புக்கொண்ட குற்றம் – ட்யூஷன் கற்பிக்க சென்ற வீட்டிலிருந்த பத்தாம் வகுப்பு மாணவி லாவண்யாவை கொடூரமாகக் கற்பழித்து கொலை.

தொழில் – வீட்டு ட்யூஷன்.

புலமை – தமிழில் அதீத ஆளுமை. தமிழின் தொன்மை குறித்து பிஎச்டி ஆராய்ச்சி முழுமையாக்க முடியாமல் பாதியில் நின்றுவிட்டது.

தெரிந்த பிற மொழிகள் – மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு.

குற்றங்கள் – இதுவரை வேறு எந்த குற்றப் பின்னணிகளும் இல்லாதவன். இந்தக் குற்றத்தை மட்டும் ஏன் செய்தான் என்பதை  பிடிவாதமாக கூற மறுத்தான். ஆனால், குற்றத்தை அவன் மறுக்காமல் ஒப்புக் கொண்டான். ஆய்வுகளும், சாட்சிகளும் அவனுக்கு எதிராகவே இருந்ததால் தூக்குத் தண்டனைக்கு விதிக்கப்பட்டான்.

சம்பவம் நடந்த தினம் அவனே சுயமாக குற்றமேற்று நீதி மன்றத்தில் சரணடைந்திருந்தான். ஒட்டுமொத்த நாடே கொந்தளித்தது.  மாதர் சங்கங்கள் அதைவிட அதிகமாக கொதித்து, குதித்து, தலைவிரித்தாடி விஸ்வரூபமெடுத்து ஆளும் அரசிற்கு நெருக்கடி கொடுத்தது!

வழக்கு சட்டத்தின் இண்டு இடுக்குகளில் எல்லாம் சஞ்சரித்து கீழ், மேல், உச்ச நீதிமன்றங்களில் பல்வேறு பரிமாணங்களில் அலசப்பட்டு,  எல்லோருடைய உறக்கத்தையும் கெடுத்து, மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இறுதியாக ஏகமனதாக தூக்குத் தண்டனை விதித்ததால்  அனைவரின் இரத்தக் கொதிப்பும் நார்மலுக்கு வந்திருந்தது!

“நம்பியழகன் குற்றத்தை ஒப்புக் கொண்டாலும்,  விடுதலையாகி நல்லவனாக வாழ்ந்து  காட்ட வேண்டும், தனது நற்செயல்களால் பிராயச்சித்தம் தேடவேண்டும்” என்ற வேட்கை மட்டும் அவனுள் மீண்டும் மீண்டும் தலைதூக்கியபடி இருந்தது. அதற்காக அவன் சளைக்காமல் மனு செய்துகொண்டே இருந்தான். சீராய்வு மனு, மறு சீராய்வு மனு ஆகியவற்றை கீழ் கோர்ட்டு, மாவட்ட, மாநில கோர்ட்டுகள், உயர் நீதிமன்றம், உச்ச
நீதிமன்றம் என்று அனைவராலும் கடுமையான கண்டனச் சொற்களால் விமர்சித்து, தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதி வாய்ப்பான கருணை மனு ஜனாதிபதியால் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

செய்த குற்றத்தை ஃப்ளாஷ்பேக்கில் வர்ணிப்பது வீண் சமய விரயம், அதனால் அதை தவிர்த்து விடுவோம். விதவிதமான கற்பழிப்பு, கொலை குற்றங்களை தினசரிகளிலும், நாவல்களிலும், டீவி சீரியல்களிலும் பார்த்திருக்கும் நீங்கள் குற்றத்தின் வீரியத்தை புரிந்துகொண்டிருப்பீர்கள். ரொம்ப சமத்து நீங்கள்…!

எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டதால் நம்பியழகன் கையறு நிலையில் இருந்தான்.

கைதிகளுக்கான நூலகம் ஒன்று சிறையில் இருந்தது.  அங்கு தணிக்கை செய்யப்பட்ட நாளிதழ்களும், வேறு சில பத்திரிகைகளும் சிறைக் கைதிகளுக்கு படிப்பதற்காக வைக்கப்படும். அந்த நூலகத்தை முழுமையாக உபயோகிக்கும் கைதிகளில் நம்பியழகனும் ஒருவன்.

