0,00 INR

No products in the cart.

பொடிக்கடை ராஜு

மனதில் நின்ற மனிதர்கள் – 3

மகேஷ் குமார்                                     

 

பிரசன்ன வினாயகர் கோயில் தெருவுக்குள் நுழைந்ததுமே இரண்டு தும்மல் போட்டீர்களென்றால் ராஜு மாமா பொடிக்கடையைத் திறந்துவிட்டார் என்று அர்த்தம். பத்தடி நடந்து சென்றால் 1,2,3,4,5 நம்பர் போட்ட கலர் பலகைகள் சுவரோரமாக சாய்த்து கட்டிவைத்திருப்பதைப் பார்க்கலாம்.
மர பெஞ்சியின் மேலே ஊறுகாய் ஜாடி மாதிரி 3 பெரிய பெரிய பீங்கான் ஜாடிகள். ஒவ்வொரு ஜாடிக்குப் பக்கத்திலும் காம்பு நீளமாகவும் சின்னக் குழியும் கொண்ட ஸ்பெஷல் கரண்டிகள்.  பின்னால் சுவற்றில் “காரம் மணம் குணம் நிறைந்த T.A.S. ரத்தினம் பட்டணம் பொடி” என்ற போர்டில் ஒரு மீசைக்கார ஆள் குத்த வைத்து உட்கார்ந்து உரலில் எதையோ உலக்கையால் இடித்தபடி இருப்பார். பக்கத்தில் கீழே ஒரு சின்னக் கூடையில் சின்னச் சின்னதாய்க் கத்தரித்த காய்ந்த வாழைப் பட்டைகள். பெஞ்சுக்குக் கீழே இன்னொரு கூடையில் பளபளவென சின்னதும் பெரிதுமாய் காலி பொடி டப்பாக்கள்.

ஒரு சின்ன ஸ்டூலில் ஆஜானுபாகுவாய் வீற்றிருப்பார் ராஜு மாமா. அகலமான சிரித்த முகம். நெற்றியில் பளீர் விபூதிப்பட்டையும் சந்தன, குங்கும உபசாரங்களும். சிகப்புக் கரை போட்ட மஞ்சள் வேஷ்டி. மேலே சீனாக்காரன் மாதிரி பனியனும் அல்லாத சட்டையும் அல்லாத காலர் இல்லாத ஒரு கதர் உடுப்பு. வயிற்றுப் பகுதியில் ரெண்டு பக்கமும் பெரிய பாக்கெட்டுகள். ஒரு பாக்கெட்டில் 1,2 5 ரூபாய் நோட்டுகள். மற்றதில் 5,10,20 சில்லறைக்காசுகள்.

சைக்கிளில் போகிறவர்கள் சைக்கிளை விட்டு இறங்காமலே  பொடி வாங்க வாகாய் சின்னதாய் ஒரு நடுகல். எதற்காகவோ எப்போதோ முனிசிபாலிட்டி நட்டு வைத்தது. டிரைவ்-இன் மாதிரி அதில் காலை ஊன்றி நின்றபடியே “நாலணாவுக்கு நெய்” என்பார்கள். ராஜு மாமா சிரித்தபடியே “நல்ல நெய்ப் பொடி நேத்திதான் வந்துச்சு. ஒரு ரூபாய்க்கு வாங்கிக்கவேன். டப்பில போட்டுத் தரவா?” என்பார். வந்தவர் வேண்டாம் என்பது போல தலையாட்ட, நாலணாவை சட்டைப் பையில் போட்டபின் அங்கே எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு சின்ன வைபவம் அரங்கேறும்.

ராஜு மாமா கூடையைக் கையிலெடுத்து மேலும் கீழும் அலசி ஒரு அளவான வாழை மட்டையைத் தேர்ந்தெடுப்பார். ஏதேனும் எறும்பு கிறும்பு இருக்கலாம் என்று லேசாக ஒரு உதறு உதறுவார். தோளில் இருக்கும் துண்டால் அதை துடைத்துவிட்டு, அதை நீள வாக்கில் மூன்றாக மடித்து இழுத்து நீவிவிட்டு, பிறகு விரிப்பார். இடதுகையில் அதை வாகாக வைத்தபடி, வலதுகையால் ஒரு ஜாடியின் மூடியை நீக்கி, பக்கத்தில் இருக்கும் நீளக் கரண்டியை உள்ளே விட்டு பொடியை எடுத்து, ஜாடியின் வாய்க்கருகில் வரும்போது ‘டிடிங்’ என்று ஒரு செல்லத்தட்டு தட்டுவார். கரண்டி  வெளியே வரும்போது அந்த சின்னக் குழியில் 10 கிராம் பொடி வரும். அதை வாழை மட்டையில் கவிழ்த்து இறுக்கிப்பிடித்தபடி ஜாடியை சட்டென மூடிவைப்பார். பிறகு வாழை மட்டையை இப்படி ஒரு மடிப்பு, அப்படி ஒரு மடிப்பு மடித்து கையால் தட்டையாக்கி சைக்கிள்காரரிடம் நீட்டுவார். அவர் ஏதோ கோயில் பிரசாதம் போல ரெண்டு கைகளாலும் வாங்கி அப்படியே ஒரு வணக்கம் போடுவார்.

