0,00 INR

No products in the cart.

உங்கள் சமூகநல ஆர்வம் சிலிர்க்க வைக்கிறது.

நீங்கள் கேட்டவை – தராசு பதில்கள்

 

Ø தண்ணீரில் பொறிக்கும்படியான அப்பளங்களை உருவாக்க முடியாதா?
– ரேவதி, பெங்களூரு

! தொடர்ந்து ஏறிக்கொண்டேயிருக்கும் எண்ணெய் விலையினால் கேட்கிறீர்களா?

முடியாது மேடம். நீரின் கொதி நிலை 100 டிகிரி (சென்ட்டிகிரேட்) எண்ணெயின் கொதி நிலை 257 டிகிரி. அப்பளம் பொறிய 257 டிகிரி கொதிநிலை தேவை.

Ø விவசாய நிலம், தேர்தல் களம் என்ன வித்தியாசம்?
– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்

! இரண்டையும் பலனளிக்கும் நிலைக்குக் கொண்டுவர கடுமையாக உழைக்கவேண்டும். பணத்தை நிறைய செலவழிக்க வேண்டும். முன்னதில் முடிவு வெளிவர ஒரு பருவம் காத்திருக்க வேண்டும். பின்னதில் ஓரிரு நாட்கள் போதும். இரண்டிலும் முடிவுகள் சில சமயங்களில் அதிர்ச்சியையும் தரும்.

Ø தி.மு.க. அரசு மீது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வைக்கும் தொடர் குற்றச்சாட்டு எதைக் காட்டுகிறது ?
– ச. ராமதாசு சடையாண்டி, ரங்கநாதபுரம்

! கட்சியில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவும், கட்சிக்கு விளம்பரம் தேடவும் செய்து கொண்டிருக்கும் முயற்சிகளைத்தான் காட்டுகிறது. குற்றச்சாட்டுகளை அடுக்குகிறாரே தவிர, எதையும் ஆதாரப்பூர்வமாகச் சொல்லவில்லை. அவர் சொல்லிய தூத்துக்குடி தனியார் மின்சார வினியோகம், பிஜிஆர் நிறுவனத்திடமிருந்து மின் கொள்முதல், முதல்வரின் துபாய் பயணத்தில் ஊழல், ஆவின் கொள்முதல் போன்ற ஊழல் பட்டியலில் எதையும் விபரங்களுடன் அவர் புகாராக ஊழல் தடுப்பு துறையிடமோ நீதி மன்றத்திலோ எங்கும் எழுப்பவில்லை. அண்மையில் கூட 4 நாட்கள் டிரையலர் அறிவிப்புகளுக்குப்பின்னர் தாய் சேய் நலத்திட்டத்தில் ஊழல் என்றார். அது இன்னும் டென்டர்கள் கோராத நிலையிலிருக்கும் திட்டம். என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியம். ஊழல்களை பட்டியலிட்டு புகாராக அளித்து பின்னர் மக்களிடம் அது என்ன ஊழல் என்று விளக்கிச் சொல்ல வேண்டும்.

Ø எடுத்து வைத்தும் எதிரிலிருக்கும் மாத்திரைகளை சாப்பிட மறந்துபோகும் மனிதன். 10 வருடங்களுக்குமுன் எங்கோ நடந்ததை மறப்பதில்லையே?
– மஹாதேவன், சங்கரன் கோவில்

! மூளை மடிப்புகளின் ஆழத்தில் தினசரி இயந்திரத்தனமாக செய்யும் வேலைகளை பதிவதில்லை. ஆனால் இயல்பாக நிகழ்ந்த மகிழ்ச்சியான அல்லது துயரமான சம்பவங்களும் செயல்களும் மூளையின் நினைவடுக்கில் நிரந்தரமாகப் பதிந்து நிற்கின்றன என்கின்றனர் வல்லுநர்கள். அதனால் அது நீண்ட நாள் நினைவிலிருக்கிறது. மாத்திரை சாப்பிட மறந்துபோவதை பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் மீது அன்பு கொண்டவர்கள் மறக்காமல் நினைவுபடுத்துவார்கள்.

Ø “சாதி என்பது இருக்கிறது, இனியும் இருக்கப்போகிறது. அதில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன” என்ற அன்புமணியின் பேச்சு பற்றி…?
– எஸ். இராமதாஸ், புதுச்சேரி

! பலர் நினைத்துக்கொண்டிருப்பது போல எங்களுடையது சாதிக் கட்சி இல்லை என்று சொன்னவர் இவர்தானே?