ஒரு நாளிதழின் எட்டாம்  பக்கத்தில் ஆறாவது  காலத்தின் நுனியில் இருந்த ஒரு செய்தி நம்பியழகனை வெகுவாக ஈர்த்தது. அந்த செய்தி – மரண தண்டனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய புதிய திருப்பு முனையை உண்டாக்கும் சக்தி உள்ளதை உணர்ந்தான் அவன்.  கடைசி முயற்சியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், ஜனாதிபதிக்கும் தனது கோரிக்கை மனுக்களை எழுதத் தொடங்கினான்.

“அழகான தனது கையெழுத்தால் மிகவும் நேர்த்தியாகவும், தர்க்கரீதியாகவும் தனது கோரிக்கையை மனுவில் பகர்ந்திருந்தான். தனது கோரிக்கையின் நேர்மறையான நன்மை பயக்கும் சாத்தியக்கூறுகள் நீதியரசர்களாலும், ஜனாதிபதியாலும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படும்” என்று உறுதியாக நம்பினான். தவிர, இது வரும் காலங்களில் மரண தண்டனைக்கு ஒரு புது அவதாரத்தை நல்கும் என்றும் கணித்தான்.

சாதாரணமாக தூக்கு தண்டனை கைதிகள் தண்டனைக்கு முந்திய நாள் மிகவும் ஒடிந்து போய் நிராசையுடன் இருப்பார்கள். கசாப்புக் கடையில் நிறுத்தப்பட்டுள்ள ஆட்டின் கதைதான்.  ‘நாளை இந்த நேரம் தான் உயிரோடிருக்க மாட்டோம்’ என்ற நினைப்பை அவர்களை வெகுவாக ஆக்ரமித்து கொஞ்சம் கொஞ்சமாக நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

“தான் மறுநாள் சிலுவையில் அறையப்பட்டு மரிப்போம்” என்று முன்கூட்டியே அறிந்திருந்த இயேசுபிரான்கூட முந்தின நாள் இரவு  ஆற்றமுடியாத  வேதனையுடன் ஆலிவ் மலையில் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார்.

ஆனால், நம்பியழகன்,  நம்பிக்கையோடிருந்தான்! உற்சாகம் கரைபுரண்டோட சந்தோஷத்துடன் இருந்தான்! தனது மனுக்கள் இந்திய தண்டனை சட்டத்தில் ஒரு புதிய புரட்சியை உண்டாக்கும்”  என்று எதிர்பார்ப்புடன் இருந்தான் அவன்.

அவனது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. புதிய மனுக்கள் காரணமாக தூக்கு தண்டனை தேதி மேலும் இரண்டு நாட்களுக்குத் தள்ளிப்
போடப்பட்டது.

நம்பியழகன் நடவடிக்கைகளில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன. தான் ஏதோ சாதித்து விட்டதாக எண்ணி உற்சாகத்துடன் துள்ளித் திரிந்தான்!  நல்ல சாப்பாடு வேண்டும் என்று அடம் பிடித்தான். தனது ஆரோக்கியத்தை கண்காணிக்க டாக்டர்களை வரவழைக்க வேண்டும் என்று வற்புறுத்தினான். அவனது போக்கு சிறை அதிகாரிகளுக்கு புரியாத புதிராக இருந்தது.

“சார். எனக்கு என்னோட ஆரோக்கியம்தான் முக்கியம். அப்படியே சாகறதா இருந்தாலும் ஆரோக்கியத்தோட சாகணும் சார். அதுதான் பலருக்கும் நல்லது !”

சிறைக் காவலர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. தான் சாகப் போகிறோம்னு தெரிஞ்சும் இப்படி சந்தோஷமாக இருக்கிறானே.

“ஏம்பா, உனக்கு சாவு மேலே பயமேயில்லையா……?”

“அது சாவுறவனுக்குதானே சார் வரணும்…..? நான்தான் வாழப் போறேனே…….!”

“உன் மரண தேதிதான் தள்ளிப் போச்சே தவிர, உன் மரண தண்டனை குறைக்கப்படலை. என்னிக்கு இருந்தாலும் உன் உயிர் மரண தண்டனையாலதான் போகப் போவுது…….! உன் கடைசி மனுவும் இன்னிக்கு தள்ளுபடி ஆயிடுச்சாம்………..! உன் மரண தண்டனை தேதி முடிவாயிடுச்சு……”

“மரணம்…….! மாஸு மரணம்…….!!” என்று ரஜினி ஸ்டைலில் ஆடத் தொடங்கினான் நம்பியழகன் !

