0,00 INR

No products in the cart.

வள்ளுவன் பேசும் அறன் அங்கு வாழ்கிறது. வாய்மை செயல்படுகிறது.

உலகக் குடிமகன் –  24

 

– நா.கண்ணன்

 மாமி மட்சுயாமாவில் வந்திறங்கிய போது மரங்களெல்லாம் மஞ்சள் நீராடிக் கொண்டிருந்தன. மண்ணெல்லாம் வண்ணக்கோலம். அது இலையுதிர் காலம். சுமி நிறைமாத கர்பிணி. சூடு பறக்கும் செங்கல்பட்டு எங்கே, பனி பாய ரெடியாகும் ஜப்பான் எங்கே? மாமியை ஒரு மம்மியைப் போர்த்துவது போல் போர்வையால் போர்த்திதான் தூங்கப்பண்ண வேண்டியிருந்தது. அங்கெல்லாம் டைனிங் டேபிள் ரொம்ப வித்தியாசமாக இருக்கும். தரையில் குழி தோண்டி அதற்கு மேல் வேலைப்பாடுடைய மரப்பலகை இட்டு, குழியை மிதமான வெப்பமாக்கி சாப்பாடு பறிமாறுவர். வீட்டில் அப்படி வைக்க முடியாது. எனவே சதுரமான குறும் நாற்காலி செய்து அதன் நடுவில் இன்ப்ஃரா ரெட் பல்பு போட்டு மிதமான சூடு நம் தொடையில், காலில் படும் படி செய்திருப்பர். மேலும் அதுவொரு அழகிய போர்வையால் சூழப்பட்டிருக்கும். எனவே, சூடு வெளியே போய் விடாது. தத்தாமி மேட் எனும் பாய் படுக்கை நிரந்தரமான தரையாக இருப்பதால் அதுவும் சூட்டை நிறுத்தி வைத்துக் கொள்ளும். அங்கு வீட்டு மனையின் அளவே எத்தனை தத்தாமி என்றுதான் கணிக்கப்படும். அதுவொரு செந்தரமாக்கப்பட்ட ஜப்பானிய தரையமைப்பு. பாய் என்றால் நாம் வீட்டில் பயன்படுத்தும் தரைப்பாய் அல்ல. அதுவொருவகையான மரச்சட்ட டப்பா. அது பாயால் போர்த்தப்பட்டிருக்கும். இத்தகைய அமைப்பு மாமிக்குப் பிடித்திருந்தது. சாப்பிட்ட கையோடு அப்படியே பூனைக்குட்டி போல் கொதாட்சு (Kotatsu)விற்குள் புகுந்துவிடுவார் மாமி. காலையில்தான் விழிப்பு. இதமான சூட்டில் உறக்கம்.

மாமி ஒரு கிருஷ்ண பக்தை, எனவே, என்னிடம் மட்சுயாமாவில் பெருமாள் கோயில் இருக்கா? என்று கேட்டார். நானும் இருக்கே என்று இஸ்தேஜி கோயிலுக்கு அழைத்துப் போனேன். வித்தியாசமான கோயிலாக இருக்கே என்று சொல்லி உள்ளே வந்தார்கள். நேபாளத்து கோயில் போலிருக்கு. துவார பாலகர்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கு என்று உள்ளே வந்தார்கள். நம்ம ஊர் குருக்கள் போல் இல்லாமல் காவியுடை மொட்டைத்தலை பிக்ஷு சமஸ்கிருத மந்திரத்தை ஜப்பானிஸ் ஸ்டைலில் சொல்லிக் கொண்டு இருப்பதைப் பார்த்தவுடன் மாமிக்கு சந்தேகம் வந்துவிட்டது. இது பெருமாள் கோயில் மாதிரி இல்லையே என்றார்கள். ஆம்! இது புத்தர் கோயில். புத்தர்தான் விஷ்ணுவின் அவதாரம் என்கிறார்களே? எனவே இது பெருமாள் கோயில்தானே என்றேன். மாமி முகத்தில் ஈயாடவில்லை. பெருத்த ஏமாற்றம். நான் சொன்னேன் பூரி ஜெகநாத் கோயிலில் இருக்கும் சிற்பம் பெருமாள் மாதிரியா இருக்கு? ஏதோ மரப்பாச்சி பொம்மையைத்தானே வைத்திருக்கிறார்கள். அதை ஏற்றுக் கொள்ளும் போது அதைவிடப் பழைமையான புத்தர் கோயிலிது என்றேன். கால்நடையாக வேண்டிக் கொண்டவர்கள், வெள்ளை உடையும், கையில் குச்சியும் கொண்டு தொழுது கொண்டு இருந்தனர். ஒவ்வொரு கோயிலிலும் ஒரு முத்திரை வாங்க ஒரு நோட்டுப் புத்தகம் வைத்திருந்தனர். நாமும் 108 திருப்பதி போய் வந்தோம் என்கிறோம். இதுபோல் ஸ்டாம்பு புத்தகம் ஒன்று தயாரித்து வழங்கலாம். ஒவ்வொரு கோயில் பெருமாளுக்கும் ஒரு முத்திரை இருக்குமே அதைப் பதியலாம்.