Ø இந்திய ரூபாய் நோட்டுகளில் தாகூர், கலாம் படங்கள் வெளியிட போகிறார்களாமே?
– நா. குழந்தைவேலு,
சென்னை -600129

! மதிப்பிழந்து கொண்டிருப்பதில் மதிப்புமிக்கவர்களின் படங்கள்.

Ø “8 ஆண்டுகளில் என்னை பிரதமராக நான் நினைத்ததே இல்லை; 130 கோடி மக்களின் சேவகன் நான்” என்ற பிரதமர் மோடியின் பேச்சு பற்றி…
– இரா. அமிர்தவர்ஷினி, வாணரப்பேட்டை

! அப்படியா? நாம் நல்ல பிரதமரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே? மேலும் ஒரு சேவகன் இரண்டு எஜமானர்களுக்கு வேலை செய்யமுடியாது என்பது ஒரு சொல் வழக்கு. 130 கோடி எஜமானர்களுக்கு ஒரு சேவகன் எப்படி வேலை செய்ய முடியும்?

Ø எழுத்தாளர் ஜெயகாந்தன் – சிந்தனையாளர் ஜெயகாந்தன்: தராசாரை கவர்ந்தது யாரோ?
-நெல்லை குரலோன், பொட்டல் புதூர்

! ஜெயகாந்தன் – தமிழ்ச் சமூகத்தின் இரண்டு தலைமுறைகளை ஆட்டிப்படைத்த ராட்சசன்! சிந்தனையாளர், எழுத்தாளர் என்று தனித்தனியாக பார்க்கமுடியாத அளவில் மாறிக்கொண்டிருந்த தன் சிந்தனைகளை தன் எழுத்தில் சொன்னவர் அவர். கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து வாழ்ந்த காலத்தில் எழுதியவை எல்லாம் எளிய அடித்தட்டுவர்க்க மனிதர்களைப் பற்றிய கதைகள். கம்யூனிச சிந்தனைகளுடனிருந்தது. அடுத்த கட்டமாக `சரஸ்வதி’ இதழில் எழுதத் தொடங்கிய காலத்தில் பாலியல் பிரச்னைகளைத் தொட்டுக் கடுமையான வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்திய கதைகள். ஆனந்த விகடனில் எழுதத் தொடங்கிய பிறகு பரந்த வாசகர்களை நோக்கி உரத்தக் குரலில் பேசிய கதைகளில் அவரது சமூக சிந்தனைகள் வெளிப்பட்டன. பிராமணக் குடும்பங்களில் நிலைகொண்டு பேசிய கதைகள். திராவிட இயக்கத்தார் கண்மூடித்தனமாக பிராமண எதிர்ப்பைப் பேசியதால் அதற்கு எதிராக எழுந்த சிந்தனைகளிலிருந்து பிறந்தது. இப்படி அவரது எழுத்துகளில் பலவிதமான சிந்தனைகள்/ பார்வைகள் தெறித்தது. அதனால் அவரை வாழ்நாள் முழுவதும் ஒரே சித்தாந்தத்தை பேசியவராக பார்க்கமுடியாது. “எழுத்தாளன் சமூகத்தில் மற்றவர்களை விட உயர்ந்தவன்” என்று சொன்ன அவரை தமிழ் சமூகம் ஒரு நல்ல எழுத்தாளராகத்தான் பார்க்கிறது.

Ø உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சா் பதவி தரவேண்டுமென வலியுறுத்தல் அதிகமாகியுள்ளதே?
– ஆா்.நாகராஜன், செம்பனாா்கோவில்.

! “ஒரு பதவிக்காலம் முழுவதும் கூட சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவரை அமைச்சராக்க வேண்டும்” என்று கட்சியின் மாவட்டக் குழுக்கள் தீர்மானம் போடுவது கட்சித் தலைமையின் ஆசியுடன் நடக்கிறதோ என்ற அச்சம் எழுகிறது. அது உண்மையானால் கட்சிக்கும் தமிழ் நாட்டுக்கும் நல்லதல்ல. இதில் கலைஞர் காட்டிய பொறுமையை ஸ்டாலின் காட்டவேண்டும்.