அவனுக்கு மரை கழண்டு விட்டதாகவே அவர்களுக்குப் பட்டது……..! எது எப்படியோ, தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு முந்தின இரவு சிறைச் சாலையே ஓர்  இறுக்கமான சூழ்நிலையில் தத்தளிக்கும்.  மற்ற கைதிகளும் அன்று கனத்த சோகத்திலேயே இருப்பார்கள். முக்கியமாக தூக்கு தண்டனை கைதி பேசுவதையே நிறுத்தியிருப்பான். சாப்பிடவே பிடிக்காது. செய்த குற்றங்களை எண்ணியும்,  குடும்பத்தினரைக் குறித்து நினைத்தும் உள்ளுக்குள்ளேயே அழுது கொண்டிருப்பார்கள். சிறைக் காவலர்கள் கூட ஒரு சங்கடமான மனநிலையில்தான் இயந்திரத் தனமாக  தங்களது கடமையை செய்வார்கள்.

ஆனால், இங்கு நிலைமையே வேறுவிதமாக இருந்தது. நம்பியழகன் குதூகலத்துடன் ஆட்டமும் பாட்டுமாக இருந்தான்!  சில நாட்கள் முன்புவரை   ஒருவித நிராசையுடன்தான் உலவிக் கொண்டிருந்தான் அவன். அந்த பத்திரிகை செய்தியைப் படித்த பிறகு அவனுள் ஏற்பட்ட மாற்றம். உடனடியாக எழுதிய மனுக்கள். அதற்கப்புறம்தான் ஆளே அடியோடு மாறிவிட்டான்! “மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், மீண்டும் ஒரு முறை அதன் மீது அவர்களின் கவனம் செல்லும்” என்று அவனது உள்ளுணர்வு தெரிவித்தது.

டுத்த நாள்…

“சார் என் தண்டனையை நிறுத்த இன்னுமா செய்தி வரலை……?”

“இல்லை”

டாக்டர்கள், வழக்கம்போல அவனை பரிசோதித்தார்கள்.

“சார். என் ஹெல்த் கண்டிஷன் ஓகேதானே……?”  உற்சாகத்துடன் கேட்டான் !

“பர்ஃபெக்ட்லி ஆல் ரைட்……….”

அவன் நினைத்தது போலவே நடந்தது. அவனது தூக்கு தண்டனை திடீரென நிறுத்தப்பட்டது!  ஆனால், “குடியரசுத் தலைவர் கருணைமனுக்களை  நிராகரித்தபின்னரும்   தூக்கு தண்டனை ஏன் நிறுத்தப்பட்டது” என்று. யாருக்குமே புரியவில்லை.

சில சேனல்கள் நம்பியழகனின் தண்டனை ஒத்திவைப்பையே விவாதப்பொருளாக்கி ஒரு மணி நேரத்தை செலவழித்தனர்.

சிறிது நேரத்தில் எல்லா சேனல்களிலும் ஓர் அறிவிப்பு ஒளிர்ந்தது.

இன்று நண்பகல் 12 மணிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு.

அனைவரும் 12 மணிக்காக காத்திருந்தனர்.

12.00 மணி.

தூக்கு தண்டனை கைதியான நம்பியழகன்  எங்களுக்கும், ஜனாதிபதிக்கும் எழுதிய இறுதி மனுவை ஆராய்ந்தோம். ஜனாதிபதியின் அனுமதியுடன்  நம்பியழகனின் கடைசி மனுவை ஏற்றுக் கொண்டு மரண தண்டனையை அவன் விருப்பப்படியே  நிறைவேற்ற எங்களது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏகமனதாக  தீர்மானித்துள்ளது.

ஆனால், அவர் விருப்பம்  ஒரு நல்ல செயலாகயிருந்தாலும் அதை ஏற்க தற்போதைய சட்டங்களில் இடமில்லை. எனவே, அவரது விருப்பத்தை தகுந்த முறையில் சட்ட வடிவமாக்க  அரசுக்கு இந்த நீதி மன்றத்துக்குள்ள அதிகாரங்களின்படி  பரிந்துரைக்கிறோம்.  அதுவரை அவரது தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்டுகிறது. அவரது இறுதி விருப்பத்தை இந்த தீர்ப்பின் ஒரு பகுதியாக இணைத்திருக்கிறோம்.  அவரது விருப்பம் மாண்புமிகு  ஜனாதிபதிக்கும், மதிப்புக்குரிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனைத்து நம்பிக்கை வாயில்களும் அடைக்கப்பட்ட ஒரு நிராதரவான தூக்கு தண்டனை கைதியின் கடைசி விண்ணப்பம்……

