spot_img
0,00 INR

No products in the cart.

மம்தாவின் கனவுகள் பலிக்குமா?

கவர் ஸ்டோரி

– ஆதித்யா

 

மது தேசிய அரசியலில் களத்திலிருக்கும் இரண்டு கூட்டணிகளிலிருக்கும் கட்சிகள் இடம் மாறுவது  நமக்கு புதிதல்ல. ஆனால், முதல் முறையாக  இப்போது எதிர்கட்சிகளின் அணியாக இருக்கும் கூட்டணியான UPA வின் முக்கிய அங்கமாக இருக்கும்  திர்ணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா “UPA என்ற கூட்டணியே இப்போது இல்லை அது சரித்திரமாகிவிட்டது” என ஒரு வெடிகுண்டை வீசியிருக்கிறார்.

இது இந்திய அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமையப்போகிறது. காரணம்  அவர் சரத் பவாரைச் சந்தித்தபின் இந்த அறிவிப்பு வெளியானது சரத்பாவர் UPA வில் முக்கிய தலைவர்.சோனியாவுக்கு நெருக்கமானவராக கருதப்பட்டவர்.

மம்தாவின் கணக்கு என்ன?

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 3வது முறையாக ஆட்சியைப் பிடித்தது முதல், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், இம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியின் அரசியல் செயல்பாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. ’மாநில அரசியல்’ என்ற நதியில் இருந்து விலகி, ’தேசிய அரசியல்’ என்ற கடலில் கொடி நாட்ட அவர் வியூகம் வகுத்து வருகிறார். அவருடைய சமீபத்திய செயல்பாடுகள் ஒவ்வொன்றும், அதை நிரூபித்து கொண்டிருக்கின்றன.

இதற்காக,  பா.ஜ.வை போலவே, இவரும் காங்கிரசை பலிகடாவாக்கிதான் பல்வேறு மாநிலங்களில் தனது கட்சியைப் பலப்படுத்தி கொண்டிருக்கிறார். இதுபோன்ற ‘கட்சி உடைப்பு’களை, இந்திரா காந்தியின் காலத்தில் இருந்தே  காங்கிரஸ் சந்தித்து கொண்டிருக்கிறது. இதனால், பலமுறை பலவீனப்பட்டு, மீண்டும் எழுந்து நின்றிருக்கிறது. ஆனால், அப்போது எல்லாம் அது ’உட்கட்சி பூசல்’ என்ற நிலையோடு நின்றது. இப்போது, நிலைமை அப்படியில்லை. ’உட்கட்சி பூசல்’ என்பது மட்டுமின்றி, இதன் மூத்த தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்ற கட்சிகளுக்கு மாறத் தொடங்கியிருக்கின்றனர்.  இப்படி  அடுத்த கட்சிக்கார்களை வளைத்து  போடும் பா.ஜ.க.வின் டெக்னிக்கை இப்போது மம்தாவும் செய்யத் தொடங்கியிருக்கிறார்.

காங்கிரஸ் கூடாரம் காலியாகிக்கொண்டிருக்கிறதா?

காங்கிரஸ், பலமுறை பலவீனப்பட்டு, மீண்டும் எழுந்து நின்றிருக்கிறது. ஆனால், அப்போது எல்லாம் அது ’உட்கட்சி பூசல்’ என்ற நிலையோடு நின்றது. இப்போது, நிலைமை அப்படியில்லை. உட்கட்சி பூசல் என்பதைத்தாண்டி வலுவான தலைமை இல்லை என்பதால் எழும் அதிருப்தி தான் அதிகம். கட்சி தலைமையை எதிர்ப்பது என்பது காங்கிரசில் புதிதல்ல. 1990ம் ஆண்டுகளில்  இருந்து  பல மாநில காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தோற்றுவிப்பதும், வேறொரு கட்சியில் இணைவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 2014ல் ஒன்றியத்தில் பா.ஜ. ஆட்சியைப் பிடித்த பிறகு, இந்தப் போக்கு அதிகமாகி இருக்கிறது. ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில், பல மாநிலங்களில் காங்கிரசை பா.ஜ.க கபளீகரம் செய்து விட்டது. இது,  காங்கிரஸ் கட்சியை மாநில அளவில் பெரிய அளவில் பலவீனப்படுத்தி உள்ளது.

ஆனால், அண்மையில் அக்டோபர் 30-ல் நடந்து முடிந்த இடைத் தேர்தல்களின் முடிவுகள், தேசிய அளவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கின்றன.  காங்கிரஸ் இன்னும் களத்தில் இருக்கிறது என்பதைக் கட்டுகிறது. பா.ஜ.க.வை வீழ்த்தும் வலிமை காங்கிரஸுக்கு இல்லை என பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலரும் முடிவே கட்டிவிட்ட நிலையில், ஃபீனிக்ஸ் பறவையாகக் காங்கிரஸ் உயிர்த்தெழுந்திருக்கிறது. ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியிருப்பதுபோல, பல மாநிலங்களில் காங்கிரஸின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான முன்னோட்டமாக, இந்தத் தேர்தல் முடிவுகள் அமையுமா? என்று விவாதங்கள் எழுந்திருக்கும் நிலையில், காங்கிரஸின் நகர்வுகள் மீது அதிகக் கவனம் குவிந்திருக்கிறது.