Ø காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் மீண்டும் பின்னடைவு உண்டாகிறதே?
– நெல்லை குரலோன், பொட்டல் புதூர்

! அண்மைக் காலமாக ஒரு புதுவிதமான போராட்டங்களை காஷ்மீர் எதிர்கொண்டு வருகிறது. முன்பெல்லாம் ஒன்று குண்டு வெடிக்கும் அல்லது மக்கள் குழுவாக இணைந்து போராட்டங்களை நடத்துவார்கள். இப்போது போராளிகள் வேறு உத்தியை கையில் எடுத்துக் கொண்டு விட்டார்கள். காஷ்மீரில் வாழும் பண்டிட்டுகள் மற்றும் இதர இந்துக்களை சுட்டுக் கொல்வதுதான் அந்த உத்தி. இதற்குப் பெரிய திட்டமிடல் தேவையில்லை. கும்பல் சேர்க்க வேண்டாம். வெடிகுண்டு போல பல்வேறு கருவிகளை, ஆதார பொருட்களை ஆங்காங்கே கடத்தி வந்து இணைத்து தயாரிக்க வேண்டாம். கையடக்கமான துப்பாக்கி ஒன்று போதும். வங்கியோ, அரசு அலுவலகமோ சந்தைக் கடையோ, போய் ஒரு பண்டிட் அல்லது இந்துவை சுட்டு விட்டு ஓடிவிடுகிறார்கள்.

இந்தப் புதிய உத்தி கஷ்மீரில் வழக்கமாகிவிட்டிருக்கிறது. பண்டிட்டுகள் மற்றும் இதர இந்துக்கள் தொடர்ந்து கொலையுண்டு வருகிறார்கள். இதனால் பீதியுற்ற பண்டிட் குடும்பங்கள் காஷ்மீரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.  ஜூன் துவங்கியதில் இருந்து அனந்தநாக் மாவட்டத்தில் வசிக்கும் பண்டிட்டுகள் சுமார் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஜம்முவுக்கு குடிபெயர்ந்து இருக்கிறார்கள்.

Ø “யாருடனும் கூட்டணி இல்லை, தனித்தே போட்டி என சொல்ல அ.தி.மு.க. தயார் ! மற்ற கட்சியினர் தயாரா ?” என்று செல்லூர் ராஜூ கூறியிருப்பது பற்றி…

– இரா. அமிர்தவர்ஷினி, வாணரப்பேட்டை, புதுச்சேரி

!  பா.ஜ.க. என்று சொல்லாமல் ஏன் மற்ற கட்சியினர் என்கிறார்? புரிகிறதா?

Ø அடுத்தவரை எல்லாவற்றிலும் ஒப்பீடு செய்பவர்கள் பற்றி..?
– மீ.யூசுப் ஜாகிர்,வந்தவாசி.

! “தன்னை அடுத்தவருடன் ஒப்பிட்டுக்கொண்டே இருப்பவர்கள் தாழ்வு மனப்பான்மையில் சிக்கி மன அழுத்த நோய்க்கு உள்ளாகும் ஆபத்து இருக்கிறது” என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள்.

Ø என்னை சந்திக்க வருபவர்கள் என் காலில் விழவேண்டாம் என சசிகலா கேட்டுக்கொண்டுள்ளாரே?
– சொக்கலிங்கம், நெல்லை

! முன்பு தவழ்ந்து வந்து காலில் விழுந்தவர் காலை வாரிவிட்ட பயமாயிருக்கலாம்.

Ø அன்பு மட்டுமே செலுத்தி அறிவை வளர்க்க முடியுமா?
-கண்ணப்பன் சின்ன சேலம்

! அறிவு வளர்ச்சி என்பது சிறு வயதில் தொடர்ந்து மூளைக்குக் கொடுக்கப்படும் பயிற்சிகளில் உருவாவது. இதை ஆசிரியர்கள் கண்டிப்பாலும் செய்ய முடியும் கனிவாலும் செய்ய முடியும். இரண்டையும் பயன்படுத்தினாலும் சில ஆசிரியர்கள் கற்பிப்பதில் கனிவை சற்று அதிகமாகவே காட்டுவார்கள். அந்த அன்பை என்றும் மறக்காமலிருக்கச் செய்கிறது அவர்கள் புகட்டிய அறிவு. உங்களுக்கு சிறு வகுப்புகளில் அன்புடன் கற்பித்த டீச்சர்களை இன்றும் நினைவிருக்குமே?

Ø காதலன் சிவனை கைப்பிடித்த பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில் நயன்தாரா நடிப்பாரா? நடித்தாலும் முதலிடத்தில் இருப்பாரா?
– கோதை ஜெயராமன். சமூக ஆர்வலர் மீஞ்சூர்

! நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, பெருகும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றையெல்லாம் விட மிக முக்கிய சமூகப் பிரச்னையை விவாதிக்க விரும்பும் உங்கள் சமூகநல ஆர்வம் சிலிர்க்க வைக்கிறது.