ஸ்வேதா பிறந்த போது அங்குள்ளோருக்கெல்லாம் அவள் கண்கள்தான் ஆச்சர்யம். ‘மெகாகா ஓக்கி தெஸ்னே” என்று அதிசயப்பட்டனர். பெரும்பாலான ஜப்பானிய குழந்தைகளுக்கு கண் இருப்பதே தெரியாது. இவள், ‘முகத்தனைய கண்கள்’ என்றிருந்தாள். ஆஸ்பத்திரியில் தந்தைக்கு குழந்தையைக் காணும் அனுமதியில்லை. தாய் கூட பால் கொடுக்கும் போதுதான் பிள்ளையைக் காண்பாள். பிறந்த ஒரு வாரத்திற்கு குழைந்தைக்கு நோய் நெடி வந்துவிடக்கூடாது என்று சுகாதாரமான அறையில் தனிமைப்படுத்தி வைத்திருப்பர். நான் கண்ணாடி வழியே என் பெண்ணைப் பார்த்து திருப்திப் பட்டுக்கொண்டேன். எல்லாத் தந்தையர்க்கும் இதே நிலைதான்.

எனக்கு ஜப்பான் எகிமே பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் கிடைத்தது. எவ்வித சிரமமும் இல்லாமல், காழ்ப்பு, ஜாதீய இடைஞ்சல்கள் இல்லாமல், குறித்த காலத்தில் நிறைவாகக் கிடைத்தது. அயலகப்படிப்பின் உச்சபட்ச மகிழ்ச்சி இதுதான். ஆய்வு செய்ய வேண்டும் எனும் ஆர்வம் இருந்தால் போதும். எல்லா வசதிகளும் செய்து கொடுத்து, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆய்வகம் வந்து ஆய்வு செய்து முனைவர் பட்டத்தை நிம்மதியாகப் பெறலாம்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ரொம்பக் கெட்டுப்போச்சு என்று புலம்பினார் ஜே.ஜே. நான் எனது இந்தியப் பட்டத்தையும் வாங்கிக்கொள்ள இந்தியா வந்த போது. முனைவர் பட்டத்திற்கு ஓர் விலை உண்டு என்றும், பாலியல் ஊக்கமுடைமையும் உண்டு என்ற போது விக்கித்துப் போனேன். நான் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துவிட்டதை உணர்ந்தேன். நண்பன் விஸ்வநாதனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவன் ஜப்பான் வந்து என்னைப் பார்த்த போது, ‘என்ன கண்ணன்! இப்படி 7 வருஷம் உழைத்த உழைப்பை உதறித்தள்ளிவிட்டு வந்து விட்டீர்கள்? நான் போய் துணைவேந்தர் கிருஷ்ணசாமியிடம் சொல்கிறேன்” என்று மெனக்கிட்டு எனது இந்திய முனைவர் பட்டத்தையும் வாங்கித்தந்தான். நாம் வேண்டாம் என உதறினாலும் வர வேண்டிய மரியாதை சில நேரம் வந்து விடுகிறது. முடிவாக எனக்கு இரண்டு டாக்டர் பட்டங்கள் வந்து சேர்ந்தன. மதுரை மருத்துவக் கல்லூரி என்னைக் கோட்டாவில் வெளியே தள்ளாமல் இருந்திருந்தால் என் பேருக்கு முன்னால் ஒரு டாக்டர்தான் போட முடியும். இப்போதோ இரண்டு! பொதுவாக யாரையும் டாக்டர்-டாக்டர் என்று சொல்வதில்லை. ஆனால் ஜெர்மனியில் முடியும். என்னை என் நண்பன் தாமஸ் அப்படித்தான் அழைப்பான்.