கடுமையான குற்றங்கள் செய்த ஒரு கொடூரமான, வக்கிரமான, ஈனப் பிறவியாக நானிருந்தாலும், சிறை தண்டனை அனுபவித்து வந்த இந்த நாட்களில், பல மதத் தலைவர்களின் உபதேசங்களாலும், நான் படித்த பல  நல்ல புத்தகங்களின் வழிகாட்டுதல்களினாலும் ஒரு நல்ல மனிதனாக பண்படுத்தப்பட்டுள்ளேன். எனினும் நான் செய்த குற்றத்தின் தீவிரத்தை கணக்கில் கொண்டு எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. “உயிர் பிச்சை கிடைப்பின் மனம் திருந்தி நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து பிறருக்கும் நன்மை செய்யவேண்டும்” என்ற எண்ணத்தில் நான் சமர்ப்பித்த  மனுக்கள் புறந்தள்ளப்பட்டு அனைத்து நம்பிக்கை வாயில்களும் அடைக்கப்பட்ட நிலையில் நிராயுத பாணியாக நிற்கிறேன்.

தூக்கு தண்டனையின் முக்கிய உத்தேசம், மற்ற குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை செய்யவும், இனி இதுபோன்ற ஒரு பயங்கர குற்றத்தை மற்றவர்கள் செய்ய துணியக் கூடாது என்பதே ஆகும். ஆனால், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் உடல் மற்ற உடல்களைப்போல் வீணே மண்ணுக்கோ அல்லது நெருப்புக்கோ இறையாகிவிடும். அதனால் யாருக்கு என்ன இலாபம் ?

எனது உடலும் இதுபோன்று ஒருவருக்குமே  உதவாமல் போவதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த சிந்தனை எனக்குள் எழ காரணமாயிருந்தது இன்றைய செய்தித் தாளில் வந்த ஒரு செய்தி.

இன்றைய செய்தித்தாளில் ஒரு செய்தியினை படித்தேன். அரசு மருத்துவ மனையில் மாற்று மனித உறுப்புகள்,  கிடைக்க வழியில்லாமல் மூன்று உயிர்கள்   நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக. ஓர் ஒற்றுமை என்னவெனில் இந்த மூன்று நோயாளிகளும்  பி பாஸிடிவ் இரத்த வகையை சேர்ந்தவர்களாம். எதேச்சையாக அதே இரத்த வகையைச் சேர்ந்த என்னை இந்த செய்தி பெரிதும் உலுக்கிவிட்டது.

இன்னும் இரண்டு நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட எனது உடல் யாருக்கும் உதவாமல் போவதைவிட எனது உடல்  உறுப்புகளை ஏன் இவர்களுக்கு பொருத்தக் கூடாது.  ஒரு உயிரை எடுத்த குற்றத்திற்காக மரணத்தை தழுவும் நான் ஒரே நேரத்தில் மூன்று உயிர்களை ஏன் காப்பாற்றக் கூடாது ?

எனவே, எனது தாழ்மையான வேண்டுகோள். அல்லது ஒரு தூக்கு தண்டனை கைதியின்  கடைசி ஆசையாக இதனை ஏற்றுக்கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இத்துடன் எனது குடும்பத்தினரை ஒப்புக்கொள்ள செய்ய ஒரு கடிதத்தையும் இணைத்துள்ளேன். எனது வேண்டுகோளையே உறுதி மொழியாக எடுத்துக் கொண்டு எனது உடல் அவயங்களை அந்த நோயாளிகளுக்கு பொருத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஒரு வேண்டுகோள். “இனி இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படும் ஒவ்வொரு குற்றவாளிகளையும்  தூக்கில் தொங்க விடாமல், அவர்களது உடல் உறுப்புகளை அவசியமுள்ள நோயளிகளுக்குப் பொருத்தி ஒரு மரணத்தின் மூலம் பல உயிர்களை உயிர்ப்பிக்கும் காரணியாக பயன்படுத்த வேண்டும்” என்பது எனது ஆசை. எனது இந்த கருத்தில் உடன்பாடு இருந்தால் சட்டத்தை திருத்துங்கள். மரண தண்டனைகள் புதிய சகாப்தத்தை எழுதட்டும். இறப்பின் வாயிலில் நிற்பவர்களை மீட்டு வரட்டும். ஒரு இறப்பு பல உயிர்களுக்கு  புதிய எதிர்காலத்தை உருவாக்கட்டும்.