3 மக்களவைத் தொகுதிகள், 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தல்களில். இமாசல பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தான் வெற்றிவாகை சூடியிருக்கின்றன. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வைத் துவம்சம் செய்ததில், திரிணமூல் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது என்றால், பிற மாநிலங்களில் பா.ஜ.க.வுக்குக் கடும் சவாலாகக் காங்கிரஸே இருக்கிறது.

பின்  ஏன் மம்தா இப்படியொரு நிலை எடுக்கிறார்?

தேசிய அளவில் பா.ஜ.க.வை எதிர்த்துக் களம் காணுவதில், எதிர்கட்சிகளை இணைத்து  ஒருமித்த மனநிலைக்கு கொண்டுவர. காங்கிரசால் முடியவில்லை. அதன் தலைமையே  கேள்விக்குறியாகயிருக்கும் நிலையில் அதன் அணித் தலைமையையும் பிரதமர் வேட்பாளாரையும் கட்சிகள் ஏற்க தயாராகயில்லை. இந்தச் சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன் கட்சியை ஒரு தேசிய சக்தியாகவும் தன்னை பிரதமர் வேட்பாளாராக மற்ற கட்சிகள் ஏற்கும் வகையில் வியூகங்கள் வகுக்கிறார் மம்தா என்பது  அவரது அண்மைக் காலச் செயல்களில் தெளிவாகிறது.

மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக கான்ரட் கொங்கல் சங்மா செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில், மேகாலயாவில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா உட்பட 17 எம்.எல்.ஏக்கள் இருந்தனர்.  இவர்களில் இரவோடு இரவாக முகுல் சங்மா உட்பட 12 எம்.எல்.ஏக்கள் நேற்று முன்தினம் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர். இது, மேகாலய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேகாலயாவது  பக்கத்து மாநிலம். ஆனால், அண்மையில்  அவர்
கோவாவை குறிவைத்துக் காய் நகர்த்தியிருக்கிறார். கோவா அரசியலில் தலைமை, தேசிய கட்சிகளிடம் இருந்தாலும்கூட, அங்குள்ள அரசியலில்
கிங் மேக்கர் என்பது உள்ளூர் கட்சிகள்தான். 2017 தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க., மாநிலத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தது. சர்தேசாய் கட்சி, மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சி மற்றும் காங்கிரஸில் இருந்து பிரிந்த ஒரு குழுவை இணைத்து பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது.

இந்த மாடலைப் பின்பற்றி  திரிணாமுல் காங்கிரஸ் தனது விரிவாக்கத்திற்கு சிறிய கட்சிகளை தன்னுடன் சேர்த்துக்கொள்ள முயற்சிக்கிறது. மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியுடனும் திரிணாமுல் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறது.

கோவாவில் திரிணாமுலின் முழு வியூகத்தையும் பிரசாந்த் கிஷோர் வகுத்து வருகிறார். அவர் தனது ஐ-பேக் குழுவுடன் கடந்த சில மாதங்களாக இங்கு தங்கியுள்ளார். கடந்த சில நாட்களில் அவரது அணி எல்லா கட்சிகளின் மூத்த தலைவர்களையும் தொடர்பு கொண்டு வருகிறது.

தினமும் கூட்டங்கள், பத்திரிக்கையாளர் சந்திப்புகள் நடத்தி பா.ஜ.க.வுக்கு எதிரான வலுவான குரல் எழுப்பிக்  கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். மாநில முன்னாள் ஆளுநர் சத்யபால் மல்லிக், பா.ஜ.க. மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையில், முதல்வர் பிரமோத் சாவந்த் பதவி விலக வேண்டும் என்று இப்போது திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதற்காக ஆளுநரையும் கட்சி  அண்மையில் சந்தித்தது.

ஏன் கோவா ?

2022ல், கோவா மாநிலத்தில் கட்சி முதல்முறையாக போட்டியிடும் என்று திர்ணாமுல் அறிவித்திருக்கிறது.  ஆனால், அண்டை மாநிலங்களான ஒடிஷா மற்றும் ஜார்கண்டிற்குப் பிறகு சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவை விட்டுவிட்டு, இந்தக் கட்சி ஏன் கிழக்குக் கடற்கரையிலிருந்து நேரடியாக மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள கோவாவுக்கு வருகிறது என்பதே இப்போதைய கேள்வி.