ஜப்பான் பூகம்ப பெல்ட் எனும் கோட்டின் மேல் உள்ள நாடு. அங்கு எப்போது வேண்டுமானாலும் நில அதிர்ச்சி நடக்கலாம். எனவே, பிற நாடுகளில் காண்பது போல் விண்ணை முட்டும் கட்டிடங்கள் அங்கு இருப்பதில்லை. தாழ்வான, மரத்தினால் ஆன கட்டிடங்களே அங்கு அதிகம். தனாபே சான் பிறந்த ஊரான பெப்பு எனும் ஊருக்குப் போனோம். அங்கு வெந்நீர் ஊற்றுகள் வீதிக்கு வீதி இருந்தன. இவ்வூற்றுகள் பல்வேறு வர்ணங்களில் இருந்தன. ஜப்பானிய கலாசாரத்தில் இத்தகைய ஊற்றுகளில் குளிப்பது ஒரு பண்பாடு. நான் மட்சுயாமா வந்தவுடன் பண்பாட்டு விளக்கமாக என்னை தோகோ ஓன்சென்னுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எல்லோரும் பிறந்த வண்ணம் உலாவிக் கொண்டிருந்தனர். தனாபே சான் என் ஆய்வாசிரியர். அவருக்கு முன்னால் எப்படிப் பிறந்த மேனியாக அலைவது? கூச்சமெல்லம் இருந்தால் அப்பண்பாட்டை எப்படி சுவைப்பது? பெண்களுக்குத் தனியான குளிப்பிடம் உண்டு. என் மனைவி நெளிந்து, குனிந்து, குழைந்து ஊற்றுப்பக்கம் போன போது ஒரு ஜப்பானிய சிறுமி மிக இயல்பாக அவளுக்கு கொன்னிச்சிவா என்று வணக்கம் சொன்னதாம். பனிசூழ் தீவான ஹொக்கைடோவில் ஆண்/பெண் இருவரும் ஒன்றாக குளிக்கும் இயற்கை நீரூற்று எல்லாம் உண்டு.

மட்சியாமாவிற்கு அருகில்தான் ஹிரோஷிமா! அணுகுண்டு சிதைத்த நகரம். போய் வந்தோம். அது அணுகுண்டு போட்ட இடமாகத் தெரியவில்லை. பெரிய அளவில் வளர்ச்சியுற்ற நகரமது. ஆயினும் மானுடம் இக்கொடுமையை நினைவில் கொள்ள சூனியப்பகுதியை அப்படியே தக்க வைத்துள்ளனர். அங்குள்ள அருங்காட்சியகம் போனால்தான் எத்தகையை வன்கொடுமை நடந்துள்ளது என அறிய முடியும். குண்டு வெடித்து காளான் பந்து வெளிப்பட்ட போது ஒரு நகரமே ஒரு நொடியில் பஸ்பமாகிப் போனதாம். இரும்பை உருக்கும் வெப்பம் என்றால் எப்படி? இரும்பே உருகும் போது மனிதன் எம்மாத்திரம். என் நெஞ்சார்ந்த வருத்தத்தைத் தமிழில் கவிதையாக்கி நினைவுப் புத்தகத்தில் எழுதி வந்தேன்.