Ø கேஜிஎப் நாயகன் யாஷ் பற்றி
– ஸ்டீபன் பெரும்பாவூர்

! நடிகர் திலகம், மக்கள் திலகம் போல இவருக்கு வயலனஸ் திலகம் எனப் பட்டம் கொடுக்கலாம். அவ்வளவு வயலன்ஸ்…  வயலன்ஸ்…  வயலன்ஸ்…

Ø ஐ.பி.எல் மேட்சுகளில் இன்னும் சூதாட்டம் தொடர்கிறது என்கிறார்களே?
– மாதவன் பவானி சாகர்

! ‘ஐ.பி.எல். என்பதே ஒரு சூதாட்டம்’ என்ற வாதங்கள் இன்னும் ஓயவில்லை. ஒழிக்கவும் அதன் முதலாளிகள் விரும்ப மாட்டார்கள். அது ஒருபுறம் இருக்கட்டும்… அதைத்தாண்டி, இந்த ஐ.பி.எல். போட்டிகளின் இடையே வரும் விளம்பரங்களை கவனித்திருக்கிறீர்களா? ஐ.பி.எல்.வீரர்கள் அனைவருமே டிரீம் 11 உள்ளிட்ட பல்வேறு சூதாட்ட ஆப்களுக்காக விளம்பரம் செய்கிறார்கள்… ரம்மி சர்க்கிள், ரம்மி கல்ச்சர் என்று எக்கச்சக்கமான மோசடி ரம்மி ஆப்-களின் விளம்பரங்கள் வருகின்றன… மேலும், முன்னணி இந்தி நடிகர்கள் நடிக்கும் பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருட்களின் விளம்பரங்களும் வருகின்றன…. வளரும் நம் இளைஞர்களின் நலன் கருதி இம்மாதிரி திட்டமிட்டே அவர்களை கவர செய்யப்படும் விளம்பரங்களுக்கு IPL  ஆதரவௌ அளிப்பது  தான்  மிகப்பெரிய சூதாட்டம்.

Ø “தோற்றாலும் பரவாயில்லை கட்சித் தொண்டர்களுக்கே சீட் வழங்கப்படும். குடும்பத்துக்கு அல்ல !” என்ற பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்து பற்றி…
– கி. சோழராஜன், புதுச்சேரி – 605107

! அப்படியானால் ஜெயிக்கும் வாய்ப்புள்ள தொகுதிகள் எல்லாம் தலைவர்களுக்கா?

Ø தமிழகத்தின் “புதிய தலைமுறை” அரசியல் தலைவர்களில் உங்களுக்கு பிடித்தமானவர் ?
– ஜெ. கிருஷ்ணதேவு, புதுச்சேரி

! புதிய தலைமுறையாக யாரும் அறிமுகமானதாகத் தெரியலையே . பல கட்சிகளில் தலைவர்களின் அடுத்த தலைமுறைகள் தான் தலைவர்களாக உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Ø “அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் பெரிய விரிசல் இல்லை” என்கிறாரே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?
– சொக்கலிங்க ஆதித்தன் திருநெல்வேலி

! சிறிய கீறல்கள்தான் பெரிய விரிசல்களாக மாறும்.

Ø ஒருவேளை தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்தால் அது எந்த கட்சியின் வாக்கு வங்கிக்கு ஆபத்து என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?
– இரா. அருண்குமார், வாணரப்பேட்டை,

! தமிழகத்தின் பெரும்பான்மையான ஓட்டு வங்கி இரண்டு திராவிட கட்சிகளிடம்தான் இருக்கிறது. தி.மு.க.வின் வங்கி பிரியாது. காங்கிரஸின் ஓட்டு வங்கி மிகச்சிறியது என்ற நிலையில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கிக்குத்தான் ஆபத்து அதிகம்.

2 COMMENTS

  1. சரமூக ஆர்வலர் கோதை செயராமன் கேள்வியும் தராசாரின் பதிலும் கொஞ்சம் சிரியுங்கள் பாஸ் பகுதிக்கு உகந்தவை
    திருவரங்க வெங்கடேசன் பெங்களுரு

  2. நவரசம் ததும்பும் தராசார் பதில்கள் நம்மைப் படுத்தும் பாடு இருக்கிறதே… அந்த அற்புத அனுபவத்தை வார்த்தையால் சொல்ல முடியாது….

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...