கோவா ஒப்பீட்டளவில் சிறிய மாநிலம். கொல்கத்தா போன்ற பெருநகரத்தின் அளவிற்குக்கூட கோவா முக்கியமில்லை. இப்படிப்பட்ட நிலையில், மம்தா பானர்ஜி ஏன் கோவாவை தேர்ந்தெடுக்கிறார்?

இரண்டு காரணங்களை அரசியல் நோக்கர்கள் முன் வைக்கின்றனர்.

கோவா எப்போதுமே பா.ஜ.க.வின் கோட்டையாக இருந்து வருகிறது. 40 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் மனோகர் பாரிக்கர் காலமானபிறகு, ஒரே நேரத்தில் மாநில மற்றும் தேசிய அளவில் கோவாவை வழிநடத்தும் தலைவரின் இடம் காலியாக இருக்கிறது.  இந்த நிலையில் அங்கு அக்கட்சிக்கு சவால் விடுக்கப்பட்டால் அது நாடு முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்

மிகச்சிறிய  மாநிலத்தில் எளிதில் ஆட்சியைப் பிடித்த பின் அதன் இரண்டு எம்.பி. தொகுதிகளையும் பெறுவதின் மூலம் தனது கட்சி வங்காளாத்தையும் தாண்டி  வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு  தேசியக்  கட்சி என்ற எண்ணத்தை தோற்றுவிக்க முடியும். அதுதான்  பிரதமர் வேட்பளாராக உதவும் என்று கருதுகிறார்.

“மம்தா பிரதமராக விரும்புகிறார். பிரதமர் மோதிக்கு சவால் விடும் திறமையான தலைவராக தன்னை காட்டிக்கொள்ள விரும்புகிறார். அதற்காக அவர் கோவாவை தேர்வு செய்துள்ளார். கோவா சிறியது, அதை எளிதாக நிர்வகிக்க முடியும் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல,” என்கிறார் கோவாவின் மூத்த பத்திரிக்கையாளர் ராஜு நாயக்.

2022 தேர்தலுக்கு முன், மம்தா பானர்ஜி தன் கட்சிக்கு ஒரு தேசிய அந்தஸ்த்தை நிறுவி  தன்னை பிரதமர் வேட்பாளாராக மற்ற கட்சிகள் ஏற்க முயற்சிக்கிறார். குறைந்த பட்சம் தேசிய அளவில் பாராளுமன்றத்தில் எதிர் கட்சி தலைவராகவாவது  அமர விரும்புகிறார்.  இதில் அவர் எந்த அளவுக்கு வெற்றி பெறுவார் என்பதை தேர்தல் முடிவுகள் தான் சொல்லும் என்றாலும்,  2017 தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி இதேபோல் கோவாவில்  இடம் பிடிக்க முயன்று தோற்றதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

அரசியல்வாதிகள் கனவுகள்  காண்பதில் தவறில்லை.  இந்திய அரசியலில் பல  திருப்பங்கள் சிலரது கனவில் தோன்றியவைதானே?

1 COMMENT

  1. மம்தாவின் கனவு பலிக்குமா? என்று பார்ப்பதைக் காட்டிலும் உறங்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் பீனிக்ஸ் பறவைப் போல் கிளர்ந்தெழுமா என்று கேட்கத் தோன்றுகிறது
    திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Other Articles

Stay Connected

263,924FansLike
1,887FollowersFollow
3,050SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி சறுக்கலா?  சதியா?

0
  கவர் ஸ்டோரி   - ஹர்ஷா   பஞ்சாப் மாநிலத்தில்  சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்துக்காகப் பிரதமர் மோடி பஞ்சாப் செல்வதாகப் பயணத் திட்டம். பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, ரூ.42,750...

“சாய் வாலா” ஆகிறார் லேடி சூப்பர் ஸ்டார்

1
நயன்தாரா டீ   - வினோத் டீ கேரளாவின் தேசிய பானம் என்று கொண்டாடப்பட்டாலும் அது தமிழர்களின் உணர்வோடும் உடலோடும் கலந்துவிட்ட ஒரு பானம். கிராமம், சிறுநகரம் பெருநகரம் என எல்லா இடங்களிலும் எப்போதும் கிடைக்கும் ஒரே...

மீசை வளர்க்கும் ஆசை வந்த காலத்தில்…

0
சுஜாதா தேசிகன்                                             ...

பீட்சா பிறந்தது இத்தாலியில்  இல்லை!

0
- செல்வா   இன்று இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பும் பீட்சா, பிஸா, பிட்சா, பிஜ்ஜா  அழைக்கப் படுகிற இந்த பீட்சா பிறந்தது இத்தாலி என்று பரவலாக அறியப்பட்டாலும் பீட்சா பல...

நம்மை புதுப்பித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

- தனுஜா ஜெயராமன்   இந்த கோவிட் காலக்கட்டத்தில் கொரோனாவைப் போலவே நாமும் நம்மை புதுப்பித்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. கொரோனாவைப் போலவே நாமும் உருமாறி பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகிறோம் என்பதும் நிஜம். இந்த கொரோனா...