“வாப்பா மகேசு… அப்பா நல்லாருக்காப்லயா? அப்பாவைப் பாத்தே வெகுநாளாச்சு”

“நல்லாருக்கார் மாமா. பெரிப்பாதான் பொடி தீந்து போச்சு… டவுன் பக்கம் போனா மாமாகிட்ட வாங்கிட்டுவான்னு சொன்னார்.”

“பெரிப்பாவுக்குத்தானே? நேத்து புதுப்பொடி வந்தபோதே எடுத்துவெச்சிட்டேன். டப்பி குடுத்துவிட்டாரா?”

“இல்லையே. நான் போஸ்ட் ஆஃபீஸ் வந்தேன். அப்படியே வாங்கிட்டுப் போலாம்னு…”

“பரவால்ல. நான் டப்பில போட்டுத் தரேன்” என்று சொல்லியபடி இன்னொரு கூடையை எடுத்து 100 கிராம் டப்பி ஒன்றை எடுத்து துண்டால் சுத்தம் செய்வார். பிறகு பக்கத்தில் உள்ள நகைக்கடைக்குப் போவார். பெஞ்சில் உள்ள 3 ஜாடிகள் தவிர வேறு சரக்குகள் நகைக்கடைக்கு உள்ளே வைத்திருப்பார். அங்கே போய் டப்பியை நிரப்பிக்கொண்டு வருவார்.

“பெரியப்பாகிட்ட சொல்லு. இது எப்பவும் வார பொடி இல்லை. ஸ்பெஷல் பொடி. சரியா?” என்று கேட்டுவிட்டு தன் விரல்களை என் மூக்கருகில் காட்டுவார். நெடி தாங்காமல் வரிசையாக 10 தும்மல் போடும் என்னைப் பார்த்து கடைவாயில் தங்கப்பல் தெரிய சிரிப்பார்.

“பாரு. இதுதான் நயமா உரல்ல இடிச்ச பொடி. எப்படித் தெரியுமா? நல்ல காயவெச்ச போயலையை கொஞ்சங் கொஞ்சமாப் போட்டு கூட பசு நெய் ஒவ்வொரு சொட்டு விட்டு உலக்கையால மெல்ல மெல்ல இடிக்கணும். இடிக்கும்போதே தும்மல் போட்டு உலக்கைல முட்டிக்கிட்டு மண்டை வீங்கினவங்க எத்தனை பேரு தெரியுமா? பொடின்னா அது பொடி. உங்க பெரியப்பா விவரம் தெரிஞ்சவரு. அதான் நம்மகிட்ட சொல்லிவெச்சு வாங்கறாரு. பாரு…. இப்ப நம்ம திண்டுக்கல்ல கூட சரக்கு போடறாங்க. ஆனா மிசின் பொடி. ‘காட்’டே இல்லை. கெளவி முத்தம் குடுத்த மாதிரி சப்புச் சப்புனு இருக்கும்” ஒரு கண்ணை மூடியபடி ஒரு பெருஞ்சிரிப்பு சிரிப்பார். நகைக்கடையிலிருந்து குமுட்டி அடுப்புக் கரியைக் கொட்டவந்த பத்தர் “யோவ்.. ராஜு… சின்னப்புள்ளைககிட்ட பேசற பேச்சா?” என்று கேட்பார்.

“அடப் போப்பா… நீதாஞ் சொல்லேன். ஆரியபவன் இட்டிலிக்கு சட்டினி தொட்டுத் திங்காம சாணியைத் தொட்டுத் தின்னா என்னமாத்தான் இருக்கும்… ம்ம்ம்ம்?”

“காலங்கார்த்தால உம்மகிட்ட வாயைக் குடுத்தனே….” என்று சிரித்தபடியே பத்தர் உள்ளே சென்றுவிடுவார்.