நான் அங்கு போன பின் பல மாணவர்கள் இந்தியாவிலிருந்து வந்து சேர்ந்தனர். பேராசிரியர் ரியோ தட்சுகவா தொலை நோக்குடன் தென்னாசிய மாணவர்கள் எல்லோரையும் அழைத்து ஆய்வு செய்ய வைத்தார். அப்போதுதான் நான் முதல் முறையாக இந்தோனீசியர், பிலிபினோ, கொரிய மாணவர்களை சந்திக்கிறேன். எங்க வீட்டிற்கு அருகில் ஒரு இந்தோனீசிய குடும்பம். முஸ்லிம் குடும்பம்தான். பிள்ளையின் பெயர் ஹரிவிபீஷண். அங்கு சர்வ சாதாரணமாக சமிஸ்கிருத இந்துப் பெயர்கள் இந்தோனீசியர்களுக்கு வைக்கப்படுவதைக் கண்டேன்.

தமது இந்துப் பாரம்பரியத்தை அவர்கள் ஒதுக்கவில்லை. சுகார்த்தோ, சுகர்ணோ, இந்திராணி, துவீ, தர்மா என்ற பெயர்கள் எல்லாம் சாதாரணம். அதேபோல் தென் அமெரிக்காவிலிருந்து நிறைய மாணவர்கள் வந்து படித்தனர். கொரிய மாணவர்களை ஜப்பானியர் வேறுவிதமாக நடத்தினர். நாங்கள் ஆங்கிலத்தில் ஆய்வேடு செய்தால் அவர்கள் நிஹோங்கோ எனும் ஜப்பானிய மொழி கற்றுத்தான் எழுத வேண்டும். அவர்களுக்கு பாடம் எல்லாம் நிஹோங்கோவில்தான் அமையும். அவர்களுக்குள் உள்ள கலாசார ஒற்றுமை இதை சரி செய்தாலும், ஒரு ஆண்டான் – அடிமை குணம் மறைமுகமாக அங்கு செயல்படுவதைக் கண்டேன். இதன் முழுப் பரிமாணத்தை நான் கொரியா சென்றபோதுதான் உணர்ந்தேன்.

நான் அங்கு போய் சேர்ந்த ஓரிரு நாட்களில் ரியோ தத்சுகவா சென்செய் (குரு) எனக்கொரு ஜப்பானிய புத்தகத்தைக் காட்டினார். அது தோக்கியோ பல்கலைக் கழகப் பேராசிரியர் சுசுமோ ஓனோ எழுதிய நூல். அந்த ஆய்வு சங்ககாலத் தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்குமுள்ள ஒற்றுமையைக் காட்டும் நூல். சாதாரணமாகவே ஒரு தமிழனுக்கு நிஹோங்கோ கற்றுக் கொள்வது அவ்வளவு சிரமமில்லை. நிறையப் பண்பாட்டு ஒற்றுமைகள். வள்ளுவன் பேசும் அறன் அங்கு வாழ்கிறது. வாய்மை செயல்படுகிறது. நேர்மை நிலைத்து நிற்கிறது. கிராமப்புறங்களில் சிறுதெய்வங்களுக்கு சாக்கே எனும் கள் நிவேதனமாக வைக்கப்படுகிறது. நம் கிராமப்புறத்தில் சாப்பாட்டை சத்தம் போட்டு சுவைத்து, உறிஞ்சி சாப்பிட்டு, சத்தமாக ஏப்பம் வேறு விடுவர். ஆங்கிலேய பண்பாட்டிற்கு மாறிவிட்ட நமக்கு அது அசிங்கமாகப் படும். ஆனால், ஜப்பானில் நூடுல்ஸை சத்தமாக உறிஞ்சிச் சாப்பிடுவது நாகரீகம். எனது சிபாரிசின் பேரில் கேரளா சென்று யோகா படிக்கப் போன யோஷிசான், திரும்பி வந்து சொன்னார், ‘இந்தியர்கள் ஆசியா கிடையாது. நாங்கள்தான் உண்மையான ஆசியா. நீங்கள் ஐரோப்பியர் போலத்தான் வாழ்கிறீர்கள் என்று. எப்போது நமது தமிழ் வேரை ஆங்கிலம் துண்டித்ததோ, அன்றிலிருந்து நம் தமிழ்ப் பண்பாடு மங்கத்தொடங்கி ஆங்கில வாழ்வியல் கோலோட்சத் தொடங்கியது என்பதை நம்பத்தான் வேண்டியுள்ளது.

(தொடரும்)

 

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...