“ஒரு குற்றவாளியின் உடல் உறுப்புகளை தானமாக ஏற்பதா” என்று யாரும் தயங்க வேண்டாம். எந்த ஒரு கொடுமையான மரண தண்டனை கைதியும் மரணத்திற்கு முன் தனது குற்றங்களுக்காக பச்சாதாபித்து, தனிமையில் அழுது அரற்றி தனக்குத்தானே பாவ மன்னிப்பை யாசித்து பக்குவப்பட்டு போயிருப்பான். ஒரு சாதாரண மனிதனைவிட அதிக அளவில் நன்மை செய்யும் மன நிலைக்கு தள்ளப் பட்டடிருப்பான். மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் அவன் தார்மீக ரீதியாக சுத்திகரிக்கப்பட்டு புதிய மனிதனாக மாறியிருப்பான். தனது அவயங்கள் மூலம் அவன் புனிதமான மறுஜன்மம் எடுக்கட்டும்.

இப்படிக்கு,

மறுஜன்மம் எடுக்க நம்பிக்கையுடன் காத்திருக்கும் தூக்கு தண்டனை கைதி நம்பியழகன்.

4 COMMENTS

  1. மிகவும் அருமையான கதை! வித்தியாசமான கரு! முடிவு மிகச்சிறப்பு! தூக்குத்தண்டனை கைதிகளின் உடல் உறுப்பு தானம் வித்தியாசமான சிந்தனை. இது நடைமுறை சாத்தியம் எனில் சிறப்பாக இருக்கும். வாழ்த்துகள்!

  2. இந்த கதையில் வரும் தூக்கு த்தண்டனை கைதியின் கடைசி ஆசை யான
    “உடல் உறுப்பு தானத்தின் மூலம் மீண்டும் ,பிறப்பேன் வாழ்வேன் .”என்ற எண்ணத்தை நிஜமாலுமே சட்டத்தில் பிறக்க வைத்தால் “கெட்டதிலும் நல்லது “என்பது போல் இருக்கும் ..மேலும் கைதிகளின் நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் வரும் .
    (டில்லி “திகார்” சிறையில் ” கிரண்பேடி” கைதிகளுக்கு “யோகா “கற்றுக்கொடுத்து அதில் ஒரு மாற்றம் கொண்டு வந்ததை யாரும் மறுக்கவும் மறக்கவும் முடியாது .) கதையில் வரும் நம்பியழகனைப்போல் .நாமும் நம்பு வோம் .சிறப்பான ஒரு கதை நல்ல ஒரு சமூக சீர்திருத்த கதை .

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

தேடாதே !

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   தேடாதே ! தேடினால் காணாமல் போவாய் ! வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன... சுஜாதாவின் ‘தேடாதே’ என்ற நாவலின் ஆரம்பிக்கும் வரிகள் இவை. மிளகு போன்ற சின்ன வஸ்துவைத் தேடிக்கொண்டு நம் நாட்டுக்கு வந்தவர்களால் நாம்...

உலகெங்கும் தமிழோசை

0
  - ஸ்ருதி   சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கப்போகிறது. இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா தினம் இசுலாமிய நாட்காட்டியில் பன்னிரெண்டாவது மாதமான துல் ஹஜ்...

இந்த ஆட்டத்தின் ஊடாக காதல் மலர்ந்திருக்கிறது. கவிதைகள் மலர்ந்திருக்கின்றன.

0
 நூல் அறிமுகம்   புதியமாதவி    வாசிப்போம் தமிழ் வளர்ப்போம் குழு   விளையாட்டுகள் வெறும் விளையாட்டுகள் மட்டுமல்ல, அவை  கடந்து வந்திருக்கும் பாதை மனித வரலாற்றை அப்படியே பிரதிபலிக்கின்றன. திறந்தவெளியில் விளையாடும் விளையாட்டுகளைவிட ஓரிடத்தில் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகள் மனித எண்ணங்களைக் கட்டமைத்தத்தில்...

உன்னதமான இசைக்கலைஞர்கள் இவற்றை செய்ய மாட்டார்கள்.

0
முகநூல் பக்கம் சுரேஷ் கண்ணன் முகநூல் பக்கத்திலிருந்து...   இசை ஞானத்தில் நான் ஒரு பாமரன் என்றாலும் இந்த லிடியன் நாதஸ்வரம் என்கிற இளைஞன் ஒரு சாதனையாளன் என்பதை ஒரு மாதிரி 'குன்சாக' உணர முடிகிறது. பியானோவில்...