ராஜு மாமா மற்றவர்களுடன் இருக்குபோது பொடி போடுவதே ஒரு சுவாரஸ்யம். சாயங்கால வேளைகளில் பார்க் பெஞ்சில் ராஜு மாமா தன் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது பார்க்கலாம். பேசிக்கொண்டே அலட்சியமாக இடதுகையால் தன் பனியன்–கம்-சட்டையின் வயிற்றுப்பகுதி பாக்கெட்டிலிருந்து ஒரு வெள்ளி டப்பியை எடுப்பார். இடதுகைக் கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கு இடையில் டப்பியைப் பிடித்தபடி வலதுகை நடுவிரலால் டப்பியின் மூடியை இரண்டு தட்டு தட்டுவார். சட்டெனெ இடது கட்டைவிரலால் மூடியை நெம்பித் திறப்பார். வலதுகை கட்டை, ஆள்காட்டி விரல்களை டப்பியின் உள்ளே விட்டு ஒரு சிட்டிகைப் பொடியை எடுப்பார். கட்டைவிரலாலேயே டப்பியை மூடியபடி அதை மறுபடி பாக்கெட்டில் வைத்துவிடுவார். இதெல்லாம் எழுதத்தான் இவ்வளவு நேரமே தவிர, 3 செகண்டில் எல்லாம் முடிந்துவிடும். இத்தனைக்கும் அவர் பாட்டுக்கு நண்பர்களிடம் பேசிக்கொண்டேதான் இருப்பார்.

அராள முத்திரையுடன் வலது கையில் எடுத்த பொடி சிறிது நேரம் அப்படியே இருக்கும். விரல்களுக்கு இடையில் பொடியுடன் கையை ஆட்டி ஆட்டிப் பேசுவார். இப்படி ஒரு நிமிடம் கழிந்ததும், ஆளில்லாத பக்கமாக தலையத் திருப்பி ஒரு மூக்கை இடக்கையால் அடைத்தபடி பொடியை உறிஞ்சுவார். மறு மூக்கிலும் ஏற்றிக்கொண்ட பிறகு கையை ஓங்கி உதறுவார். மாமா மூக்குக்கிறைத்த பொடி காற்றின் வழியோடி ஆங்காங்கே என்போன்ற புற்களின் மூக்கிலும் ஏறி நான்கைந்து தும்மல்கள் பறக்கும். திரும்பி நம்மைப் பார்த்து சிரித்தபடியே (ஒரு காலத்தில் நல்ல வெள்ளையாக இருந்த)   பிரவுன் கலர் கைக்குட்டையை எடுத்து அதன் இரண்டு நுனியையும் இரண்டு கைகளாலும் பிடித்தபடி மூக்கை இடவலமாக துடைத்துக்கொள்வார்.

“ஹ்ஹ்ஹ்ஹ… ஹா… ப்ர்ர்ர்ர்… க்ர்ர்ர்… ஜொர்ர்ர்ர்ர்….. ஆ…. ஹச்ச்ச்ச்சூ…” என்று அவர் எழுப்பும் சில பல வினோத சப்தங்கள், காலை வேளைகளில் நாலு பக்கமும் மூடிவைத்திருக்கும் சர்க்கஸ் கிரவுண்டின் வெளியே கேட்கும் பல மிருகங்களின் சப்தங்களை ஒத்திருக்கும்.

பிறகு நம்மைத் திரும்பிப் பார்த்தபடி “மகேசு… பெரியப்பாவைப் பாத்தா போனவாட்டி டப்பிக்கு இன்னும் பணம் குடுக்கலைன்னு ஞாவகப்படுத்து. இப்ப புதுசா என்.வி.எஸ்.னு ஒண்ணு வந்திருக்கு. டப்பியைத் திறக்காமலே இழுக்கலாமாம்… நாஞ்சொன்னேன்னு சொல்லு. நாளைக்குக் கடைப்பக்கம் வரச்சொல்லு. சரியா?”

(தொடரும்)

ஓவியம்: ராஜன்

 

 

1 COMMENT

 1. உயர் திரு மகேஷ் குமார் அவர்களுக்கு,

  ஆஹா. மூக்குப் பொடிக் கடையை என்ன தீர்க்கமாக கவனித்து வர்ணித்திருக்கிறீர்கள்..
  அப்புறம் அந்த டயலாக்..எப்படி உள் வாங்கி அப்படியே சொல்லியிருக்கிறீர்கள்..

  என் சின்ன வயதில் ஒரு உறவினர் பொடி போடுவதைப் பார்த்திருக்கிறேன்.
  அவரது உடையெல்லாம் பொடி ஸ்மெல் வருவது போல் இருக்கும்.
  சிறப்பான எழுத்துக்கு வாழ்த்துக்கள்.

  பத்மினி பட்டாபிராமன்

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...